Wednesday, March 6, 2013

இறுதிச் சலனம் – ரை முரகாமி


அமெரிக்க அரசாங்கத்தின் படைத்தளம் அமைந்திருந்த கியூஷு துறைமுகப்பகுதியில் இருந்து, நான் டோக்கியோவுக்கு வந்து சில நாட்களே ஆகின்றன. இங்கே நண்பர்களுடன் ஒரு சிறு மரவீட்டின் நெரிசலான ஓர் அறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த அறை இனோகாஷிரா பூங்காவின் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. ஊரில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பழைய பாடல்களைப் பாடும் ஓர் இசைக்குழுவை ஆரம்பித்திருந்தோம், அந்தக் குழு இப்பெரிய நகரத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம். நான் இந்தக் குழுவில் டிரம்ஸ் வாசிக்கிறேன், என்றாலும் கியூஷுவின் பழமையான நிலங்களில் இருந்து வந்திருக்கும், பழைய பாடல்களைப் பாடும் இசைக்குழுவில் நான் இருப்பது ஆர்வத்தினால் அல்ல. என் முதல் நோக்கம் என் பெற்றோர்களை விட்டு விலகியிருப்பது, ஆரம்பப்பள்ளியில் நான் சேர சம்மதித்திருந்தால் என் பெற்றோரே பணம் கொடுத்து என்னை டோக்கியோவுக்கு அனுப்பச் சம்மதமாக இருந்தார்கள். இங்கே என் நண்பர்கள் பேருந்தில் உதவியாளாகவும், உணவு விடுதியில் சிப்பந்திகளாகவும் வேலை பார்த்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையில் நிகழப்போகும் அற்புதத்திற்காகக் காத்திருக்கின்றனர். நான் எந்த வேலைக்கும் போகாமல் அவர்களோடு தங்கியிருக்கிறேன், எனக்கு மட்டுமேயான ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்வதை விட இது வசதியானதாகத் தோன்றியதே காரணம்.

நண்பர்களின் திட்டம் இவ்வாறு இருந்தது, இரவு நேரங்களில் வேலை பார்ப்பது, பகலில் இசைப்பயிற்சி, முக்கிய நபர்களுடன் பழகும் சந்தர்ப்பத்திற்காக பெரிய அளவில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளுக்குப் போவது, இயன்றவரை இசைத்தட்டுகள் வெளியிடும் நிறுவனங்களின் குரல்தேர்வில் கலந்து கொள்வது. எங்கள் ஊரிலிருந்து டோக்கியோவுக்கு ரயிலில் பயணப்பட்ட இரவில் அனைவரும், ஆறு மாதத்திற்குள்ளாக ஹிபியா பார்க் இசைநிகழ்ச்சிகளில் ஜப்பானியப் பழம்பாடல்களை இசைக்கும் குழுவாக மேடையில் தோன்றுவது என்று சபதம் எடுத்துக் கொண்டார்கள். என்னைச் சேர்த்து குழுவில் ஐந்து நபர்கள், வேறுபட்ட குடும்பப் பிண்ணனி கொண்டவர்கள், குழுத் தலைவனும் பாஸ் வாசிப்பவனுமான நகானோவின் அப்பா, அண்மையில் ஓய்வு பெற்ற மாதச்சம்பளக்காரர், கிதார் வாசிக்கும் யமகுச்சியின் அப்பா ஏற்றுமதி இறக்குமதி செய்பவர் மற்றும் பியானோ ஆசிரியர், ஆர்கன் வாசிக்கும் ஷிமாடாவின் அப்பா எரிபொருள் நிரப்பு நிலையம் வைத்திருப்பவர், பாடுபவனான காட்டோ தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்பட்டவன். ஒவ்வொருவரின் பொருளாதார சூழ்நிலைகளும் வேறுபட்டவை, நகானோவும் காட்டோவும் கிட்டத்தட்ட வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் போலத்தான், வீட்டிலிருந்து எந்த உதவியும் கிடையாது, ஷிமாடாவின் வீட்டிலிருந்து உணவு மற்றும் ஆடைப்பொதிகளும், பதிவுத் தபாலில் செலவுக்குப் பணமும், அநேகமாக எல்லா வாரங்களும் வரும், யமகுச்சியிடம் ஒலிநாடாக்களும் நவீனமான இசைக்கருவிப் பெட்டியும் உண்டு. ஆனால் நான்கு பேருக்குமே பேருந்திலும் உணவு விடுதியிலும் வேலை கிடைத்துவிட்டது, காட்டோவுக்கும், ஷிமாடாவுக்கும் ரபோஞ்சியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியிலும், யமகுச்சிக்கு ஷிஞ்சிகுவில் இசைக்குழுவுடன் கூடிய விடுதியிலும், நகோனோவுக்கு ஜின்சாவில் உள்ள ஒரு காபரே விடுதியிலும் வேலை. இது அவர்களின் ‘இரவில் வேலை பகலில் இசைப்பயிற்சி’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்த சிரமமானதாக இருந்தது. அவர்கள் வேலை பார்த்த இடங்கள் என்னவோ மாலை ஆறு மணி முதல் இரவு பதினோரு மணி வரைதான் திறந்திருந்தன, ஆனாலும் சிப்பந்திகளும், உதவியாளர்களும் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்கு முன்பாகவே அங்கே சென்று இடம் அடைக்கப்படும் வரை இருந்து, பின் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும், பாத்திரங்களை சுத்தப்படுத்தவும் இன்ன பிற வேலைகளைச் செய்யவும் வேண்டியிருந்தது. ஜின்சாவில் வேலை பார்த்த நகானோ வீட்டை விட்டு மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டால் கடைசி ரயிலில் நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் திரும்புவான். வீட்டிற்கு அருகில் கிச்சிஜோஜியில் காபரே விடுதிகள் இருந்தாலும் தன்னுடைய இசைத்துறைச் சாதனைகளுக்குத் தேவையான நபர்கள் ஜின்சாவில்தான் இருப்பதாக நம்பினான். இந்த யோசனை அவனுக்கு எப்படி ஏற்பட்டது என்பது கடவுளுக்குத்தான் தெரியும், இப்பொழுது யோசிக்கையில் இது சிறந்த நகைச்சுவையாக எனக்குத் தோன்றுகிறது.

