Tuesday, December 15, 2009

மதுரக்காரன்னு சொல்லிக்கிறதில ........

மதுரையில் என்றென்றைக்கும் இருக்கப் போகிற பிரச்சினைகளில் ஒன்று குண்டும் குழியுமான சாலைகள். எந்த ஒரு சாலையையும் நீங்கள் நல்ல நிலைமையில் பார்க்கவே முடியாது. கொஞ்ச தூரம் பயணம் செய்தாலே உங்கள் இடுப்பைப் பதம் பார்த்து விடும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம்.இந்த லட்சணத்தில் பாதாளச் சாக்கடை,குடிநீர் வாரியம்,தொலைத்தொடர்பு,மின்சார வாரியம் என ஆளாளுக்குத் தோண்டி இருக்கிற கொஞ்ச நஞ்ச சாலையையும் காணாமல் போக்கி விடுகிறார்கள். இதெல்லாம் போதாதென்று அண்ணன், அம்மா, அய்யா,அப்பா, தாத்தா, பாட்டி,கொழுந்தியா வருகைகளுக்குத் தோரணம், வளைவுகள் அமைப்பது ஒரு புறம் . பொது மக்களும் , வீட்டில் உள்ளோர் சடங்கானது முதல் சாவு வரை அனைத்து சுப,அசுப காரியங்களுக்கும் பந்தல் (தெருவை அடைத்து ) போடுவது என குடிமகனாக இருப்பதற்கான உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறார்கள்.இது போக கோவில் கும்பாபிஷேகம், அன்னதானம் (நடுத் தெருவில் பந்தல் போட்டு டைனிங் ஹாலாக்கி விடுவார்கள்) இன்னிசைக் கச்சேரி,நடன நிகழ்ச்சிகள் (கடவுளுக்கு கூட ரெகார்ட் டான்சுதான் பிடிக்கும் போல) மேடை அமைத்தல் என பக்தியின் பெயரால் சாலைகள் தோண்டப்படும்.இதையெல்லாம் ஏனென்று யாரும் கேட்க முடியாது. கேட்டால் ஒழுங்காகத் திரும்பி வர முடியாது என்பதால் சகித்துக் கொண்டு ஓடுகிறது .அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் புலம்ப மாட்டேன் . ஏனென்றால் தப்பித் தவறி அவர்கள் சாலை அமைத்துக் கொடுத்தாலும் நாமதான் ஒழுங்கா வெச்சுக்க மாட்டமே!! .
********
மதுரையின் மற்றொரு பாரம்பரியம் சகலவிதமான விசேஷங்களுக்கும் இரண்டு ஆள் உயரத்திற்கு ஸ்பீக்கர் வைத்து நான்கு தெருவுக்குக் கேட்கும்படி `நேத்து ராத்திரி யம்மா' என்று பாட்டைப் போட்டு கல்யாணம் மற்றும் வீட்டு விசேஷங்கள்,கோவில் திருவிழாக்கள் நடத்துவது.நான் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள கோவிலில் போன மாதம் திருவிழா , விடிய விடிய பாட்டும் கச்சேரியும் மூன்று நாளைக்கு.உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நடுராத்திரியில், `நான் அல்லி கொல்ல,அவல் பல்லி கொல்ல சுகம் மெல்ல மெல்லவே தெரியும்' என்று நம்மை மெல்லக் கொல்வார்கள்.எனக்கு முதல் முறையாக என் பாட்டியையும் ,அம்மாவையும் பார்க்கப் பொறாமையாக இருந்தது.ஏனென்றால் இருவருக்குமே காது கேட்காது.

**************
மதுரையின் மற்றுமொரு பெருமை விரையும் வாகனங்கள்.மற்ற ஊர்க்காரர்கள் போலவே நாங்களும் சொல்லிக் கொள்ளலாம், மதுரேல வண்டி ஓட்டிட்டா எங்கயும் ஓட்டிடலாம் என்று .அது கிட்டத்தட்ட நிஜம்.ஏனென்றால் சாலைவிதிகளை மதிப்பவர்கள் சற்றே குறைவு. ஆறுதலான விஷயம் என்னவென்றால் போன வருடத்தில் விபத்தின் மூலம் ஏற்படுகிற உயிரிழப்புகள், அதற்கு முந்தைய வருடத்தை விடக் குறைந்துள்ளதாம். அதற்கு நன்றி தெரிவித்து(!!!!) ஒரு பெரிய அறிவிப்புப் பலகை தேவர் சிலை அருகே நிறுவப்பட்டுள்ளது.(உபயம்-போக்குவரத்துத் துறை).

