Monday, April 18, 2011

தருமியிடம் சில கேள்விகள் -1


1. தருமி என்கிற பெயர் ஏன்? கேள்வி மட்டுமே கேட்பேன்? எதற்கும் பதில் சொல்ல மாட்டேன் என்று அர்த்தமா?

நீங்களே ஒரு ஆசிரியர். இதற்குப் பதில் தெரியாதா? (எப்படி, ஒரு கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வி!) கேள்வி கேட்பேன் என்று யாரும் சொன்னாலே, பதில் தெரிந்துகொண்டு, அடுத்தவரின் பதிலும் அதுதானா என்று பார்ப்பதற்காகத்தான் அவர் கேள்வி கேட்கிறார் என்றுதானே பொருள். ஆசிரியர் கேள்வி கேட்டால் அவர் பதில் தெரியாமல் கேட்கிறார் என்றா பொருள்! பதில் தெரியாத கேள்விகளும் கேட்பதுண்டு. அதை ஒத்துக் கொண்டே அக்கேள்விகளை எழுப்புவதுமுண்டு. ‘தருமி’ பெயர்க்காரணம் நாகேஷ் தான். ’நானே கேள்வி கேட்பேன்’ என்பாரே அதுபோல் ‘முந்திக் கொள்வது’தான். புனை பெயர் வைத்ததே வயதை சில காலம் மறைத்து வைக்கத்தான். உண்மை வயசு தெரிந்து generation gap உண்டாகி பதிவுலகில் தன்னந்தனியாக இருக்க நேருமோ என்ற தயக்கம்தான். இந்த தயக்கம் போனதும் முழு முகவரியும் என் பதிவுகளில் கொடுத்து விட்டேன். (http://dharumi.blogspot.com/2005/07/31.html)

2. நீங்கள் உங்களை முழு நாத்திகராக உணர்ந்த தருணம் எது?இது ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது என்பதை என்னால் உணர முடிகிறது.இருப்பினும் குறிப்பிட்டு ஏதேனும் ஒரு சம்பவம் உள்ளதா, கடவுள் இல்லையென்ற முடிவை நீங்கள் எடுக்க?

தனிச் சம்பவம் என்று ஏதுமில்லை. நல்ல நம்பிக்கையாளனாக இருந்த போதே அவ்வப்போது தலை தூக்கிய கேள்விகளை மண்டையிலடித்து அடக்க முயற்சித்தேன். காரணம் சின்ன வயதிலிருந்து பழகிய பழக்கமும், கடவுள் மேல் உள்ள அச்சமும். ஆனாலும் ஏதோ ஒரு புத்தாண்டு (எண்பதுகளின் நடுவில் என நினைக்கின்றேன்). கோவிலில் ‘பூசை’ பார்த்துக் கொண்டிருந்த போது ‘நற்கருணை எழுந்தேற்றம்’ நடக்கும்போது ஒரு கேள்வி – இதெல்லாமே நம்பிக்கை பொறுத்த காரியங்கள்தானே; (நமக்குக் கற்பிக்கப்பட்ட விஷயங்கள்) இதெல்லாம் உண்மையில் நடக்கவில்லையே என்று மனத்துக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அதுதான் நினைவில் நிற்கும் ஒரு புள்ளி. அதன் பின் நிறைய கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன. ’யோசிக்க’ ஆரம்பித்தேன். அடுத்தவர் தந்த ‘கண்களை’ மூடி என் கண்களால் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் தைரியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தேடலும் கூடவே சிறிது சிறிதாக மாறினேன். ஆனாலும் என்னையே நான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொள்ள பல ஆண்டுகள் ஆயின.

3. நாத்திகமும் ஒரு நம்பிக்கையே! ஆத்திகம் போல.ஆனால் நாத்திகம் பேசுபவர்கள் மட்டும் தங்களை அறிவாளிகளாகக் கருதிக் கொள்வதேன்?

