Monday, November 16, 2009

புனிதப்பயணம் (சற்றே பெரிய சிறுகதை)

திருமங்கலத்திலிருந்து பஸ் பிடித்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும்போது ஆறு மணியாகியிருந்தது.இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் புறப்பட்டிருக்கலாம்தான், எட்டரை மணி ரயிலுக்கு ஆறு மணிக்கே வந்தாகிவிட்டது.சிதம்பரம் ,"இருந்துவிட்டுப் போகலாமே ,இன்னும் டயமிருக்கு"என்றுதான் சொன்னான். கல்யாணம் முடிந்து விட்டது,அவன் உறவினர்கள் எல்லோரும் மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டாகி விட்டது.இதில் நான் மட்டும் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்க முடியாதென்று தோன்றியதால்,"மதுரேல ஒரு சின்ன வேல இருக்கு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.உண்மையில் வேலை எதுவும் இல்லை.இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இருந்த பொழுதை எப்படிக் கழிப்பது என்று யோசித்தவாறே ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன்.

ஸ்டேஷனுக்குள் போவோரும் வருவோருமாக ஏகத்துக்குக் கூட்டமிருந்தது.இவ்வளவு மக்களும் எங்கே போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று மலைப்பாய் இருந்தது .மதுரை ஸ்டேஷன் எப்போதும் இப்பிடித்தான் இருக்கும்.ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள சிறு கிராமத்தில் இருக்கும் எனக்கு இவ்வளவு கூட்டம் ஏதேனும் திருவிழாவில் பார்த்தால்தான் உண்டு.டிக்கெட்டைக் காண்பித்து பிளாட்பாரத்தைக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.பிளாட்பாரமும் நிரம்பி வழிந்து கொண்டுதானிருந்தது.குறுக்கும் நெடுக்குமாய் நடப்போரும் ,சுமைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுபவர்களும்,டிராலிகளைத் தள்ளிக் கொண்டு செல்பவர்களும் , உணவு விற்பவர்களும் என்று திருவிழாப் போலத்தான் இருந்தது.தேடிப்பிடித்து காலியாய்க் கிடந்த ஒரு சேரில் உட்கார்ந்தேன்.

வலப்பக்கம் சற்றுத் தள்ளி ஒரு குடும்பம் பிளாட்பாரத்தையே உணவு உண்ணும் இடமாகவும் ,படுத்துறங்கும் இடமாகவும் மாற்றியிருந்தது.இரண்டு சிறுவர்கள்,அவர்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்,ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். என் தலைக்கு மேலே ஒரு மின்விசிறி ஓடிக்கொண்டு இருந்தாலும் வெப்பம் தாக்கியபடியிருந்தது. இந்நேரம் ஊராக இருந்திருந்தால் கடற்காற்று வெப்பத்தைக் காணாது போக்கியிருக்கும்.இடப்பக்கம் ஒரு கேரளக் குடும்பம் உட்கார்ந்திருந்தது.ஒரு இளவயதுப் பெண் மற்றும் ஆணும் பெண்ணுமாக அறுவர்.அந்தப் பெண் மடியில் இருந்த குழந்தை சிணுங்கியபடி அவளின் புடவையை இழுத்துக் கொண்டிருந்தது,அவள் ஒரு கையால் செல்போன் பேசியபடி இன்னொரு கையால் குழந்தையின் கையை விலக்கியபடி இருந்தாள்.அருகில் இருந்த முதிர்ந்த பெண்மணி ,மாமியாராக இருக்கலாம் ,அவளை சிடுசிடுவென ஏதோ சொன்னதும் ,போனை அவளிடம் கொடுத்துவிட்டு ரவிக்கையின் ஊக்கைக் கழற்றியபடி குழந்தையை அதட்டினாள்.குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டதும் மறுபடி செல்போனை வாங்கிப் பேசத் துவங்கினாள்.என் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்கிற பாவனையில் செல்போனை நோண்டுவதும், அவளைத் திருட்டுப் பார்வை பார்ப்பதுமாக இருந்தான்.