ஷிமாடாவிடம் ஒலிபெருக்கிச் சாதனங்கள் உள்ளது, என்னைத்தவிர எல்லோருமே கியூஷுவிலிருந்து வரும்போது தங்களுடைய இசைச் சாதனங்களைக் கொண்டு வந்திருந்தனர். ட்ரம்ஸ் வாத்தியம் இடத்தை அடைக்கக் கூடியது, மேலும் என்னிடமிருந்தது ஏற்கெனவே இன்னொருவர் உபயோகப்படுத்தியது, மேலும் மேலும் சிதைந்து கொண்டிருப்பது. எனவே இப்படி ஒரு இசைக்குழுவில் சேர்ந்து வாசிப்பது எனக்கு பிடித்தமானதாக இல்லாவிட்டாலும் கூட, அவர்களிடம் ஏதாவது பகுதி நேர வேலையில் சேர்ந்து சம்பாதித்து ஒரு ட்ரம்ஸ் வாத்தியத்தை புதிதாக வாங்கி விடுவேன் என்று வாக்களித்திருந்தேன். ஆனால் வரும்போது ட்ரம்ஸ் வாசிக்கும் குச்சிகளை மட்டும் கொண்டு வந்திருந்ததால் பயிற்சியின்போது தரை விரிப்பின் மீது தட்டிப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் போகப்போக எல்லா விஷயங்களும் நம்பிக்கையிழக்கத் தொடங்கின. வேலை பார்ப்பவர்களுக்கு இரு வாரங்களுக்கொருமுறை ஒருநாள் விடுமுறை கிடைத்தது, ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளில்.

அறை நண்பர்கள் விடியலில் வந்து அவர்களுக்காகத் தயாரித்து வைத்திருக்கும் துரித உணவை உண்டு, கடுமையான வேலைப்பளுவினால் அசந்துபோய் அதிகம் பேசாமல், ஊர்ந்து சென்று படுக்கையில் வீழ்வர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதென்பது காலை பத்துமணிக்கு மேலிருந்து முன்மதியம் வரை உள்ள குறைந்த நேரம் மட்டுமே என்றாலும் அப்போதும் எங்கள் ஒலிபெருக்கியில் இசைக்கருவிகளையும், வாய்ப்பாட்டையும் ஒரே சமயத்தில் இணைக்க முடியவில்லை. ஒருமுறை அப்படி இணைத்து ஸ்பென்சர் டேவிஸ் குழுவின் ‘கிவ் மீ சம் லவ்விங்’ என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தபோது எழுந்த பேரொலியால் மேல் தளத்தில் வசித்த ஒருவன் எங்கள் அறைக்குள் நுழைந்து இரைய ஆரம்பித்தான். அவன் கத்தி போன்ற கூர்மையான அமைப்புகள் கொண்ட இளம் யகூசா1. . நகானோவும் ஷிமாடாவும் பள்ளியில் படிக்கும்போது முரடர்கள் என்று பேரெடுத்தவர்கள். ஆனாலும் அவர்களால் கூட முகத்துக்கு முன்னால் இரைந்து கொண்டிருக்கும் இந்த டோக்கியோவின் யகூசாவுக்கான பதிலில்லை.

ஒரு மாதம் கழிந்தும் இசைக்குழுவின் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படவில்லை என்பது நண்பர்களுக்குள்ளாக சோர்வுமனப்பான்மையை உருவாக்க ஆரம்பித்தது, வெகுசீக்கிரம் அது என்பக்கம் திரும்பியது : யசாகி, நீ எப்போது ஒரு வேலைக்குச் சென்று உனக்கான இசைக்கருவியை வாங்கப் போகிறாய்? என்று கேட்க ஆரம்பித்தனர். நான் இன்னமும் இந்த இசைக்குழுவில் நீடிக்கலாமா அல்லது கல்லூரிக்குச் செல்லலாமா என்பதை முடிவெடுக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகச்  சொன்னேன். எல்லோரும் இந்த அறைக்காகும் செலவுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு இந்த இசைக்குழுதான் காரணம், இதிலிருந்து விலகினால் நான் அறையை விட்டும் விலக வேண்டும். ஷிமாடாவின் உறவினர் ஒருவர் ஏற்பாடு செய்த அறைதான் இது, கிச்சிஜோஜி நிலையத்திலிருந்து இருபது நிமிட நடைதூரத்தில் அமைந்ததும், இரண்டு சிறு அறைகளும் ஒரு சமையலறையும், தண்ணீர் வசதியில்லாத குளியலறை மற்றும் கழிப்பறையுடன் கூடியதுமான  இந்த இடத்திற்கு வாடகை அதிகம், ஆனால் தனியாக வாடகை கொடுத்து இருப்பதைவிட மலிவானதுதான். பெற்றோர்களிடம் மீண்டும் இடம் மாறுவதற்குப் பணம் வேண்டுமென்று தொந்திரவு செய்ய முடியாது, மேலும் பதினெட்டு வருடங்கள்  பின்னடைந்த ஒரு பிரதேசத்தில் வாழ்ந்த எனக்கு, தனியாகப்போய் ஒரு அறையைத் தேடிக்கொள்ளவும் தெரியாது.

