Sunday, November 29, 2009

கலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்

எச்சரிக்கை: இது ஒரு பின்நவீனத்துவக் கதையாக இருக்கலாம்.

மு.கு-1:

இந்தக் கதையில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு வேறு யாரையேனும் கற்பனை செய்துகொண்டால்,நான்பொறுப்பல்ல.இதுதொடர்பான போன்கால்கள்,எஸ்.எம்.எஸ்சுகள்,கடிதப் போக்குவரத்துகளைத் தவிர்க்கவும் .

மு.கு-2:

சாமி சத்தியமாக இந்தக் கதையில் எந்தக் குறியீடும் கிடையாது.வீணாகப் புரளியைக் கிளப்ப வேண்டாம்.

மு.கு-3:

பொறுமையாக மு.குவைப் படித்ததற்கு நன்றி.

************


இந்தக்கதை இத்துடன் முடிவடைந்து விடவில்லை ,மேலும் இவ்வாறு தொடர்கிறது. லூஸ்வேகாசின் மதுபான விடுதி ஒன்றின் கழிவறையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தபடி இந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்த கலியுக எழுத்தாளனின் பையில் இருந்தது ,காங்கோவின் இருண்ட பிரதேசங்களில் தன் வாழ்நாளின் இரண்டரை நாட்களைக் கழித்த கடுப்பு கந்தசாமியின் டைரி. 467 பக்கங்கள் கொண்ட அந்த டைரியின்1242 ம் பக்கத்தில் இந்தக் கதைக்கான மூலக் கருநிகழ்வைக் குறிப்பிட்டுள்ளதோடு ,அன்றைய ஒருநாளைக்கு அவன் தோழியாக இருந்த மிரிண்டாவின் வளப்பமான ஸ்தனங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளான்.

கூடுதல் ஆதாரமாக இரண்டாம் குலோத்துங்க சோழனின் நேரடி வாரிசான தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் ஆட்சியில் மாதம் ஐம்மாரி பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்து வந்தது கடுப்பு கந்தசாமியின் டைரி என்று கல்வெட்டுக்கள் பறைசாற்றுகின்றன.

அழைப்பு மணி ஒலித்ததும் கலியுக எழுத்தாளன் துண்டு பீடியை நசுக்கித் தூர எறிந்துவிட்டுக் கதவைத் திறந்தான் .வெளியே நின்றிருந்த வெள்ளைக்காரன் இவனைத் தள்ளுவது போல் உள்ளே நுழைந்து, நாற்காலியில் அமர்ந்து கொண்டு "நீங்களும் அமருங்கள்"என்றான்.

"நல்ல மரியாதை ! நீங்கள் கண்டிப்பாக என் வாசகராகத்தான் இருக்க வேண்டும்.கடல் கடந்தும் என் எழுத்து பரவியுள்ளது என்பதில் மகிழ்ச்சி,எனக்காக ஏதாவது கொண்டு வந்திருப்பீர்களே!அதை முதலில் கொடுத்து விடுங்கள்,பிறகு நீங்கள் வாங்கித் தரப்போகும் மதுவையும், உணவையும் சுவைத்தபடி நிறையப் பேசலாம்".

"இல்லை நான் ஏதும் கொண்டு வரவில்லை.மேலும் நான் இங்கே வந்திருப்பது உங்களைப் பேட்டி காண ,தற்கால இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள" என்றவாறு எழுந்து நின்றான்.

"இந்த உடை எனக்கு சிரமத்தைத் தருகிறது.இதைக் கழற்றிவிட்டு உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இராது என்று நினைக்கிறேன்"என்றபடி கழுத்தில் எதையோ அழுத்த மொத்த மனித உருவமும் சட்டையைப் போல கழன்று விழுந்தது.அதை நாற்காலியில் போட்டு விட்டு 'அது' நின்றுகொண்டிருந்தது.

"யார் நீ? என்னைக் கொல்லப் போகிறாயா?"

"பயம் வேண்டாம் ,நான் கைமீரியா என்கிற கிரகத்தில் இருந்து வருகிறேன்.எங்களிடம் இல்லாத ஒன்று என்னவென்றால் இலக்கியம். அதைப் பற்றித்தான் ஆராய்ந்து வருகிறேன். எனவே உங்களைப் பேட்டி கண்டு உங்களைப் பற்றியும் ,உங்கள் படைப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே வந்தேன்".