இரைச்சலும் கூச்சலுமாக இருந்தாலும் ஏனோ வேடிக்கை பார்ப்பதில் சலிப்பும்,பொழுதைக் கழிப்பது சுலபமல்ல என்றும் தோன்றியது.உட்கார்ந்து கொண்டிருப்பதை விட சற்றே நடக்கலாம் என்று எழுந்து மெதுவாக பிளாட்பாரத்தின் மறு முனைக்கு நடக்கத் துவங்கினேன். கடைசிக்கு வந்ததும் கூட்டம் குறைந்து காற்று வரத்துவங்கியது.வெட்டவெளியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டேன்.

சற்றுநேரத்தில் அருகில் இருவர் வந்து தரையில் அமர்ந்து கொண்டனர்.வடக்குப் பக்கமிருந்து வந்தவர்கள் என்பது அவர்களின் உடையில் இருந்து தெரிந்தது.அழுக்குப் படிந்த உடையுடன் ஒரு இளைஞனும்,சற்றே வயது கூடிய இன்னொருவரும் .நான் அவர்களைக் கவனிப்பது தெரிந்ததும் அந்த முதியவர் அருகில் வந்து இங்கே எந்த ஊருக்குச் செல்ல ரயில் வரப்போகிறது என்று கேட்டார்.நான் ஊரைச் சொன்னதும் ,"வழியில் ஏதேனும் புண்ணியக்ஷேத்திரங்கள் உண்டா?" என்றார்.நான் சிரித்தபடி,"தமிழகத்தில் அதற்குக் குறைவேதுமில்லை,நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ?" என்றேன்.
"அநேக இடங்களைப் பார்த்தாகி விட்டது ,ராமேசுவரம் புண்ணியக்ஷேத்திரம் என்றார்கள்,இந்த ரயில் அங்கு செல்லக் கூடியதா?" என்றார்.ஆமாம் என்றதும் கூட இருந்தவனை டிக்கெட் எடுத்து வருமாறு சொல்லி விட்டு அருகில் அமர்ந்து கொண்டு ,பல நாள் பழகியவர் போல இயல்பாகப் பேசஆரம்பித்தார்.
பேச்சினூடே அவர் ஒரிசாவில் இருந்து வருவதாகவும் கூட இருப்பது இளைய மகனென்றும் தெரிவித்தார்.தான் ஒரு விவசாயி என்பதையும் குறிப்பிட்டார்.எனக்கும் பொழுது போக்க ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்."உங்கள் மூத்த மகனுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?அவர் உங்களுடன் வரவில்லையா?" என்று கேட்டதும் அவர் முகம் கருத்து விட்டது."அவனைப் பற்றி ஏதும் கேட்காதீர்கள், இளையவன் வெகு நேரமாய் வரிசையில் நிற்கிறான் ,பார்த்து வருகிறேன் "என்று நகர்ந்தார்.
சிறிது நேரத்தில் அவருடைய மகன் அங்கு வந்து சேர்ந்தான்.அவர் வரிசையில் நிற்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

தொடரும் ......


20 comments:

புலவன் புலிகேசி said...

மூத்த மகன் என்ன தவறு செய்தானோ? இது சிறுகதை என்பதை விட வாழ்வியல் என்பது தான் என் கருத்து..நல்ல பகிர்வு..

வானம்பாடிகள் said...

நம்மைச் சுற்றி அவதானித்தால் பல கதைகள் இருப்பது தெரியும். நன்றாயிருக்கிறது ஸ்ரீ.

பாலகுமார் said...

சுற்றுப்புறத்தை நன்கு கவனிக்கிறீர்கள் போல...

நேசமித்ரன் said...

நல்ல கவனிக்கும் திறன் .ஓட்டமும் தெளிவு ..ஆனால் ...