************
லேட்டஸ்ட்டாக மதுரையின் தொந்தரவுகளில் இடம் பிடித்திருப்பது சினிமா படப்பிடிப்புகள். அதுவும் வைகை ஆற்றின் கீழ்ப் பாலங்களில் என்ன இருக்கிறதோ தெரியவில்லை ,தவறாமல் படப்பிடிப்புகள் எல்லாம் அங்கேயேதான் நடக்கிறது. அவர்களால் தொந்தரவு ஏதும் இல்லை .ஏனென்றால் முடிந்தவரை பொதுமக்களுக்கு இடையூறில்லாமல் தங்கள் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.தொந்தரவு என்னவென்றால் வேலையை விட்டு விட்டு அதை வேடிக்கை பார்க்க கூடும் கூட்டம்.பாலத்தின் கீழே மட்டுமல்ல மேலேயும்.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மைல் கணக்கில் நீளும்.
**************
மதுரையில் என்னைக் கவர்ந்த மற்றுமொரு விஷயம் போஸ்டர்கள்.மற்ற ஊர்க்காரர்களால் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குப் போஸ்டர்கள். அசந்து மறந்து ஒரே இடத்தில் பத்து நிமிடம் நின்றால் நம் முதுகிலும் ஒட்டி விடுவார்கள் போல. எப்புடித்தான் இவ்வளவு வேகமா போஸ்டர் அடிப்பானுவளோ தெரீல.திருமணம் முதல் சடங்கு வரை ,வருவது முதல் போவது வரை அனைத்தும் போஸ்டர் மயம்.சுவாரசியமான் போஸ்டர்களை வைத்து ஒரு தனி இடுகையே போடலாம். காமிரா உள்ள ஆளுக செய்ங்கப்பா.என்னதான் இருந்தாலும் கானா பானா சொல்லுவதைப் போல ,`மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே...'
&&&&&&&&
கவிஞர் ச.முத்துவேல் .தனியாக அறிமுகம் தேவையில்லை. அவரின் வலைப் பக்கம் இங்கே.


என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது


நிலவு என்றதும் மனதிற்குள்
வட்டம் வரைபவரா நீங்கள்?
என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது
மரம் என்றதும் வேரை மறந்துவிட்டுச்
சிந்திப்பவரா நீங்கள்?
என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது
குழந்தையின் அழுகையை
இசையென்று ஒத்துக்கொள்வதில்லையோ நீங்கள் !
எனில்
என்னை உங்களுக்குத் தெரிந்திருக்காது
நானா?
ஊமை
குருடு
முடம்
பைத்தியம்
செவிடு
அபூரணம்
அலி
......
நீ உன்னை ‘நான்’ என்று சொல்வதைப்போலவே
நானும் என்னை ‘நான்’ என்றே சொல்கிறேன்
மேலேயுள்ள பட்டியல் உங்களுடையது
எடுத்துச்செல்லுங்கள்.Monday, December 14, 2009

ஒரு சனிக்கிழமை மரணம்

சனிக்கிழமை மாலை வேளை என்பது எங்களைப் பொறுத்த வரையில் முக்கியமானது. எங்களுக்கு என்றால் ஜாகிர்,செல்வம் ,கணேசன் மற்றும் நான் .ஒன்றாகப் படித்தவர்கள் என்பது மடடுமல்லாது ஒன்றாக ஒரே ஏரியாவில் வளர்ந்தவர்களும் கூட.எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் எங்கள் ஜமா ஜாகிர் வீட்டு மாடியிலோ அல்லது செல்வம் வீட்டு மாடியிலோ கூடிவிடும் . சமயத்தில் நள்ளிரவு வரை பேசியே பொழுதைக் கழிப்பதும் உண்டு.

