Tuesday, December 15, 2009

மதுரக்காரன்னு சொல்லிக்கிறதில ........

மதுரையில் என்றென்றைக்கும் இருக்கப் போகிற பிரச்சினைகளில் ஒன்று குண்டும் குழியுமான சாலைகள். எந்த ஒரு சாலையையும் நீங்கள் நல்ல நிலைமையில் பார்க்கவே முடியாது. கொஞ்ச தூரம் பயணம் செய்தாலே உங்கள் இடுப்பைப் பதம் பார்த்து விடும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம்.இந்த லட்சணத்தில் பாதாளச் சாக்கடை,குடிநீர் வாரியம்,தொலைத்தொடர்பு,மின்சார வாரியம் என ஆளாளுக்குத் தோண்டி இருக்கிற கொஞ்ச நஞ்ச சாலையையும் காணாமல் போக்கி விடுகிறார்கள். இதெல்லாம் போதாதென்று அண்ணன், அம்மா, அய்யா,அப்பா, தாத்தா, பாட்டி,கொழுந்தியா வருகைகளுக்குத் தோரணம், வளைவுகள் அமைப்பது ஒரு புறம் . பொது மக்களும் , வீட்டில் உள்ளோர் சடங்கானது முதல் சாவு வரை அனைத்து சுப,அசுப காரியங்களுக்கும் பந்தல் (தெருவை அடைத்து ) போடுவது என குடிமகனாக இருப்பதற்கான உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறார்கள்.இது போக கோவில் கும்பாபிஷேகம், அன்னதானம் (நடுத் தெருவில் பந்தல் போட்டு டைனிங் ஹாலாக்கி விடுவார்கள்) இன்னிசைக் கச்சேரி,நடன நிகழ்ச்சிகள் (கடவுளுக்கு கூட ரெகார்ட் டான்சுதான் பிடிக்கும் போல) மேடை அமைத்தல் என பக்தியின் பெயரால் சாலைகள் தோண்டப்படும்.இதையெல்லாம் ஏனென்று யாரும் கேட்க முடியாது. கேட்டால் ஒழுங்காகத் திரும்பி வர முடியாது என்பதால் சகித்துக் கொண்டு ஓடுகிறது .அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் புலம்ப மாட்டேன் . ஏனென்றால் தப்பித் தவறி அவர்கள் சாலை அமைத்துக் கொடுத்தாலும் நாமதான் ஒழுங்கா வெச்சுக்க மாட்டமே!! .
********
மதுரையின் மற்றொரு பாரம்பரியம் சகலவிதமான விசேஷங்களுக்கும் இரண்டு ஆள் உயரத்திற்கு ஸ்பீக்கர் வைத்து நான்கு தெருவுக்குக் கேட்கும்படி `நேத்து ராத்திரி யம்மா' என்று பாட்டைப் போட்டு கல்யாணம் மற்றும் வீட்டு விசேஷங்கள்,கோவில் திருவிழாக்கள் நடத்துவது.நான் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள கோவிலில் போன மாதம் திருவிழா , விடிய விடிய பாட்டும் கச்சேரியும் மூன்று நாளைக்கு.உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நடுராத்திரியில், `நான் அல்லி கொல்ல,அவல் பல்லி கொல்ல சுகம் மெல்ல மெல்லவே தெரியும்' என்று நம்மை மெல்லக் கொல்வார்கள்.எனக்கு முதல் முறையாக என் பாட்டியையும் ,அம்மாவையும் பார்க்கப் பொறாமையாக இருந்தது.ஏனென்றால் இருவருக்குமே காது கேட்காது.

**************
மதுரையின் மற்றுமொரு பெருமை விரையும் வாகனங்கள்.மற்ற ஊர்க்காரர்கள் போலவே நாங்களும் சொல்லிக் கொள்ளலாம், மதுரேல வண்டி ஓட்டிட்டா எங்கயும் ஓட்டிடலாம் என்று .அது கிட்டத்தட்ட நிஜம்.ஏனென்றால் சாலைவிதிகளை மதிப்பவர்கள் சற்றே குறைவு. ஆறுதலான விஷயம் என்னவென்றால் போன வருடத்தில் விபத்தின் மூலம் ஏற்படுகிற உயிரிழப்புகள், அதற்கு முந்தைய வருடத்தை விடக் குறைந்துள்ளதாம். அதற்கு நன்றி தெரிவித்து(!!!!) ஒரு பெரிய அறிவிப்புப் பலகை தேவர் சிலை அருகே நிறுவப்பட்டுள்ளது.(உபயம்-போக்குவரத்துத் துறை).

************
லேட்டஸ்ட்டாக மதுரையின் தொந்தரவுகளில் இடம் பிடித்திருப்பது சினிமா படப்பிடிப்புகள். அதுவும் வைகை ஆற்றின் கீழ்ப் பாலங்களில் என்ன இருக்கிறதோ தெரியவில்லை ,தவறாமல் படப்பிடிப்புகள் எல்லாம் அங்கேயேதான் நடக்கிறது. அவர்களால் தொந்தரவு ஏதும் இல்லை .ஏனென்றால் முடிந்தவரை பொதுமக்களுக்கு இடையூறில்லாமல் தங்கள் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.தொந்தரவு என்னவென்றால் வேலையை விட்டு விட்டு அதை வேடிக்கை பார்க்க கூடும் கூட்டம்.பாலத்தின் கீழே மட்டுமல்ல மேலேயும்.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மைல் கணக்கில் நீளும்.
**************
மதுரையில் என்னைக் கவர்ந்த மற்றுமொரு விஷயம் போஸ்டர்கள்.மற்ற ஊர்க்காரர்களால் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குப் போஸ்டர்கள். அசந்து மறந்து ஒரே இடத்தில் பத்து நிமிடம் நின்றால் நம் முதுகிலும் ஒட்டி விடுவார்கள் போல. எப்புடித்தான் இவ்வளவு வேகமா போஸ்டர் அடிப்பானுவளோ தெரீல.திருமணம் முதல் சடங்கு வரை ,வருவது முதல் போவது வரை அனைத்தும் போஸ்டர் மயம்.சுவாரசியமான் போஸ்டர்களை வைத்து ஒரு தனி இடுகையே போடலாம். காமிரா உள்ள ஆளுக செய்ங்கப்பா.என்னதான் இருந்தாலும் கானா பானா சொல்லுவதைப் போல ,`மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே...'
&&&&&&&&
கவிஞர் ச.முத்துவேல் .தனியாக அறிமுகம் தேவையில்லை. அவரின் வலைப் பக்கம் இங்கே.


என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது


நிலவு என்றதும் மனதிற்குள்
வட்டம் வரைபவரா நீங்கள்?
என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது
மரம் என்றதும் வேரை மறந்துவிட்டுச்
சிந்திப்பவரா நீங்கள்?
என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது
குழந்தையின் அழுகையை
இசையென்று ஒத்துக்கொள்வதில்லையோ நீங்கள் !
எனில்
என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது
நானா?
ஊமை
குருடு
முடம்
பைத்தியம்
செவிடு
அபூரணம்
அலி
......
நீ உன்னை ‘நான்’ என்று சொல்வதைப்போலவே
நானும் என்னை ‘நான்’ என்றே சொல்கிறேன்
மேலேயுள்ள பட்டியல் உங்களுடையது
எடுத்துச்செல்லுங்கள்.48 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

மதுர ஷ்பெஷலான்னே? வைகையைப் பத்தி எழுதாம விட்டுட்டீங்களே..

ஸ்ரீ said...

அடுத்து எழுதிட்டாப் போச்சு.நன்றி கார்த்தி.

க.பாலாசி said...

//அம்மாவையும் பார்க்கப் பொறாமையாக இருந்தது.ஏனென்றால் இருவருக்குமே காது கேட்காது.//

குடுத்து வச்சவங்கதான்.

மதுரையில இவ்வளவு தொந்தரவுகள் இருக்கா... நான் ஒண்ணுதான்னு நெனச்சேன். ரொம்ப கஷ்டம்தான் இல்ல.....

rajan RADHAMANALAN said...

வணக்கம் தலைவா ! பாலோ பண்ணனும்னு கேட்டீங்க இல்ல !

ஏற்பாடு பண்ணிட்டேன் http://allinall2010.blogspot.com/ வாங்க தல !

அகல்விளக்கு said...

Madurai-la ivvalavu pirachanai irukka thala...??

வாசிக்க மட்டும் said...

எங்க அஞ்சா நெஞ்சன் அண்ணன் அ பத்தி சொல்லவே இல்ல

நானும் மதுரைதான்

pappu said...

கார்த்திகை பாண்டியன் சொல்லுறது வேலிட்டான பாயிண்ட்.

