Friday, March 8, 2013

அயத் அல்-கெர்மெஸி


நான் என்னை உங்களிடத்தில் அறிமுகம் செய்து கொள்கிறேன்.என் பெயர் அயத் அல்-கெர்மெஸி, பஹ்ரெய்ன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மாணவி.
முதலில் சிறு செய்தியொன்றை அனுப்ப விரும்புகிறேன், நம் துன்பங்களைக் கொண்டாட முடியும் என்று நினைப்பவர்களுக்கு, நம்மிடையே உள்ள சமயப் பிரிவுப் பிணக்குகளை முன்நடத்துகின்ற சார்புள்ள பஹ்ரெய்ன் தொலைக்காட்சி மூலம்.
“நாம் அரண்மனையில் வசிக்கவோ,அதிபராகவோ (அரசராகவோ) விரும்பவில்லை.நாம் அவமதிப்பையும் அவமானத்தையும் கொல்பவர்கள், துன்பங்களைப் படுகொலை செய்பவர்கள்.நாம் அமைதியை ஆயுதமாகக் கொண்டு அநீதியின் அடித்தளத்தை அழிப்பவர்கள்.இந்நாட்டின் மக்களாகிய நாம் நமது பின்னடைவினை விரும்பவில்லை.(காலத்தால்)

“எனது அடுத்த கவிதை இந்தக் கேடுகள் நடப்பதற்கு யார் காரணமோ அவர்களுக்காக. நான் இக் கவிதையை ஹமாதுக்கு அர்ப்பணிக்கிறேன் (அரசர் ஹமாத் அல்-காலிஃபா).
(மக்கள் கூட்டம் : ஒழிக, ஹமாத் ஒழிக)

சாத்தானும் ஹமாதும் மேசையில் ஒன்றாக அமர்ந்து,மக்களின் வலி மற்றும் துன்பங்களைப் பற்றிப் பேசும் உரையாடல். சாத்தான் சொல்கிறான்:

“வணக்கம் ஹமாத்.....
“இம்மக்களிடம் கருணை காட்டு (மும்முறை கூறுகிறான்)
“நீ மக்களுக்குச் செய்துள்ள கொடுமைகளைக் கண்டு என் இதயம் கூறுபட்டது.
“நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்.
“என்னால் உன் நிலைமையை மாற்றி விட முடியும் சர்வாதிகாரியே!
“பிறகு நான் காலத்தின் கடைசி மணித்துளி வரை காத்திருந்து சொல்வேன் அவர்களின் இவ்வேட்கை என்னை ஆட்கொண்டுவிட்டது என

ஹமாதின் மறுமொழி:
“இம்மக்களை இவ்வாறு துன்பத்தில் உழலவிடுவது எப்படி என்று எனக்குச் சொல்லித் தந்ததே நீதான்,இப்போது அவர்களுக்காக என்னிடத்தில் நீயே இரந்து கொண்டிருக்கிறாய்,
அநேகமாக அவர்களின் விழிப்புணர்வு உன்னை அச்சுறுத்தி விட்டதென்று நினைக்கிறேன்,

சாத்தான் பதிலுறுக்கிறான்:
“உன் மக்கள் என்னை பாதித்து விட்டனர்,
“உன்னால் அவர்களின் குரல்களைக் கேட்க முடியவில்லையா?
“அவர்களின் கோஷங்கள் உன் காதில் விழவில்லையா?
ஹமாத் ஒழிக ஒழிக என்ற அவர்களின் கீச்சிடும் குரல் கேட்கவில்லையா?
இங்கு குழுமியுள்ள கூட்டம் உனக்குத் தென்படவில்லையா?
உன்னால் உன் மக்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியும் என்று தோன்றவில்லையா?


இப்போது ஹமாதின் மறுமொழி:

“என் வயிறு இன்னும் அவர்களின் உதிரத்தால் நிரம்பவில்லை
என் நண்பர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் இன்னமும்
குடியுரிமை வழங்கவில்லை
“மேலும் இங்கிருக்கும் ஷியாக்களை தெருக்களில் தண்ணீர் புட்டிகளை விற்கும்படி ஆக்கவில்லை
இன்னமும் நான் இங்கிருக்கும் ஷியா எழுத்தாயர்களையும் , இளைஞர்களையும்,குழந்தைகளையும்,பெண்களையும் துன்புறுத்தவில்லை.
“இன்னமும் பள்ளிச் சான்றிதழ்களுடன் அலையும் வேலையற்ற இளைஞர்களை உருவாக்கவில்லை

அல்-கெர்மெஸி கூட்டத்தைப் பார்த்து: என்ன சொல்கிறீர்கள்?
கூட்டம் கிளர்கிறது: ஹமாத் ஒழிக (தொடர்ச்சியாக)
ஹமாத் தொடர்கிறார் (கேலியுடன்): “இன்னமும் நான் இந்தியர்களை கொடிகளை ஏந்தியவாறு அரசருக்கும்,அரசாங்கத்திற்குமாக கோஷமிட வைக்கவில்லை

இன்னமும் இங்குள்ள சோம்பேறிகள் அவர்களின் நிலத்தையும் வீடுகளையும் உடையவர்களாக இருக்கையில் (பஹ்ரெய்னிகளாக்கப்பட்டவர்கள்),வாடகை என்ற பெயரில் மக்களின் இரத்தத்தினை உறிஞ்சவில்லை,
“அல்-கெர்மெஸி கூறுகிறார்: இன்னமும் ஹமாத் அறியவில்லை,நாம் 120 பேர்கள்தான் கூடியிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்,ஆனால் நாமோ 320,000.

இப்போது சாத்தான் கூறுகிறான்:
“உனக்கு நீயே பொய் சொல்லிக் கொள்கிறாயா?
ஏன் அவர்கள் வெறும் 120 பேர் என்று கூறிக் கொண்டிருக்கிறாய்,என்னால் பலத்த கோஷங்களைக் கேட்க முடிகிறது.
உன் ஆசானுக்கே கற்பிக்கிறாயா?
அவர்களின் கோரிக்கைகள் என்னை முதுமைக்குள் தள்ளுகிறது,
உனக்குத் தெரிந்திருக்க வேண்டும் ஷியா மற்றும் சன்னிக்கள் உடன்பிறந்தவர்களாவர்,வேற்றுமை ஏதுமில்லை,
கடவுள் இருவரையுமே ஆசிர்வதித்திருக்கிறார்
அவர்கள் இம்மண்ணுக்காக 7 தியாகிகளைக் கொடுத்திருக்கிறார்கள்
உன் இதயம் கல்லால் ஆனதா?
இந்தப் புரட்சியில் சிந்தப்பட்ட குருதியினால் அது இளகவில்லையா?
உன் நண்பனின் ஆலோசனை உனக்கு வேண்டுமா?
நீயும் உன் அரசாங்கமும் இங்கிருந்து விலகிச் செல்லுங்கள்,ஏனெனில் இம்மக்கள் உன்னை விரும்பவில்லை, நீ அவர்களுக்குத் தகுதியானவனுமில்லை.

No comments: