Thursday, October 18, 2012

சிண்ட்ரல்லா சூசைட் - சமந்தா ஹெண்டர்சன்
சிண்ட்ரல்லா சூசைட் வேசைகளின் தலைவனை சுவற்றோடு அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாள். கத்தி முகவாயின் கீழ் அழுந்தியிருந்தது. அவள் முகத்தில் எப்போதும் போல ஏளனமான மண்டையோட்டுச் சிரிப்பு. அதன் அர்த்தம், அவள் இனி எதற்காகவும் பின்வாங்க மாட்டாள்.

நாங்கள் இந்த டேரோட் பகுதிக்கு வந்தது நேர்மையான ஒரு வேலை, நல்ல விதத்தில் முடிந்ததைக் கொண்டாட. யுரேகா பண்டகசாலை மூலமாகத்தான் பொருட்களின் விநியோகம் நடக்கிறது. சுரங்கத் தொழிலாளர்களுக்கும், குழுவினர்களுக்கும் தேவையான பொருட்கள். சுரங்கம் தோண்டிக் கொண்டிருப்பவர்கள் வருடக்கணக்காகத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்கத் தாதுவின் கீற்று ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி விடமாட்டார்கள். உண்ணிகளைப் போல ஒட்டிக் கொண்டு விட்டார்கள். இம்முறை இக்குழுவினருக்கான மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்கிறோம். சென்றமுறை தொழிலாளர்களுக்கான மது கலக்க உதவும் சிறு கரண்டியினைக் கொண்டு சென்றோம்.

தலையில் பொருத்தப்பட்டிருந்த நோக்கியின் வழி 3600 யில் சுழற்றிப் பார்த்தேன். டின்டைப் சுவர்ப்புறமாகக் குனிந்து எப்போதும் போல ஒதுங்கி நின்று கொண்டிருந்தான். நான் பாதுகாப்பான தொலைவுக்கு நகர்ந்தேன். அவனுக்கு அவளின் மனோநிலை நன்கு தெரியும்.

இடப்புறம் சுழற்றிப் பார்க்கையில் 1700 யில் மங்கலாகத் தெரிந்தது. இதை முதலில் நுட்பந் தெரிந்த குறளிகளிடம் காண்பிக்க வேண்டும். என் பயணத்துக்கான பொருட்களைச் சேகரிப்பதென்பது மலிவானதல்ல. எங்கள் மூவரின் பணமும் சேர்ந்த பிறகும் கூட.

சூசைட் வேசையர் தலைவனின் மொத்த உடற்பரப்பையும் சுவற்றில் அழுத்திக் கொண்டிருந்தாள். தற்போது வரை உயிருடன்தானிருக்கிறான். நான் யார் அவனை மீட்க முயற்சிப்பார்கள் என்று கணக்கிடுவதை விடுத்து அவளின் பின்புறம் நின்று பாதுகாக்கலானேன். இங்கு தவறான ஒரு செயல் உங்கள் உயிருக்கு உலை வைத்து விடும்.
சூசைட் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்குப் பின்னால் டின்டைப் தன் வேலையை முடித்து நிமிர்ந்தான். சில சமயங்களில் சூசைட் கொன்று விடுவாள் சமயங்களில் இல்லை. நான் அதில் தலையிடுவதில்லை. சிறிது நேரத்தில் சூசைட் அவனை விடுவித்தாள்.

நான் என் பணப்பையைத் திறந்து காட்டி “எனக்காக ஒரு சுற்று மது எல்லோருக்கும்,அடுத்த சுற்று வேசையரின் தலைவனுக்காகஎன்றேன். பருத்த உடலுடன் வியர்த்து வழிந்து கொண்டிருந்தவனைப் பார்த்து தலையசைத்து கண்ணைச் சுருக்கினேன். அவன் முகத்தைச் சுளித்தவாறு தலையசைத்து நகர்ந்தான். டேரோட்டில் 20 வருடங்களாக வசிப்பவன்,புத்திசாலி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தவன். சூசைட் தோளில் அறைந்து அவனை அனுப்பி வைத்த பின் கத்தியைத் தன் கைக்குள் தள்ளி விட்டு நகர்ந்தாள்.

பணப்பையை மதுவிடுதி மேசையில் எறிந்தேன். அங்கிருந்த குழுவினரும் வேசையரும் கம்மலான குரலில் மதுக்கிண்ணங்களை உயர்த்தி “சூப்பர்ஸ்டார்என்றனர்.

அது நாங்கள்தான்.சிண்ட்ரல்லா சூப்பர்ஸ்டார், சிண்ட்ரல்லா சூசைட், சிண்ட்ரல்லா டின்டைப்,நான்காம் நிலை மூவர் குழு. ஒன்றாகச் சிறைக்கு வந்தவர்கள், சூழ்நிலைகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டவர்கள். எங்களின் உண்மையான பெயர் இங்கு தேவைப்படாது. இருவராகவும் மூவராகவும் குழு அமைப்பது உயிர் வாழும் சாத்தியத்தினை அதிகப்படுத்தும். விடுதலை செய்யப்பட்ட பின்னும் இத்தொடர்பு நிலைக்கிறது. இருவராயின் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்,மூவராயின் ஒரே நேரத்தில் இருவர் உறங்க முடியும்.
சூப்பர்ஸ்டார்,சூசைட்,டின்டைப்: நான்கு வருடங்களுக்குப் பிறகு எங்கள் தண்டனைக் காலம் முடிந்து உதவிச் சம்பளத்துடன் சிறையிலிருந்து விடுவிக்கப்படப் போகிறவர்கள். இங்கே சம்பாதித்துக் கொள்வதும் பட்டினி கிடப்பதும் எங்கள் தேர்வு. நாங்கள் வசித்துக் கொண்டிருக்கும் இந்த நியூ ஹாலந்தின் கடற்கரையை விட்டு விலகாத வரை.
*************
அந்த இரவில் விழித்திருக்க வேண்டியது என்முறை. விடிந்ததும் டின்டைப் தங்கு குழியில் இருந்து மேல்தளத்திற்கு வந்து உலாவினான். எப்பொழுதும்போல் சுத்தமாக உடையுடுத்திக் கொண்டிருந்தான். கைகளுக்கடியில் சுருட்டிய புத்தகம். என்னைப் பார்த்து தலையசைத்து விட்டு உட்கார்ந்து அதை விரித்தான்.

“ஆல் தி இயர் ரௌண்டா? #
“விற்றாயிற்று,மாஸ்டர் ஹம்ப்ரோஸ் க்ளாக் #

டின்டைப்பை அலங்கோலமாக நான் பார்த்ததே இல்லை. பாட்டனியின் கப்பல் தளங்களிலும் சரி இப்போது சரக்குக் கப்பலின் அடித்தளத்தில் தங்கி இருக்கும்போதும் சரி.கருப்பு உடையணிந்து கழுத்து வரை எப்போதும் பித்தான்களிடுவான். பாதுகாவலர்கள் மந்தை போல எங்களைக் கீழ்தளத்துக்குத் தள்ளியபோது எங்கள் தோள்கள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டன.

சரக்கதிகாரி மேலே பார்த்தவாறு லேசாகச் சிரித்தான்.நல்ல பையன்,நாங்கள் இனி உன்னை டேரோட்டில் அடிக்கடி சந்திப்போம்என்றான். அவன் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறான் என்று தெரிந்தும் அமைதியாக இருந்தேன். அவன் கூறியது தவறு, பாட்டனி வந்து சேர்ந்தபின் வாழ்வதற்காக நான் வேசைத்தனம் செய்ததில்லை.அதற்கு முன்..... நான் சொல்ல விரும்பவில்லை.சரக்கதிகாரி ட்ரிம்டாஃப் நான் இல்லையென்றால் உயரமாகத் தெரிவான்,என் பின்னாலிருந்து “இருவர் குழுஎன்றவாறு கோப்பில் கிறுக்கினான். இடப்புறம் நின்றிருந்த காவலன் தன் கைத்துப்பாக்கியை எடுத்தான். அப்போது ஒரு பெண்ணின் கீச்சுக்குரல் மட்டும் கேட்காமல் இருந்திருந்தால்.நாங்கள் இருவர் குழுவாகவே அமைந்திருப்போம்

அவள் கூட்டத்திலிருந்து விலகிப் பலகையின் நுனியில்,ஒரு காவலனின் பிடியில் தூண்டிலில் மாட்டப்பட்ட புழுவினைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தாள். இந்த நீருக்குள் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். விழுந்தால் விரலகளை எண்ணி முடிக்கையில் உயிருடன் இருக்க மாட்டாள். காவலன் தன் கையினில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணுடன் அதிகாரியைப் பார்த்தான்.அதிகாரி தலையசைத்தால் அவளை விட்டுவிடுவான் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதிகாரி கடுமையாகச் சைகை செய்ததும் அவளைத் தரையிறக்கினான். இறுகப் பிடித்து எங்களுக்கிடையில் நிறுத்தினான்.அவள் அதிகாரியைப் பார்த்து பல்லைக் காட்டியதும் அவன் சிரித்தபடி ,மூவர் குழுவாக இருக்கட்டும்.சூப்பர்ஸ்டாரும் க்ளார்க்கும் உன்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்றபடி கோப்பினைப் பார்வையிடவாரம்பித்தான்.

“இவர்களுக்கு சிண்ட்ரல்லா என்று பெயரிடுஎன்றான்.எங்களை அகர வரிசையிலும், குற்றங்களினடிப்படையிலும் பிரித்தனர்.அடுத்தது மூவர் குழு டல்சீனியா,இருவர் குழு ஈவ்லீனா.நான் சூப்பர்ஸ்டார் என்பதை வைத்துக் கொண்டேன்.ட்ரிம்டாஃப் க்ளெர்க் என்பதை டின் டைப் என்றாக்கினான்.அந்தக் கணத்திலிருந்து அந்த இளம்பெண் சூசைட் என்றழைக்கப்பட்டாள்.நாங்கள் ஒருவரை ஒருவர் பேராபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.விடுதலை வரையில் ஒவ்வொருவருக்கும் நாற்பது பவுண்டு சம்பளம்,தம் உடலில் மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை என எல்லாமுண்டு.வீடு என்பதற்கு மட்டும் அனுமதியில்லை.


# சார்லஸ் டிக்கன்ஸ் நடத்திய வாரப் பத்திரிக்கைகள்
******************

டின்டைப்பும் நானும் பொழுது புலர்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
“அவள் கனவு காண்பாளோ?என்றேன் நான்.ஏனெனில் இரவுகளில் விழித்துக் காவலிருந்த எனக்கு,சூசைட் தன்னுடைய அசட்டுச் சிரிப்பினைத் தூக்கத்திலும் நிறுத்தாதது தெரியும். டின்டைப் புத்தகத்திலிருந்து தலையை எடுக்காமல் ஆமோதிப்பாகத் தலையசைத்தான். சூசைட் கனவு காண்பது எப்போதும் நல்லதல்ல, “அவள் தன் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொள்கிறாள்என்றான் திடீரென்று.நான் அவனைப் பார்த்து விட்டு மீண்டும் உதயத்தைப் பார்வையிட ஆரம்பித்தேன். டின்டைப் தேவையில்லாத தகவல்களை ஒருபோதும் சொல்லமாட்டான்.

“ஏன் அப்படி?அவள் வேசையர் தலைவனின் மந்தைகளுள் ஒருத்திபோலக் கிடையாது.
“அவன் ஒரு வேசையை அடித்துக் கொண்டிருந்தான்,புதிதாய் வந்தவள்,போன வாரம் அவளைத் துறைமுகப் பகுதியிலிருந்து வாங்கியிருக்கிறான்.சூசைட் மறுப்புத் தெரிவித்தாள்
“ஓ
அவளுக்குத் தன் தலையை யாரும் தொடுவது பிடிக்காது.துறைமுகப் பகுதியில் அவள் உள்ளே நுழைந்த அன்று காவலன் ஒருவன் அவளை அடக்கும் விதமாகப் பின்னந்தலையில் கழுத்தோடு சேர்த்து அழுத்தினான்.நான் அவன் கையில் ஆழமாகப் பதிந்திருந்த பற்களின் தடத்தைப் பார்க்க நேர்ந்தது.

தலையில் பொருத்தப்படும் கருவிகள் கிடையாது,காதுகளில் கேட்கும் கருவிகளோ, தொலைநோக்கிகளோ,உடலை பலப்படுத்தும் கருவிகளோ எதுவும் கிடையாது. வெறும் கத்திகள்,உடலோடு, நரம்போடு,பிணைக்கப்பட்ட கத்திகள்.சன்னமானது காந்தப் புலம் சற்று மாறினாலும் உடலைக் கிழித்து வெளியே வராது.உடல் முழுதும் வேயப்பட்ட கத்திகள்.

ஒரு முறை அவள் விழித்து நான் உறங்கச் செல்கையில் அவளைக் கவனித்தேன். விறைத்த உடல்,தலையைக் குனிந்து கொண்டிருந்தாள்.ஏனெனில் இப்போதுதான் அவள் உடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுக் காயங்கள் ஆறிக்கொண்டிருந்தன.தடிமனான சிவப்புத் தையல்கள் தோள்பட்டையின் குறுக்காக,ஒரு இறக்கையின் அடிப்பாகத்தைப் போலத் துருத்திக் கொண்டு.அவள் உடல் வெளுப்புடனும் ஒல்லியாகவும் இருந்தது.தசைகள் முடிச்சுகளாக இருந்தன.என்னால் அவள் மூச்சு விடுகையில் கத்திகளின் அசைவைக் கவனிக்க முடிந்தது.
அந்த இரவில் என்னால் உறங்க முடியவில்லை.

டின்டைப்பும் நானும் கேட்கும் கருவிகளைப் பொருத்திக் கொண்டுள்ளோம்.இருவரும் குறைந்த தூரங்களில் பேசிக் கொள்ள முடியும்.ஆனால் சூசைடிடம் அது கிடையாது.நாங்கள் இருவருமே உலோகங்களை உடலில் பாவிக் கொள்வதைத் தேர்வு செய்யவில்லை.அதற்கு அதிக செலவாகும்.மேலும் காந்தப்புலம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் இடத்தில் உடலில் உலோகம் பொருத்திக் கொள்வது நல்ல யோசனையல்ல.சிலர் அதைத் தேர்வு செய்யாமலுமில்லை,பளபளப்பாகவும்,மின்னிக் கொண்டும் பார்வைக்கு நன்றாகவே இருக்கும்.சில புத்திசாலிகள் பறக்கவும் செய்கின்றனர்.ஆனால் காந்தப்புலம் எழுச்சி அடையும் சமயத்தில் கீழே விழுந்து மோத வேண்டியிருக்கும்.
***********

டின்டைப் மேலே சூசைட் வருவதைப் பார்த்தவுடன் நகர்ந்து உட்கார்ந்தான்.நேற்று இரவில் பரட்டையாக இருந்த தலைமுடியை சற்றே இழுத்துக் கட்டியிருந்தாள்.அவளின் தலையின் வடிவம் தெளிவாகத் தெரிந்தது.தலையில் மாற்றங்கள் ஏதும் செய்து கொள்ளவில்லை.உதவிச் சம்பளம் பெறும் எவரிடமும் பார்க்க முடியாத விஷயம் இது.

இதைப்பற்றி அவள் ஏதும் சொன்னதில்லை.தன் ஆடையைச் சொறிந்து கொண்டே கொட்டாவியபடி, “நீ கொஞ்சம் தூங்கு ஸ்டார்!நான் விழித்திருக்கிறேன்என்றாள்.
“இப்போது என் முறைஎன்றான் டின்டைப்.
“என்னால் நீ தூங்கவேயில்லை
டின்டைப்,பரவாயில்லை,நான் கணக்கெழுத வேண்டியுள்ளது.நீ விழித்திருக்கையில் நான் அதைச் செய்துகொண்டிருப்பேன்,ஸ்டார் எழுந்ததும் பாட்டனிக்குச் சென்று அவளின் தொலை நோக்கியைச் சரி செய்வோம்என்றான்.

டின்டைப்பிடம்தான் எங்கள் பணத்திற்கான எல்லாக் கணக்குகளும் இருந்தது.நாங்கள் அதைப்பற்றி என்ன? ஏது? என்றுகூட விவாதித்ததில்லை.நாங்கள் இங்கு வந்ததிலிருந்து அப்படித்தான்.எங்களுக்குச் சேர வேண்டிய எல்லாப் பணத்தையும் சரியான முறையில் வசூலித்து,அவ்வப்போது எங்கள் கேளிக்கைகளுக்காகச் சிறு தொகைகளைக் கொடுத்தும்,மிச்சத்தைச் சரியான முறையில் வேலைகளுக்காகச் செலவழித்துக் கொண்டுமிருந்தான்.நான் பல இருவர் மற்றும் மூவர் குழுக்களைப் பார்த்திருக்கிறேன்.அவை அழியக் காரணம் இவனைப் போன்று ஒரு நேர்மையான கணக்காளன் இல்லாததுதான். பாட்டனியிலும்  என் நோக்கியைச் சரி செய்கையில் நுட்பந்தெரிந்த கூளிகள் “காரணம் தெரியவில்லை என்று நழுவிச்செல்ல விடமாட்டான்.

அவ்விரவில் என்னால் ஆழ்ந்துறங்க முடியவில்லை. டின்டைப் கணக்கிடுகையில் முனகுவது அவ்வப்போது என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
***************
1788ல் நியூஹாலந்து, நியூசௌத்வேல்ஸ் என்று மாறியது. இங்கிலாந்தும் தன்னுடைய ஆட்களை அங்கு அனுப்ப ஆரம்பித்தது.சிறுகுழுக்கள்,விருப்பமில்லாது வந்தவர்கள்,திருடர்கள்,வேசையர்கள்,கொலை செய்பவர்கள் என ப்ரிட்டன் தன் துரதிர்ஷ்டக் குட்டையைத் தூரெடுத்துக் கொண்டிருந்தது.நாங்கள் அங்கே எங்களை புவியீர்ப்பு விசையின் மாறிலி போன்று இணைத்துக் கொண்டு ப்ரிங்கிளின் புதிரான மடக்கை போன்ற சிக்கலான  வாழ்வை எதிர்கொள்ளத் தயாராகுகையில் முற்றிலும் வினோதமான அம்மோதல் நிகழ்ந்தது (நான் என் பள்ளியின் பெருமைமிகு தயாரிப்புகளில் ஒருவன்,பின்நாட்களில் மோசமானவனாக ஆகியிருந்தாலும்). டீமனின் நிலத்தின் வழியாக ஒரு தேவதை ஒளியுடன் செல்வது போலும் சென்று பூமியில் பேரோசையுடன் மோதியது.பெரும்பாலான வேசைகள்,அவர்களின் தலைவர்கள்,காவலர்கள்,பொறுக்கிகள்,நுங்கா மற்றும் முர்ரி இனத்தவர்கள் என அனைவரும் தூக்கத்திலேயே மடிந்து போனார்கள். யாங்ட்ஸேவிலிருந்து ஆர்க்னீ வரை வானம் சிவந்து கிடந்தது.சில நுங்காக்கள் மட்டுமே இப்போது மீதமிருக்கிறார்கள். வெளியிலுள்ள சில தீவுகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இன்னமும் பொறுக்கிகளும்,வேசையரும் வந்து சேர்வர்,இங்கிலாந்தின் மொத்த துரதிர்ஷ்டங்கள். வந்து சேர்ந்ததும் இதே போல மடிந்து போவர்.

இருப்பினும் கிறிஸ்துமஸில் பரிசுப் பொருட்கள் இறைப்பது போல ,புவியின் அரிதான தாதுக்களான இட்ரியம் மற்றும் ஸ்கேண்டியம் ,வெளிப்பட்ட சாம்பலில் கல்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்பு காந்தக் கடிகாரங்களும்,தானியங்கிகளும்,வானூர்திகளும் இங்கிலாந்தின் மகாராணியாரால் அனுப்பி வைக்கப்பட்டது.இருப்பினும் இன்னமும் துரதிர்ஷ்டம் எஞ்சியுள்ளது.எப்போதும் இருக்கும்.இங்கிருக்கும் அனைவரும் தம் சொந்த இல்லங்களில் இருப்பது போல நடித்துக் கொண்டிருப்பர்.வேசையர்கள் தொடர்ந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மாற்றப்பட்டுக் கொண்டேயிருப்பர்.

இங்கிலாந்துக்கு சாதகமாக இந்த பெரும் மோதல் மாறி விட்டது.ஆஸ்திரேலியாவைப் போன்று அரிதான பூமியாக,மோதல் நிகழ்ந்த நிலம் மாறியது.தனிமங்களின் தாதுக்கள், இங்கிருக்கும் குற்றம் புரிந்தவர்களின் கூட்டம் போலவே சேர்ந்து கிடந்தது.ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேலை பொருளையோ அல்லது உங்களையோ இங்கிருந்து அனுப்பும்போது.தண்டனைக் காலம் முடிந்தபின்னும் இங்கே இருக்கலாம்,அவர்களுக்காக வேலை செய்பவர்களுக்கு ஊதியம் சொந்த விதிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.அல்லது வேசைத்தனம் செய்து கொள்ளலாம்,தொழில்நுட்பர்களிடம் உதவியாளராய் இருக்கலாம்,சுரங்கத்தில் தங்கம் தேடலாம் (இதற்கு எப்போதும் ஆட்களுக்குக் குறைவில்லை),நுல்லர்போரில் திரிந்து அரிய தனிமங்களின் மூலத்தைத் தேடி மடியலாம்.அல்லது நுங்காக்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கலாம்(அவர்கள் யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை),உங்களின் குழுவினரோடு (இருவர் குழுவோ,மூவர் குழுவோ) சேர்ந்து திரியலாம் (உயிரோடிருந்தால்).

எப்பொழுதும் செய்வதற்கு ஏதேனும் இருந்து கொண்டே இருக்கும்.

பறக்கும் முயற்சிகள் மட்டும் அதிகம் கூடாது.ஏனெனில் மாறிக்கொண்டிருக்கும் காந்தப்புலம் உங்களைத் தரையில் வீழ்த்தி விடும்.எப்பொழுதும் வாகனங்களை நம்பியிருத்தலும் கூடாது.உலோகப் பொருட்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அவை எப்போது வேண்டுமானாலும் உங்களைக் கைவிட்டுவிடலாம்.
*****************
தொழில் நுட்பக் குறளிகள் தங்களிடத்தை உறையிட்டு வைத்திருக்கிறார்கள்.ஏனெனில் மாறும் காந்தப்புலம் அவர்களுடைய கருவிகளின் செயல்பாட்டைக் கெடுத்து விடலாம்.கருவிகள் பெரும்பாலும் நல்ல நிலையில் இயங்கின.இந்த உறைகள் அவர்களின் புதிய உறைவிடங்கள் முழுவதும் வேயப்பட்டிருக்கும்.

இருந்தாலும் உடலில் பொருத்தப்படும் கருவிகள் சரியாக வேலை செய்வதில்லை.சூசைட் தன்னுடைய கத்திகள் சரிவர இயங்காததால் பதட்டத்துடன் இருந்தாள்.அனேகமானவை இயங்காது அமைதியாக இருந்தன,ஆனால் அவளுடைய இடது கையின் பின்புறம் உள்ள கத்தி மட்டும் உள்ளே செல்வதும் வெளி வருவதுமாகத் திணறிக் கொண்டிருந்தது.எனவே அவள் தன் கையைக் காலுக்கு நேராக வைத்துக் கொண்டிருந்தாள்,கத்தி உடலையோ ஆடையையோ கிழித்து விடாதபடி. நான் டின்டைப்புடன் தொலைபேச முடியவில்லை,கருவி வெறுமனே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

என் முன்நெற்றியின் இடது புறத்திலிருந்த நோக்கியை நீக்கியிருந்ததால் வெறுமையையும்,அரிப்பையும் உணர்ந்தாலும் அசையாமல் பத்திரமாக அமர்ந்திருந்தேன்.டின் டைப் அமைதியாக உட்கார்ந்திருந்தான். சூசைட் நாங்கள் சாப்பிட உணவு கொண்டுவரச் சென்றாள்.

என் நோக்கியில் இருந்த குறையைக் கண்டுபிடித்ததும் நுட்பன் அடிக்குரலில் சிரித்துக் கொண்டான்.திரவத்திலிருந்து நோக்கியை வெளியில் எடுத்துக் கொண்டு தன் கையின் நீட்சி போலத் தோற்றமளித்த (ஒருவேளை அப்படியும் இருக்கலாம்) இடுக்கியுடன் நகர்ந்தான். சூசைட் மூவருக்குமான உணவுடன் வந்தாள். சூடானதும்,காலைவேளைக்குப் போதுமானதும்,கங்காரு இறைச்சியுடன் கூடியதுமான மாப்பண்ட வேவல்.நாங்கள் சேர்ந்து உட்கார்ந்தோம். டின்டைப் தனது புத்தகத்திலிருந்து மெல்லிய திசுப்போன்ற படச்சுருளை  வெளியிலெடுத்தான்.

இந்த உறைவேயப்பட்ட இடங்களிலுள்ள மற்றொரு வசதி என்னவென்றால் நாம் பேசுவதை மற்ற இடங்களைப் போல யாராலும் ஒட்டுக் கேட்கமுடியாது.

படத்தினை நோக்கிக் குனிந்தவாறு, “ஒரு வேலை வந்திருக்கிறது,உண்மையில் கவர்ந்திழுக்கக் கூடிய அளவு பணம், ஐநூறு பவுண்டு,அதுவும் அரசியிடமிருந்து நேரடியாக,பொய்யில்லை என்றான்.

“பிரித்துக் கொள்ள வேண்டுமா?என்றாள் சூசைட் கங்காருவை மென்ற வாயுடன்.

“ஒவ்வொருவருக்கும்

நாங்கள் தீவிரமாகச் சிந்தித்தோம். 15 நூற்றாண்டு கால அரசியின் பணம், அவர்கள் தரும் பணத்தைக் கொண்டு பெரிய இடத்தை வாங்க முடியும். இங்கிருப்பதிலேயே சிறந்ததாகப் பார்த்து வாங்கலாம்.

“ஆனால் இது ரொம்பவும் ஆபத்தான வேலைஎன்று தொடர்ந்தான்.

“கண்டிப்பாக,அப்படித்தானே இருக்க வேண்டும்,மேலே சொல்என்றாள் சூசைட்.

“தாதுக்களின் மூலம், அவர்களுக்கு அது எங்கிருந்து வருகிறது என்று தெரிய வேண்டும்

நீண்ட அமைதிக்குப்பின்,சூசைட் எங்கள் மீது இறைச்சி தெறிக்கச் சிரித்தாள்.

“மூலம்,அவர்களுக்கு அதிகமாய் ஒன்றும் தேவையில்லை,வேண்டுமென்றால் தேவதைகளின் அரசியையும் ,விரும்பியதைத் தரும் மந்திரத் தவளையையும் சேர்த்து நாம் கண்டுபிடித்துத் தரலாமா?