இங்கு வந்ததிலிருந்து படிக்கவோ அல்லது வேலை தேடவோ நான்  முயற்சிக்கவில்லை. பெரும்பாலான நாட்கள் கான்டாவிலிருக்கும் பழைய புத்தகக் கடை வீதிகளில் திரிந்து புதினம் மற்றும் கவிதைத் தொகுப்புகளை வாங்குவதும், மணிக்கணக்கில் மேற்கத்திய இசையுடன் கூடிய காபி க்ளப்புகளில் அமர்ந்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் இரண்டு மாதங்கள் கடந்து விட்டிருந்தது, எனக்கும் நண்பர்களுக்கிடையேயுமான கருத்து வேறுபாடும் வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு நகானோ, தான் பார்த்து வைத்திருக்கும் சிப்பந்தி வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டு, நான் மறுத்ததும் அது கிட்டத்தட்ட கைகலப்பில் முடிந்தது. யமகுச்சி இடையிட்டு, “நகானோ சொல்வது சரிதான், யசாகி தன்னுடைய வாக்கைக் காப்பாற்றவில்லை, ஆனால் அதற்காகச் சண்டைபோடுவது சரியல்ல, நாம் டோக்கியோவிற்கு வந்தது நமக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்காக அல்ல” என்றான், அப்போதைக்கு சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்தாலும் அந்த இடம் எனக்கானதாக இல்லாமல் ஆகிவிட்டது போலிருந்தது. அனைவரின் கண்களும் எனக்கு வாசலைக் காண்பித்தன.

அப்போது அதிகாலை இரண்டு மணி, நான் வழக்கமாகச் செல்லும் காபி க்ளப் இந்நேரம் மூடியிருக்கும், அப்பாவிடமிருந்து இன்னமும் பணம் வந்துசேரவில்லை என்பதால் இன்னமும் உடைந்து போனேன். அது ஜூன் மாதம், காற்று மிதமான வெப்பத்துடன் ஈரமாக இருந்தது, இனோகாஷிரா பூங்கா பனிமூட்டத்தில் மங்கலாகத் தெரிந்தது. என்னை மிகத்தாழ்வாக உணர்ந்தேன், ஈரம் அடர்ந்த கனமான காற்று என்னைத் துன்புறுத்தியது. எங்கே போவது என்று தெரியாமல் மரங்களுக்கிடையில் குளத்தைநோக்கிச் செல்லும் யாருமில்லாத நடைபாதையில் நடந்தேன். மரங்களின் கீழமைந்த ஒதுக்குப்புறமான இருக்கையில் ஒரு ஜோடி அமர்ந்திருந்தது, நீர்ப்பறவைகளின் இறக்கை ஒலி கேட்டது. பறவைகளின் குரல் எனக்கு வான் மாரிசனின் சோகப்பாடலொன்றை நினைவூட்டியது, கூடவே நானும் மற்றவர்களும் ஏன்  பழைய சோகப்பாடல்களைப் பாடுவதென்று தேர்ந்தெடுத்தோம் என்று வியந்தேன்.

அமெரிக்க ராணுவ வீரர்களும், கடலோடிகளும், பெரும்பாலும் கறுப்பு இனத்தவர்களும் நிறைந்த, கியூஷுவின் மேற்குப் பகுதியில் அமைந்த மதுவிடுதியில் இப்பாடல்களை இசைப்பது வரவேற்புக்குரியது, ஜான் லெனன், மிக் ஜாகர் , மற்றும் பாப் திலன் ஆகியோர் சோகஇசையால் பிரபலமானவர்கள்தான், இப்பாடல்கள் உலகத்தில் உள்ள எல்லோருடனும் உரையாடக்கூடியவை, டோக்கியோவுக்கு வந்தபோது இது இன்னமும் தெளிவாக நிரூபிக்கப்படும் என்றே நம்பினோம். ஆனால் உண்மையில் இந்நகரத்தில் ஒருமுறையேனும் நாங்கள் மேடையில் சோகப்பாடல்கள் இசைக்கக் கேட்டதில்லை, ராக் கஃபேக்களில் எப்போதேனும் பழைய பாடல்கள் ஒலிப்பதுண்டு, ஆனால் தெருக்களிலும், ஷிஞ்சிகு ரயில் நிலையத்தின் எதிரிலுள்ள வணிகக் கட்டிடங்களின் வாயில் பகுதியிலும் பாடப்படுவது, சகிக்க முடியாத கிராமிய போர்மறுப்புப் பாடல்கள் மட்டுமே. சோகப்பாடல்களை டோக்கியோவில் எங்கும் கேட்க முடியாது. ஷிமாடா மற்றும் யமகுச்சியின் ஒலிப்பெட்டியில், அவர்களின் வியக்கத்தகுந்த பாடல் சேகரிப்புகளிலிருந்து  பாடலைக் குறைந்த ஒலியில் வைத்துக்கொண்டு அந்த அற்பமான அறைக்குள் கேட்பதென்பது, எங்கள் துறைமுக நகரத்தில் கேட்பதுபோல இல்லை. எனக்குத் தோன்றியதைப் போலவே மற்றவர்களுக்கும் தோன்றியிருக்கக் கூடுமென்று நினைக்கிறேன். டிஸ்கொதே, க்ளப், மற்றும் காபரேக்களில் இசைக்கப்படுவது பிலிப்பைன் அல்லது பாப் இசை, அல்லது என்கா2 பாடல்கள் மட்டுமே. காட்டோ ஒரு சந்தர்ப்பத்தில் ஊருக்குத் திரும்புவதைப் பரிந்துரைத்தான், ஆனால் நகானோ ‘இரண்டு மாதத்தில் எதையும் தீர்மானிக்க முடியாது, மேலும் எதையுமே சாதிக்காமல் வீட்டுக்குத் திரும்புவது பரிதாபகரமானது’ என்று வாதிட்டான்.
குளத்தை நெருங்கிவிட்டேன், அதன் சுற்றுப்பாதையில் நடக்கும்போது, இனி சூழ்நிலை இன்னமும் மோசமாகும் என்று தோன்றியது. ஒன்று நான் வெளியேற வேண்டும் அல்லது ட்ரம்ஸ் வாங்க வேண்டும், இரண்டிற்குமே பணம் தேவை, மறுநாள் ஏதாவது வேலை தேடவேண்டும் என்று முடிவெடுத்தபோது தெருவிளக்கின் ஒளியில் மேல் மாடியில் குடியிருக்கும் யகூசாவைப் பார்த்தேன். பாதையோரத்தில் இருந்த புதர்ச்செடியினருகில் நின்றுகொண்டிருந்தான், நான் அவனைக் கவனிக்காதது போல் தலையைக் குனிந்து கொண்டு கடந்தபோது, ‘ஒரு நிமிடம்’ என்றான். பெரிய குப்பை சேகரிக்கும் நீலப்பை ஒன்றை வைத்திருந்தான், கைகளில் கையுறை, தொளதொளவென ஒரு சட்டை, உறுத்தும் நிறத்தில் கட்டம் போட்ட கால்சராய் ஒல்லியான அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்தது.

