Saturday, June 6, 2009

நான்...நான் மற்றும் அவள்

"கொஞ்சம் கஷ்டம் ,வேற ஏதாவது யோசிக்கலாம்"என்றான் தேவ்.
"இல்ல தேவ்,ரிஸ்க் இல்லாத திட்டம் இது ,கொஞ்சம் மெனக்கெடனும்,அவ்வளவுதான் ,என்னால செஞ்சிட முடியும்னு தோணுது " என்றான் அவன்.
&&&&&
ஆகாஷ் தன்னுடைய அலுவலகத்தில் நுழைந்தபோது இன்றைய தேதி 24 மே 2036 நேரம் சரியாக 9 என்றது அவனுடைய கடிகாரம் . ஆகாஷைப் பற்றி ,ரோபோடிக் எஞ்சினியர் ,வயது - போன வருடம் முப்பதை தாண்டி விட்டான்.துடிப்பான இளைஞன் ,அப்படி ஒன்றும் நல்லவனில்லை.இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே முதலாளியின் பெண்ணை (நிலா) காதலித்து ,அவளை அதிகம் யோசிக்க விடாமல் உடனே கல்யாணம் செய்து கொண்டு எம் .டி ஆனவன்.தற்சமயம் ,எப்போதடா இந்த கம்பெனி தன் பெயருக்கு மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்.தொலை பேசி அழைத்தது.எடுத்ததும் "7 மணிக்கு பார்ட்டி ஞாபகம் இருக்கில்லே ,ஆபீசைக் கட்டிட்டு அழாதே !" என்று எச்சரித்த நிலாவைப் பற்றி .. சமீபத்தில்தான் டீன் என்ற அடைமொழி துறந்தவள், அப்பா சேர்த்து வைத்ததை செலவழிப்பதில் விருப்பம் அதிகம்,55 கிலோவுக்கு வெண்ணையை உருட்டி செய்தது போன்ற உருவம்.

"மறப்பேனா,இதோட நூத்தி சொச்சம் தடவை ஞாபகப் படுத்திட்டே.ஈவ்னிங் எந்த அப்பாயின்மெண்ட்டும் இல்லே போதுமா"என்றான் சிரித்தபடி. செகரட்டரியை அழைத்தான்,
"ஹனி ,ஈவ்னிங் ஏதாவது அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கியா?"
"நோ ஆகாஷ்,ஆனா யாரோ கிருபாங்கிறவர் அப்பாயின்மென்ட் வேணுன்னு கேக்கறார், ஏதோ பெர்சனல் மேட்டராம்"என்றாள் வர்ஷா.
"தூக்கிப் போடு ,நான் பார்ட்டிக்கு போலன்னா நிலா எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிடுவா"
"ஆகாஷ் ! இதோட மூணாவது தடவை....."
"என்ன சொல்ற ?! மறுபடியுமா? ஜாக்கிரதையா இருன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கிற"
"ஆகாஷ் ! நான் சொன்னது கிருபாவைப் பத்தி , இதோட மூணாவது தடவையா அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கலை" என்றாள் அவன் பதட்டத்தை ரசித்தபடி.
"தேங்க் காட், ஏன் பயமுறுத்துற? யு நோ, நிலாவுக்கோ இல்லை என் மாமனாருக்கோ நம்ம விஷயம் தெரிஞ்சதுன்னா நான் அம்பேல் ,மறுபடி எங்கயாவது போயி குப்பை கொட்ட வேண்டியதுதான்.எம் .டி இல்ல,முதலில் கம்பனி கைக்கு வரட்டும்,அப்புறம் பார்"என்று போனை வைத்து விட்டு ,இவளை முதலில் கழட்டி விடணும் என்று யோசித்தான்.
&&&&&&
நுனிநாக்கு ஆங்கிலமும் ,இறுக்கிக் கட்டிய டையுமாக வழுக்கைத் தலையர்கள், குழுக்களாகச் சேர்ந்து அரைகுறை போதையில் பங்குச் சந்தை அலசலில் ஈடுபட்டிருந்தார்கள். எங்கே திரும்பினாலும் ப்ராபிட் ,லாஸ் என்ற வார்த்தைகளை கேட்க முடிந்தது.ஆகாஷ் மிதமான போதையில் நிலாவை ஒருகையால் அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
"ஹனி ,ஜஸ்ட் எ மினிட் "என்று நிலா நகர்ந்தாள்.


"ஹலோ ஆகாஷ்" ,திரும்பினான். லேசாக நரைத்த தலையுடன் நல்ல உடையணிந்த அவன் சிரித்தபடி கைகுலுக்கினான்.


"கிருபா, அப்படிங்கற பேர்ல உங்களை பாக்க விரும்பினது நான்தான்"என்றான்.


"அப்படியா,நீங்க....உங்களை எங்கயோ பார்த்த மாதிரி ...."


"இருக்கும் "என்று புன்னகைத்தபடி அவன் சொல்லத்தொடங்கினான்.ஆகாஷுக்கு லேசாக வியர்க்கத் தொடங்கியது.

&&&&&&&&

" புல் ஷிட்,என்னை என்ன முட்டாள்னு நெனச்சியா?நீதான் நானாம்,டைம் டிராவலாம்,உடனே இங்கிருந்து போயிடு இல்ல போலீசைக் கூப்பிட வேண்டி வரும்" என்று இரைந்தான் ஆகாஷ்.

