Tuesday, December 7, 2010

சங்கமம் 2010 – தயாராகுங்கள்!!!!

நண்பர்களே,

ஈரோடு நண்பர்களின் சங்கமம் நிகழ்ச்சி சென்ற வருடம் போலவே இந்த வருடமும் நடக்க இருக்கிறது.நான் மதுரை நண்பர்களுடன் வருவதாக இருக்கிறேன் . நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.நண்பர்களின் பதிவு .......இப்பொழுதுதான் கைகள் பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றதுபோல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம்தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்றுஉருண்டோடியிருக்கிறது.சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடுஇன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில்முன்னெடுக்க விரும்புகிறோம்.
வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும்ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப்பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் எனஅனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராகஇருக்கிறோம்
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்.நிகழ்ச்சியில்…
நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்
எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்.

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் எனவிடை கொடுக்க திட்டமிடுகிறோம்.உங்கள் வருகையே எங்களின் வெற்றி!இந்தசங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாகஎழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாகநடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடுஅழைக்கிறேன்.அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாககருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்எங்கள் கொங்கு மண்ணுக்குரியமணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...


விபரங்களுக்கு….
கதிர் 99653-90054
பாலாசி 90037-05598

கார்த்திக் 97881-33555
ஆரூரன் 98947-17185
வால்பையன் 99945-00540

ராஜாஜெய்சிங் 95785-88925

சங்கமேஸ் 98429-10707
ஜாபர் 98658-39393
நண்டு நொரண்டு 94861-35426
மற்றும்குழும மின்னஞ்சல் erodetamizh@gmail.com

நன்றி ஈரோடு கதிர்.

Monday, November 22, 2010

கீழக்குயில்குடி

தொன்மங்களைப் பொறுத்த அறிவும் ,வரலாற்றைப் பற்றிய பெருமித உணர்வும் மக்களுக்குக் குறைந்து வருகிறது.ஒரு சமூகம் அல்லது நாகரிகம் பற்றிய சரியான , முழுமையான அறிவு பெறுதல் என்பதைப் பற்றின அக்கறையும் அவ்வாறே. இவையெல்லாம் இருந்திருந்தால் பல்லாயிரம் காலத்துப் பழமையின் மேல் தன்னுடைய பெயரைக் கிறுக்கும் காலித்தனம் வராது. இவற்றிற்கு காரணமாக நான் இன்றைய கல்வியையும்,ஆசிரியர்களையும்தான் சொல்லுவேன். இவ்வாறான வரலாற்றுப் பெருமைகள் அதிகம் இல்லாத நாடுகளில் நூறு அல்லது இருநூறு வருட விஷயங்களைக் கூட Antique என்று தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆனால் தொன்மங்களைப் பற்றிய அறிவும் அக்கறையும் இல்லாத நம் சமூகத்திற்கு இடையே எழுத்தாளர் திரு.முத்துக் கிருஷ்ணன் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத் தகுந்தது.மலையடிவாரத்திலிருக்கும் அய்யனார் கோவில்

பசுமை நடை என்ற பெயரில் இந்த முறை அவர் அழைத்துச் சென்றது கீழக்குயில்குடி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் படுகைகள் மற்றும் சிற்பங்கள் உள்ள சிறிய கிராமம். பழைய பெயர் உயிர்க்குடி. அங்கிருக்கும் அய்யனார் கோவிலின் பின்புத்தில் இருக்கிறது சமணர்களின் படுக்கை. உள்ளூர் மக்களால் செட்டிப் புடவு என்றழைக்கப் படுகிறது.காரணம் குகைக்கு வெளியில் உள்ள தீர்த்தங்கரரின் சிலையைப் செட்டியார் ன்று நினைப்பதால். வரலாற்றுத் தகவல்களை எங்களுக்குச் சொல்ல திரு அலோஷியஸ், திரு.சாந்தலிங்கம் (தொல்லியல் துறை) மற்றும் திருமுத்தையா (நாட்டார் வழக்கு ஆய்வாளர்) ஆகியோரும் உடனிருந்தனர். முதலில் பேசிய திரு.அலோஷியஸ் தொன்மங்களின் மதிப்புகள் பற்றிப் பேசினார். அடுத்துப் பேசிய திரு.சாந்தலிங்கம் அந்த இடத்தைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.கடைசியில் பேசிய திரு.முத்தையா அவர்கள் அந்த இடத்தைச் சார்ந்துள்ள வாய்மொழி வரலாற்றைப் பற்றிப் பேசினார்.


தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம்

மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் செட்டிப் புடவு என்றழைக்கப்படும் சமணர் படுக்கை.குகையின் உள்ளே இருவர் தங்கக் கூடிய அளவுக்கு இடம்
,கசிந்து வரும் சுனை நீர்(திகம்பரர்கள் சுனை நீர் மட்டுமே அருந்துவார்களாம்) என கடும் கோடையில் கூட அவ்விடம் குளிர்ச்சியுடன் இருக்குமெனப் புரிந்தது.குகையின் மேற்புறத்தில் சில சிற்பங்கள் சமண வேதங்களின் நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வகையில் சில புடைப்புச் சிற்பங்கள். வெளியில் தீர்த்தங்கரரின் சிலை. 1200 வருடப் பழமையைப் பார்க்கையில் பிரமிப்பு அடங்குவதில்லை.வெளியிலும் உள்ளேயும் இருக்கும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்துகளில் உள்ளது. திருக்காட்டான் பள்ளியில் (அருப்புக்கோட்டை அருகில்) அமைந்திருந்த பள்ளியின் மாணவர்களும் ஸ்ரீவல்லபன் என்பவரும் சேர்ந்து அமைத்துக் கொடுத்த படுகை என்கிறது கல்வெட்டு.

குகையின் உள்ளேயிருக்கும் சிற்பங்கள்

உள்ளே காணப்படும் புடைப்புச் சிற்பங்களில் வரிசைக்கிரமமாக பத்மாவதி
,மூன்று தீர்த்தங்கரர்கள் மற்றும் அம்பிகாவின் சிற்பங்கள்.இதில் பத்மாவதியின் சிற்பம் சிங்கத்தின் மீதமர்ந்து எதிரில் உள்ள யானையின் மீதுள்ள அரக்கனுடன் போரிடுவது போல் வடிக்கப்பட்டுள்ளது.யானை என்பது ஆசீவகர்களுக்கான குறியீடாக இருக்கலாம் என்கிறார் திரு.சாந்தலிங்கம்.
பிறகு அங்கிருந்து கிளம்பி கோவிலுக்கு அடுத்து உள்ள குன்றில் ஏறினால் அங்கும் புடைப்புச் சிற்பங்களும் சுனையும். மீண்டும் கல்வெட்டுகள். அற்புதமான அனுபவம்.

மேலும் சில படங்கள்...
திரு.சாந்தலிங்கம்

கோமதிநாதர் - தீர்த்தங்கரர்

நீலக்கலர் ஜிங்குச்சா - கா.பா

பசுமைநடையினைப் பற்றிய இன்னும் விரிவான இடுகையினை நண்பர் கா.பாவின் பதிவில் பாருங்கள்.

Wednesday, October 27, 2010

இப்படியும் சில மனிதர்கள்

நண்பர் நரனுடைய பதிவு. அவருடைய அனுமதியோடு இங்கே வெளியிட்டு இருக்கிறேன்.

விஜய்மகேந்திரன்என்னும் நோய்க்கூறு

'கவனம்
சிறுகதையாளர் என அநேகரால் அறியப்பட்ட உயர் திரு.விஜய்மகேந்திரன் என்னும் நோய்க்கூறு அநேக இலக்கியவாதிகளால் அறியப்பட்டது தான் என்றாலும் இதுவரைஅறியப்படாதவர்கள் அறிந்துகொள்ளுங்கள்


திடீரென உங்களின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வரும் அல்லது
நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்கு செல்பவராக இருந்தால் ஒரு கை உங்களை தேடி வந்து கைகுலுக்கும் உங்க கதையை / கவிதையை ---- ----------புத்தகத்துல வாசித்தேன் .பிரமாதம் ..பின்னிடிங்க போங்க இன்னிக்கி எழுத கூடிய எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளர் நீங்கதான் உங்க அளவுக்கு எழுத இங்க ஆளே இல்ல .என் நண்பர்கள் எல்லோர் கிட்டயும் இந்த விசயத்த பகிர்ந்துகிட்டன் .அவங்களுக்கும் உங்க எழுத்துனா உசுர விடுவாங்களம் உங்க நம்பர் குடுங்க ,மெயில் .நான் போன்ல detail-ஆ பேசுறேன். ( இனிமே தான் விசயமே )

திடீரென நீங்கள் எதிர் பார்க்காத ஒரு நாள் அதே அழைப்பு உடனே நாம அந்த பச்சை பொத்தானை அழுத்தி
நாம் :-
சொல்லுங்க விஜய்மகேந்திரன்.......... (ஏற்கனவே நாம மறக்காம அவர்( நோய்கூறு) பெயரை போன்ல பதிவு பண்ணிருப்போம் )

நோய்கூறு :-
இப்ப ஒரு முறை வுங்க கதையை படிச்சேன் .இந்த வருஷம் உங்ககளுக்கு ஏன் ------------,-----------,-----
------ இந்த விருது எல்லாம் கிடைக்கல . மனசுக்கு கஷ்டமா இருக்கு தி.நகர் வந்திங்கன்னாபோன் பண்ணுங்க நேர்ல நாம மீட் பண்ணி பேசுவோம் .போன வச்சிடுவாரு..அட பாவிங்களா இப்படிப்பட்ட ஒருத்தர போயி தமிழ் இலக்கிய உலகம் நோய்கூறுன்னு சொல்லுதே )