நால்வரில் முதலில் திருமணம் நடந்தது ஜாகிருக்குத்தான்,அப்புறம் செல்வம் ஆறு மாதம் முன்பு,மிச்சமிருப்பது நானும் கணேசனும். ஆளாளுக்கு ஒரு வேலையில் அமர்ந்து கொண்டு கஷ்டமில்லாமல் சம்பாதித்துக் கொண்டிருக்க செல்வம் தன் அப்பாவுக்குப் பிறகு மளிகைக் கடையில் இருந்தான்.எது தவறினாலும் சனிக்கிழமை மாலை தவறாது எங்கள் சந்திப்பு நடக்கும்,சில சமயம் பார்ட்டியோடு. ஜாகிர் குடிக்க மாட்டான் என்றாலும் ,கூட உட்கார்ந்து என்னத்தையாவது அளந்து கொண்டிருப்பான்.நேற்றும் அப்படித்தான் எல்லோரும் ஆஜர்,கணேசனைத் தவிர. இரவு வரை கூத்தடித்து விட்டு 12 மணிக்கு மேல் ஜாகிர் வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனான். ஜாகிர் வழியில் பேசிக்கொண்டிருந்த விஷயம் போதையை சுத்தமாய் இறக்கி விட்டிருந்தது.வண்டியில் வரும்போது எதேச்சையாக கேட்டேன்.

"எங்கடா கணேசன்?போன வாரமும் வரல!"

"எனக்குத் தெரியாது"என்றவன் சற்று இடைவெளி விட்டு ,"கேள்விப் படறது எதுவும் மனசுக்குப் பிடித்தமாயில்ல"என்றான் சலிப்புடன்.

"என்ன கேள்விப்பட்ட?"

"எல்லாருக்கும் தெரியும் ,உனக்குத் தெரியாதாக்கும்?"

"என்னடா எல்லாருக்குந் தெரியும் சொல்லித் தொலையேன்"என்றேன் எரிச்சலுடன்.

"ஏரியா பூராவும் ஒரே பேச்சப்பா ,மத்தவங்க சொல்றத சொல்றன் .நம்ம கணேசம் பயலுக்கும் செல்வம் பொண்டாட்டிக்கும்...."

"சீ!!! நிறுத்துடா,அசிங்கம் புடிச்சவனே.எப்படிடா இப்படிஎல்லாந் தோணுது உங்களுக்கு.'அண்ணே'ன்ற சொல்லுக்கு மாத்திப் பேசிருக்குமா அந்தப் புள்ள .எவம் பேசுனா என்னடா?நீ பேசலாமா?"என்று இரைந்தேன்.

ஜாகிர் வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரங்கட்டினான்.பேச வாயெடுத்த என்னை மறித்து, "பார்ரா, நா உங்க எல்லாருக்குமே பிரண்டுதான்,இல்லாததை யாரும் பேசப் போறதில்ல ,எனக்கும் கணேசனுக்கும் என்ன பகையா?சரி எனக்குத் தெரிஞ்சத உள்ளது உள்ளபடி சொல்றன் கேளு,இந்த விஷயம் என் காதுக்கு வந்து ஒரு மாசமிருக்கும்.மொதல்ல நானுங்கூட நம்பல,ஆனா ஒரு தடவ அவன் ஆபீசுக்குப் போனப் போட்டேன்,ஒரு காரியமாத்தான்.ஆளு இன்னிக்கு லீவுன்னாங்க.சரீன்னுட்டு சாயங்காலமா வீட்டுக்குப் போன் பண்ணி என்னடா சொன்ன காரியம் என்னவாச்சுங்க ,ஆபீசுல இன்னைக்கு வேலை ஜாஸ்திங்கறான் ,எதுக்கு இந்தப் பொய்யும் பொரட்டும்?"

"அதுக்கும் நீ சொன்னதுக்கும்....."

"சம்பந்தமிருக்கு,அன்னிக்குத்தான் செல்வம் மதுரைக்கு போனது சரக்கெடுக்க,அன்னிக்குப் பாத்து இவன் எதுக்காக வீட்லயும் ,நமக்குந் தெரியாம லீவெடுக்கணும் ?"

நான் யோசித்து ,"இல்லடா என்னால அந்தப் புள்ளைய தப்பா நெனக்க முடியல ,விட்ரு இதப்பத்தி இனிமே பேசாத" என்றேன்.