ஆத்திகம் பிறப்போடு வருவது. யாருடைய சிந்தனையும் அங்கில்லை. பிள்ளைப் பருவத்தில் சொன்னதை பச்சை மரமாக வாங்கி வைத்துக் கொண்டு அதைத் தாண்டுவது என்பது தவறு; தப்பு; தண்டனைக்குரியது என்ற அடிப்படை நம்பிக்கையை ஆத்திகர்கள் தாண்டுவதில்லை. பெரியவங்க சொல்லியிருக்காங்க ... நம்ம என்ன அவங்கள விட புத்திசாலிகளா .. இத்தனை கோடிபேர் நம்புறாங்களே .. அப்போ அவங்க எல்லாம் முட்டாள்களா, குருடர்களா? நம்பி வந்ததை தாண்ட ஒரு பயம். தாண்டுவதென்ன, அதைக் கேள்வி கேட்கவும் பயம். ...... இந்த சிந்தனை ஆத்திகர்களிடம் எப்போதிருக்கும் தடைக்கற்கள். நானே கிறித்துவத்தைக் கேள்வி கேட்க ஆரம்பித்த போது, எத்தனை எத்தனை ஆண்டுகள் சமயத்தைப் பற்றிப் படித்து குருவாகிறார்களே அவர்களை விடவா நாம் சமயத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம் என்ற எண்ணம் தலை தூக்கியது. கிறித்துவ நம்பிக்கைகளோடு பெரிய ஆட்களாக இருந்தவர்கள் எல்லோரும் மனத்திரையில் தோன்றினார்கள். ஆகவே ஆத்திகர்கள் ‘கோடு தாண்டாதவர்கள்’. ஆனால் நாத்திகர்கள் ‘கோடு போட்டுக் கொண்டவர்கள்’. நாத்திகமும் ஒரு நம்பிக்கைதான். ஆனால் அது அடுத்தவன் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. என் நம்பிக்கைக்கு நான் காரணம். அந்தக் ‘கோட்டை’ நானே போட்டுக் கொண்டேன் – காரண காரியங்களோடு. என் முடிவுகளுக்குக் காரணம் நம்பிக்கையில்லை; என் சிந்தனைகள். கிறித்துவத்தைக் கேள்வி கேட்டேன். சில பதில்கள். அடுத்த சமயத்தைப் பற்றிச் சில கேள்விகள். சில பதில்கள். எல்லாவற்றையும் பொதுவாக்கி சில கேள்விகள். கிடைக்கும் பதில் என்னை மாற்றினால், என் சமய நம்பிக்கைகள் தவறென்று தோன்றினால், நான் நாத்திகன். ஆத்திகனிடம் ஏன் நீ ஆத்திகன் என்று கேட்டால் பிறப்பு, பழக்கம், சொல்லிக் கொடுக்கப்பட்டது, நம்பிக்கை என்ற பதில் வரும். நாத்திகனிடம் ஏன் நீ நாத்திகன் என்று கேட்டால் நிச்சயம் சில logical reasoning இருக்கும். வெறும் முரட்டுத்தனமாக யாரும் நாத்திகனாவதில்லை. ஆனால் ஆத்திகன் வெறும் முரட்டுத்தனமான நம்பிக்கையாளனாக இருக்கக் கூடும்.

4. ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’- சரி.புத்திசாலிகளான எந்த ஒரு நாத்திகனும் இதுவரை கடவுள் இல்லையென்று நிரூபிக்கவில்லையே ஏன்?

சிறிது சிரித்து விட்டு பதில் சொல்லாமல் செல்ல நினைத்தேன். இருந்தாலும் ... ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ – இதை நிரூபித்து விட்டால் போதும்.நாத்திகனின் வேலை முடிந்து விட்டது.

5. மதங்களால்/கடவுள்களால் நன்மை எதுவுமே கிடையாது என்கிறீர்களா? நான் கடவுள் தண்டிப்பார் என்கிற பயத்தில் சில தவறுகளைச் செய்யமாட்டேன்.என்னைப் போலக் கோடிக்கணக்கான பேர் இருக்கக் கூடும்.இது மதத்தினால் விளைந்த நன்மையில்லையா?

என்ன ஸ்ரீ! எம்புட்டு இதப் பத்தி சொல்லியிருக்கேன். (வீட்டுப் பாடம்) படிக்காம வந்துட்டு இப்டி கேள்வி கேட்டா எப்டி? நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன். அதற்குப் பெயர் கூட வைத்து எழுதியிருக்கிறேனே.

1. Policing the society?
2. Psychotherapy?

இவைகளைப் பற்றிச் சொல்லி விட்டு, எந்த வித அச்சமும், தயக்கமும், வெட்கமும் இல்லாமல் நாம் சரணடையச் செல்லும் அந்த இடம்தான் கடவுள் என்று சொல்லிவிட்டு, இதைப் புரிந்து, வாழ்ந்து, பட்டுணர்ந்து, தெளிவு பட்ட நம் மனித சமுதாயத்தின் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த 'சுமைதாங்கித் தூண்கள்' நம் கடவுளர்கள். அவைகள் கற்கள்தான்; வெறும் சுதைகள்தான். ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.சிறு வயதில் கடவுள் பயம் தேவை - மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் என்ற concept தேவையில்லை; செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு? மனிதம் போதுமே! என்று ‘எனக்கு மதம் பிடிக்கவில்லை’ என்ற தொடர் பதிவின் கடைசிப் பத்தியில் சொல்லியிருக்கிறேனே ..
(http://dharumi.blogspot.com/2005/09/68-8.html)