தி.நகர்
1
வாங்க ஒரு டீ சாப்டலாம்
பீர் சாப்டுவீங்களா வாங்கலேன் துளசி பாருக்கு போகலாம்
அங்க தான் நான் எப்பவும் ------------,----------------,------------------,---------------- இது மாதிரி பெரிய எழுத்தாளர்களை எல்லாம் கூட்டிட்டு போவேன்
2 .
திடீரென அவரின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வரும் .(கொஞ்சம் முன்னாடி நம்ம நோய்கூறு தான் அந்த பெரிய எழுத்தாளருக்கு மிஸ்ட் கால் பண்ணிருக்கும்- அட்டென் பண்ண மாட்டரு. )அது பாருங்க என் புத்தகம் வந்ததுல இருந்து எப்ப பாத்தாலும் போன் பண்ணி தொந்தரவு பண்றாரு .அவரு புத்தகத்துக்கு நான்தான் முன்னுரை எழுதனுமாம் எப்ப பாத்தாலும்...........உங்களுக்கு புத்தகம் வந்துருக்கா? என்ன இப்படி கேட்டிங்க இந்த வருஷம் சாகித்திய அகடமி -ல என் பேர தான் எல்லாரும் சொல்றாங்களnம் இரவு 12 மணிக்கெல்லாம் போன் . யாரோ ஒருத்தர் மொரிசியஸ் -ல இருந்து எப்ப பாத்தாலும் மெயில்பண்றார்,போன்பண்றார் . மலேசியா இருந்து எப்போ வருவீங்கன்னு '' மலேசியாதமிழ் சங்கம் '' கூப்பிடுறாங்க .இந்த வருஷம் --------,------------,---------,------------------,-------------------,---------------- இத்தனை
பதிப்பகத்துல இருந்துலாம் என்கிட்ட நாவல் கேட்குறாங்க .பாக்கலாம் யாரு முதல்ல அட்வான்ஸ் பணம் குடுக்குறாங்ககளோ அவங்களுக்கு தான் என் நாவல்.
3
நோய்கூறு :-ஆமா அந்த -----------------எழுத்தாளர் எப்படி ?
அவருக்கும் அவங்களுக்கும் அப்படியாமே

அந்த கவிஞன் பெரிய குடிகாரனம் -ல

தி.நகர்:-
சார் என் கவிதை -ல உங்களுக்கு எது பிடிச்சிருக்கு ?

நோய்கூறு :-அத விடுங்க நண்பா ...... அந்த பெண் கவிஞர் அப்படியமே ?( எனக்கு தெரியாதுப்பா ......... கொஞ்சம் முன்னாடி என்ன பார்க்க வந்த --------------எழுத்தாளர் /-------------கவிஞர் சொன்னாரு )
உங்களுக்கு அவங்கள தெரியுமா ?(சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன் )
அவங்க நம்பர் கொஞ்சம் குடுங்கலேன் ...........(ஹி ---------ஹி -----அவங்க கவிதை படித்தேன் அதான்)

தி.நகர்:-
சார் ..........என்.கவிதை- ல .............

நோய்கூறு :கவிஞர் ...........பெண் .........கவிஞர் .................நம்பர் ...........

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படியாக நீளும் / வாழும் யார் இந்தவிஜய்மகேந்திரன்?

இலக்கியத்தில் இவருக்கு என்ன வேலை ?

ஒவ்வொரு இலக்கியவாதியும் இலக்கியத்திற்காக எவ்வளவோ தொலைத்தாகி விட்டது .
அவர்களை எல்லாம் நையாண்டி செய்ய இவர் யார் ?

சக கவிஞர் ,பெண் கவிஞர் /எழுத்தாளர்களை பற்றி புரணி பேசி திரியும் இந்த விஜய்மகேந்திரன் எப்படி நல்ல ஒரு படைப்பாளியாய்இருக்க முடியும் .

இலக்கியத்தில் நுழைந்த இந்த நோய்கூறை இப்படியே விட்டுவிட முடியாது .

இலக்கியத்தின் மீதும் இலக்கியவாதிகள் மிகுந்த மதிப்பும் ,அன்பும் கொண்டிருக்கும் என்னையும், (நரன் )என்னை போன்ற என் நண்பர்கள் சிலரை பற்றியும் நிறைய அவதூறுகளை பரப்பி கொண்டிருக்கிறபடியால் இக்கட்டுரை எழுத
வேண்டிய நிர்பந்தமாகி விட்டது .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு
விஜய்மகேந்திரன்-கு
உங்களுக்கு ஏற்பட்டிருப்பது ஒரு சிறு மனசிதைவுஅல்லது மன பிசகு தான் சிறிது நாள் தங்களின் போன் மற்றும் மெயில் ,பேஸ் புக் ,போன்ற தொடர்புகளிலிருந்து நீங்கள் சற்று விலகி இருந்தாலே போதுமானது .இல்லாவிட்டால் அது பைத்தியமாக முற்றும் அபாயமும்,அதனால் பெண்
கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் கல்லெறிபடும் அபாயமும் உண்டு .