”ஒரு நிமிடம் இங்கே வா.”

நான் முகத்தில் விழப்போகும் குத்துக்காகத் தயாராகிக் கொண்டு மெதுவாக அவனருகில் சென்றேன், விபரீதமாக ஏதும் நடந்தால் தற்காத்துக் கொள்ளத் தயாரானேன்.

“நான்தான், உங்கள் அறையின் மாடியில் இருக்கிறேனே, உனக்கு என்னைத் தெரியும்தானே?” நான் தலையசைத்தேன். “உன் பேர் என்ன?”

       யகூசாவின் முகம் வியர்வை சொட்டிக் கொண்டிருந்தது. இருபதுகளின் கடைசியில் இருப்பவன் போலிருந்தான், குறுகிய புருவம், சரிந்த கண்கள், ஒட்டிய கன்னம், மெலிதான மூக்கு, சிறிய வாய், முகம் பேனாக்கத்தி போலிருந்தது, நான் என் பெயரைச் சொன்னேன்.

“அப்படியா? நான் டாட்சுமி, எனக்கு உதவ முடியுமா? ஒரு வேலை செய்ய வேண்டுமே.” புதர்களைச் சுட்டிக் காட்டினான். அது ஹைட்ராஞ்சியா3 செடி. “நான் உனக்கு முந்நூறு யென் தருவேன், இல்லை! ஐந்நூறு”.

என்ன செய்வதற்காக? என்று கேட்டதும், டாட்சுமி இலைகளைப் பறிப்பதற்கு என்றான்.

“தளிர் இலைகள் நல்லது, அவற்றைப் பறித்து இந்தப்பையில் போடவேண்டும்”
நான் அவன் சொன்னபடி செய்தேன். ஆனால் இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறான் என்று வியப்பாக இருந்தது.

“இதைக் காயவைத்து விற்றுவிடுவேன்” என்றான் பெருமிதமாக, “காயவைத்து, நொறுக்கி, பொட்டலமாக்கி விற்க வேண்டியதுதான் இதன் மணமும் சுவையும் அப்படியே மரிஜுவானாவைப்போல் இருக்கும். அப்படியென்றால் என்னவென்று உனக்குத் தெரியும்தானே, சரிதான், உன்னைப்போன்ற பொறுக்கிகளுக்குத் தெரிந்துதானிருக்கும்

ஒரு யகூசா என்னைப் பொறுக்கி என்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஊரிலிருக்கும்போது பலமுறை மரிஜுவானாவை உபயோகித்திருக்கிறேன். வெளிநாட்டவர்களுக்கான மதுவிடுதிக்கு வரும் ராணுவ வீரர்கள் அதை, சாதாரண சிகரெட்டைப் போன்று எப்போதும் புகைத்துக் கொண்டிருப்பார்கள், எனவே அது தவறானது என்ற நினைப்பே எனக்கு வந்ததில்லை. நகானோவும் மற்றவர்களும் டோக்கியோவில் இது கிடைப்பதில்லை என்று அடிக்கடி குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் எங்கும் எந்த போதைப் பொருள் வேண்டுமானாலும்  கிடைக்கும், உங்களுக்கு அது கிடைக்குமிடம் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இங்கு கிடைக்கும் அளவு குறைவு, இந்த விஷயத்தில் டோக்கியோ எங்கள் ஊரின் அருகில் நெருங்கக் கூட முடியாது.
“இது நான் கண்டுபிடித்த விஷயம். இதன் சிறப்பு என்னவென்றால் இதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை, யாருக்கும் இது ஹைட்ராஞ்சியா என்பது தெரியாது, அப்படியே தெரிந்தாலும் காவலர்களிடம் புகாரளிக்க முடியுமா என்ன? சரிதானே?

இனாகோஷிராப் பூங்காவில் நடு இரவில் இந்த இலைகளைப் பறிப்பது, எங்கள் ஊரில் உண்மையான ‘பாட்டைப்4 புகைப்பதைவிட குற்றமாகத் தோன்றியது. எதிர்பார்த்ததைவிட கஷ்டமான வேலையாகவும் இருந்தது. செய்ய வேண்டியதெல்லாம் தளிர் இலைகளாகப் பார்த்துப் பறித்து, பைக்குள் போடவேண்டியதுதான், ஆனால் அதற்கு ஊர்ந்தும், நெளிந்தும், உடலை முறுக்கியும் முதுகு வலிக்க வேலைசெய்ய வேண்டியதாயிற்று. இரவு வெப்பமாகவும் ஈரப்பதமற்றும் இருந்ததால் என் உடைகள் வியர்வையில் நனைந்தன. முதல் பையை நிரப்பி முடியும்போது ஒரு மிதிவண்டியின் ஓசை கேட்டது. டாட்சுமி புதரின் பின்னால் ஒளிந்து கொண்டதால் நானும் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் வந்தது பால் விநியோகம் செய்யும் பையன் ஒருவன். மீண்டும் வேலையைத் தொடர்கையில் நான்இது ஒன்றும் சட்ட விரோதமான செயலைச் செய்வது போன்றதல்ல என்று அவனிடம் சொன்னேன். வெளியில் சொல்லமுடியாத நினைவுகளில் மூழ்கியவன் போலப் புருவங்களை நெறித்த டாட்சுமி சொன்னான்:

‘காவலர்கள் சந்தேகத்தின் பலனை எப்போதும் உனக்களிக்க மாட்டார்கள்.