தனி மனிதனுக்கு சமயங்கள் ஆற்றும் பணி பெரிது. அதைப் பற்றியும் எழுதியுள்ளேன் – என் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் வைத்து. ஆனால் மதங்களால் நமக்குள் இருக்கும் பிளவுகள், போர்கள், குண்டுகள் – இவைகளையும் யோசித்துப் பாருங்கள். நீங்கள் சின்னப் பிள்ளையாக இருந்த போது அப்பா, அம்மா கொடுத்த விளையாட்டு பொம்மைகளை இன்னுமா சுமந்து கொண்டு திரிகிறீர்கள்? (வேணும்னா show-case-ல் வைத்து அழகு பாருங்கள்; அதோடு சரி!)

6.ஒரு சாதாரண மனிதனுக்கு மதமும் கடவுளும் தரக்கூடிய ஆறுதலை,அது இல்லாத சமூகத்தில் எது தரக்கூடும் என்று நினைக்கிறீர்கள்?

புதிதாக கிறித்துவத்தில் நுழைந்த நண்பர் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார். என் பதில்: எதுவும் இல்லை. எனக்கும் தலைவலிக்கும்; ஆத்திகனான உங்களுக்கும் தலை வலிக்கும். எனக்கும் வாழ்வில் மகிழ்ச்சியுண்டு; உங்களுக்கும் தான். ஆனால் துன்பம் வரும்போது நீங்கள் ‘கடவுளே!’ என்று சரணடைய முடியும். (ஆனால் அதனால் துன்பம் நிச்சயமாகத் துடைக்கப்படுமா என்பது ஒரு கேள்வி.) ஆனாலும் இந்த ’சுமைதாங்கித் தூண்’ எனக்கில்லை.

7.மதங்கள்/கடவுள்கள் தேவையில்லையெனில் அதற்கு மாற்று என்ன?கொள்கைகளா?

மனிதம். ஊரே அழிந்து பாழ்பட்டுப் போனபின்னும், ஜப்பானியர்கள் தங்கள் மனிதத்தைக் காப்பாற்றியதைப் பற்றிய காணொளி பாருங்கள் . http://dharumi.blogspot.com/2011/04/488.html இந்தப் பண்பை எந்த மதம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது. மதுரையில் எந்த ATMலாவது எந்த மதக்காரனாவது வரிசையில் நின்று பார்த்திருக்கிறீர்களா? (அடுத்தவன் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாயோ அதை நீ அவனுக்குச் செய்து விடு – விவிலியம் – இதுவே மனிதம்.)

8.அறிவியலால் விளக்க முடியாத ஒரு சம்பவத்தை,நிகழ்வை அல்லது செயலை நீங்கள் எங்ஙனம் அணுகுகிறீர்கள்?அந்த இடத்தில் ஒரு சாமானியன் கடவுளை வைத்துப் பார்ப்பதில் தவறென்ன? அவனால் வேறென்ன செய்ய முடியும்?

வீட்டுப்பாடமே படிக்காத ஆளு’ப்பா நீங்க! http://sixth-finger.blogspot.com/2007/02/41-when-i-look-back-7.html //On both the sides of my mother’s tomb I saw two very tall angels in the usual kneeling position with bowed head and folded hands that we see in pictures and statues in churches. Those two guardian angels were so brighteningly white. They, in the kneeling position, were to the height of the palmyra trees at the background. It was just for a fraction of a second but that “apparition” had become a permanent mental picture. As an atheist now I analyze that ‘apparition’. It had been rammed into me that each person would be ‘supplied’ with a guardian angel and it takes care of you and all that stuff. And one sees pictures and statues of angels in that kneeling position. I was also quite convinced that my mother should have gone straight to heaven since she was considered by everybody as a good person. These facts being in my inner mind made me see what I wanted to see there. Rather it was a projection of my own mental picture.// எல்லா சம்பவங்களையுமே அறிவியலால் விளக்க முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் கண்ணை மூடிக்கொண்டு விழாமல், கொஞ்சம் யோசிக்கலாமே! http://dharumi.blogspot.com/2006/04/154.html இது ஒரு சான்று.

9.நடைமுறை வாழ்வில் ஆதாரங்கள் இன்றி நீங்கள் ஏற்றுக் கொண்ட விஷயம் எதுவுமே இல்லையா? எல்லாவற்றையும் ஆதாரத்தின் பேரில்தான் நம்பியிருக்கிறீர்களா?

உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஆதாரமின்றி நம்பவேண்டுமா?

10.சமயப் பூச்சு இல்லாத யோகம், தியானம் குறித்த உங்கள் பார்வை என்ன? மனிதன், தானே கடவுள் என்பதை உணர்வதே தியானம் என்றார் ஓஷோ. இதில் உங்கள் அணுகுமுறை என்ன?