இருந்தாலும் நான் மதுரைய பத்தி பில்ட் அப்பு குடுத்து வச்சிருக்க நேரத்துல நீங்க இமேஜ உடைச்சிட்டீங்களே!

ஸ்பீக்கர் போட்டா கொல வெறி வரும். வீட்ட விட்டு ஓடிப் போயிடுவேன்!

விக்னேஷ்வரி said...

எவ்வளவு இடைஞ்சல்கள் இருந்தாலும் மதுரை கிரேட் தான். I miss Madurai.

♠ ராஜு ♠ said...

ஹி..ஹி..இந்த போஸ்டர் மேட்டரெல்லாம் நாங்க எப்ப்வொ போட்டாச்சு..!
நம்மல்லாம் ஜல்லிக்கட்டுலயே சடுகுடு வெள்ளாடுறவய்ங்கண்ணே.

" உழவன் " " Uzhavan " said...

தமிழ்நாட ரெண்டா பிரிக்கப்போறாங்களாம்; அதுல ஒன்னுக்கு மதுரதான் தலைநகராம். உங்களுக்கு சந்தோசம்தான? :-)

பீர் | Peer said...

என்ன இருந்தாலும் அட.. இல்லாட்டியும்.. மதுர மதுர தான். :)

ஸ்ரீ said...

நன்றி க.பாலாசி
நன்றி ராஜன்
நன்றி அகல்
நன்றி வாசிக்க மட்டும்(பேரக் காணோம்)
நன்றி பப்பு
நன்றி விக்னேஷ்வரி
நன்றி ராஜு
நன்றி உழவன்
நன்றி பீர்

அத்திரி said...

நமக்கெல்லாம் மதுரைனா மாட்டுதாவணிதான் எத்தனை மணிக்கு அங்கு நின்றாலும் சுடச்சுட பூரி இருக்குமே......

ஸ்ரீராம். said...

மதுரையைப் பற்றி சந்தோஷமாகப் படித்தேன். போஸ்டர் பத்தி படிக்கும் போது சித்திரைத் திருவிழா சமயம் தோன்றும் (வருடம் தவறாமல்) 'விபச்சாரத் தடைச் சட்டத்தின் கீழ் கள்ளழகனைக் கைது செய்' போஸ்டர் ஞாபகம் வந்தது! கோரிப் பாளையம் கட் அவுட் லாம் இன்னும் இருக்கா...

வினோத்கெளதம் said...

தல அந்த ரோட்ல பள்ளம் தோண்டுர மேட்டர் பொதுவா எல்லா ஊர்லயும் இருக்கு..
இருந்தாலும் இந்த போஸ்டர் விஷயத்தில் மதுரக்காரங்க "அலம்பல்" கொஞ்சம் அதிகம் தான்..
இருந்தாலும் பார்க்கவேண்டும் என்று நினைக்கும் ஊர்களில் மதுரையும் ஓன்று..

kasbaby said...

மதுரக்காரங்க-னாலே ஒரு இதுதாம்ப்பு.....

கட்டபொம்மன் said...

\\எனக்கு முதல் முறையாக என் பாட்டியையும் ,அம்மாவையும் பார்க்கப் பொறாமையாக இருந்தது.ஏனென்றால் இருவருக்குமே காது கேட்காது.\\


சிரித்து விட்டேன்
நல்ல எழுத்து நடை

அன்புடன்

கட்டபொம்மன்

இளைய கவி said...

//\\எனக்கு முதல் முறையாக என் பாட்டியையும் ,அம்மாவையும் பார்க்கப் பொறாமையாக இருந்தது.ஏனென்றால் இருவருக்குமே காது கேட்காது.\\
//

சூப்பர் , மக்கா ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோ நாங்களும் தெக்கத்திகாரய்ங்கதாப்பு. நாங்க எல்லாம் எழுதுனோம்னா அது அடுத்தவன் தலைஎழுத்தாத்தான் இருக்குமப்பு, திண்டு செமிச்சுட்டு போயிருவோம்ல ( அட சண்டாளய்ங்களா பூட்டுன வீட்டுக்கு மின்னாடியா சவுண்ட விட்டுகிட்டு திரிஞ்சோம் ?)