"இரு ,ஆரம்பிச்சிட்டேன்ல ! சொச்சத்தையுங் கேட்று.மொதல்ல எனக்குங் கூட உறுத்தல,ஆனா இன்னொரு நாள்,அதான் எம்மாமனாரும் மாமியாரும் வந்திருக்காங்கன்னு லீவு போட்டனே அன்னிக்குத்தான்,கறி வாங்கப் போனேன்.பாத்தா நம்ம முத்துப்பாண்டி மெகானிக் கடைல கணேசன் வண்டி நிக்கிது.என்னடா இவன் ஆபீஸ் போகலயான்னு, பாண்டிய விசாரிச்சேன்.ரிப்பேரு ஒண்ணுமில்ல ,சும்மாத்தான் வண்டி இங்க நிக்கட்டும் பாத்துக்கன்னுட்டுப் போனாருன்னான்.சரின்னு கறிய வீட்ல குடுத்துட்டு செல்வங் கடைக்குப் போனன்.அன்னிக்கும் அவன் எங்கயோ வெளியூருக்குப் போயிருக்கான். சரி இத இப்படியே உடக்கூடாதுன்னு செல்வம் வீட்டுக்குப் போனேன். பாத்தா கதவு ,ஜன்னல் எல்லாம் சாத்தியிருக்கு. கதவத் தட்டி உள்ள நுழையலாமான்னு பாத்தேன். சரி பகல் வேளை நம்மளே செல்வத்தை அசிங்கப் படுத்துன மாதிரிஆயிறக் கூடாதுன்னு விட்டுட்டேன். உண்மையாவே அன்னிக்கு செல்வத்துக்காகத்தான் உட்டேன். சாயங்காலம் கடத்தெருவுல பாத்து ,'என்னடா இன்னிக்கு லீவான்னேன்' அதுக்கு என்ன சொன்னாந் தெரியுமா? எனக்கேதுடா லீவு ,ஆபீசுல ஞாயித்துக் கிழமை உடறதே பெரிசுங்கறான். இப்ப என்ன சொல்ற" என்றபடி படபடப்பாய் பேசியதில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான் .

அதற்க்கு மேல் நான் ஏதும் பேசாமல் வீட்டுக்குள் நுழைந்தேன். தலை வலிக்க ஆரம்பித்திருந்தது.எப்போது எப்படித் தூங்கினேன் என்பது தெரியாது.காலையில் எழுந்தும் இதே யோசனையாய்இருந்தது. எங்கும் வெளியில் போகாமல் தனியே யோசித்தபடி படுத்திருந்தேன். ஜாகிர் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாகவிருக்கும்,ஒருவேளை செல்வம் ஊருக்குப் போனதும் இவன் லீவு போட்டதும் தற்செயல் நிகழ்வுகளாகக் கூட இருக்கலாம்.அதை ஜாகிர் பெரிதுபடுத்திப் பார்க்கிறான் என்று தோன்றியது.கணேசன் எதையும் சுலபத்தில் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிற ஆளில்லை."என்னண்ணா! மத்த நாள்ல இந்தப் பக்கம் தலகாட்ட மாட்டேன்றீங்களே "என்று சிரித்தபடி வரவேற்கும் அந்தப் பெண்ணையும் தவறாக நினைக்க என்னால் முடியவில்லை. ஊருக்கென்ன?என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள்.ஒருவேளை இந்தப் பேச்சுகள் எல்லாம் கணேசனுக்கும் தெரிந்ததால்தான் ஒதுங்கி விட்டானோ என்னவோ?.

"என்னம்மா? இருக்கானா?"என்று ஜாகிர் அம்மாவை விசாரிக்கும் குரல் கீழே கேட்டது.சிறிது நேரத்தில் மேலே ஏறி வந்து சுவாதீனமாக சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு கட்டிலில் காலை வைத்தபடி உட்கார்ந்தான்.

"என்னடா! பலமான யோசனை,நேத்து நாஞ் சொன்னதப்பத்தியா?

"சிகரெட்டு வாங்கிட்டு வந்தியா?"

"கேப்பன்னு தெரியும்.இந்தா" என்றபடி பாக்கெட்டை தூக்கி மேலே எறிந்தான்.எழுந்து உட்கார்ந்து பற்றவைத்துக் கொண்டேன்.

"என்ன பலமான யோசனை நேத்து நான் சொன்னதப் பத்தியா?"