எதுவுமில்லை. தியானம் மிகச் சிறிதே முயற்சித்தேன். விட்டு விட்டேன். தெரியாததை தெரியாது என்று சொல்வதுதானே சரி. ஓஷோ, போப்புகள், கடவுள் மனிதர்கள், யாசிர் நாயக், தினகரன் போன்ற மத குருமார்கள் – இவர்களுக்கெல்லாம் நிச்சயமாக கடவுள் என்று ஒன்றுமில்லை என்பது தெரியும் என்பது என் ‘நம்பிக்கை’! ஆனாலும் இருக்கும் துறையில் பெரிதாகக் ‘காண்பித்துக் கொள்ள’ அந்த நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக் கொள்வார்களென நினைக்கிறேன்.கடவுள் என்று ஒன்றுமில்லை என்பதற்குப் பதில் ஒரு வேளை ஓஷோ அப்படி சொல்லியிருக்கலாமோ?! ஓஷோ கடவுள்களைக் கேலி செய்து சொல்லும் நல்ல ஜோக்குகளை வாசித்ததில்லையா? அவருக்கு நம்பிக்கையிருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை!தொடரும்...

18 comments:

வி.பாலகுமார் said...

ஸ்ரீ, நீண்ட நாள் கேள்விகளை ஒருவழியாக கேட்டே விட்டீர்கள் போல :)

Thekkikattan|தெகா said...

typically, Dharumi :-) !

இரண்டு பேருக்குமே நன்றி... இந்த கேள்வி பதில் பொருட்டு - Dharumi is in Nutshell?

ஸ்ரீ said...

நன்றி பாலா,
நன்றி தெக்கி.

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே..ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு... அதுவும் அருமையான கேள்வி பதில்களுடன்....

Robin said...

தருமி நன்றாக குழம்பிப் போயிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

வால்பையன் said...

சூப்பர்

வால்பையன் said...

சூப்பர்

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆழமான கேள்விகள்.. அதற்கு அய்யாவின் பதில்களும் நச்.. தொடருங்கள்..:-))

எண்ணங்கள் 13189034291840215795 said...

கடவுளே!’ என்று சரணடைய முடியும்.//

நானும் கிட்டத்தட்ட நாதிகம் என்றாலும் இதில்தான் இருக்கு வேறுபாடு..

நமக்கு சரணடைய ஏதுமில்லை என்ற துணிவு.. நம்பிக்கையாளருக்கு , நம் பாரத்தை கொஞ்சம் கடவுள் மீது ஏற்றிவைத்துவிட்டு பாஸிட்டிவ் எண்ணங்களில் மனதை செலுத்துவது ...

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடுத்தவன் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாயோ அதை நீ அவனுக்குச் செய்து விடு – விவிலியம் – இதுவே மனிதம்.//

ஆக இதை சொல்வதற்காவது மதம் பயன்பட்டுள்ளதே..

தருமி said...

எண்ணங்கள்,
profile says
//About Me

God Fearing, Simple, K...//

இங்கே..
//நானும் கிட்டத்தட்ட நாதிகம் என்றாலும் ..//

????????

♠ ராஜு ♠ said...

பேட்டின்னா இப்படித்தான் இருக்கணும்! சும்மா நச்ச் நச்சுன்னு கேள்விகள், அதுக்கு நறுக்கு தெறித்தாற் போல பதிலகள்.
Simply Super Anne!

ஸ்ரீதர் நாராயணன் said...

நல்ல பதிவு. அருமை :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

எண்ணங்கள்,
profile says
//About Me

God Fearing, Simple, K...//

பிளாக் ஆரம்பித்தபோது சொன்னது.. கடந்த 4 வருடத்தில் ஏற்பட்ட மாற்றம் னு சொல்லலாம்.. இன்னும் மாறுவோமே...:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

Public fora should never be abused to promote an individual.//

Nothing to worry.. As far as there is learning , Its ok , IMHO..

I don't agree with all his views ,( Sometime I oppose ) but I'm a great fan for his writing..

& you too Mr. Jo..

மணிஜீ...... said...

அருமையான கேள்விகளும், அதை விட அருமையான பதில்களும்..பொதுவாக கேள்வி பதில்கள் சூறாவளியை (பதிவுலகில்) உருவாக்கும் வல்லமை படைத்தவை:-))

ஸ்ரீ said...

நன்றி தமிழ்,
கருத்துக்கு நன்றி ராபின்,
நன்றி வால்,
நன்றி கா.பா,
நன்றி ராஜு,
நன்றி ஸ்ரீதர்,
நன்றி மணிஜி .(என்ன ஆச்சரியம்!!!!!!!)

ஸ்ரீ said...
This comment has been removed by the author.