இப்படிக்கு .
நரன்
(பாதிக்கப்பட்டவர் )


Friday, October 22, 2010

கடவுள் தத்துவம் Vs அறிவியல்-ஒரு விளக்கம்

நண்பர்களே,
சென்ற பதிவில் நான் சொல்ல வந்த கருத்து சரியாகச் சொல்லப்படவில்லை என்றே நினைக்கிறேன்.காரணம் அதற்கு வந்த மறுமொழிகள்.கண்டிப்பாக ,கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற வாதமில்லை அது.முதலில் நான் ஆத்திகன் அல்ல என்பதை சொல்லிக் கொள்கிறேன்.அதற்காக நாத்திகனா என்றால் அதுவும் இல்லை.என்னுடைய கடவுள் தத்துவம் என்பது தனிப்பட்டது.எந்த வழிபாட்டு முறைகளிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.ஓஷோ சொன்னபடி "உங்கள் பிரார்த்தனைகளை யாரும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை" என்பதை நம்புகிறேன்.

கடவுள் தத்துவம் -அறிவியல் என்று தலைப்பு வைத்ததற்குக் காரணம் அறிவியல் மூலமாக நாத்திகத்தை நிறுவும் முயற்சி சரியாக வருமா என்பதுதான் என் அடிப்படைக் கேள்வி.ஏனெனில் அறிவியல் எல்லாக் கேள்விகளுக்கும் விடை தராது என்பதுதான் நான் சொல்ல விரும்புவது.ஒவ்வொரு அறிவியல் விளக்கங்களிலும் ஏதேனும் ஒரு இடத்தில் கடவுளை நுழைத்து விட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

தத்துவமாக உள்ள இந்த கடவுள் நம்பிக்கையை உறுதிப் படுத்திக் கொள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் (கடவுளை நம்புகிற) வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு சம்பவம் இருக்கத்தான் செய்கிறது.அதை நாத்திகர்கள் தற்செயல் என்றால் ஆத்திகர்கள் கடவுள் செயல் என்கிறார்கள். அறிவியல் எல்லா விஷயங்களுக்கும் விளக்கம் தருமா? எனவேதான் கடவுள் மறுப்புக்கு அறிவியல் சரியான கருவி இல்லை என்று நினைக்கிறேன்.

தத்துவங்களை அறிவியல் முறியடித்ததே இல்லையா என்ன?என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது.உதாரணமாக பூமி உருண்டை என்ற விஷயத்தை அறிவியல் வெளிப்படுத்தியது.ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் இங்கே பூமி என்பது கண்ணால் காணக் கூடிய உணரக் கூடிய ஒரு பொருள்.எனவே அது சாத்தியமானது.ஆனால் கடவுள்? கண்ணால் பார்க்க முடியாத ஒரு விஷயம் கடவுள் என்பது மனிதர்களின் நம்பிக்கை.இந்த நம்பிக்கையை பருப்பொருள்களை மட்டும் ஆராய்கிற அறிவியல் துணை கொண்டு முறியடிக்க முடியுமா என்பதுதான் என் கேள்வி.இம்முறை கேள்வியை சரியாகக் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.தொடர்ந்து பேசுவோம்.
Thursday, October 14, 2010

கடவுள் தத்துவம் Vs அறிவியல்

நண்பர்களுக்கு வணக்கம்,
எப்போதும் அரைத்துக் கொண்டிருக்கிற மாவுதான் என்றாலும் என் கருத்தையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் இந்தப் பதிவு.தருமி அய்யா அவர்கள் இதற்குப் பதில் தர இசைந்திருக்கிறார்கள்.பதிவின் நோக்கம் கண்டிப்பாக யாருடைய விரோதத்தையும் சம்பாதிப்பது அல்ல .
***********

கலை என்கிற வடிவம் ஏற்பட்டதும் விமர்சனம் என்கிற விஷயம் வந்துவிட்டது போலத்தான் கடவுளும்.வேதங்களிலும் ,பைபிளிளும்,குரானிலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன .சமீபமாக தவற விட்டுவிட்ட இடுகைகளைப் படிக்கையில் பலர் எப்போதும் அடித்துக் கொண்டிருக்கிற ஜல்லியான கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக (நினைத்துக் கொண்டு) அவர்கள் காண்பிக்கிற அறிவியல் விஷயங்களையும் படிக்க நேர்ந்தது.

கடவுள் இல்லை என்று சொல்வதும், அதற்கு ஆதாரங்களை அடுக்குவதும் ஒன்றும் புதிய விஷயமல்ல.பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருப்பதுதான்.இருப்பினும் மனித குலத்தின் ஆதாரமான இந்த விஷயத்தை, ஆணிவேரைப் போல உறுதியான இந்த நம்பிக்கையை பரிணாம தத்துவமோ, ஜீன் மேப்பிங்கோ, கடவுள் துகளோ அசைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.காரணம்?

1.எல்லாக் கேள்விகளுக்கும் விடை தரும் நிலையில் அறிவியல் இன்று இல்லை.எப்போது அந்த நிலை வரும் என்றும் யாராலும் சொல்ல முடியாது.

2. கடவுளை நம்பி வாழ்க்கையை கடத்துகிற சாமானியனுக்கு அறிவியல் விஷயங்கள் எட்டுவதில்லை.

அது ஏன்? அல்லது அது எதனால்? என்ற கேள்விகள் அறிவியலின் ஒவ்வொரு விளக்கங்களுக்கும் கேட்கப்படுமாயின் ஏதோ ஒரு இடத்தில் அறிவு அல்லது அறிவியல் நின்று விடுகிறது.அதற்கு மேல் பதிலில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.`விஞ்ஞானம் எந்தப் புள்ளியில் நின்று விடுகிறதோ அந்தப் புள்ளியில் இருந்துதான் மெய்ஞ்ஞானம் ஆரம்பிக்கிறதுஎன்பார் கண்ணதாசன்.


கடந்த 16/08/2010 அன்று இரவு Discovery channel- ல் (மறு) ஒளிபரப்பான Stephan Hawking’s Special-The Origin Of Universe என்கிற நிகழ்ச்சியில் அவரால் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம்அறிவியலால் ப்ரபஞ்சம் தோன்றிய கணங்களை விவரிக்க முடிந்தாலும் அது ஏன் நிகழ்ந்தது என்பதைக் கூற முடியாது (Although science may solve the problem of how the universe began, it can’t answer the question why does the universe bother to exist).இந்த வாக்கியம் ஆத்திகத்திற்கு செளகர்யமான ஒன்றாகப்படுகிறது எனக்கு.

முன்பு சொன்னபடி பரிணாமக் கொள்கையிலும் அறிவியல் பதிலளிக்க முடியாமல் திணறும் இடங்களில் கடவுள் தத்துவம் செளகரியமாக உட்கார்ந்து கொள்ள நிறைய இடமிருக்கிறது.குரங்கில் ஒரு கிளை மட்டும் ஏன் மனிதனாக வேண்டும்?மற்றது ஏன் குரங்காகவே இருக்க வேண்டும்? அந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணம் என்ன? என்று ஆராயத் தொடங்கினால் எந்த நிலை வரை அறிவியலில் தெளிவான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? எனவே பரிணாமக் கொள்கை என்பது இறைவன் ஏழு நாட்களில் உலகைப் படைத்தான் என்பதை வேண்டுமானால் கேள்விக்குள்ளாக்கலாமே தவிர கடவுள் இல்லை என்பதை மறுக்க உதவும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மேலும் இந்தப் பரிணாம வளர்ச்சி நடைபெற்ற பல்லாயிரம் ஆண்டுகளைத்தான் உருவகமாக ஏழு நாட்கள் என்று சொல்கிறார்கள் என்று ஒரு வரியில் ஆத்திகர்கள் எதிர்வாதம் செய்ய முடியும்.(மனிதர்களின் காலமும் இறைவனின் காலமும் வேறு வேறு என்பது இந்துத்வமும், கிறித்தவமும் சொல்கிற விஷயம்).ஆக இந்த அறிவியல் கருதுகோள்களும் கோட்பாடுகளும் ,சில நம்பிக்கைகளை மட்டுமே இல்லை என்று தெளிவாக்குகிறதே தவிர, எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமான கடவுள் தத்துவத்தை தெளிவாக்குகிற அல்லது மறுக்கிற கோட்பாடுகள் எதுவுமே இன்றைய அறிவியலில் கிடையாது. உங்களால் அவர்களுடைய சடங்குகளை அல்லது சிறு கருதுகோள்களை வேண்டுமானால் அசைத்துப் பார்க்க முடியுமே தவிர அடிப்படை நம்பிக்கையை அல்ல.

