Wednesday, November 25, 2009

புனிதப்பயணம் -2

அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுக்கத் துவங்கினேன்.
"ஏன் உன் தந்தை மூத்தவனைப் பற்றிப் பேசியதும் எழுந்து சென்று விட்டார்?நான் ஏதேனும் தவறாகப் பேசிவிட்டேனா?"
"அதெல்லாமில்லை அவன் நடந்து கொண்ட விதம் அப்படி,அவனால் அப்பாவுக்கு ஊரில் தலைகுனிவு ,அவன் பேச்சையே எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்"
"அப்படி என்னதான் நடந்தது,நான் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்றால் வேண்டாம்" என்று சொன்னாலும் உள்ளுக்குள் விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருந்தது.
சிறிது தயங்கிப் பின் தொடர்ந்தான்"நான் பிறந்தவுடன் எங்கள் அம்மா இறந்து போனார்.எங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தது அப்பாதான் ,அவர் கஷ்டங்களை ஒருபோதும் எங்களுக்குக் காண்பித்ததே இல்லை,அப்படித்தான் எங்களை வளர்த்தார்.மறுமணம் என்பதைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை.எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது,அண்ணனுக்கு கல்யாணம் செய்து வைக்க அப்பா விரும்பியபோது,எங்கள் ஊரின் முக்கியாவினால் (ஊர்த் தலைவர்) ஆரம்பித்தது தலைவலி,தன் உறவுக்காரப் பெண் ஒருவளை ,மிகவும் கஷ்டப்படுகிற குடும்பம்,அப்பாவுக்கு இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து வைப்பதாகச் சொல்லி அவர் மனதை மாற்றிவிட்டார்.
"அந்தப் பெண்ணை உன் அண்ணனுக்குக் கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே?ஏன் அவர்கள் அதை யோசிக்கவில்லை?" என்றேன்.
"அதில்தான் முக்கியாவின் சூது இருந்தது. எங்களுடைய நிலங்களில் பாதிக்கு மேல் அவரிடம்தான் குத்தகைக்கு இருந்தன ,இருவரும் நண்பர்கள் ,எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனவுடன் நாங்கள் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவர் மனதை மாற்றினார்.அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டவுடன் முக்கியா கவனித்துக் கொண்டிருந்த நிலங்களை அந்தப் பெண்ணின் பேரில் எழுதிவைத்து விடும்படியும் இதனால் கடைசிக் காலம் வரை பிள்ளைகள் கையை எதிர்பார்க்காமல் அவர் வாழலாம் என்றும் சொல்லியிருக்கிறார்" "இது என்ன முட்டாள்தனம்" என்றேன் நான். "முட்டாள்தனம்தான் ,ஆனால் அவருக்குள் திருமணத்திற்கான விருப்பம் இருந்திருக்க வேண்டும்,இல்லை என்றால் இந்த முட்டாள்தனத்திற்கு தலையாட்டியிருக்க மாட்டார் ,அதுவும் தன் மூத்த மகனைவிட இரண்டு வயது சிறியபெண்ணை மணப்பதற்கு"என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தான்.
"அப்புறம் என்ன நடந்தது?"
"அப்பாவின் திருமணம் நடந்தது,அண்ணன் கலந்து கொள்ளவில்லை .இருவருக்கும் பேச்சு வார்த்தை கூட குறைந்து போயிருந்தது.சில நாட்களுக்குப் பின் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிபட்ட அண்ணன் வீட்டில் ஓய்வெடுக்கும்படி ஆயிற்று.அதற்க்கப்புறம் ஒருநாள் இரண்டு பேரையும் காணவில்லை".
நான் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.
அவனே தொடர்ந்து"இந்த சம்பவத்தினால் அப்பாவால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ஊர்க்காரர்களின் கேலியை அவரால் தாங்கமுடியவில்லைதான்"
"யாரால்தான் இதைத் தாங்கிக் கொள்ள முடியும்?பாவம் உன் அப்பா! அதனால்தான் இப்படி கோவில் கோவிலாகத் திரிகிறார் என்று நினைக்கிறேன்".
"இல்லை இது நடந்து பல மாதங்களாகி விட்டது,அப்பா அதற்க்கப்புறம் இயல்பு நிலைக்கு வந்து விட்டார்,கோவில்களுக்குச் செல்வது உள்ளூர் ஜோசியர் ஒருவர் சொன்னதற்காக"
"எதற்க்காக இந்த பரிகாரம்?"
அவன் சற்று யோசித்துப் பின் மெதுவாக "அப்பாவின் ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருக்கிறதாம், அதை தீர்க்கத்தான்,முக்கியா அடுத்த பெண்ணைப் பார்த்து விட்டார்.ஊருக்குப் போனதும் அப்பாவுக்கு மறுபடி கல்யாணம்"என்றான்.