“ஒருவேளை இது நம்மால் முடியலாம்என்றபடி மெல்ல டின்டைப் என்னைப் பார்த்தான்.

சிலர் என் உயரத்தையும்,மென்மையையும் வைத்து நான் முட்டாள் என்று எடை போடலாம். ஆனால் நான் அப்படியில்லை. இந்தத் தாதுக்களின் மூலம், மோதல் நிகழ்ந்த இடம், நுல்லர்பாரின் வடக்குப் பகுதியில்,மிகப் பெரிய நிலம்,பாலையைப் போன்று வறண்ட இடம்,பாட்டனியின் மேற்கில் அமைந்துள்ளது.எல்லோருக்கும் அந்த இடம் தெரிந்தாக வேண்டும். ஆனால் அருகில் செல்லச் செல்லக் கதிர்வீச்சும் காந்தப்புலமும் அதிகரிக்கும். கதிர்வீச்சு குறைவு,காந்தப் புலம் அதிகம். எனவே பாட்டனி பகுதியிலேயே பாதி மிதவூர்திகள் (க்ளைடர்) விபத்துக்குள்ளாகும்,தப்பித்து வடக்கு நோக்கிச் சென்றவை அனைத்தும் தரையில் மோதின. நெவர்-நெவர் எனப்படும் அப்பகுதிக்குச் செல்ல முயன்ற வாகனங்களுக்கும் அதே கதிதான்.

எனவே மீதமுள்ள சாத்தியங்கள் குதிரை அல்லது கோவேறு கழுதையில் குதித்தபடி திசை தெரியாது பயணிப்பதுதான். மக்கள் முயற்சிக்கத்தான் செய்கிறார்கள், உதவிச் சம்பளம் பெறுபவர்களும்,ஆக்கிரமிப்பாளர்களும். அதற்காகும் செலவு இங்கிலாந்தைச் சேர்ந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? சிலர் திரும்பி வந்தனர். கூடவே கதைகளும், விலங்குகள் தம் காலடியில் வீழ்ந்து இறந்ததும்,கூட வந்தவர்கள் தாகத்தினால் பைத்தியம் போலாகி பாலையை விட்டு ஓடியதும்,தற்கொலைகளும்,கொலைகளும் (உண்மையில் யாரும் உயிரோடில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்). சிலர் தாதுக்களின் கட்டியினைக் கொண்டு வருவர்,பல நிறங்கள் வரியோடிய கட்டிகள். சிலர் நெவர்-நெவரின் உள்ளே செல்லச் செல்ல சிவப்புப் பாறைகள் இருக்குமிடத்தில் சாத்தானின் பாடல் உங்களுக்குக் கேட்கும் என்றனர்.ஒருவேலை யாரேனும் இலக்கை அடைந்திருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்தவரை அப்படி யாருமில்லை.

சூசைடிடம் மறுபடி அதே சிரிப்பு, வலது கையின் விரல்களை நக்கிக் கொண்டிருந்தாள் (இடது கையின் கத்திகள் அதே போலத் திணறிக் கொண்டிருந்தன). அவள் எங்களுடன் வரத் தயார் என்பது எனக்குத் தெரியும். அவள் பணத்துக்காக மட்டும் எதையும் செய்பவளல்ல. டின்டைப் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் முடிவெடுப்பது நாந்தானென்று அவனுக்குத் தெரியும்.

டின்டைப் அதிக ஆபத்தான வேலைகளை அவ்வளவு சுலபமாக ஒப்புக் கொள்ள மாட்டான். பணம் எவ்வளவு கொடுத்தாலும் சரி, சரியான திட்டமும், நிறைவான பாதுகாப்பும் இருந்தாலொழிய ஒப்புக் கொள்ள மாட்டான். நான் என் நெற்றியில் சொறிந்து கொள்ள உண்டான தீவிரமான உந்துதலை அடக்கியபடி “சொல்என்றேன்.டின்டைப் தன் கையில் உள்ள தாளுடன் அருகில் குனிந்து மெதுவான குரலில் ,ஒரு நுங்கா, வேன் டீமனில் மீன் பிடிப்பவன், மேற்குப் பகுதியில் நம்மைப் படகில் இறக்கி விடுவான். வளைகுடாப் பகுதியில் எங்கு மலையேற வேண்டுமோ அந்த இடத்தில்”.
“ஒரு நிபந்தனையின் பேரில் இதை ஒப்புக் கொள்ளலாம். நம் தண்டனையை ரத்து செய்து இங்கிருந்து அனுப்ப வேண்டும். ஒரு வேளை நாம் இங்கு திரும்பி வந்தால் துறைமுகப்பகுதியின் படகுகளில் கால் வைக்க விரும்பவில்லை.

என் அருகில் சூசைடிடம் நடுக்கத்தை உணர்ந்தேன்.

“உன்னால் கவர்னரிடமிருந்து உண்மையான விடுதலை உத்தரவு பெற்றுத் தரமுடியுமா? போலியைக் கொடுத்து விடப்போகிறார்கள்.

புன்னகைத்து முடியும் என்றான்.

*******************

ஜானி ரோமன் என்கிற அந்த நுங்கா சாம்பல் வெளுப்பில் இருந்தான். முகத்தில் சோகம் அப்பியது போலிருந்தது. ஐந்து பேர் தங்கக் கூடிய பெரிய படகு ஒன்று அவனுக்குச் சொந்தம். உண்மையில் எங்கள் மூவரைத் தவிர இன்னமும் ஒரு இருவர்குழு பின்கெர்டான் ரெட், பின்கெர்டான் கோல்ட், இதே முனைப்பில் கிளம்பியிருந்தனர். டின்டைப் அந்த மூன்று நாள் பயணத்திலும் தன்னுடைய கணக்குப் புத்தகத்தில் மூழ்கியிருந்தான். நான் கடற்கரைகளையும், வளைகுடாக்களையும் , அங்கு முளைத்திருந்தவற்றையும் கவனித்தவாறு இருந்தேன். சூசைட் மட்டும் பின்கெர்டான்களுடன் அரட்டை அடித்தவாறு மேல் தளத்தில் அமர்ந்திருந்தாள். (அவர்கள் அவளுடைய கத்தி தங்களைப் பதம் பார்த்து விடாத தூரத்தில் மரியாதையாகவே அமர்ந்திருந்தனர்.) நான் கடற்பயணம் மேற்கொண்டதில்லை. வேசையரும், பொறுக்கியரும் , சூழ இரும்புக் கிராதிக்குள் கிடப்பதே பரவாயில்லை என்று தோன்றியது. நான் இரவினில் விழித்திருந்து காவலிருந்தேன். நுல்லர்போரினை அடைந்ததும் பின்கெர்டான்கள் இருவரும் கிழக்கு நோக்கி உடனே கிளம்பி விட்டனர். டின்டைப் அவர்கள் மறையும் வரை அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான். ஜானி ரோமன் படகினைக் கட்டியதும் நாங்கள் குழுமினோம். ஜானி இரண்டு உள்ளங்கை அகலமுள்ள ஒரு பட்டையை வெளியிலெடுத்தான்.


“அது வரை படம்என்றான். டின்டைப் அதை எதிர்பார்த்தது போல்.

“வரைபடமோ , கதையோ இவ்விஷயத்தைப் பொறுத்த வரையில் இரண்டும் ஒன்றுதான்.என்றபடி ஜானி தன் வெளுத்த சாம்பல் நிறமான சுருங்கிய விரல்களால் வெள்ளை வரியின் இருபுறமும் சிவப்பில் குறிக்கப்பட்டிருந்ததைக் காண்பித்து,“இது அனாக்னுவால் குறிக்கப்பட்டது”, என்றான்.

“யாரும் மிஞ்சவில்லை என்று நினைத்தேன்”  என்றேன். தடிமனான தன் புருவங்களுக்கிடையே என்னை உற்றுப்பார்த்தவன் “சிலர் இருக்கிறார்கள், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லாவிட்டாலும் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, “ இது தான் உலுரு இருந்த இடம்என்றான்.

“உலுருவா

“அவள் தெய்வீகமானவளாகத் தான் இருந்தாள், புனிதமான இடம், ஆனால் இப்போது அவள் ராட்சசி. அனாக்னு அப்படித்தான் சொல்கிறான். எவரெல்லாம் தன் அருகில் வருகிறார்களோ, அவர்களோடு உரையாடுகிறாள், அவர்களைப் பைத்தியமாக்குகிறாள்

நான் டின்டைப்பை ஏறிட்டுப்பார்த்தேன். அவன் முகத்தில் ஆச்சரியக்குறி எதுவுமில்லை.

 “இந்த வழி?

 “ஒரு சிற்றோடை
“இதைத் தொடர்ந்தால் உலுருவுக்குச் செல்ல முடியுமா?

“கண்டிப்பாகஎன்றான் ஜானி. “அப்புறம் நீங்கள் இறக்க வேண்டியது தான்”.

சூசைடிடம் அதே சிரிப்பு.
*****************

கோவேறு கழுதையின் முதுகில் ஏறி அனாக்னுவின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட சிற்றோடையைத் தொடர்ந்தோம். இளம் பச்சை படர்ந்த நீர் செம்மண் பூமியுடன் உரசிக் கொண்டிருந்தது. காற்றில் ஈரப்பதம் இல்லாததால் முகம் வறண்டு இறுக்கத்தை உணர்ந்தேன்.