அறிவியலால் புது உயிரிகளை உண்டாக்க முடிகிறதுதான், ஆனால் அதற்கும் இயற்கையில் இருந்து ஒரு செல் வேண்டும்.இல்லை கிராஸ் பாலினேஷனா? மலடாக இருக்கும்.அதில்தான் இறைவனின் கைங்கர்யம் அடங்கியுள்ளது என்பார்கள்.இவற்றையெல்லாம் தெளிவாக்குகிற அறிவியல் தத்துவம் ஏதேனும் வரும் வரையில் அல்லது என்றைக்கு இயற்கையின் எவ்விதத் துணையும் இல்லாமல் அறிவியல் புது உயிரை உருவாக்குகிறதோ அன்று வரை , சிரித்துக் கொண்டே ஆத்திகர்கள் சொல்கிற,

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்

உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள்

உளனென இலனென இவை குணமுடைமையில்

உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே


என்கிற தத்துவத்தை இறுக்கத்துடன் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைதான் பார்க்க முடியும், மறுத்துப் பேச இயலாது.பேசுவதும் வீண்.தெளிவான நேர்கோட்டில் செல்கிற வாதம்தான் முடிவுக்கு இட்டுச் செல்ல முடியும், இந்த விவாதம் வட்டத்தில் சுழல்வது போல முடிவில்லாதது.எத்தனையோ நூற்றாண்டுகள் பழமையான விவாதம் இது,இன்னமும் முடிவுக்கு வரவேயில்லை என்பதே அதற்கு அத்தாட்சி.


Monday, September 20, 2010

க்ளிஷேக்களின் தொகுப்பு

நண்பர்களுக்கு வணக்கம் . சில மாதங்களாக பதிவேதும் இல்லை. காரணம் அறிவீர்கள்.இந்த இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் ஏகத்துக்கு எழுதிக் குவித்திருக்கிறீர்கள்.அனைத்தையும் படிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. முதலில் உங்கள் எழுத்துக்களைத் தவற விட்டமைக்காக எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.இனி தொடர்ந்து படித்து வருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இயன்றால் அவ்வப்போது எழுதவும் முயற்சிக்கிறேன்.தாயாரின் உடல்நிலை சிறிது முன்னேறியுள்ளது.நேரிலும் ,தொலைபேசியிலும் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி.
**********
நான்கு வருகைகள் முக்கியமானது ,மறக்க முடியாதது. ஒன்று நைஜீரியா ராகவன் அவர்களின் வருகை, இரண்டாவது நேசமித்திரன்.நேசன் ராகவனுடனான பொழுதுகள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அடுத்தது விக்னேஸ்வரி மற்றும் முரளி கண்ணன்.இருவரது பதிவுகளையும் இன்னமும் படிக்கவில்லை.:-((((
***********
மதுரையில் (அதிசயமாக ) மழை பெய்கிறது.இன்னமும் மதுரையின் சாலைகள் மழைக்குத் தாங்காமல் கரைந்து ஓடக்கூடிய நிலையில்தான் இருக்கிறது,விடிவுகாலம் எப்போது என்று தெரியவில்லை.போன வாரம் எங்கள் தெருவில் புல்டோசர், கலவை மிஷின்கள் சகிதமாக 20 பேர் வந்திறங்கினர்.புதிய சாலைதான் அமைக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் இருக்கிற ஓட்டை உடைசல்களை மூடி விட்டுப் போனார்கள்.அதுவும் அடுத்த இரண்டு நாட்கள் மழையில் காணாமல் போய் விட்டது.வாழ்க ஜனநாயகம்.
********
எழுத்தாளர் ஞானியைச் சந்தித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது .பயனுள்ளதாகவும்.அதைப் பதிவிடுகையில் நுண்ணரசியலோடு பதிவிட்ட மதுரையின் பிரபல பதிவரும் ,வருங்கால எழுத்தாளரும், எங்கள் ஆர்கனைசரும் ,என் நண்பரும்,எஸ்.ரா மற்றும் சாருவின் வெறித் தொண்டரும்,இன்னும் சில 'ரும்' களும் ஆன பொன்னியின் செல்வனின் எழுத்துத் திறனை அந்தப் பதிவில் மட்டுமல்லாது சமீபத்தில் அவர் எழுதிய கவிதை (கதை என்றுதான் நினைத்தேன், லேபிளைக் காண்பித்தார் நம்பி விட்டேன்) மூலமும் அறிந்து உறங்க முடியாமல் இரவுகளைக் கடத்தி வருகிறேன்.வேறென்ன சொல்ல?
**********
க்ளிஷேக்களின் தொகுப்பு என்ற தலைப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே தோன்றியது ஆனால் அதைத் தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை.இந்தத் தலைப்பில் கவிதை எழுதுங்கள் என்று நேசனிடம் கேட்டபோது என்னை முதலில் எழுதச் சொன்னார்.எழுதி விட்டேன்.உறுமீனுக்குக்காக வாடியிருக்கும் கொக்கு,
யன்னல் கம்பிகளில் முகம் பதித்த பெண் .
சிறுகோட்டுப் பெரும் பழம்,
கசங்கிய
படுக்கையில் ஒற்றைத் தலையணை.
யாயும் யாயும் யாராகியரோ ,
பேருந்தில் கடந்து போனவள்.
செம்புலப் பெயல்நீர்
ஐம்பது ரூபாய் குறைத்துக் கொண்டாள் .