சிறிதுநேரத்தில் இரண்டு பைகளையும் ஹைட்ராஞ்சியா இலைகளால் நிறைத்திருந்தோம், கிழக்கில் மெதுவாக வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது. வீட்டிற்குத் திரும்பும் வழியில் டாட்சுமியும் நானும் எங்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். நான் டோக்கியோ வந்து இரண்டு மாதங்களானதையும், கியூஷிவிலிருந்து வந்ததையும், நண்பர்களின் இசைக்குழுவைப் பற்றியும், நான் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதையும் சொன்னேன். டாட்சுமி என்னைவிட மூன்று வயதுதான் பெரியவன் என்பது ஆச்சரியமாக இருந்தது. டாட்சுமி ஷிஞ்சிகுவில் அலுவலகம் உள்ள ந்தக் குழுவில் இணைந்தபோது, பள்ளிப் படிப்பில் இருந்ததையும், இப்பொழுதெல்லாம் யகூசாவாக இருப்பதற்குக் கூட கல்வித்தகுதி தேவையாக இருப்பதையும், தன் தாயின் வயதுள்ள ஒரு மதுவிடுதிப் பணிப்பெண்ணோடு இருப்பதையும், அவளை நீ-சான் என்று அழைப்பதையும் தெரிவித்தான். நீ-சான் என்ற சொல் அன்போடு “வயதான சகோதரிஎன்று அழைக்க உதவுவது.

உன் நண்பர்கள் உன்னை ஒதுக்கியபின் நீ ஊருக்குச் செல்வது சுலபமல்ல, நீ-சான் இன்று வரமாட்டாள், நீ சிறிது நேரம் இங்கே இருக்கலாமே?

டாட்சுமியின் அறை எங்கள் அறையின் அளவில் இருந்தது, ஆனால் இருந்த இரண்டு சிறிய அறைகளும் வாசனைத் திரவியங்களின் நெடியடிக்கும் பெரிய கட்டிலால் நிறைந்திருந்தது.

நேரம் தெரியாத பகல் பொழுதில் எழுந்து இலைகளை பதப்படுத்துவதற்கு உதவி செய்ய ஆரம்பித்தேன்.

டாட்சுமி இலைகளை வெயிலில் காய வைக்கவில்லை. “இதை மொட்டைமாடியில் காயவைக்க முடியும் என்று நினைக்கிறாயா? என்று சிரித்தபடி கேட்டான். அவன் புன்னகை வித்தியாசமாக இருந்தது, இதுவரையில் நான் பார்த்திராத வகை. சகிக்க முடியாததோ அல்லது சங்கடப்படுத்தும் புன்னகையோ இல்லை, குரூரமானதும் அல்ல. ஏதோ அவன் முகத்தசைகள் இதற்குப் பழக்கமில்லாதது போலவும், ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முயற்சிப்பது போலவும் இருந்தது. அடுப்பைப் பெரிதாகத் தூண்டி, ஒரு பாத்திரத்தில் இலைகளைப் போட்டு வறுத்தான். “இலைகளில் உள்ள ஈரப்பதத்தை நீக்க வேண்டும், ஆனால் தீய்ந்து விடக்கூடாது, நிறைய அனுபவம் தேவை இதற்கு என்றான். சூட்டிலிருந்து இலைகளை எடுக்கும்  முன் சுவாசத்தை புத்துணர்வாக வைக்கும் திரவத்தின் சில துளிகளைச் சேர்த்தான். “இதுதான் இதன் ரகசியம், இதன் மூலம் உன்னுடைய இறக்குமதி செய்யப்பட்ட சரக்கின் சுவை கிடைக்கும்என்றான் பெருமிதம் தொனிக்கும் குரலில். நான் இலைகளைப் பொடி செய்து தாளில் மடிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். டாட்சுமிக்கு என் வேலை பிடித்து விட்டது.

உண்மையில் உனக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது.

அன்று இரவு எங்கள் தயாரிப்பை விற்பதற்குச் சென்றோம். ஷிஞ்சிகுவில், பூங்காவிற்கும் இசையரங்கத்திற்கும் இடையில் உள்ள ஒரு குறுகிய தெருவைத் தேர்ந்து கொண்டான். பொதுவாகக் குடித்துவிட்டு வருபவர்களை அணுகினான், அவர்கள் அவனை சைகையில் துரத்தினர், ஒரு ஜோடி இவன் அருகில் வருவதைப் பார்த்ததும் உயிருக்குப் பயந்து தெறித்தோடியது. கிட்டத்தட்ட ஆயிரம் பொட்டலங்களைத் தயாரித்து, அவற்றை ஒரு பையில் திணித்து வைத்துக்கொண்டு வந்திருந்தோம், பத்துப் பத்தாகச் சேர்த்து ஒரு பெரிய பொட்டலமாக இருந்தது, ஆனால் தனித்தனியாகவும் விற்பதற்குத் தயாராக இருந்தோம்.

“விற்பது எப்போதும் இப்படிக் கஷ்டமானதுதானா? என்று கேட்டேன்.

“உண்மையைச் சொன்னால் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நான் விற்க முயற்சித்தது இல்லை, ஐந்து அல்லது பத்துப் பொட்டலங்கள் தயாரித்து ஓரிருமுறை உன்னைப்போல் நீளமாக முடியை வளர்த்துக்கொண்டு அலையும் பயல்களுக்கு விற்றிருக்கிறேன். அப்படிப்பட்ட ஆட்கள் எங்கே இருப்பார்கள்?

