Monday, April 25, 2011

தருமியிடம் சில கேள்விகள்-2
11.இந்துத்வம்,கிறித்தவம் பற்றி சமீபமாக நீங்கள் எதுவும் பேசவில்லையே?

நான் மதங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த நேரத்தை நினைத்துப் பார்க்கிறேன். மதங்களைப் பற்றி இன்று தெரிந்ததில் வெறும் 10% விழுக்காடு கூட அன்றைக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. மறுப்பும் எதிர்ப்பும் நிறைய வரும் போது இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவல் மட்டுமல்ல, கட்டாயமும் ஆகிவிடுகிறது. விடாக்கண்டன் .. கொடாக்கண்டன் கதைதான்.

தெரிந்ததை, அறிந்ததை கேள்வியாக வைக்கிறேன். இஸ்லாமியத்திலிருந்து நிறைய மறுப்புகள்; எதிர்ப்புகள். எதிர்வரும் நீரைக் கிழித்து நீந்துமே மீன், அதுமாதிரி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ளும் கட்டாயம் வருகிறது. தெரிந்து கொண்டவைகளை மீண்டும் சபை முன் வைக்கிறேன். கதை இப்படியாகத் தொடர்கிறது.

ஆனால், இந்து, கிறித்துவம் பற்றி எழுதும்போது எதிர்ப்பென்று ஏதும் அதிகமில்லை. குறைவாகவே எழுதியுள்ளேன். ஓரிரு இடுகைகளுக்கு மட்டும் இந்த இரு மதங்களிலும் சில நல்ல பதில்களும், கேள்விகளும் வந்தன. ஆயினும் மதங்களைப் பற்றிய என் தொடர் இடுகைகளில் சமச்சீர் செய்ய வேண்டுமே .. அதற்காக இன்னும் கொஞ்சம் இந்த இரு மதங்கள் பற்றியும் அறிந்துகொண்டு மேலும் எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

12. 6 வருடங்கள் , 500 இடுகைகள் , தொடர்ச்சியாக மதங்களைப் பற்றிப் பேசி வந்துள்ளீர்கள். உங்கள் முயற்சிக்குப் பலன் என்று எதையாவது கண்டீர்களா? ஏனெனில் எனக்கு இது அயர்ச்சி தரக்கூடிய விஷயமாகப் படுகிறது ? உங்களுக்கு எப்படி?

499 பதிவுகளில் மதங்கள் 88 (இவைகளில் மதங்கள் பற்றி வாசித்த நூல்களும் book shelf – அடக்கம்); சமூகம் 79; - இன்னும் பல தலைப்புகள் என் இடுகைகளில் உண்டே! மதங்களைத் தாண்டியும் எழுதிதான் வருகிறேன். வெறும் மதங்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. ஆனாலும் மதங்கள் மட்டும் உங்களுக்குத் தனியாக, தொடர்ச்சியாகத் தெரிகிறது.

// எனக்கு இது அயர்ச்சி தரக்கூடிய விஷயமாகப் படுகிறது//

உங்களுக்கு மட்டுமல்ல. வேறு சிலரும் என் பழைய நாஸ்டால்ஜியா பதிவுகள் மாதிரி போடுங்களேன் என்று கேட்டதுண்டு.

//உங்களுக்கு எப்படி?//

எனக்கு அயர்ச்சி தந்திட்டால் நான் ஏன் அப்பதிவுகளைப் போடப்போகிறேன்!

// உங்கள் முயற்சிக்குப் பலன் என்று எதையாவது கண்டீர்களா?//

நிச்சயமாக.

G.K. Chesterton தனது ‘The Art of Arguing’ என்ற கட்டுரையில் ஒரு விஷயத்தைப் பற்றி இருவர் விவாதிக்கும்போது, ஒருவர் அடுத்தவரை convince செய்ய முடியுமா என்பது தெரியாது; ஆனால் விவாதிக்கும் இருவரும் தங்கள் தங்கள் கட்சிகளைப் பற்றிய கருத்துக்களில் உறுதியாவார்கள்...

நான் ஆரம்பித்த புள்ளியில் இருந்ததை விடவும் இப்போது மிகத் தெளிவாக என் கருத்தில் இருக்கிறேன். அதைப் பற்றிப் பேசவோ, எழுதவோ நிறைய இருக்கிறதே, அதுதான் பலன்.

இன்னொரு பலனும் உண்டு. என்னிடம் விவாதிக்கும் பல பதிவர்கள் திடீரென அந்த விவாதங்களை விட்டு விட்டுப் போய்விடுவதும் நிறைய நடந்து வருகின்றன. இதுவும் ஒரு நல்ல”, constructive பலன் தானே!