19 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

நல்ல நடை இயல்பாகச் செல்கிறது கதை

அடுத்த கல்யாணமா - மூத்தவனுக்கு ஆயிற்றா இல்லையா - ம்ம்ம்ம் தொடர்க

நல்வாழ்த்துகள்

கே.ரவிஷங்கர் said...

சூப்பர்.இயல்பான நடை.வழுக்கிக்
கொண்டுப் போகிறது.நாமும் பக்கத்தில் இருந்து பார்ப்பது மாதிரி ஒரு உணர்வு.

சுருக்கி ஒரே பதிவாக ஆக்கி இருக்கலாமே?

கள்ளபிரான் said...
This comment has been removed by a blog administrator.
வானம்பாடிகள் said...

அருமையாச் சொன்னீங்க. இப்படி ஒரு கேஸ் வந்தது. ரிடையர் ஆனப்புறம் திருமணம் செய்த மனைவி, மகன் கூட குடும்பம் நடத்துறா. பென்ஷன் நாமினேஷனிலிருந்து நீக்கவேண்டுமென்று. டைவர்ஸ் பண்ணாதான் முடியுமென்று அனுப்பி விட்டேன்.

ஸ்ரீராம். said...

//அடிபட்ட அண்ணன் வீட்டில் ஓய்வெடுக்கும்படி ஆயிற்று.அதற்க்கப்புறம் ஒருநாள் இரண்டு பேரையும் காணவில்லை"//

ரொம்ப எலோபோரெட் பண்ணாம அழகா கதையை நகர்த்திட்டீங்க....

கொனஷ்டை.." அப்போ சின்னப் பையனுக்கும் பொண்ணு ரெடியாகுதுன்னு சொல்லுங்க..."

இராகவன் நைஜிரியா said...

தி.ஜாவின் சிறுகதை ஒன்றைப் படித்தது மாதிரி இருந்ததுங்க..

உலகத்தில் நடப்பதை ரொம்ப அழகா விவரிச்சு இருக்கீங்க...

வெரி நைஸ்..

கீப் இட் அப்.

தண்டோரா ...... said...

/சேத்திராடனம் - என்றால் தமிழில் என்ன//

ஆன்மீக யாத்திரை தலைவரே.

ஸ்ரீ..கதை நடையும், முடிவும் அருமை

வால்பையன் said...

//ஊருக்குப் போனதும் அப்பாவுக்கு மறுபடி கல்யாணம்"//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஸ்ரீ said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.இது 2002-ல் சென்னை எக்மோர் ஸ்டேஷனில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சிறுகதையாக்கி இருக்கிறேன்.நன்றிமீண்டும்.

பா.ராஜாராம் said...

வழக்கம் போலவே தெளிந்த நேரடியான நடை.ராகவன் அண்ணாச்சி சொவது போல,"தி.ஜா.சிறுகதை வாசித்தது போல..".மிகை இல்லை ஸ்ரீ.

வாழ்வில்,அனுபவங்களில்,கேள்விகளில் கிடைக்காத சிறுகதைகளா?நல்ல observation ஸ்ரீ.

புலவன் புலிகேசி said...

நல்ல நடையில் சொல்லி அசத்தி விட்டீர்கள்..இது போன்ற முக்கியாக்கள் தொல்லை இன்றும் இருந்து கொண்டுதானிருக்கிறது.

பாலகுமார் said...

கதை முடிஞ்சிருச்சுல்ல ஸ்ரீ...???

குமரை நிலாவன் said...

கதை முடிஞ்சிருச்சுல்ல

தியாவின் பேனா said...

ரசித்துப் படித்தேன் அருமையான கதை நல்ல நடை

ஸ்ரீ said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

தியாவின் பேனா said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

கமலேஷ் said...

இயல்பான நல்ல நடை...

அருமை...

நல்வாழ்த்துகள்...

பூங்குன்றன்.வே said...

எளிமையான நடையில் புரியும்படி எழுதி உள்ளீர்கள். நன்றாக இருக்குங்க ஸ்ரீ.

தருமி said...

சின்னப்பையனும் காத்துக் கொண்டிருக்கிறான் போலும்.

என்ன உலகமோன்னு சொல்ல வச்சிட்டீங்க ...