நான் வழக்கமாகச்செல்லும் கஃபே அருகில்தான் இருந்தது. ஆனால் அதை டாட்சுமியிடம் சொல்வதா வேண்டாமா என்று யோசித்தேன். அங்கிருப்பவர்கள் சந்தோஷமாக ஒரு பொட்டலத்துக்கு ஆயிரம் யென் கொடுத்து வாங்குவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் கில்லாடிகள், இது போலியானது என்று அவர்கள் கண்டுபிடித்து விட்டால் அப்புறம் அங்கே நான் தலைகாட்ட முடியாது. யாரும் இதை இரண்டாம் முறை வாங்கப்போவதில்லை என்பதால் மொத்தமாக விற்பதே சிறந்தது. எனக்கு இதில் இருபது சதவீதம்  கொடுப்பதாகச் சொல்லியிருந்தான், ஆனால் அதில் எனக்குத் திருப்தியில்லை எனவே நாற்பது சதவீதம் தரும்படி டாட்சுமியிடம் கேட்டேன். தந்தால் அவனை ஹிப்பிகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னேன். கடைசியில் முப்பத்தைந்து சதவீதம் என்று முடிவானது. இப்பொழுது எங்களுக்கு சில உண்மையான பொட்டலங்கள் தேவை.

“அது எதற்கு? என்றான் டாட்சுமி, நான் குறைந்தது நானூறு பொட்டலங்களையாவது விற்க விரும்புவதாகச் சொன்னேன்.

“கொஞ்சமாக மக்களுக்கு விற்று அவர்களுக்குப் போதை ஏறவில்லை என்றால் எல்லோரிடமும் சொல்வார்கள், நம் வியாபாரம் அதோடு முடிந்துவிடும், மொத்த வியாபாரிகளுக்கு விற்க வேண்டுமென்றால் முதலில் மாதிரிக்குக் கொஞ்சம் கொடுக்க வேண்டும்

புத்திசாலி, என்று என் கன்னத்தைத் தட்டினான் டாட்சுமி. இருவரும் சிறிய கஃபே ஒன்றிற்குச் சென்றோம், அங்கு யொகோடா தளத்தைச் சேர்ந்த ராணுவவீரர்களும், கிரீஸ் மற்றும் துருக்கியைச் சேர்ந்த கடலோடிகளும் வருவர். மூன்று பொட்டலங்களை அங்கிருந்து வாங்கிக்கொண்டு நான் எப்போதும் செல்லும் ராக் கஃபேவுக்குச் சென்று மொத்த வியாபாரிகள் வரும்வரை காத்திருந்தோம். பிங்க் ஃப்ளாய்டின் இசை செவிப்பறையைத் துளைத்தது.

“என்னால் தாங்க முடியவில்லை என்று டாட்சுமி என் காதுகளுக்குள் இரைந்தான். “இந்த இடம் நாசமாய்ப் போக!

இரவு ஒன்பது மணி என்பது இந்த வியாபாரிகளைப் பொறுத்தவரை மிகவும் சீக்கிரம். எனவே ஏதாவது ஒரு திரைப்படத்திற்குச் சென்று நேரத்தைப் போக்கலாம் என்று முடிவு செய்தோம். ‘The Last Picture Showஅருகில் உள்ள ஒரு இரவு அரங்கில் காண்பிக்கப்படுகிறது என்றதும் முதலில் டாட்சுமி தயங்கி, வெளிநாட்டுப்படங்கள் தனக்குப் பிடிக்காதென்றான். ஆனால் கொஞ்ச நேரத்தில் திரையில் ஆழ்ந்து பெருமூச்சுடன் கண்கலங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இதுபோல ஒரு படம் இதுவரை பார்த்ததில்லைஎன்று ராக் கஃபேவுக்குச் செல்லும் முன் நாங்கள் பியர் அருந்த அமர்ந்திருந்த இடத்தில் சொன்னான். “ நீ இது மாதிரிப் படங்களை அடிக்கடி பார்ப்பாயா?

உண்மையில் அப்படி இல்லை.

நீ அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?

அமெரிக்காவிலும் தனிமையை உணரும் மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான் நான் அந்தப் படத்தில் இருந்து தெரிந்து கொண்டது.

“அப்படியென்றால் என்ன அர்த்தம்?

நான் ஊரில் பார்த்த ராணுவ வீரர்கள் சுறுசுறுப்பானவர்கள், ஆஜானுபாகுவான ஆட்கள் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவர்கள், எப்போதும் சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்கள் போல் தெரிகிறவர்கள், எனவே எல்லா அமெரிக்கர்களும் செல்வந்தர்கள், சந்தோஷமானவர்கள் என்று நினைத்திருந்தேன்.

“நீ என்ன எழவைப் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை.என்றான் டாட்சுமி. தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தான். “அமெரிக்காவிலும் தன்னைவிட வயது அதிகமானவர்களைக் காதலிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

அதற்கப்புறம் ஏதும் பேசாமல் தாடியைக் கோதியவாறு அமர்ந்திருந்தான்.
டாட்சுமி குடிகாரனில்லை போலும், மூன்று பியர்களுக்கப்புறம் கால்கள் தள்ளாட நடந்து வந்தான். மீண்டும் ராக் கஃபேவுக்குச் சென்றோம், இப்போது அதன் கதவுகள் சுவற்றின் மீது நடுங்கிக் கொண்டிருந்தன, நான் டாட்சுமியை யொகோசுகாவிலிருந்து வந்திருந்த வியாபாரிகளுக்கு, அவன் ஒகினாவாவிலிருந்து அன்றுதான் அங்கு வந்திருக்கும் யகூசா என்று அறிமுகப்படுத்தினேன். அவர்கள் மூவருமாகச் சேர்ந்து கிட்டத்தட்ட முந்நூறு பொட்டலங்களை வாங்கிக் கொண்டார்கள்.