:-))))))))))))
Wednesday, March 31, 2010

ஒரு அறிவிப்பு..!!!

அன்பின் நண்பர்களே,

அனைவரின் ஒத்துழைப்போடும் நல்லதொரு நிகழ்வை மதுரையில் நடத்தி முடித்த திருப்தியோடு இருக்கிறோம். சரி.. அடுத்தது நாம் என்ன செய்யலாம்? வாருங்கள்.. கலந்து பேசுவோம்.. வரும் சனிக்கிழமை(03.04.2010) மாலை 5 மணிக்கு அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. பதிவர்கள் மட்டுமல்லாது வாசகர்களும் கலந்து கொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

தொடர்புக்கு :

கா.பா. - 9842171138
தருமி - 9952116112
ஸ்ரீ - 9360688993

Friday, March 19, 2010

எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள்
என் வாழ்க்கை பெண்களால் ஆக்கப்பட்டது.என் சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே வளர்ந்துள்ளேன். வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள்.இதில் கருத்து வேறுபாடு இல்லை எனக்கு.வெற்றி என்பதை எந்த அளவில் அல்லது எதுவாக எடுத்துக் கொண்டாலும் சரி.எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள் என்கிறபோது என்னால் பிரபலங்களை நினைக்க முடியவில்லை.ஏனெனில் யாரும் என்னை அந்த அளவுக்கு ,அதாவது என் வாழ்க்கையை சீரமைத்தவர்களின் அளவுக்கு பாதிக்கவில்லை.இதை எழுதச் சொன்ன பிரபுவுக்கு என் நன்றிகள்.

1. என் அம்மா:
முதலில் இவளைத்தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் நன்றி மறந்தவனாக அறியப்படுவேன் .பதினைந்து வயதில் இருந்து என்னை ,என் சகல குறைகளோடும், அதீதங்களோடும் பொறுத்துக் கொண்டு வளர்த்தமைக்காகவும், 'அவன் திறமையுள்ளவந்தான் ,காலம் வரல அவனுக்கு"என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதற்காகவும்.

2&3.என் உடன்பிறந்த தங்கைகள்:
அண்ணனாக எதுவும் செய்த ஞாபகம் இல்லை எனக்கு.ஆனாலும் விடாப்பிடியான பாசத்தோடும் ,உதவி தேவைப்படும்போதெல்லாம் தயங்காமல் தன் புகுந்த வீட்டில் வரக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எனக்கு உதவுவதற்க்காக.

4.என் அக்கா:
எனக்குத் தமிழின் மேலும் எழுத்தின் மேலும் ஆர்வம் வரக் காரணமாக இருந்தவர்.மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் (தற்போது செந்தமிழ்க் கல்லூரி) புலவர் பட்டம் பெற்றவர்.நல்ல புலமை,ஆனால் வாழ்க்கை இவருக்கு விதித்திருந்தது ஒரு தனியார் ஆரம்பப் பள்ளியில் சொற்ப சம்பளத்தில் ஆசிரியை வேலையும்,எந்த வேலையும் பார்க்காமல் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு மனைவியின் வருமானத்தில் காலம் கடத்தும் கணவனும்.

5.என் அத்தைப் பாட்டி:
எழுபது வயதில் சமகால இலக்கியம் பேசுபவர்.எதை வாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து , எனக்குப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தவர்.இன்னமும் இவர் வாசிப்பு தொடர்கிறது.

6&7 இரண்டு ஆசிரியைகள் :
பத்து வயதில் ஆனந்தா டீச்சர் ,பதினேழு வயதில் ஜெஸ்லின் டீச்சர் .

8&9. இரண்டு காதலிகள் :
முதலாவது எட்டு வயதில் - மறக்க விரும்பவில்லை.
இரண்டாவது இருபது வயதில் - மறக்க முடியவில்லை.

10. குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதரிகளும்.


Tuesday, March 2, 2010

பாலைத் திணை
பூட்டைத் திறக்க சாவி நுழைக்கையில்

கதவை மூடித் தாழை இடுகையில்

எழுதி முடித்துப் பேனா மூடுகையில்

குகைக்குள் நுழையும் ரயில் பார்க்கையில்

முன்னும் பின்னும் சீராய் இயங்கும்

இயந்திரம் பார்க்கையில்

எப்போதும் ஒரே ஞாபகம்

கத்தித் தீர்த்துக் கொள்கின்றன விலங்குகள்

பேசியும் தீராத போது என்ன செய்வது

கோபியர் புடைசூழ இருக்கும்
கடவுளுக்குப் பிரச்சினை ஏதும்

இருப்பதாய்த் தெரியவில்லை
மோனத் தவமிருக்கும் கடவுளிடம்தான்
விசாரித்துப் பார்க்க வேண்டும்