"அவசரப்பட வேண்டாம் ஆகாஷ்,யார் உன் நிலைமைல இருந்தாலும் இப்பிடித்தான் சொல்லுவாங்க ,எனக்குப் புரியுது ,இவ்வளவு நேரம் நான் சொன்ன விஷயங்கள் நமக்கு மட்டுமே தெரிஞ்சது,வேற யாருக்காவது தெரியுமா?யோசி."என்றவனை வெறித்துப் பார்த்தான் ஆகாஷ்.

"சரி இந்த நெத்தில இருக்கிற காயம் எப்படி வந்தது சொல்லட்டுமா? ஹனிமூன்ல ஒரு பள்ளத்துல இறங்கும்போது கீழே விழுந்தோம்.சரியா? அப்புறம் அன்னிக்கு நைட் டின்னர் முடிச்சு ஹோட்டலுக்கு வரும்போது நடந்த ஆக்சிடென்ட்,அது நமக்கும் நிலாவுக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது ,நிலா யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னாளே? தயவு செய்து என்னை நம்பு ஆகாஷ்"என்றான்.

"குழப்பமா இருக்கு "என்றபடி தலையைப் பிடித்துக் கொண்டான் ஆகாஷ்.

"குழப்பம் ஒண்ணுமில்ல ஆகாஷ் ,நம்பு இன்னும் பத்து வருசத்தில டயம் டிராவல் சாத்தியம், அதை விடு ,இப்போ நமக்கு இருக்கிற ஒரே பிரச்சினை நிலா, அவ நம்மை டைவர்ஸ் பண்ணப் போறா, மறுபடி நாம தெருவுக்கு வர வேண்டியதுதான்,அவளோட சொத்தும் போயிடும்,"என்றான் அவன்.

"எப்போ?" என்றான் ஆகாஷ் பலகீனமாய்.

"இன்னும் ரெண்டே வருஷம்தான்! அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டேன்,ரொம்ப யோசிச்சு இந்த முடிவுக்கு வந்தேன் நம்ம வாழ்க்கையை மாத்தி அமைக்கிறதுன்னு,ஒரு நண்பர்,விஞ்ஞானி இனிமே உனக்கு அறிமுகம் ஆகப் போகிறவர் அவர் செய்த உதவியால்தான் நான் இப்போ இங்கே"என்றான் அவன்.

சிறிது இடைவெளி விட்டு "ஆகாஷ், எதிர் காலத்துல நான் அவளை எதுவும் செய்ய முடியாது,அதனால இப்போ இங்கே அவளைக் கொல்றதுதான் சரி எந்த சந்தேகமும் யாருக்கும் வராது.இதோ பார், இந்த மாத்திரை அவ உடம்புக்குள்ள போனா போதும்.அரை மணில நேச்சுரல் டெத், போஸ்ட் மார்ட்டம் பண்ணாலும் தெரியாது ஏன்னா இப்போ இந்த மருந்து கண்டு பிடிக்கப் படலே.யோசிச்சு முடிவெடு" என்றபடி நகர்ந்து போனான்.

ஆகாஷ் சிறிது நேரம் யோசித்துவிட்டு அந்த மாத்திரையைக் கையில் எடுத்தான்.

&&&&&&&&

"என்ன தேவ்,இப்போ என்ன சொல்ற?நம்ப மாட்டான்,கஷ்டம்னியே!கொஞ்சம் மேக் அப் ,பத்து நிமிஷப் பேச்சு,பய கவுந்துட்டான்.நிலா காலி,ஆகாஷ் ஜெயில்ல,அவன் மாமனார் ஹாஸ்பிடல்ல,பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்,இனிமே கம்பெனி நம்ம கையிலே,மொத்த ஷேரையும் வாங்கிடலாம்,எப்படி"என்றான் அவன்.

"இந்த விஷயத்துல கண்டிப்பா வர்ஷாவுக்குத்தான் தேங்க் பண்ணனும்,ஆகாஷோட அந்தரங்க விஷயங்களை நமக்குச் சொன்னதுக்காக"என்றான் தேவ்.

வர்ஷா சிரித்தபடி கோப்பையை கையிலெடுத்து "சியர்ஸ் ஜென்டில்மென்"என்றாள்.

**********

9 comments:

பழமைபேசி said...

:-o)

சீக்கிரம் தமிலிசுல தொடுப்புக் குடுங்க... ஒப்பமுக்கணும்ல?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கொடுத்தாச்சு பழமை, வருகைக்கு மிக்க நன்றி.

நாடோடி இலக்கியன் said...

அருமை.

வெற்றிபெற வாழ்த்துகள்.

Raju said...

"பைத்தியக்காரன்" அவர்கள் நடத்தும் போட்டிக்கு எழுதியாதா அண்ணே...?
இல்லைன்னா, அதுக்கே அனுப்பீடுங்க.
ஏன்னா, கதை சூப்பரா இருக்கு, முடிவை மட்டும் யூகிக்க முடியுது.
வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றி நாடோடி ,நன்றி டக்லஸ் ,இன்னமும் முடிவு பண்ணல .

கார்த்திகைப் பாண்டியன் said...

கதையின் ஓட்டமும் அந்தக் கடைசி ட்விஸ்டும் நல்லா இருக்கு ஸ்ரீ.. நாம இதையே கூட போட்டிக்கு அனுப்பலாம்..:-)

Anbu said...

super anna

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றி கார்த்தி,அன்பு.

தருமி said...

பயங்கர ஹை டெக் கதையா இருக்கு ..
ம்ம்..!

தலைப்பே பின்னிடுச்சே