“நீ-சான், இது யசாகி, அவன் நீளமான தலைமுடியை வைத்துத் தவறாக நினைக்க வேண்டாம், பயலுக்கு நிறைய மூளையிருக்கிறது.”

வீட்டுக்குத் திரும்புகையில் வாடகை வண்டியொன்றை பிடித்துத் திரும்பினோம். என் அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன, டாட்சுமியின் அறையில் அவன் ‘நீ-சான்என்றழைக்கும் பெண் இருந்தாள். மெல்லிய ஆடை அணிந்து துரித உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். டாட்சுமி அல்லது என் அம்மாவின் வயது என சுலபமாகக்  கணிக்கலாம், மார்க்கச்சை அணியவில்லை, சமீபமாக அக்குள் மயிரை நீக்கவில்லை என்பது தெரிந்தது. அவள் எதுவும் பேசவில்லை, என் வரவைக் கண்டுகொள்ளவுமில்லை ஆனால் முழுஒப்பனையில் அமர்ந்து உணவை உறிஞ்சியபடி, மறுகையில் எரியும் சிகரெட்டோடு அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்ததும், திரைப்படத்தின்போது டாட்சுமி ஏன் விசும்பினான் என்பது புரிந்தது போலிருந்தது.  மத்தியமேற்கு அல்லது அதைப்போல வேறு எங்கோ உள்ள ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் திமோதி பாட்டம்ஸ், தன் உடலுறவுத் துணையாக ஒரு திருமணம் ஆன, தன்னைப்போல் இருமடங்கு வயதுள்ள, தனிமையிலிருக்கும் ஒரு பெண்ணைத் தேர்கிறான். இறுதிக்காட்சியில் அவளையும் அந்த நகரத்தையும் விட்டுச் செல்வதென வண்டி ஏறியவன் மீண்டும் திரும்பி அவளின் இடத்திற்கே வந்து சேர்கிறான். அந்தத் தளர்ந்த அமெரிக்க மாது அமெரிக்காவின் குறியீடு – முன்பிருந்ததை, இப்போது இழந்து விட்ட அமெரிக்கா.

“நீ-சான், இன்று எவ்வளவு சம்பாதித்தோம் பாருங்கள், இருவரும் சேர்ந்து.
டாட்சுமி பத்தாயிரம் யென் உள்ள பணக்கட்டினை அவன் கால்சராயிலிருந்து எடுத்து அவள் முன் வைத்தான். சாப்பிட்டு முடித்திருந்த அவள் சாப்பிடும்போது இருந்தது போலவே எந்த உணர்ச்சியும் காட்டாத முகத்துடன் அதை எண்ண ஆரம்பித்தாள்.

நான் என் அறைக்குத் திரும்பியதும் நகானோ “எங்கே போனாய்?”  என்றான், “நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்
சமையலறையில் அமர்ந்தபடி மட்டமான விஸ்கியை அருந்திக் கொண்டு அவன் மட்டுமே விழித்திருந்தான்.

“இன்று மறுபடி சில விஷயங்களை விவாதித்தோம். காட்டோவின் அம்மாவுக்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லை, எனவே அவன் வீட்டுக்குப்போக விரும்புகிறான். நாம் இதைச் சந்தித்துதான் ஆக வேண்டும், இப்படி வாழ்ந்து கொண்டு நம்மால் ஒருநாளும் பிரபலமான இசைக்குழுவாக மாறமுடியாது. ஷிமாடா, அவனுக்குத் தெரிந்த ஒரு இசைக்குழுவில் உதவியாளனாகப் போகிறானாம், யமகுச்சி, ஒரு ஜாஸ் கித்தார் பள்ளிக்குப் போகப்போகிறான். நான் என்ன செய்வதென்று இன்னமும் முடிவு செய்யவில்லை, உண்மையில் நான் சோர்ந்துவிட்டேன். இரண்டுமாத முயற்சிக்குப்பின் இதைக் கைவிடுவதென்பது பரிதாபகரமானதுதான், ஆனால் இதுதான் உண்மை. இன்னமும் ஒரு வருடம் முயற்சித்தாலும் எதுவுமே நடக்காமல் கூடப் போகலாம். ஆக, எப்படியோ, இன்றிலிருந்து மூன்று வாரம் கழித்து, ஞாயிற்றுக்கிழமை பூங்காவில் ஒரு சிறு இசைநிகழ்ச்சியில் பாடப்போகிறோம். நீ என்ன சொல்கிறாய் யசாகி? ஷிமாடா ட்ரம்ஸ் ஒன்றை இரவல் வாங்கமுடியும் என்கிறான். நீ எங்களோடு சேர்ந்து கொள்வாய்தானே? நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெறுவது என்பது இதுவே கடைசி முறை. இனோகாஷிரா பூங்காவின் ஒரு மூலையில்  திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டிருக்கிறது, சிறு இசைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், கிராமிய இசை மட்டும்தான், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதிய நேரத்தில் நடக்கிறது, நான் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரைச் சந்திக்க நேர்ந்தது, நம்மைப் பற்றிச் சொல்லி, வாய்ப்புக் கிடைக்குமா? என்று கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டுவிட்டார்.”

