Monday, January 31, 2011

க்ளிஷேக்களின் தொகுப்பு-டமில் வால்க.

அன்பு நண்பர்களுக்கு ,
தொடர்ந்து எழுதுவது என்பதே முடியாமல் போய் விட்டது.கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தில் நண்பர்களின் பதிவைப் படிக்கவும் ,பின்னூட்டமிடவும் (முடிந்த அளவுக்கு) நேரம் சரியாய் இருந்தது.இதில் எங்கே எழுத? மேலும் அயராது ,தமிழ்த் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் மதுரை சரவணன் மற்றும் கா.பாவின் பதிவுகளைப் படித்த பின்பு நானெல்லாம் எந்த தைரியத்தில் எழுதுவது?இருப்பினும் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு இந்தப் பதிவினை இடுகிறேன்,அவர்கள் நல்லாசியுடன்.
*************
30.1.2011 ல் மதுரை அல்லோல கல்லோலப்பட்டிருக்க வேண்டியது.ஆனால் அய்யா அவர்களின் உத்தரவுப்படி அடக்கி வாசித்தார்கள்.அன்று அழகிரி அவர்களின் பிறந்த நாள்.வழக்கமாய் நடப்பதுதான் என்றாலும், வண்டியில் போய்க் கொண்டு இருந்தபோது மைக்கில் நம்மூர் அரசியல்வாதி ஒருவர் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. 'தமிலக மக்கல் கவலையற்று இருக்க நாங்கல் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'. 'கவலையுற்று' என்பதுதான் டங்கு சிலிப்பானதால் இப்படி (உண்மை வெளியில் வந்து விட்டது).
*************
கல்லூரியில் சிலநேரங்களில் வகுப்பைக் கலகலப்பாக நடத்திச் செல்ல வேண்டும் எனும்போது மாணவிகளில் யாரையாவது தமிழ்ப் புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியைப் படிக்கச் சொல்வதுண்டு.சில நாளைக்கு முன்பு அப்படிச் சொன்னது விளையாட்டு விபரீதமானதாக ஆகிவிட்டது .இரண்டாம் ஆண்டைச் சேர்ந்த ஒரு மாணவி பின்வரும் வாசகத்தில் உள்ள ஒரு நெடிலைக் குறிலாக மாற்றிப் படித்துவிட நாற்பது பெண்களும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.மாற்றிப் படித்த பெண் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு விட்டாள்.அப்புறம் ஏதேதோ சொல்லி அனைவரையும் அடக்கினேன்.அவள் படித்த வாசகம் 'மூவேந்தரும் பாரியின் கோட்டையை முற்றுகையிட்டனர்' என்பதே.
***********
தமிழ் வாசிப்பில், தவறு ஏற்படுவது ஒருவகை என்றால் எழுத்தில் ஏற்படும் தவறுகள் இன்னொரு வகை. சிலப்பதிகாரப் பாடத்தின் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் ஒரு இரண்டாமாண்டு மாணவி கோவலனைக் 'கேவலன்' என்று எழுதியிருந்தாள்.நான் அதைச் சுட்டிக்காட்டியதும் ,"பொண்டாட்டிய விட்டுட்டு எவ பின்னாலையோ போனவனுக்கு எதுக்கு சார் மரியாதை? அதான் அப்படி எழுதிட்டேன்" என்றாள்.நல்ல சமயோசிதம்தான்.

பொதுவாக, தவறாக எழுதினால் திட்டுவேன். ஆனால் ஆசிரியர் பயிற்சியில் இருக்கும் மற்றொரு மாணவி எழுதிய விடையில் 'அவளுக்கு வித்து கொடுத்தான்' என்று எழுத நினைத்து 'த்'தை ,'ந்' ஆக்கி விட்டாள்.நான் வாய் திறக்கவில்லை.
***********
நேசமித்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது கவிஞர் இசையின் கவிதையில் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு சொல்லைக் குறித்துச் சிலாகித்துப் பேசினார். 'தபுதாரம்' என்பதே அது .மனைவியை இழந்த கணவனைக் குறிக்கும் சொல் என்றார்.விசாரித்ததில் அது அந்த உணர்வைச் சொல்லும் ஒரு துறை அல்லது பண்வகை என்பது தெரிய வந்தது.நான் சொல்வது சரியா என தெரிந்தோர் சொல்லலாம்.
*************
நண்பர் மற்றும் கவிஞர் நரனின் 'உப்பு நீர் முதலை ' (காலச் சுவடு பதிப்பகம்) என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள இக்கவிதைகளின் சொல் விளையாட்டு என்னைக் கவர்ந்தது.எனவே அவரின் அனுமதி பெற்று இதை இங்கே வெளியிட்டுள்ளேன்.

