Wednesday, March 31, 2010

ஒரு அறிவிப்பு..!!!

அன்பின் நண்பர்களே,

அனைவரின் ஒத்துழைப்போடும் நல்லதொரு நிகழ்வை மதுரையில் நடத்தி முடித்த திருப்தியோடு இருக்கிறோம். சரி.. அடுத்தது நாம் என்ன செய்யலாம்? வாருங்கள்.. கலந்து பேசுவோம்.. வரும் சனிக்கிழமை(03.04.2010) மாலை 5 மணிக்கு அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. பதிவர்கள் மட்டுமல்லாது வாசகர்களும் கலந்து கொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

தொடர்புக்கு :

கா.பா. - 9842171138
தருமி - 9952116112
ஸ்ரீ - 9360688993

Friday, March 19, 2010

எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள்
என் வாழ்க்கை பெண்களால் ஆக்கப்பட்டது.என் சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே வளர்ந்துள்ளேன். வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள்.இதில் கருத்து வேறுபாடு இல்லை எனக்கு.வெற்றி என்பதை எந்த அளவில் அல்லது எதுவாக எடுத்துக் கொண்டாலும் சரி.எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள் என்கிறபோது என்னால் பிரபலங்களை நினைக்க முடியவில்லை.ஏனெனில் யாரும் என்னை அந்த அளவுக்கு ,அதாவது என் வாழ்க்கையை சீரமைத்தவர்களின் அளவுக்கு பாதிக்கவில்லை.இதை எழுதச் சொன்ன பிரபுவுக்கு என் நன்றிகள்.

1. என் அம்மா:
முதலில் இவளைத்தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் நன்றி மறந்தவனாக அறியப்படுவேன் .பதினைந்து வயதில் இருந்து என்னை ,என் சகல குறைகளோடும், அதீதங்களோடும் பொறுத்துக் கொண்டு வளர்த்தமைக்காகவும், 'அவன் திறமையுள்ளவந்தான் ,காலம் வரல அவனுக்கு"என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதற்காகவும்.

2&3.என் உடன்பிறந்த தங்கைகள்:
அண்ணனாக எதுவும் செய்த ஞாபகம் இல்லை எனக்கு.ஆனாலும் விடாப்பிடியான பாசத்தோடும் ,உதவி தேவைப்படும்போதெல்லாம் தயங்காமல் தன் புகுந்த வீட்டில் வரக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எனக்கு உதவுவதற்க்காக.

4.என் அக்கா:
எனக்குத் தமிழின் மேலும் எழுத்தின் மேலும் ஆர்வம் வரக் காரணமாக இருந்தவர்.மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் (தற்போது செந்தமிழ்க் கல்லூரி) புலவர் பட்டம் பெற்றவர்.நல்ல புலமை,ஆனால் வாழ்க்கை இவருக்கு விதித்திருந்தது ஒரு தனியார் ஆரம்பப் பள்ளியில் சொற்ப சம்பளத்தில் ஆசிரியை வேலையும்,எந்த வேலையும் பார்க்காமல் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு மனைவியின் வருமானத்தில் காலம் கடத்தும் கணவனும்.

5.என் அத்தைப் பாட்டி:
எழுபது வயதில் சமகால இலக்கியம் பேசுபவர்.எதை வாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து , எனக்குப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தவர்.இன்னமும் இவர் வாசிப்பு தொடர்கிறது.

6&7 இரண்டு ஆசிரியைகள் :
பத்து வயதில் ஆனந்தா டீச்சர் ,பதினேழு வயதில் ஜெஸ்லின் டீச்சர் .

8&9. இரண்டு காதலிகள் :
முதலாவது எட்டு வயதில் - மறக்க விரும்பவில்லை.
இரண்டாவது இருபது வயதில் - மறக்க முடியவில்லை.

10. குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதரிகளும்.


Tuesday, March 2, 2010

பாலைத் திணை
பூட்டைத் திறக்க சாவி நுழைக்கையில்

கதவை மூடித் தாழை இடுகையில்

எழுதி முடித்துப் பேனா மூடுகையில்

குகைக்குள் நுழையும் ரயில் பார்க்கையில்

முன்னும் பின்னும் சீராய் இயங்கும்

இயந்திரம் பார்க்கையில்

எப்போதும் ஒரே ஞாபகம்

கத்தித் தீர்த்துக் கொள்கின்றன விலங்குகள்

பேசியும் தீராத போது என்ன செய்வது

கோபியர் புடைசூழ இருக்கும்
கடவுளுக்குப் பிரச்சினை ஏதும்

இருப்பதாய்த் தெரியவில்லை
மோனத் தவமிருக்கும் கடவுளிடம்தான்
விசாரித்துப் பார்க்க வேண்டும்

கோவில் தூண்களில்
தனித்து விடப்பட்ட யாளி

தன் குறியைத் தானே
சுவைத்துக் கொண்டிருக்கிறது .நண்பர் நேசமித்திரனுக்காக....