Thursday, February 21, 2013

யவனிகா ஸ்ரீராம் கவிதை






ஆசியப் பகுதியில் வசிப்பது
ஆசியப் பகுதியில் வசிப்பது
நீர்நிலைகளில் மாசடைந்த கழிவுகளை
பார்த்துக் கொண்டிருப்பது
கொஞ்சம் மிளகுத்தூள் தூவிய உணவுகளை
வண்ணக் காகிதங்களில் உருவங்கள்
செய்பவர்களை பொய்க்கால் குதிரைகளை
சன்னியாசிகள் மற்றும்
சுடுமண் சிற்பங்களை அனுசரிப்பது
சரும வியாதிகளிலிருந்து ஒரு தரப்படுத்தப்பட்ட
கிருமிநாசினியை எதிர்பார்த்துக் கிடப்பது
பிறகு அதன் நதிக்கரைவாசிகள் தொலைதூரப்
பொட்டல்களுக்குச் சொன்ன
நியாயங்களுக்கு ரத்தம் சிந்துவதும்தான்
அதைவிடப் பிச்சைக்காரர்களைக் கடந்துபோய்
ஒரு தைலமரப்புட்டியை விலைக்கு வாங்கலாம்
தாமிர நிறப்பெண்களைப் பின்புறமாகத் தொடர்வதும்
குழந்தைகளை ஏற்றுமதிக்குத்
தயார் செய்யும் கூடங்களை உள்ளடக்கியதும்
தன் சொந்த நாணயத்தை அதன் எல்லைக்கு வெளியே
மதிப்பிட முடியாத சோகங்களைக் கொண்டதும்
கானகங்களை அழிக்க இயலாமல்
குடியிருப்புகளைச் சிதைத்து
சாலைகளை அகலப்படுத்திக் கொண்டிருப்பதும்தான்
சுருக்கமாகச் சொன்னால்
ஆசியப் பகுதிகளில் வசிப்பது
தலைக்கு மேல் தொப்பியை
சரியாக வைத்துக்கொள்ள
தாடைகளிலிருந்து பற்களைக் கழற்றுவது.

3 comments:

Vasu Balaji said...

குட் ஒன். நல்லாருக்கீங்களா ஸ்ரீ

ஸ்ரீ said...

நலம். நன்றி வாசு பாலாஜி. :-)

சித்திரவீதிக்காரன் said...

இறுதிவரிகள் அருமை.