டின்டைப்பும் நானும் மாறி மாறி முதலிடத்தில் இருந்து கொண்டோம். சூசைட் பின்பகுதியைப் பாதுகாத்துக் கொண்டாள். ஒரு இரவுப் பொழுது கழிந்ததும் சூசைட் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டிக் கத்தினாள். நான் டின்டைப்பிடம் கிழக்குப் பகுதியில் பார்க்கும்படி சொன்னேன்.இரண்டு மிதவூர்திகளில் ரெட் மற்றும் கோல்ட் எங்களின் பாதைக்கு நிகராக உலுருவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர்.

“பின்கெர்டான்கள்
“ஆமாம்
“மாறுபடும் காந்தப் புலத்தில் எவ்வாறு பறக்கின்றனர்?
“அது மரநாரினால் (செல்லுலோஸ்) தயாரிக்கப்பட்டது,அதிகம் உலோகம் கிடையாதுஎன்றவன் என் திகைப்பைப் பார்த்து “அவை புதியனஎன்றான்.

வெம்மையான பகல் முழுக்கவும், நட்சத்திரங்கள் மின்னும்  இரவிலும் நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டோம். இன்னும் சிறிது தூரத்திற்கப்புறம் கோவேறுகழுதைகள் போகாது. இப்போதே அவை மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டன.கூர்மையுடையவைதான். நாங்கள் அவைகளை விடுவித்து திருப்பி அனுப்பினோம்.அனாக்னுவின் வரைபடத்தின்படி இனி நாங்கள் ஓடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும். நாங்கள் முடிந்த அள்வுக்கு நீரைச் சேகரித்துக் கொண்டோம். மதிய நேரத்தில் சூசைட் என்னையும், டின்டைப்பையும் எழுப்பி தொலைவில் சுட்டிக் காட்டினாள். கண்படு தொலைவில் சாம்பல் நிறப் புகை சூடான காற்றில் கிளம்பிக் கொண்டிருந்தது.

உடைந்து சிதறியிருந்தது அவர்களின் மிதவூர்திகள்தாம்.ஒன்று ஓடையில். அவர்கள் ஓடையைப் பிந்தொடர்ந்து வந்திருக்க வேண்டும். கோல்ட் ஊர்தியிலேயே கழுத்தெலும்பு உடைந்து கிடந்தான். ரெட் அவன் ஊர்தியிலிருந்து தவழ்ந்து சென்றதைப் புழுதியில் இருந்த கோடுகள் தெரிவித்தன. ஊர்திகளின் இறக்கைகள் வெளுத்தும் வளையும் தன்மையுடனும் இருந்தன. உடைந்த இறக்கையில் நார் தெரிந்தது.

சூசைடும் நானும் எதை எடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தபோது டின் டைப் உடல்களைச் சோதித்துக் கொண்டிருந்தான்.அவன் அவர்களின் காதுகளைப் பரிசோதித்தது எனக்கு வியப்பாக இருந்தது.மீண்டும் பயணத்தை தொடர்கையில் நான் இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.

****************
பரமாட்டா பள்ளத்தாக்கினை அடையும் வரையிலும் நாங்கள் வந்த வழியினில் மிகுந்த கவனத்துடன் வந்தோம். நெருக்கமாக அந்த நாள் முடியும் வரையிலும். இது குற்றவாளிகளின் வழக்கம். முன்பு நாள் கழிவது அலுப்புத் தருவதாக இருந்தது.பின்னால் கவனித்துக் கொண்டும் முன்னே செல்லும் குழுவினரின் முதுகைப் பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டும். இப்போது செம்மண்ணுக்கும் , நீல வானத்துக்கும் இடையில் பகல் நழுவி நட்சத்திரங்கள் தூவப்பட்ட இரவினில் எளிதாக முடிந்தது. தோள்பையின் அழுத்தம் அதிகமாக இருந்தது. டின்டைப் திசைமானியுடனும்,வரைபடத்துடனும் உழன்று கொண்டிருந்தான். சூசைட் பின்னால் முனகிக் கொண்டே இருந்தாள்.
நான் பின்கெர்டான்களைப் பற்றியும், டின்டைப்பின் வரைபடம் மற்றும் செல்லுலோஸ் விமானங்களைப் பற்றியும் நினைத்துக் கொண்டே நெவர் நெவரில் நடந்தேன்.
****************
      
காலை கடந்து கொண்டிருந்தபோதுதான் அந்த மெல்லிய ரீங்காரம் என் காதுகளுக்குள் கேட்டது. கிட்டத்தட்ட முணுமுணுப்பு போல. நான் நின்று அதை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். நிச்சயம் வார்த்தைகள்தான்.

பின் இடது காதில் லேசாக ஆரம்பித்து ஒரு வலி மெதுவாக தலைக்குள் பரவியது குத்தீட்டியைப் போல. முன்னால் டின்டைப் தன் உடலைக் குறுக்கிக் கொண்டு கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

காதினில் பொருத்தப்பட்டிருந்த கேட்கும் கருவிகள் இரைச்சலாய் என் முன்னந்தலையில் கேட்க ஆரம்பித்தது. டின்டைப்பின் கருவி என் காதில் கிறீச்சிட்டது. என்னால் என் குரல் டின்டைப்பின் தலையில் ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

சத்தமாக,அதிக சத்தமாக. என் தலை புழுதியில் கிடந்தது.

காதுகளில் ஏற்பட்ட வலியினை எதிர்க்க முடியுமா என்று பார்த்தேன். சூசைட் தலைக்குள் பொருத்தப்பட்ட கருவியைக் கீறி எடுத்தாள். நான் ஆடாமல் இருக்க முயற்சித்தேன்.

சிவப்பு நிற சதைக்கட்டி என் முன் விழுந்ததும் அந்த சப்தம் குறைந்தது. சூசைட் வேகமாக டின்டைப்பிடம் செல்வதைப் பார்த்தேன். அவன் தலையைப் பற்றிக் கொண்டிருந்த கைகளை விலக்கி தனது கத்தியை வெளித்தள்ளிக் குனிந்தாள். டின்டைப் அமைதியடைவதைப் பார்த்தேன், அவன் தலையில் பொருத்தியிருந்த கருவி சூசைடின் கையிலிருந்தது. அக்கேட்கும் கருவிகள் தலையில் ஆழமாகப் பொருத்தப்பட்டிருக்கவில்லை. எனவே கையை வைத்து அழுத்தியதும் ரத்தம் கசிவது நின்று விட்டது. எனினும் அந்த முணுமுணுப்பு இன்னமும் கேட்டது.

சூசைட் குழப்பமடைந்து இருந்தாள்.

“கேட்கிறதா?என்றேன்.

ஆமெனத் தலையசைத்தபடி, கவனமாகக் கேட்க முயன்று கொண்டிருந்தாள்.

“வார்த்தைகள். சீக்கிரம்,வெளிவருதல் அப்புறம் தண்டனைசிறிது நேரம் கேட்டுவிட்டுத் தலையை உலுக்கினாள். “இப்போது ரீங்காரம் மட்டுமே

கேட்கும் கருவிகளால் இல்லை

“இல்லை

டின்டைப் தன் பையைத் திறந்து பஞ்சு உருண்டைகளை வெளியிலெடுத்தான். நடுவில் கடினமாக இருந்தது. “இதோ இப்படி வைத்துக் கொள்ளுங்கள்என்றபடி இரண்டு காதுகளுக்குள்ளும் பொருத்திக் கொண்டான். நானும் சூசைடும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ரீங்காரம் அதிகரித்தது. முணுமுணுப்பு தீவிரமடைந்தது.

காதினில் பஞ்சை வைத்துக் கொண்டதும் சப்தம் தேய்ந்து மறைந்தாலும், மெலிதாக , மிக மெலிதாக கடவுளின் குரலைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது.

“நீ இதை எதிர்பார்த்தாயா?என்றாள் சூசைட்.

“இதைப் போன்ற ஒன்றை எதிர்பார்த்தேன்என்றான்.
நாங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருந்தோம். ஒரு முறை சோதனை முயற்சியாக ஒரு காதிலிருந்த பஞ்சை பாதி வெளியே எடுத்தேன்.

எல்லாம்மண்ணோடுமண்ணாகபின்புநட்சத்திரங்கள்கருணையற்றநட்சத்திரங்கள்

நான் தடுமாறிப் பஞ்சை மறுபடி அடைத்துக் கொண்டேன். டின்டைப் என்னை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டான்.

எரிக்கும் வெப்பத்தில் யோசித்தவாறு நடந்தேன்.
*****************
ஒரு குறிப்பிட்ட தூரம் வரை உங்களால் அதைப் பார்க்க முடியாது. தரை கொஞ்சம் கொஞ்சமாக மேடாக ஆரம்பித்தது. டின்டைப் எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்தவன் போல் முன்னேறிக் கொண்டிருந்தான். காதினில் கேட்கும் கருவிகள் இல்லாததால், நான் அவன் காதருகில் சென்று, “நான் யோசித்துக் கொண்டிருந்தேன்என்றேன்.