உங்கள் பெயரென்ன ?

------------------------------
றுகாற்,ம்கங்சி

எழுத்துக்களை மாற்றிப்போட்டு
விளையாடும் விளையாட்டை வகுப்பறையில்
விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
சிங்கத்தின் பின்பக்கத்தில் தலையும்
முன்பக்கத்தில் வாலுமிருந்தது .
வேறொருவன் சிங்கமென்ற
வார்த்தையை நேர்படுத்தி
அதன் உடலை சரிசெய்தான் .

அடுத்த அறையில்
தலையை கீழே ஊன்றி
காலை வான்நோக்கி வைத்தபடி
சிரசாசனம் செய்து கொண்டிருந்தாள்.
3வது படிக்கும் சிறுமி .

ரா
த்
வி


வகுப்பறையின் வெளியே
வீட்டுப்பாடம் செய்யாமல் எழாவது படிக்கும்
செ
ந்
தி
ல்
ர்மாகு
முழந்தாளிட்டு அமர்ந்திருந்தான் .

உணவு இடைவேளையில்
தேநீர் கடையில்
நான் இடதுகாலின் மேல்
வலது காலை போட்டு அமர்ந்திருந்தேன் .
எல்லோரும் ஓடினார்கள்.
ரயிலில் அடிபட்டு சிதறிக் கிடந்தவளின்
பெயர் .

கி மு

ண ர்

சொ
அவளின் கடைவாயில் ஒரு "ஈ".
நான் அருகில் வந்ததும்
பறக்க துவங்க்கி விட்டது .
நேராய்,
தலை கீழாய்,
கிடை மட்டமாய் ,
இடவலமாய் .....எப்படியெல்லாமோ
எப்படி பறந்தாலும் அந்த
"ஈ" - யின் பெயர்
அப்படியேயிருக்கிறது.
(குறிப்பு:-படுத்து கால்களை நீட்டி சாவாசன நிலையில் எனது பெயர் .நரன் )

உலகை அணுகுதல்
----------------------------

15வயதில் மதிய நேர
அறிவியல் வகுப்பிற்கு
ஆசிரியர் கொண்டு வந்தார்.
"U"வடிவ சோதனை குழாய் என்ற வார்த்தையை
புதியதாய் இருந்தது. அந்த வார்த்தை

அன்றிலிருந்து எழுத்துக்களை கொண்டு
உலகை அணுகத் துவங்கினன் .

கிராமத்தில் தாத்தா இறந்து விட்டார் .
அவரை குளிப்பாட்டி "h"வடிவ நாற்காலியில்
அமர வைத்திருந்தார்கள் .
அருகில் அவரின் தலைகீழ் "J "வடிவ கைத்தடியுமிருந்தது
நேரமாகி விட்டது .
தாத்தாவை எடுத்துப் போய் "H"வடிவ பாடையில்
கிடத்தினார்கள் .

அம்மா தலை விரி கோலமாயிருந்தாள் .
நீண்ட தலை முடியை அள்ளி "O"வாக்கி,
அதன் நுனி முடியை எடுத்து வெளியே விட்டு
"Q"வாக்கினாள்.


முடிவெட்ட கிளம்பினேன்.
வீடுகளின் நடுவேயிருக்கும் சந்தில்
ஒரு பெண்
சேலையை முழங்கால் வரை தூக்கி பிடித்து
''A"போல் நின்றபடி சிறு நீர் கழித்துக்கொண்டிருந்தாள் .
வழியில் சிறுவர்களிருவர் "V"வடிவ கவணில்
ஓனானை குறிபார்த்து க்கொண்டிருந்தார்கள் .

கடையில் முடி திருத்துநர்
"E''வடிவ சீப்பால்
தலை வாரி விட்டபடியே
தலை கீழ் ''Y''வடிவ கத்திரியால்
X,Y
X,Y யென மாற்றி மாற்றி வெட்டி கொண்டிருந்தார் .
அங்கே "ப" வடிவ மீன் தொட்டியொன்றில்
தங்க நிற மீன்கள்
o
O
O
வாக முட்டையிட்டு கொண்டிருந்தன.


Thursday, January 27, 2011

சாவடி-கூடிப் பேசுவோம்

நாள்:30.01.2011 ஞாயிறு காலை 10.00 மணி
இடம் MUTA அரங்கு
காக்கா தோப்புத் தெரு,மதுரை.
எழுத்தாளர் K.N.செந்தில் அவர்களுடன் கலந்துரையாடல்
வாருங்கள்
தொடர்புக்கு
பா.திருச்செந்தாழை – 99948 11442
ஸ்ரீஷங்கர் – 94885 37306