"எப்படி யோசிச்சாலும் நம்ப முடியலடா,அப்டி இருக்காதுன்னுதான் தோணுது"

"சரி,நம்பவேண்டாம்! உடு . நானும் இதப் பத்தி இனிமே பேசறதாயில்ல.ஆனா ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கறேன் ,முன்ன மாதிரி கணேசன் இப்ப வரானா?நம்பகிட்டதான் பேசுறானா? ஏன்? குத்தமுள்ள மனசு.அதான். அதுமட்டுமில்ல ,செல்வத்துக்கும் ஏதோ குறையிருக்குன்னு நெனக்கறேன்.ஏதேதோ லேகியமெல்லாம் வாங்கி வெச்சுருக்கான்.என்னன்னு கேட்டா வயிறு சரியில்லன்னு மழுப்புறான்.அவனுக்கும் லேசுபாசா விஷயம் தெரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.கணேசனைப் பத்திக் கேக்குறானா பாத்தியா?" என்றுமுடித்தான். நான் பதிலேதும் சொல்லாமல் புகைத்துக் கொண்டிருந்தேன்.

சில வாரங்களுக்கப்புறம் ,இந்த விஷயங்களை நான் மெதுவாக மறக்கத் தொடங்கியிருந்தேன்.ஆனால் சனிக் கிழமைகள் முன்போல் அல்லாது உற்சாகம் குறையத்தொடங்கியிருந்தது.சில நாட்கள் செல்வம் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து நானும் ஜாகிரும் மட்டும் தனித்திருக்கத் தொடங்கினோம்.கணேசனோ ,அல்லது செல்வமோ இதைப் பற்றி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சமயத்தில் செல்வத்தை அவனது கடையில் சந்தித்தாலும் பேச்சுகள் முன்போல் அல்லாது சம்பிரதாய நலம் விசாரிப்புகளாக மாறத் தொடங்கியிருந்தது. அம்மாவைப் பற்றி விசாரிப்பான்,அடுத்ததாக 'எப்போ கல்யாணம் பண்ணபோற ?' அதற்க்கு மேல் பேச எதுவும் இல்லாதது போல இருவருக்குமிடையே திரை போட்டது போலானது. முன்னைக்கு இப்போது மெலிந்து போய் விட்டான் என்று எனக்குத் தோன்றியது.நாளடைவில் அவன் கடைக்குச் செல்வதும் தானாகக் குறைந்து விட்டது.ஆனால் ஜாகிர் சொன்ன விஷயத்தைப் பற்றி நான் விசாரிக்கவே இல்லை.அப்படி இருக்கவே இருக்காது என்று நம்பினேன்,ஒரு வார்த்தை நல்ல நண்பர்களைப் பிரித்து விட்டதில் வருத்தமாகத்தான் இருந்தது.

ஒரு சனிக்கிழமை திடீரென்று ஜாகிர் ஆபீசுக்குப் போன் பண்ணினான்.

"செல்வத்தை எப்போ பார்த்த "

"ஏன் ரெண்டு மூணு வாரமிருக்கும்"

"செத்துப் போயிட்டான்,வெசங் குடிச்சுட்டானாம்"

"எப்போடா?யாரு சொன்னது?"

"இப்பதான் காலையில ,கணேசந்தான் போன் பண்ணது.நீ லீவு சொல்லிட்டு வா. நா முன்னால போறேன்."

தெருவுக்குள் நுழையும்போதே உடல் பலமற்றுப் போனது போல துவண்டது.வீட்டினுள் நுழைந்தேன். கணேசன்தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். செல்வம் உறவினர்கள்,அவன் மனைவி உறவினர்கள் என 20 க்கும் குறைவான பேர்களே இருந்தனர்.அவன் மனைவி தலைமாட்டில் அமர்ந்தபடி அவ்வப்போது கண்ணைத் துடைத்தபடியிருந்தாள். நான் வருவதற்காகவே காத்திருந்தது போல் உடனே உடலை எடுத்து விட்டனர்.

"காட்டுக்குப் போவோம்"என்றான் ஜாகிர்.

கிளம்புமுன் கணேசன் பின்தங்கி செல்வத்தின் மனைவியிடம் ஏதோ மெதுவாகச் சொன்னான்.அவள் உதட்டைக் கடித்தபடி தலையாட்டிக் கொண்டிருந்தாள்.கணேசன் திரும்பி வரும்போதும் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் லேசாகச் சிரித்தது போலிருந்தது.