13.சமகால எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? சமீபத்தில் நீங்கள் படித்த தமிழ்ப் புத்தகம் எது?

இந்தப் பகுதியில் உங்கள் கேள்விகள் எல்லாம் இலக்கியத்தை நோக்கியவையாக உள்ளன. அதனால் முதலில் என் ‘ஒப்புதல் வாக்குமூலம்ஒன்று அவசியத் தேவையாகிறது. இளம் வயதில் ...ஓரளவு நல்ல வாசிப்பாளனாகத்தான் இருந்தேன். Light music என்பது போல் ‘light readingநிறைய இருந்தது. ஆனால் இப்போது அந்த ‘light reading அதிகமாக இல்லை. அவைகள் ‘லைட்டாகஇருப்பதினாலோ என்னவோ, எனக்கு இவைகளை வாசிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனாலும் கொஞ்சம் வாசிக்கிறேன். கடினமான நூல்களை வாசிக்க ஆரம்பித்ததும் light readingவாசிப்பது குறைந்து விட்டது.

சமீபத்தில் படித்த தமிழ் நூல்கள்: சின்னதாக ‘புத்தம் வீடு’; பெரியதாக, கடைசியாக ‘ஆழி சூழ் உலகு’.

இரண்டுமே சமூகச் சார்புள்ள கதைகள். வாழ்க்கையும், மண்ணும், மரமும், நீரும், தனித்துவ பேச்சு மொழியும் நிறைந்து இருந்தன. அன்று மணிக்கணக்கில் முடித்த நூல்களை இன்று படிக்க நாட்கணக்குகள் வேண்டியதிருக்கிறது.

14.நீங்கள் கவிதைகளை ஏன் விரும்புவதில்லை? ஒரு வேளை கவிதைகள் யதார்த்தம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

வாசிப்பு நன்கு இருக்கும்போதே கவிதைகளில் ஈர்ப்பில்லை. காரணம் என்னிடமா, கவிதையிடமா என்பது தெரியவில்லை!

கவிதைகள் மனதைத் தொடுமளவு மூளையைத் தொடுவதில்லை என்பது என் அனுபவம். உரைநடை உள்ளத்தின் ஆழம் வரை போகிறது. கவிதை... ? கவிதை ஒரு திருமணப் பெண் போன்று. ஏற்றப்பட்ட அழகு .. உண்மைகள் அவ்வளவாகத் தெரிவதில்லை. கிணற்றிலிருந்து நீர் எடுத்துப் போகும் பெண் போன்றது உரைநடை. எனக்கு இரண்டாவது பெண் பிடிக்கிறது!

15.மனதைத் தொடும் அழகியல் சார்ந்த கவிதைகள் தவிர்த்து அரசியல் பேசும் கவிதைகளும் இருக்கின்றனவே?உதாரணமாக யவனிகாவின் கவிதைகளைச் சொல்லலாம்.

கவிதைகள் என்னை ஈர்க்கவில்லை என்றேன். அதுவே முதலும் காரணமுமாக இருக்கின்றதே! அதற்காக கவிதை வரிகள் முற்றாகப் பிடிக்காது என்பதாகக் கொள்ள வேண்டாம். ‘இரவில் வாங்கினோம்; அதனால்தான் இன்னும் விடியவில்லைபோன்ற வரிகள் யாருக்குத்தான் பிடிக்காது?

‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? யாருக்கு இந்த வரிகள் பிடிக்காது?

கவிதை என்ற genre அவ்வளவாக என்னை ஈர்த்ததில்லை என்றேன்.

16.அமீனா உங்களுடைய முதல் மொழிபெயர்ப்பு. இஸ்லாமைப் பற்றி அதிகம் கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பவர் நீங்கள். இந்த ஒற்றுமை தற்செயலாக அமைந்ததா?

மிகத் தற்செயல். பதிவாளர் கொடுத்த நூல் அது. ஆனாலும் சரியோ தவறோ; நீங்கள் சொல்வது போல் இஸ்லாமைப் பற்றி அதிகம் கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பவன் என்பதால் என் கருத்துக்களை முழுவதுமாக ஒதுக்கி வைத்து, ஆசிரியரின் எழுத்துக்களை மட்டும் மொழி மாற்றினேன்; கருத்துக்களையல்ல. அதுதானே மொழியாக்கத்தின் மெய்க்கூறு.