“அப்படியா! என்னவென்று சொல்லேன்என்றான் சுவாரசியமாக.

“முதலில் ஒரு ஊதியம் பெறும் ஒருவனுக்கு இந்த விஷயம் இந்த விஷயங்கள் எப்படிக் கிடைக்கின்றன? மூலத்திற்கான வரைபடம் அல்லது குற்றவாளிகள் கடற்பயணம் மேற்கொள்வதற்கான கவர்னரின் அனுமதி, அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குற்றவாளிக்கு எப்படி இதைப்போல காதில் பொருத்திக் கொள்ளக் கூடிய சாதனம் கிடைக்கும். அதுவும் இப்படிப்பட்ட கொடூரமான குரலைத் தடுத்து நிறுத்தும் சாதனம். உனக்கு எப்படி செல்லுலோஸில் தயாரிக்கப்பட்ட மிதவூர்திகளைப் பற்றித் தெரியும்?

“பின்கெர்டான்கள் வந்தது உனக்குப் பிடிக்கவில்லைதான். ஆனால் அதே சமயத்தில் உனக்கது ஆச்சரியமூட்டவில்லை, அநேகமாக நீ தெரிந்து கொண்டுவிட்டாய், உன்னை அனுப்பியவர்கள்தான் இவர்களையும் அனுப்பியிருக்கிறார்கள். இது போன்ற விஷயங்களுக்கு ஒரே சமயத்தில் இரு குழுக்களை அனுப்புவது என்பது ஒன்றும் புதிதில்லை”.

“ஆனால் உனக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால் உண்மையில் நீ இன்னொரு குழுவை எதிர்பார்த்திருக்கவில்லை. சரிதானே நான் சொல்வது? நீ ஒரு குற்றவாளியாகவும் இருக்க முடியாது. நீ இப்படி ஒரு குழுவை அமைப்பதற்கென்றே அனுப்பப்பட்டவன், ஆட்களைத் தேர்ந்தெடுத்து, சரியான சமயம் வரும்வரை காத்திருந்தவன். அதாவது உனக்கு மேல் இருப்பவர்கள் சரியான ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் வரை, அல்லது ஒரு வரைபடத்தை, அல்லது இது போன்ற காதில் பொருத்தும் சாதனத்தை, அல்லது மரநார் மிதவூர்தியை, சரியா?

நான் பின்னால் திரும்பி ஊர்திகள் நொறுங்கிய திசையைப் பார்த்தேன், “ஆச்சரியம்தான், அவர்களுக்கு ஏன் இந்தப் பஞ்சு உருண்டைகள் கிடைக்கவில்லை? ஒருவேளை அதை மறந்து விட்டார்களோ? அல்லது மிதவூர்திக்குத்தான் ஏதாவது ஆகிவிட்டதா?

“அல்லது உனக்கு மேலிருப்பவர்கள் இதையெல்லாம் சோதித்துப் பார்க்கிறார்களோ? எது உபயோகப்படும் படாது என்று. எத்தனை குழுக்கள் இயந்திரங்களின் உதவியோடு இந் நெவெர்-நெவரைக் கடக்க முயற்சித்திருக்கும்? ஒருவேளை இந்நேரம் யாரேனும் வடக்கு முகமாக அறிவியல் முறைகள் மூலம் முயற்சித்துக் கொண்டிருக்கலாம். முயன்று,தவறி,மேலும் தவறி என்ன? நான் சொல்வது சரியா?

டின்டைப் வெகுநேரம் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“நான் அவ்வளவு புத்திசாலியில்லைதான்என்றான் இறுதியில்.
*****************
நாங்கள் அந்த மிதமான மேட்டில் ஏற ஏற முணுமுணுப்பாக இருந்தது தெளிவான வார்த்தைகளாகி விட்டிருந்தது. ஜானி ரோமன் சொல்வது போல உலுரு எங்களைப் பைத்தியமாக்கிக் கொண்டிருந்தாள்.

விரைவில்விரைவில்அதுவெளிவரும்

என் நோக்கி கடுமையாகக் குத்த ஆரம்பித்தது. நான் அதைக் கழட்டுவதற்காக நின்றேன். சூசைட் தன் கத்தியின் கூரிய முனையால் எனக்கு உதவினாள். காந்தப் புலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் மூலத்தினருகில் நெருங்கியிருக்க வேண்டும்.

“உன் கத்திகள் எப்படியிருக்கின்றன? என்றேன் அவள் என் நரம்பைத் துண்டித்ததைப் பார்த்து.

“ஒன்றும் பிரச்சினையில்லை, இது மெலிதான உலோகம் காந்தப்புல மாறுபாடுகளை ஓரளவு  தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டது”.

மேலும் வார்த்தைகள். மரத்திலிருந்து பழுத்து விழும் கனிகள் போலக் கேட்டுக் கொண்டே இருந்தது.

இங்கே மிகவும் குளிராக இருக்கிறது, நீங்கள் எப்படி இங்கு வாழ்கிறீர்கள், குளிரில் விளைபவை விளையக் கூடாதவை,நான் எப்போதும் கதகதப்பாக இருக்கப்போவதில்லை.

மற்றவர்களுக்கும் இதே வார்த்தைகள்தான் கேட்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்னே பாறைகளால் ஆன ஒரு முகடு இருந்தது. எங்கும் செம்மண் புழுதி.

“நில்லுங்கள்!!!என்றாள் சூசைட்.

கைவிரல்களை விரித்தபடி பின்புறம் பொருத்தப்பட்ட கத்திகளைப் பார்த்தபடி நின்றிருந்தாள். நான் அவளைப் பார்க்கத் திரும்ப வேண்டியிருந்தது, என் 3600 யில் பார்க்கும் நோக்கி இல்லாததை வெறுத்தபடி திரும்பினேன்.

அவளருகில் சென்றதும் , அவளின் தோலுக்குள் பொருத்தப்பட்ட கத்தி துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

“பின்னால் நகரு!! என்றான் டின்டைப், நகர்ந்ததும் அசைவு நின்றுவிட்டது. தரையைக் கவனமாக ஆராய்ந்தான். குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

சீக்கிரமே வெளிவரும்.மற்றவர்கள் இறந்து விட்டார்கள்.

டின்டைப் பதுங்கியது போல் உட்கார்ந்திருந்தான். திடீரென்று, “நீ எப்படி இங்கு வந்தாய்?என்று கத்தினான். முணுமுணுப்பான பேச்சு திடீரென்று அமைதியானது.

நெடுங்காலமாக யாரும் கேட்கவில்லை.

மறுபடி அமைதி.

நான்........வெளியேற்றப்பட்டேனா? ஆம். தண்டனை, கடத்தப்பட்டேன், என் வீட்டிலிருந்து நான் ....தூக்கி எறியப்பட்டேன். வெகு தொலைவில்

“ஏன்?என்று நான் கத்தினேன். டின்டைப் புழுதியைக் கிளறிக் கொண்டிருந்தான். ஏன் இந்த உரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறான் என்று புரியவில்லை.

ஆனால் அது சொன்ன பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

நான் தடைசெய்யப்பட்ட இடத்தில் இனவிருத்தி செய்தேன். மேட்ரிக்ஸ் மட்டுமே தலைமையுடன் கூட முடியும். ஆனால் நான் வென்றேன் எனவே நான் அதைச் செய்தேன்,அவர்கள் மிகவும் பயந்தனர் நான் விதையைப் பரவச் செய்து விடுவேன் என்று. அவர்கள் என்னை வேறு ஏதும் செய்ய முடியாது வெளியேற்றினர். என்னைக் குளிர்ந்த உலகுக்குள் எறிந்தனர். ஆனால் அவர்களால் நான் முட்டையிடுவதைத் தடுக்க முடியவில்லை.

இங்கே பார்என்றான் டின்டைப். கூர்ந்து கவனித்தால் தாதுக்கள் வெளிவந்து ஒரு கோடு அமைந்திருந்தது தெரிந்தது. அவன் அந்த இடத்தில் நேராக ஒரு குழியைப் பறித்து, இதற்கு மேல் உன் கத்திகளுடன் நீ வராதே, இதற்கப்புறம் காந்தப்புலம் ஒவ்வொரு அடியிலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, அவை உன் உடலைக் கிழித்து விடும், சொல்வது புரிந்ததா?என்றான்.

முரண்டு பிடிப்பவள் போல் தோன்றினாலும் சரி என்று தலையசைத்தாள். நாங்கள் முன்னே செல்ல அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

குளிரினால் அவை என்னுள் சண்டையிடுகின்றன. எல்லாம் விரைவாக ஒன்றினால் ஒன்று விழுங்கப்பட்டு விட்டன. ஒன்றைத் தவிர,அது வெளி வரும்.

நாங்கள் பாறையின் உச்சிக்குச் சென்று பார்த்தோம்.

முன்பொருமுறை செவ்வெறும்புகளின் கண்ணியைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பெரிய பூச்சிகள் பெய்குழல் போன்ற ஒரு குழியை அமைத்து அதில் நெகிழ்வான மணலை அடைத்திருக்கும். மற்ற எறும்புகளோ, பூச்சிகளோ அந்தக் கண்ணியில் கால் வைத்ததும், உள்ளே தன்னைப் புதைத்தவாறு காத்துக் கொண்டிருக்கும் செவ்வெறும்பின் அருகில் போய் விழும்.