கோவில் தூண்களில்
தனித்து விடப்பட்ட யாளி

தன் குறியைத் தானே
சுவைத்துக் கொண்டிருக்கிறது .நண்பர் நேசமித்திரனுக்காக....
Tuesday, February 23, 2010

கவிஞர் நேசமித்ரனுடன் ஒரு நாள்


ஒரு படைப்பாளிக்கு நேரக்கூடிய அதிகபட்ச எரிச்சலான,தர்மசங்கடமான ,ஆயாசமான ,கொடுமையான ,வருத்தமான இன்னும் என்னென்ன ஆனவெல்லாம் உண்டோ அதெல்லாம் உடைய நிகழ்வு எது என்றால் ,தன் படைப்புகளுக்குத் தானே விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் (என்று நான் நினைக்கிறேன்).ஆனால் நேசனிடம் துளியும் மேலே சொல்லப்பட்ட எந்த 'ஆன ' உணர்ச்சிகளும் இன்றி மகிழ்ச்சியுடன் தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார். சமகால தமிழ்க் கவிதைகள் என்று பேசும்போது ,அதில் காணப்படும் உத்திகளைப் பின்பற்றாது தனக்கென்று ஒரு பாணியைக் கைக்கொண்டிருப்பவர் நேசமித்திரன் .

சுவாரஸ்யமான கலந்துரையாடல் கணங்கள்
கா.பா:என்னைப் பாத்தா பரிதாபமா இல்லையா ஸ்ரீ உனக்கு!!!!

இவர் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்றால் அறிவியல், வரலாறு,தொல்லியல்,பூகோளம் என சகலத்தையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் போலிருக்கிறதே என்று நான் நினைத்ததுண்டு.நேரிலும் அதே கேள்வியைக் கேட்கத் தவறவில்லை.பாடு பொருள் மாறிக் கொண்டிருப்பதைப் போல , படிமங்களும், உதாரணங்களும்,உவமான உவமேயங்களும் மாறவேண்டும் என்கிறார்.மறுக்க முடியவில்லை!!புதிய உத்திகளும், உதாரணங்களும் வாசகனை யோசிக்க வைப்பதற்காகவே.கவிதை என்பது வாசகனை வார்த்தைகளை விட்டு வெளியில் எறியக் கூடியதாக இருக்க வேண்டும்.அதாவது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பதில் திண்ணமாக இருக்கிறார்.புதிய சொற்கள் புனைவதிலும் ,புதிய உதாரணங்களைப் படைப்பதிலும் அவருக்கிருந்த ஆர்வம் என்னைப் பொறுத்த வரையில் பிரமிக்கத் தக்கது.

இவ்வளவு பொறுமை நமக்கு கிடையாதுங்க
மொக்கைக் கேள்விகளுக்கும் பொறுப்பான பதில்கள்
இல்லையில்லை ,வெறும் குளிர்பானம்தான்


முதல் முறையாகச் சந்திக்கிறோம் என்றே தோன்றவில்லை.நெடுநாள் பழகினதைப் போன்ற அணுக்கம்,தோளில் கைபோடச் சொல்லியது .அவரும் மறுக்கவில்லை.மேலும் பேசிய விஷயங்கள் பற்றிய விபரமான இடுகையை அண்ணன் கார்த்திகேயப் பாண்டியன் அவர்களும், அழகான புகைப்படங்களுடன் தருமி அய்யாவும் இட்டுள்ளனர்.


Thursday, February 4, 2010

மெல்லினம் புணர்தல்

மாமாவின் கவிதைகளைப் பற்றிய அறிமுகத்திற்கு இங்கே க்ளிக்கவும்.மெய்
யுணர் மெல்லப் பேசு
மெய் தடவி மென்று தின்
மெதுவாய்ப் புணர் மெல்லக் கொல்
மெழுகாய் உருகு மெல்ல முனகு
மெது மெதுவாய்ச் செத்துப் போ

இடையது இல்பொருள்
மெல்லின வல்லினம்
கலத்தலே புணர்ச்சி.
ஆதி நீடலும் அடி அகரம்
இளகுவதும் முன் நின்ற
மெய் புரிதலுமே புணர்ச்சி விதி

உடம்படு மெய்ப் புணர்ச்சிக்கு
உடம்பது புணர்ச்சிக்கு
உடலோடு உயிர் மட்டுமல்ல
உடலோடு உடல் ஒன்றுவதும்
இயல்பே.

Monday, January 25, 2010

மதுரையில் ஒரு முக்கிய நிகழ்வு....

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வருகிற 31.01.2010 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.


நிகழ்ச்சி:குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கு
தலைமை:மருத்துவர் .ஷாலினி MBBS, DPM, Ph D, FIPS
நேரம் : மாலை 3 மணி முதல் 6 மணி வரை.


பதிவுலக நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு,

கார்த்திகேயப் பாண்டியன்-9842171138
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993