17.அமீனா அடக்கப்பட்ட ஒரு பெண்கள் சமூகம் விடுதலைக்குப் போராடும் கதை.தற்போது பெண்ணியம் பேசிக் கொண்டிருக்கும் பெண்களைப் பற்றி உங்கள் கருத்து?தற்போதுள்ள சமூகச் சூழ்நிலையில் பெண்கள் விடுதலை பெற வேண்டியது உண்மையில் ஆண்களிடமிருந்தா அல்லது பெண்களிடமிருந்தா?

பேசிக்கொண்டிருப்பவர்கள் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில், வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்து விட்டன. நாமும் அந்த மாற்றங்களோடு மாறி வருவதால் நடந்திருக்கும் மாற்றங்கள் நம் கண்ணில் படுவதில்லை. மாற்றங்கள் நிறைய வந்து விட்டன - ஆனால் மிக மெதுவாக. எங்கள் காலத்திற்கும், உங்கள் காலத்திற்கும் நடுவில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன. விதவைக் கோலத்தோடு பாட்டி வீட்டில்; அவளின் பேத்தி ஜீன்ஸ், டீ சட்டையோடு அலுவலகத்தில். எங்கள் இளமைக் காலத்தில் இந்த மாற்றங்களைக் காணல் அரிது.

பெண்கள் விடுதலை பெற வேண்டியது தத்தம் மனத்திடமிருந்துதான்; அவர்களுக்கு ஆணிய சமூகத்தால் காலங்காலமாய் போடப்பட்ட தளைகளை எளிதாக உடைக்க முடியும்; ஆனால் உடைக்கும் மன நிலை அவர்களிடமிருந்துதான் முளைக்க வேண்டும். தற்சார்போடு இருப்பது, தன் ஆளுமையோடு இருப்பது, பொருளாதார சுதந்திரம் பெறுவது என்பது போன்றவைகள் அந்தத் தடைகளை உடைக்க முக்கியம்தான். ஆனால் அதைவிடவும் முக்கியமானது நான் சொன்ன மனநிலைதான். அது மெல்லவே வருவதாக என் கருத்து.

ஆனாலும் பெண்ணியம், பெண் விடுதலை என்பதெல்லாம் ஒரு யானைப் பசி போன்றது. யானை தின்று கொண்டுதான் இருக்கும். ஆனால் பசி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். பசியடங்க பல காலமும், பல காரணிகளும் உண்டு. மெல்ல மெல்ல தொடர்ந்து நடக்கும் கட்டுடைப்பு இது.

18.மொழிபெயர்ப்பின் போது நீங்கள் சந்தித்த சுவாரசியமான அல்லது சவாலான விஷயம் ஏதாவது...

அப்படி ஏதும் அதிகமில்லை. சில இஸ்லாமிய சொற்களுக்காக உதவி தேடினேன். அவ்வளவே. காலத்தோடு போட்டி போட்டது மிகவும் பிடித்தது. அமைதியான இரவில் விழித்து எழுதியது மிகவும் பிடித்தது.

கட்டுக் கட்டாக எழுதியதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியான பெருமூச்சுக்கள் வந்தன. முதல் முறை நூலாக அதனைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி. அத்தனை பக்கங்களுடன் ஒரு பெரிய புத்தகமாகக் கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை. முதல் குழந்தை என்பார்களே ... அதே!

19.எழுத்தில் கடினத்தன்மை இருப்பது இன்றைய இலக்கியங்களில் உயர்வாகக் கருதப்படுகிறது?அமீனா எளிமையான நடை கொண்ட ஒரு புத்தகம் .ஏன் இந்த மொழியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

// எழுத்தில் கடினத்தன்மை இருப்பது இன்றைய இலக்கியங்களில் உயர்வாகக் கருதப்படுகிறது?//

அப்படியா?நீங்கள் மிகவும் பொதுவான ஒரு கருத்தை வைத்துள்ளீர்கள் என நினைக்கிறேன். நான் இதை ஒத்துக் கொள்ளவில்லை.

லா.ச.ரா.வும். மெளனியும் இன்றைய எழுத்தாளர்களா? அவர்கள் நடை எளிமையானதா? இன்றைய இலக்கிய எழுத்தாளர்கள் சிலரையும் வாசித்திருக்கிறேன். (பெயர் எதற்கு?) அவர்களது நடை எளிய நடையாகத்தானே உள்ளது.