இங்கும் அதைப் போன்று அகன்ற வட்டம். எவ்வளவு பெரியது என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஒன்று அல்லது இரண்டு மைல் ஆழம் இருக்கலாம். நடுவில் ஒரு கரும்புள்ளி. நோக்கி இல்லாததால் கண்ணை இடுக்கிப் பார்த்தேன். அது ஒரு துளையாகவும் இருக்கலாம். பரமாட்டாவின் உதவிச்சம்பளம் பெறுபவர்கள் ஒரு மாதம் உழைத்தாலும் இப்படி ஒரு குழியைத் தோண்ட முடியாது. பாட்டனியின் குற்றவாளிகளும்,ஆக்கிரமிப்பாளர்களும் சேர்ந்தால் கூட முடியாது.

குரல் இப்போது மிகத் தெளிவாக இருந்தது.

நான் மேட்ரிக்ஸாக ஆகியிருக்கலாம். என்னால் காத்திருக்க முடியவில்லை. வாய்ப்பு கிடைத்தபோது மேட்ரிக்ஸை நான் கொன்றிருக்க வேண்டும்.

டின்டைப் முகட்டின் நுனியில் மண்டியிட்டுக் குனிந்து உள்ளே பார்த்தான். மாயத்தோற்றம் போன்று எல்லாப் பாறைகளும் ஒன்றோடொன்று இணைந்து மையத்தை நோக்கிச் செல்வது போல இருந்தது. வெப்பத்தினால் கானல் நீர் அலையாடியது. மெலிதான ஆனால் நீளமான ஏதோ ஒன்று டின்டைப்பின் கைகளைக் கடந்து சென்றதும் அவன் பின்னே நகர முயற்சித்து பக்கவாட்டில் சரிய ஆரம்பித்தான். நான் அவன் கைகளைப் பற்ற நினைப்பதற்குள், தன்னைச் சரி செய்து கொள்ளும் முனைப்பில் தாதுக்கட்டிகளின் சரிவில் பிடிமானமின்றி சரிய ஆரம்பித்தான்.

நான் தரையோடு படுத்து கால்களை மண்ணில் ஊன்றி, அலைந்து கொண்டிருந்த அவன் கைகளைப் பற்றினேன். அவன் மறுகையினால் எதையேனும் பற்றிக் கொள்ள முயன்று தோற்றான்.
“டைப்! சூப்பர்ஸ்டார்!!சூசைட் டின்டைப் குறிப்பிட்ட எல்லைக்கப்பால் நின்று கொண்டு கத்தினாள்.
“ஸ்டார்! விட்டு விடாதே!
“முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்என்று பல்லைக் கடித்தவாறு உறுமினேன். நிழல் போன்ற ஒரு புன்னகை டின்டைப் முகத்தில், “நான் அவ்வளவு புத்திசாலியில்லை என்று சொன்னேனே, அவளை எல்லையைத் தாண்டி வரவிடாதேஎன்றான். மனம் பேதலிக்கும் அமைதி நிலவிய மிக நீண்ட சரிவினில் இருந்த பாறைகள் உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்தது.

இருவரும் மாற்றி மாற்றி ஏதேதோ சொல்லிக் கத்திக் கொண்டே இருந்ததில் எனக்கு இருவரையுமே கொல்ல வேண்டும் போல் வந்தது. என் கால்களும் முட்டியும் தரையில் தேய்ந்து,என் பிடி குறைந்து கொண்டிருந்தது.

நீங்கள் என்னிடத்தில் வருகிறீர்களா? குரல் ஆர்வமுடன் கேட்டது.

காற்றைப் போல விரைந்து வந்து அவள் என் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டாள். அவள் மணிக்கட்டில் இருந்த கத்திகள் துருத்திக் கொண்டு என் விலாவில் குத்தியது. நான் பின்னால் பார்க்கையில் அவள் தன் முழங்காலில் பொருத்தப்பட்ட கத்தியினை நிலத்தினுள் ஊன்றியிருந்தாள். மூவரின் எடையையும் சிறிது நேரமே தாங்கக் கூடியது அது.

நீங்கள் எல்லோருமே வரலாம்.

டின்டைப் “சூசைட்! பின்னால் போ!என்று கத்தினான். அவன் என் பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்ததையோ, தன் முன்னங்கால்கள் பிடிமானம் ஏதுமில்லாமல் இருப்பதையோ, அவள் பலத்தில்தான் இப்போது நாங்கள் இருக்கிறோம் என்பதையோ கண்டு கொள்ளாமல் சத்தமிட்டான்.

எனினும் அவள் தாக்குப்பிடித்தாள். மரணத்தைப் போல இறுக்கமான பிடி. நல்லதுதான் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே காந்தப்புல மாறுபாட்டால் கத்திகள் துன்புறுத்த ஓலமிட்டாள்.

நான் முடிந்தவரையில் என் பிடியை இறுக்கி டின்டைப்பை பொறியின் மேல் பகுதிக்கு இழுத்துப் போட்டேன். சூசைட் தரையில் உருண்டு கொண்டிருந்தாள். அவள் ஆடைகள் கிழிந்து அதன்வழி கத்திகள் தசைகளைக் கிழித்தவாறு முளைத்தன.

டின்டைப் அவள் கால்களைப் பிடித்துக் கொண்டான்,நான் அவள் தோள்களை. இருவரும் அவளை எல்லைக்கப்பால் கொண்டு செல்ல முயன்றோம். ஆனால் அவள் கிறீச்சிடல் மெல்லத் தேய்ந்து மூச்சிரைப்பாக மாறியிருந்தது. அவளில் இருந்து வெளிப்பட்ட கத்தியொன்று அனாயசமாக என் கட்டை விரலின் பாதி சதையைப் பிளந்தது.

டின்டைப்பின் நெஞ்சில் அவள் கால் துடித்து உதைத்தவுடன் அவன் நிலைகுலைந்து பிடியை விடவும், என்னால் அவளைப் பிடிக்க முடியாமல், சூசைட் தரையில் வீழ்ந்தாள். அவள் பின்னால் பொருத்தப்பட்ட கத்தி தோட்டாவைப் போல் துளைத்து தரையைக் கீறியபடி வெளிப்பட்டது. மற்றொன்று அவள் கைகளின் பின்புறத்தில் இருந்து வெளிப்பட்டது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு இருவரும் அவளைத் தூக்கியபடி ஓடினோம். அவள் கத்தி என்னைத் தாக்கி விடாதபடி பார்த்துக் கொண்டேன்.

எல்லைக்கப்பால், கிட்டத்தட்ட விழுந்தோம். அவளை எங்களுக்கிடையில் வைத்தபடி மெதுவாகப் படுக்க வைத்தோம்.

அவளின் ஆடைகளுக்குள் சிவந்த தசைகள் எலும்புடன் பிணைந்திருப்பதை என்னால் காண முடிந்தது. கைகளின் பின்புற எலும்புகள் வெளித்தள்ளியிருந்தன. அவள் உடலின் கீழிருந்த என் கைகள் நனைய ஆரம்பித்தது.

டின்டைப் அவளைத் தன் மடியில் கிடத்தித் தலையைத் தாங்கிக் கொண்டான். வேண்டாம் விட்டு விட்டுச் சென்று விடாதே என்றொரு நினைப்பு தானாக எனக்குள் ஓடியது. அவள் போராடவில்லை, மூச்சு இரைப்பாக மாறியிருந்தது ஒரு களைத்த மிருகத்தினைப் போல.

டின்டைப் அவளருகில் குனிந்து, “என்ன? என்றான்.

“சீக்கிரம் வெளிவரும்; தடை செய்யும் நிலவுகள் துண்டு துண்டாக, நிரம்பக் குளிர்என்றாள்.

அவனைத் தாண்டி மேலே என்னைப் பார்த்து, “ரொம்பவும் குளிர்கிறது ஸ்டார்என்றாள்.

“வேண்டாம்என்றான் டின்டைப்.

இறந்தாள்.

டின்டைப் உணர்ச்சியின்றி அவளை மடியில் கிடத்தியவாறு வெகு நேரம் உட்கார்ந்திருந்தான். குளிர்ந்த காற்றினில் என் கையிலிருந்த ரத்தம் பிசுபிசுக்க ஆரம்பித்தது.

“ஒழித்துக் கட்டுகிறேன்என்றான் அமைதியாக.

ஒன்பது வருடங்கள், அவன் இவ்வாறு சூளுரைத்து நான் கேட்டதேயில்லை.

“அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடுகிறேன்”.

ஒரு நொடியில் எழுந்து அவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டிருந்தான். அவனிடத்தில் அசாத்தியமான எப்பொதுமில்லாத நிர்ச்சலனம். மறுபடி மேலே முகட்டினை நோக்கி நடந்தான். நான் பின்தொடர்ந்தேன்.

“நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும் டைப்

என்னைக் கண்டு கொள்ளாமல் நடந்து முகட்டின் நுனியில் வந்து நின்றான். நான் உடலை வாங்கிக் கொள்ள முயற்சித்து, “நான் அவளை வைத்துக் கொள்கிறேன் டைப், நாம் மறுபடி சென்று குதிரைகளைத் தேடலாம்என்றேன்.

அவன் கொடூரமாக என்னை முறைத்ததும் பின்வாங்கினேன். முகட்டின் வாயிலில் அவளைத் தன் மடியில் கிடத்தியவாறு அமர்ந்தான்.

“போய்விடு ஸ்டார்என்றான் உணர்ச்சியற்ற குரலில், “உன்னால் எவ்வளவு தூரம் இங்கிருந்து போக முடியுமோ போய்விடு

சூசைட் எலும்பே இல்லாத உடல் போல் அவன் மடியில் கிடந்தாள். அவளின் தலையை அவன் தாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் களைத்துக் கிடக்கும் ஒரு பொம்மையைப் போலிருந்தாள்.

மிக மெல்லிய ‘க்ளிக்எனும் சப்தம், நான் டின்டைப்பின் கையிலிருந்த துப்பாக்கியைப் பார்த்தேன். அவனிடம் துப்பாக்கி இருப்பதே எனக்குத் தெரியாது.

“போய்விடு, இல்லையென்றால் நான் சுட்டுவிடுவேன் ஸ்டார் நான் ஆச்சரியத்துடன் அவன் துப்பாக்கியையே பார்த்துக் கொண்டிருந்தேன். உயர்ரகமான துப்பாக்கி,எப்படி வாங்கினான்? குற்றவாளிகளுக்குக் கிடைக்கவே கிடைக்காத ஒன்று. மேலும் இத்தனை நாள் அதை எங்கு மறைத்து வைத்திருந்தான்?

உண்மையில் அவன் குற்றவாளியே அல்ல என்பது உறைத்தது. எங்களிடமிருந்து எல்லாவற்றையும் மறைத்திருக்கிறான். எல்லாவற்றையும்,தன் காதல் உள்பட.

அவன் மீண்டும் அமைதியான குரலில், “உன் தோளில் இருந்து ஆரம்பிப்பேன், பிறகு உன் கால்கள். உன்னால் இங்கிருந்து செல்ல முடியும்போதே சென்று விடு ஸ்டார்”.

நான் மெதுவாகப் பின்னால் நகர்ந்தேன். தாதுக்களின் பாறையின் பின்னால் பதுங்கிப் பின் வேகமெடுத்தேன். குண்டு தாக்கக் கூடிய தூரத்தைத் தாண்டிவிட்டேன் என்று கணக்கிட்ட பிறகு நின்றேன். டைப் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, வரிசைக்கிரமமாகத் தன் உடையில் இருந்த அநேகப் பைகளைத் துழாவி சிறிய,சதுரமான கருப்பு நிறத்திலிருந்த ஏதோ ஒன்றை வெளியிலெடுத்தான். அதிலிருந்த திரை வெளிச்சத்தில் மின்னியது. பின்னால் என் தலைக்கு மேல் மிதவூர்திகளின் ரீங்காரம் கேட்டது.

மொத்தம் ஐந்து, பின்கெர்டான்களுடன் வீழ்ந்தது போலவே. டின்டைப் தூரிகை போன்ற ஏதோ ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அந்தச் சிறிய கருப்புப் பெட்டியைக் கையாண்டு கொண்டிருந்தான். நான் அவற்றின் ஓசை நெருங்கி வந்த்போதும் தரையோடு குனிந்து கொள்ளும் உணர்வை அடக்கிக் கொண்டேன். அனைவரும் ஒழிந்து போகட்டும்.

டின்டைப் அவன் வேலையை முடித்ததும் தன் கையிலிருந்த அந்தப் பெட்டியைத் தூக்கி அஸ்தமிக்கும் சூரிய வெளிச்சத்தில் மின்னுமாறு காண்பித்தான். மிதவூர்திகள் இப்போது அவன் தலைக்கு மேல் தங்களைப் பொருத்திக் கொண்டது போலப் பறந்தன.

டின்டைப் அவர்கள் மிகவும் நெருங்கி வரும் வரை காத்துக் கொண்டிருந்தான். பிறகு தன் கையிலிருந்த பெட்டியை ஓர் அரைவட்ட வடிவில் குழியின் துளை நோக்கி எறிந்தான். மிதவூர்திகளும் வரிசையாக பொறிக்குள் விழுந்தன. டின்டைப் பின்னால் திரும்பிக் கூடப்பார்க்காமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரீங்காரம் நின்று, திக்கித் திணறியது. பின் பெரும் பிழம்பு, மேல் நோக்கி எழுந்தது நெருப்பு ஒரு தூண் போல. ஒரு நொடியில் அந்தச் சிவப்புப் பிண்ணனியில் கருப்பு ஓவியம் போல அவர்கள் இருவரையும் கண்டேன். சாம்பல் மழையாய்ப் பொழிந்தது. தரையில் குனிந்து அமர்ந்தேன். முற்றிலுமாகப் புழுதியில் குளித்திருந்தேன். வெகு நேரம் கழித்து உறுமல் நின்றது.

*******************

நான் மீண்டும் அந்தப் பள்ளத்தை நோக்கி நடந்தேன், காதிலுள்ள பஞ்சினை எடுத்தபடி. எந்தக் குரலும் கேட்கவில்லை. உடல் முழுவதும் அரை விரற்கடை அளவுக்குப் புழுதி படிந்து நெவர்-நெவரின் ஒரு ஜந்து போலிருந்தேன்.

கண்ணுக்குத் தெரிந்தவரை மைல்கணக்கில் தாதுக்கள், க்வார்ட்ஸ் மின்னும் தாதுக்கள். தரையின் மேற்புறத்தை அசைத்தபடி சப்தங்களுடன் ஏதோ அசைந்தது, நான் அது மனிதனா இல்லையா என்று பார்த்து விடும் முடிவில் நின்று கொண்டிருந்தேன். மனிதனல்ல. டின்டைப்,சூசைட்,மிதவூர்தியில் வந்த டின்டைப்பின் முதலாளிகள் என அனைவரும் உலுருவின் வெற்றிக் களிப்புடனும்,நம்பிக்கையுடனும் ஆழப் புதைந்து போனார்கள்.

தலையில் ஏதோ குறுகுறுவென்றது. நோக்கி இருந்த இடமோ என்று வியந்தபோது,

அம்மா?

அதற்கு சிறகுகள் இருந்தன, நட்சத்திரங்களுக்கிடையே பறக்குமா என்ன? தலையில்லை, வாய் கூர்மையான வரிகளுடன் உடலில் பொருந்தியிருந்தது. எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு ஜந்து. சூசைடின் கத்திகள் போல கால்கள் போன்ற அமைப்புகள்,அவளைப் போன்றே போரிடத்தயாரிக்கப்பட்ட பிறவி. அது நினைத்தால் ஒரு நொடியில் என்னைச் சிதைத்து விட முடியும். என்னைப் பார்த்தது. கண்களின்றி. காகம் போலக் கரைந்தது.

எனக்குக் குளிர்கிறது அம்மா

நான் அருகில் சென்று பார்க்கையில் அதனுடலில் புழுக்கள் போலும் ஏதோ நெளிந்து கொண்டிருந்தது. இன்னமும் நெருங்குகையில் அவை தூவிகள் என்று தெரிந்தது.கண்முன்னே வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தன.

எனக்குப் பசிக்கிறது அம்மா

மணிக்கணக்கில் நடந்து பின்கெர்டான்கள் விழுந்த இடத்துக்கு அதை நான் நடத்திச் சென்று கொண்டிருந்தேன் சென்று சேர்வேனா என்று கூடத் தெரியாமல். அது அமைதியாக என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. பின் எதையோ முகர்ந்திருக்கலாம். அதன் பயங்கரமான உடலிலிருந்து அதன் வாய் மட்டும் வெளியே வந்து என் உடையைப் பற்றித் தூக்கியது. நான் பொம்மை போல அதன் பிடியில் தொங்கிக் கொண்டிருந்தேன். அதன் கால்கள் தரையை ஓங்கி அடித்ததும் புழுதியும் தாதுக்களும் வெளி வந்தன. என்னை விட்டு விட்டு வெகுவேகமாகத் தின்ன ஆரம்பித்தது. அது என்னையும் தின்று விடுமோ என்றுதான் நினைத்தேன். ஆனால் ஓடும் அளவுக்கு உடலில் வலுவில்லை. அது என்னை நெருங்கியது. மெதுவாய்த் தன் கால்களை மடித்து வைத்துக் கொண்டு தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தது.

நான் என் முதல் கடற்பயணம் அவ்வளவு மோசமானதாக முடியவில்லை, இன்னொன்றை மேற்கொள்ளலாம் என்று நினைத்தவாறு அதனருகில் சென்று கிசுகிசுத்தேன்.

“பறவையே! மகாராணியைப் பார்க்க லண்டனுக்குப் போகலாமா?

*****************
2 comments:

நேசமித்ரன் said...

மூலத்தை எழுதியவர் பெயர் இல்லையே சார் !

மாற்றுப்பார்வை said...
This comment has been removed by a blog administrator.