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

மதுரை - ஆதங்கம் புரிகிற்டஹு - பொதுவாகவே இத்தனையும் எல்லா ஊர்களிலும் துவங்கி விட்டது - சீக்கிரம் மறையாது - சுழற்சி முறையில் சிறிது காலம் ப்டிக்கும் -பின் வேறு ஒன்று வரும். அவ்வளவுதான். இத்தனையும் சொல்லும் நாம் - இதனைச் செய்ய மாட்டோம் என உறுதி கொடுக்க இயலுமா - சிந்திப்போம்.

நல்ல சிந்தனை ஸ்ரீ - நல்வாழ்த்துகள்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இதெல்லாம் போதாதென்று அண்ணன், அம்மா, அய்யா,அப்பா, தாத்தா, பாட்டி,கொழுந்தியா வருகைகளுக்குத் தோரணம், வளைவுகள் அமைப்பது ஒரு புறம்//
ஸ் மெதுவா சொல்லுங்க‌ ச‌கா "அண்ன‌ணுக்கு" கேட்ற‌ப் போகுது

ஸ்ரீ said...

நன்றி அத்திரி.இன்னமும் கிடைக்கிறது.மாட்டுத்தாவணி மட்டுமல்ல மதுரையில் எந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்த நேரத்தில் போனாலும் உங்களுக்கு சாப்பாடு கிடைக்கும்.

ஸ்ரீ said...

நன்றி ஸ்ரீராம். கோரிப்பாளையம் அருகில் இப்போது முன் அளவுக்கு கட் அவுட்டெல்லாம் கிடையாது.

ஸ்ரீ said...

நன்றி வினோத் கெளதம்.கண்டிப்பா வாங்க.

ஸ்ரீ said...

நன்றி kasbaby.ஒரு சந்தோஷம்தான் மதுரைக்காரன்னு சொல்லிகிறதில.உங்களுக்கும் இருக்குமில்ல உங்க ஊரப் பத்தி.

ஸ்ரீ said...

நன்றி கட்டபொம்மன்.

ஸ்ரீ said...

நன்றி இளைய கவி.இதுக்குப் பேரு பின்னூட்டமாயா? மெரட்டுற மாதிரி இருக்கு.

ஸ்ரீ said...

நன்றி சீனா அய்யா.

ஸ்ரீ said...

நன்றி கரிசல்காரன்.நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான்.எதுக்கெல்லாம் பயப்பட வேண்டியதாயிருக்கு.

வால்பையன் said...

//முதல் முறையாக என் பாட்டியையும் ,அம்மாவையும் பார்க்கப் பொறாமையாக இருந்தது.ஏனென்றால் இருவருக்குமே காது கேட்காது.//

எதுக்கு மச்சி அந்த கவலை!
ஈரோடு வர்றியல, காதுல ஈயத்தை காச்சி ஊத்திடலாம்!

வால்பையன் said...

//மதுரையில் என்னைக் கவர்ந்த மற்றுமொரு விஷயம் போஸ்டர்கள்.//

சென்னைக்கு அடுத்து மதுரையில் தான் தியேட்டர்கள் அதிகம்!

வால்பையன் said...

க்ளாஸான கவிதை!

நான் பைத்தியம் பட்டத்தை எடுத்து கொள்கிறேன்! ஏனென்றால் அது எனக்கு சொந்தமானது தான்!

RAMYA said...

மதுரை பற்றி எழுதி இருக்கீங்க. எனக்கும் அந்த ஊரு ரொம்ப பிடிக்கும். என்னென்றால் எனது சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் அங்கேதானே இருக்கிறீர்கள்:)

RAMYA said...

//
இதெல்லாம் போதாதென்று அண்ணன், அம்மா, அய்யா,அப்பா, தாத்தா, பாட்டி,கொழுந்தியா வருகைகளுக்குத் தோரணம், வளைவுகள் அமைப்பது ஒரு புறம்
//

இது ரொம்ப கொடுமை ஸ்ரீ. இது போல் செய்வது அநியாயம்!

ஸ்ரீ said...

நன்றி வால் ,வேற எதையாவது காச்சி வாயில ஊத்திக்கிட்டாலும் பிரயோஜனம்.

ஸ்ரீ said...

நன்றி ரம்யாக்கா.

தியாவின் பேனா said...

அருமை

பா.ராஜாராம் said...

என்ன ஸ்ரீ நீங்க?

மதுரையில் எவ்வளவோ நல்லது இருக்கு.அதை விட்டு..

போங்க உங்களோடு பேச்சு கா.எங்கு இல்லை ஸ்ரீ,வீடு தொடங்கி நாடு வரையிலான நம் குறைகள்.நம் இடத்தை நாம் கொண்டாடவிட்டால் யார் கொண்டாடுவது?