//அமீனா எளிமையான நடை கொண்ட ஒரு புத்தகம். ஏன் இந்த மொழியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?//

அமீனா ஒரு நாவல். பேச்சு மொழி வருமிடங்களில் பேச்சுத் தமிழையும் மற்ற இடங்களில் எனக்குக் ‘கைவந்த‘ எளிமையான மொழியையும் பயன்படுத்தியுள்ளேன். நாவலுக்கும் கூட கடினமான மொழி அவசியமா? தேவையில்லை என்றே நினைக்கிறேன்; ஏனெனில், அதனால் இயல்புத்தன்மை நிச்சயமாகப் பாதிக்கப்படும்.

ஜே.ஜே. சில குறிப்புகள் சமீபத்தில் வாசித்தீர்களோ?

புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது.நான் சொல்லவில்லை; சுந்தர ராமசாமி சொல்கிறார். உங்களுக்கு ஏனிப்படி ‘கடின மொழிமேல் இப்படி ஒரு காதல்? சொல்ல வந்ததைப் பார்க்காமல் (கடின) மொழியின் மேல் காதல் கொண்டால் சொல்ல வந்தது என்னாகும்?

20.நாஸ்டால்ஜியா எழுதுவதில் உங்களுக்கு விருப்பம் உண்டா?இப்போது நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது என்ன?

சில இடுகைகள் எழுதினேன். என் வயதினால் அந்த இடுகைகளுக்கு நல்ல வரவேற்பும் இருந்தன. (பின்னூட்ட எண்ணிக்கை வைத்துச் சொல்கிறேன்.) நயா பைசா வந்த காலத்துக் கதை சொன்னால் உங்களுக்கு அது புதிதுதானே. என் காலத்து வீட்டு பட்ஜெட் தந்தால் அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காதா? அதுபோல் இன்னும் சில எழுத நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.

எழுதணும் ...

தொடரும்...5 comments:

Prabu M said...

வெளிப்படையான கேள்விகள்........ நேர்மையான பதில்கள்.......
உண்மையை இப்படி சுவைபடப் பேசமுடியுதே! என்று சந்தோஷமா இருக்கு இந்த பக்குவமான பேட்டியைப் படிக்கும்போது!

இதுவரையிலான இரண்டு பகுதிகளோடு இன்னும் தொடர்வதில் மகிழ்ச்சியே..... இனிய பயணத்துக்கு நன்றி இருவருக்கும்! :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

மறுப்பும் எதிர்ப்பும் நிறைய வரும் போது இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவல் மட்டுமல்ல, கட்டாயமும் ஆகிவிடுகிறது. விடாக்கண்டன் .. கொடாக்கண்டன் கதைதான்.//

அருமை.. அதேதான் . நாமும் அனுபவிக்கிறோமே..:)

கார்த்திகைப் பாண்டியன் said...

மதம் என்கிற ஒரு விஷயத்தைத் தாண்டியும் அய்யாவிடம் பேச நிறைய இருக்கிறது என்பதை மனதில் வைத்து கேட்க்கப்பட்ட கேள்விகள்.. நல்லாயிருக்குண்ணே.. அடுத்து அப்படியே சிவாஜி பத்தியும் சினிமா பத்தியும் கேளுங்க..

//இன்றைய இலக்கிய எழுத்தாளர்கள் சிலரையும் வாசித்திருக்கிறேன். (பெயர் எதற்கு?) அவர்களது நடை எளிய நடையாகத்தானே உள்ளது.//

”நன்றிங்க அய்யா.. ரொம்பப் புகழாதீங்க.. கூச்சமா இருக்கு”ன்னு ஸ்ரீ சொன்னாரா அய்யா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

பெண்கள் விடுதலை பெற வேண்டியது தத்தம் மனத்திடமிருந்துதான்; அவர்களுக்கு ஆணிய சமூகத்தால் காலங்காலமாய் போடப்பட்ட தளைகளை எளிதாக உடைக்க முடியும்; ஆனால் உடைக்கும் மன நிலை அவர்களிடமிருந்துதான் முளைக்க வேண்டும். தற்சார்போடு இருப்பது, தன் ஆளுமையோடு இருப்பது, பொருளாதார சுதந்திரம் பெறுவது //

அழகா சொன்னீங்க.. நிதர்சனத்தில் பெரும்பான்மையான எதிர்ப்பு ஆணாதிக்க பெண்களிடமிருந்தே வருகிறது..

ஆனந்தி.. said...

தருமி சார் பதிலில் கொஞ்சம் கொஞ்சம் முன் நவீனத்துவ..;)) பின் நவீனத்துவ;)) பதில் எல்லாம் வருதே...சாரே..:)) உலக சினிமா காண ஒத்திகையோ..;)))

கவிதை பத்திய பதில்கள் செம நச்...தருமி சார்..வெகு..வெகுவாய் ரசித்தேன்...