“இல்லை, எனக்கு விருப்பமில்லை. என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, எனவே நாளைக்கே நான்  தனியாக ஒரு அறை ஏற்பாடு செய்து கொள்ளப் போகிறேன். ஆனால் உங்கள் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருகிறேன்” என்றேன்.
அங்கிருந்து அதிக தூரமில்லாமல், அடுக்ககம் ஒன்றில் ஒரு அறை சுலபமாகக் கிடைத்தது. எனது சொற்ப சாமான்களை ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றேன்.  சிறிய அறைதான், நான்கரை விரிப்புகளின் அளவுதான் இருந்தது. ஆனால் என்னிடம்  ஒரு ஸ்டீரியோ வாங்கும் அளவு காசு இருந்தது. என் வாழ்க்கை முறை அதிகம் மாறிவிடவில்லை: இன்னமும் பழைய புத்தகக் கடைகளில் இருந்து கவிதை மற்றும் புதினங்களை வாங்கிக் கொண்டு, மணிக்கணக்கில் ஏதேனும் ராக் அல்லது ஜாஸ் விடுதியின் ஏதோவொரு மூலையில் அமர்ந்து கொண்டு படித்தவாறு இருக்கிறேன். பணம் தீரும்போது ஹைட்ராஞ்சியா செடிகளைத் தேடுவேன், பொட்டலங்களை  அகசாகா அல்லது ரபோஞ்சியில் விற்பேன், ஷிஞ்சிகுவைத் தவிர்த்து வந்தேன். ஆனால் ஓர் இரவு யொகோசுகாவின் வியாபாரிகளை அகசாகாவில் வைத்துச் சந்திக்க வேண்டியதாயிற்று. ஆனால் உண்மையில் அது போலியானது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அது அப்படியொன்றும் நல்ல சரக்கல்ல என்று மட்டும் கருத்துத் தெரிவித்தார்கள்.

அந்த முக்கியமான ஞாயிறு வந்தது, இனோகாஷிரா பூங்காவில் ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் இசைக் குழுவினர் மொய்த்துக் கொண்டிருந்தனர். தனிப்பாடகர்கள், குழுப்பாடகர்கள் என நாட்டுப்புறப்பாடல்களை இசைப்பவர்கள் அடுத்தடுத்து அலுப்பூட்டிச் சாகடிக்கும் வண்ணம் பாடினர். அதிகபட்சமாக ஒரு முப்பதுபேர் சுற்றி அமர்ந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தனர். கைதட்டல் ஆரம்பத்தில் அளவாக ஒலித்து பின் இல்லாமல் போனது. நகானோவும் குழுவினரும் மேடை ஏறி இசைக்க ஆரம்பித்ததும், புறாவுக்கு உணவளித்துக் கொண்டிருந்த வயதான தம்பதியர் சத்தம் அதிகம் என்பதைக் குறிக்கும் விதமாக அங்கிருந்து எழுந்து சென்றனர். இரண்டே இரண்டு ஜான் மயாலின் பாடலோடு ட்ரம்ஸ் இல்லாத அந்த நான்குபேர் கொண்ட சோகஇசைக்குழு தன் பயணத்தை முடித்துக் கொண்டது. ஆனால் நான்கு பேருமே அந்த நிகழ்வை ரசித்து இசைத்தனர் என்று எனக்குத் தோன்றியது, நிகழ்ச்சி முடிந்ததும் நால்வரும் அந்த சிறு மேடைஅமைப்பின் கீழ் அமர்ந்து கோலா அருந்தியும், மற்ற நாட்டுப்புறஇசை பாடியவர்களைக் கேலிபேசியும் மகிழ்ந்தனர். நகானோ என்னைப் பார்த்ததும் கையை அசைத்து அவர்களோடு சேர்ந்து கொள்ளும்படி அழைத்தான். நான் பதிலுக்கு மறுப்பாக கையை அசைத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். குளத்தைச் சுற்றி நடந்து முன்பு டாட்சுமியோடு இலை பறித்த அந்த இடத்துக்கருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். மழைக்காலம் முடிந்து விட்டது, மலர்கள் உதிரத் தொடங்கியிருந்தன. வெளிறிய அந்தப் பூக்களைப் பார்த்தவாறு , தவழ்ந்தும் வியர்த்து வழிந்தும் இலைகளைச் சேகரித்த அந்த இரவை நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று நாங்கள் பார்த்த திரைப்படம் மீது திடீரென்று வெறுப்பினைப் போன்ற ஒரு உணர்ச்சி தோன்றியது. டாட்சுமியைப் போன்ற ஒரு மனிதனை அழவைத்த ஒரு திரைப்படத்தை என்னால் மன்னிக்க முடியாது.

டாட்சுமியைப் பார்ப்பதென்று முடிவு செய்து அவன் வீட்டிற்குச் சென்றேன்.
“நீ-சான் இருக்கிறாள், பரவாயில்லை உள்ளே வா”

அவள் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். சிவப்பு நிற லேம்5 ஒன்றை அணிந்து, மொத்த ஒப்பனையும் முடித்து இப்போது நகப்பூச்சினை கால்விரல்களுக்கு பூசிக் கொண்டிருந்தாள். காற்றில் பரவிய அதன் வாசம் என் மூச்சினை நிறுத்திவிடும் போலிருந்தது. டாட்சுமி ஹைட்ராஞ்சியாவை வறுத்துக் கொண்டிருந்தான். அவள் ஒருமுறை என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு, வரவேற்பாக எதுவும் சொல்லாமல் தன் வேலையைத் தொடர்ந்தாள். நான் அமைதியாக அமர்ந்து அவள் தன் கால்களுக்குச் சிவப்பு நிறம் பூசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

1.        ஜப்பானிய மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள்.
2.        பிரபலமான ஜப்பானிய பாரம்பரிய இசை.
3.        ஒருவகைப் புதர்ச்செடி.
4.        மரிஜுவானா அடைக்கப்பட்ட சிகரெட்.
5.        பொன் அல்லது வெள்ளி இழைகளால் பின்னப்பட்ட ஆடை.
                               *****

ஆசிரியர்: ரை முரகாமி
       
           இயற்பெயர் ரைனோசுகி முரகாமி – 1952 ல் நாகசாகியில் பிறந்தவர். சிறுகதை மற்றும் புதின எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர். இவரது எழுத்து ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  புதினம், சிறுகதை, நேர்காணல்கள் என இதுவரை வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள் 18. இதுவரை 10 திரைப்படங்களில் இவரது பங்களிப்பு உள்ளது.

2 comments:

மதுரை சரவணன் said...

நன்றாக வந்துள்ளது ஸ்ரீ வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றி சரவணன்.