வெளியில் இருந்து வாசிக்கிற போது மிக வருத்தமாய் இருக்கு ஸ்ரீ.என்னவோ,நம் மனிதர்களை குறை சொன்னது போல்.

எப்படியோ,எதையும் உணர்ந்து செய்யவேணும்.உணர்த்தலாகாது..

ஸ்ரீ said...

தலைவரே எது எப்படியிருந்தாலும் மதுரை என் ஊர் என்று பெருமைப்படுகிறேன் என்று எழுதியிருக்கிறேன் கடைசியில். இருந்தாலும் இதெல்லாம் மாறி என்னுடைய ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற என்னுடைய ஆதங்கம்தான் இந்த இடுகையின் காரணம்.என்னதான் சொன்னாலும் சாலையை சொந்த விஷயங்களுக்காகப் பாழ் பண்ணுவதையும் ,மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்து விழாக்கள் நடத்துவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்.இது மாறி விட்டால் அப்புறம் எங்களை பிடிக்க முடியாது.மதுரையின் சிறப்புகள் பற்றி ,மற்றும் அநேகம் பேருக்குத் தெரியாத தகவல்களோடு ரெடி ஆயிட்டிருக்கு.கூடிய சீக்கிரம் படிப்பீங்க.கருத்துக்கு மிக்க நன்றி.

பா.ராஜாராம் said...

அப்படியா ஸ்ரீ?

ரொம்ப சந்தோசம்.அதையும் நீங்கள்தான் செய்யவேணும்.அப்போதான் ரொம்ப அழகாய் இருக்கும்.குழந்தையை அடித்துவிட்டு,வெகு நாளாக அவன் கேட்டு கொண்டிருந்த டெனிகாயிட் பால் வாங்கிட்டு வருகிற அப்பா போல...

தனிமெயில் விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீ.கோபமில்லை.கலந்து கொண்டேன் அவ்வளவே.புரிவீர்கள் என நம்பிக்கை இருக்கு.

ஊர்சுற்றி said...

மதுரைன்னாலே எனக்கு ஜிகர்தண்டாவும் அழகர் கோவிலும் நண்பனின் வீடும்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மதுரையின் நாட்கள் சுவாரசியமானவை. தங்கள் இடுகை இன்னும் பல தகவல்களைத் தந்திருக்கிறது.

கே.ரவிஷங்கர் said...

நல்ல பதிவு.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஸ்ரீ,மிக அழகான பதிவு நண்பா, மதுரைகாரர் என்பதால் அடிக்கடி படிப்பேன்,பினூட்டியதில்லை.
என் மதுரையை பற்றி நானே எழுதியது போல உணர்ந்தேன்,இவை இல்லாத மதுரையை யார் ரசிப்பார்?
என் தூங்கா நகரம் இப்படியே இருக்கட்டும்.

ஊருக்கு வந்து ஐந்து வருடத்துக்கும் மேலாகிறது. முடிந்தால் நேதாஜி ரோடு அருகே கீழ ஹனுமந்தராயன் கோவில் தெருவில் என் மாமாவை சென்று பார்க்கவும், சீனிவாசன்,நியூஸ்டைல் டெய்லர் என்று கடை வைத்துள்ளார்.பழக இனியவர்.
மதுரை வரும்போது கண்டிப்பாக சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துகள்..

rajan RADHAMANALAN said...

எனது வலைப் பூவானது
கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்

Anonymous said...

சொர்க்க‌மே என்றாலும் அது ந‌ம்மூர‌ப் போல‌ வ‌ருமா?

எவ்ளோ தொல்லை இருந்தாலும் திட்டிக்கிட்டே(ம‌துரையை) ஐ லைக் ம‌துரைனு தான் சொல்லுவேன்.

தியாவின் பேனா said...

அருமை
நல்ல நடை
நல்ல பதிவு
வாழ்த்துகள்

குமரை நிலாவன் said...

அருமை

goma said...

மதுரையில் நான் மறக்க முடியாதது.
மாசி வீதிகளின் ஜே ஜே கூட்டம்.
நாகப்பட்டினம் நெய் மிட்டாய்கடை,பத்மா க்ளினிக்,ரிக்‌ஷா சவாரி
இவையெல்லாம் [என் 10-12 வயது நினைவுச்சிற்பங்கள்]