நல்ல முயற்சி தலைவரே!

ஸ்ரீ said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. யாருமே ஒரு விஷயத்தைக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.கதை பாதிதான் டைப் செய்துள்ளேன்.தொடரும் (என்ன ஒரு வில்லத்தனம்) என்று போடமறந்துவிட்டேன்.

♠ ராஜு ♠ said...

ரைட்டு...
நெக்ஸ்ட்டு.

இராகவன் நைஜிரியா said...

கார்த்தால இருந்து 3 மணி நேரமா மண்டைய குடைஞ்சு கிட்டு இருந்தது... என்னடா இது கதை அப்படியே நிக்குது... நமக்குதான் மண்டையில மூளை கிடையாதே... சில பின்னூட்டங்களைப் பார்த்துட்டு பின்னூட்டம் போடலாம் அப்படின்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்.

வில்லத்தனம் இப்பத்தானே புரியுது.

ரயில்வே ஸ்டேஷனை நன்கு கவனித்து இருக்கின்றீர்கள் என்று இப்போது நல்லா புரியுதுங்க.

pappu said...

மதுரை ஜங்ஷனுக்கு போனா இந்தியாவின் அனைத்து மாநிலக் காரர்களையும் சைட் அடித்துவிடலாம்.

என்னமோ சொல்ல வர்றீங்க. அடுத்த பாகத்த பாத்துட்டு கமெண்டுவோம்.

ஈரோடு கதிர் said...

அருமை ஸ்ரீ...

பா.ராஜாராம் said...

அருமையான,அலுப்பேற்படுத்தாத நடை ஸ்ரீ.தொடரும் போடும் போது சற்றே பெரிய என்பதெல்லாம் தெரியாது.இப்ப போட்டிருக்கும் அளவு போடும்போது மலைப்பு தெரியாது மக்கா.பிராக்கெட் போட்டு சற்றே பெரிய என்று நீங்களே சொன்னால் வருகிற ஆளுக்கு மலைப்பாய் இருக்கும்.முடிந்தால்,பிராக்கெட் மேட்டரை எடுத்துருங்க.நடை தூக்கி நிறுத்துகிறது.பெரிசு சிறுசு குறித்து யோசிக்காமல் எழுதுங்க ஸ்ரீ.நல்ல தொடக்கம்..

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

புகைவண்டி நிலையத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துமே கதையாய வந்து விட்டன. கன்ணும் காதும் திறந்து வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அலைந்தால் கதை வந்துவிடுகிரதே - நல்வாழ்த்துகள் ஸ்ரீ

தொடரும்

வால்பையன் said...

மதுரை ரயில்வே ஸ்டேஷன் கண்ணு முன்னாடி நிக்குது!

ஸ்ரீ said...

மிக்க நன்றி நண்பர்களே.

கார்த்திகைப் பாண்டியன் said...

விவரணைகள் அருமை என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.. :-))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

சிறுகதைக்கு தொடரும் போடும் காலத்தில் தொடரும் போடாமலேயே தொடர்கதை எழுதிய பின் நவீனத்துவ வாதி "அண்ணன் ஸ்ரீதர்.."..... வாழ்க.. வாழ்க

நேய விருப்பம் said...

என்ன ஒரு வில்லத்தனம்?

அதான பார்த்தேன் என்னடா என்னமோ குறையுதேன்னு ?

ஒரு நாவலுக்கு உரிய ஓபெனிங் குடுத்துட்டு ஹைக்கூ மாதிரி முடிச்சிருக்காரே தலைவர்ன்னு

தொடருஙகள் காத்திருக்கிறேன்

:)

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா

குமரை நிலாவன் said...

அருமை

தியாவின் பேனா said...

அருமையான நல்ல ஆக்கம்

ஸ்ரீராம். said...

நல்ல நடை. வர்ணனைகள் நன்றாக வந்துள்ளன. இன்னும் விஷயத்துக்கு வரவில்லை போல..