"சபாஷ்! அப்படிஎன்றால் கண்டம் விட்டுக் கண்டம் மட்டுமல்ல கிரகம் விட்டுக் கிரகம் என் புகழ் பரவியிருக்கிறது,இதை வாசகர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.நான் இப்போதே இதை எழுதத் தொடங்குகிறேன் ,இந்த சந்திப்பும் ஒரு கதையாகப் போகிறது"என்றபடி எழுதத் துவங்கினான்.

.......மேலும் இந்தக் கொட்டையை நிழலில் உலர்த்தி எடுத்து , சதகுப்பை, அசுவகந்தியுடன் சேர்த்து அரைத்துப் பின் வடித்து எடுத்த சாற்றை உப்பாக்கி, அதை கோமியத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும், கருங்காலி இலையுடன் நாயுருவியையும் சேர்த்து அதில் பன்னிரு நாழிகைகள் ஊற வைத்துப்பின் வடித்த சாற்றைக் குறியில் பூசிக் கொண்டு சம்போகஞ் செய்ய பெண் திருப்தியடைவாள்' என்கிற இந்தக் குறிப்பை மிரிண்டாவுக்கு விளக்கிக் கொண்டிருந்த வேளையில்,அவள் அதைக் கவனியாது ஆடை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?"

"இந்தக் கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்"

"ஒரு திருத்தம்,'கைமீறிய பிரஜை' என்று தலைப்பில் எழுதி இருக்கிறீர்கள்,அது தவறு, கைமீரியப் பிரஜை என்று வர வேண்டும்".

"சரி,திருத்திவிடுகிறேன்.அப்புறம் உங்கள் கிரகத்தில் இனப்பெருக்கம் எப்படி? பால் பேதம் உண்டா?ஏன் கேட்கிறேன் என்றால் உனக்குப் பிறப்புறுப்பு என்று எதையும் காணோமே!!"

"இனப்பெருக்கம் .......அதிருக்கட்டும்,பின் நவீனத்துவ எழுத்தைப் பற்றிச் சொல்லுங்கள்,இங்கே வந்ததும் உங்களுடைய புத்தகம் ஒன்றைப் படித்தேன்,பக்கங்களும் ,வரிகளும் மாற்றி அச்சடிக்கப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.ஒன்றுமே புரியவில்லை"

"இல்லை ,அப்படி இல்லை,சரியாக அச்சிடப்பட்ட புத்தகந்தான். உங்களுடைய இனப்பெருக்க முறை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? கேளிக்கைகள் உண்டா?சல்சா ஆடுவீர்களா?எனக்கு கேபரேதான் பிடிக்கும்.அதிலும் மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் நான் யானைக்கால் சூப்போடு ரசித்துப் பார்த்த காட்டுவாசிகளின் நடனம் ,இங்குள்ள குச்சுப்புடியின் ஆதித்தாய் என்றால் நம்புவீர்களா?"என்றபடி கடுப்பு கந்தசாமியின் டயரியைத் தேடினான்.

"நடனம் என்று எதுவும் கிடையாது,நாம் பின்நவீனத்துவக் கவிதைகளைப் பற்றியாவது பேசலாமா?உங்கள் புத்தகம் ஒன்றில் படித்ததுதான் இது,இதைச் சற்று விளக்கினால் பரவாயில்லை."

"உங்கள் கிரகத்தில் தொழில்நுட்பம் எல்லாம் எப்படி?"

"அந்த விஷயத்தில் உங்களை விட பல ஆயிரம் மடங்கு புத்திசாலிகள்தான் நாங்கள் ,இதற்காவது பதில் சொல்ல முடியுமா? கதைகளில்,கவிதைகளில் உண்மையிலேயே குறியீடு என்று ஒன்று உள்ளதா?அல்லது வாசகன்தான் அதைக் கற்பனை செய்து கொள்கிறானா?"

"கலிபோர்னியாவின் நீண்ட பாலைவனத்தில் உள்ள உடும்புகளின் கறியைச் சுவைத்திருக்கிறீர்களா? அதற்க்கு மோர்க்குழம்பு நல்ல காம்பினேஷன். மோர்க்குழம்பு எப்படி வைப்பது என்பது யாருக்கும் தெரியாது.அல்மேரியாவின் இருண்ட காடுகளின் இடையே ஊடுருவிச் சென்றபோது என் நண்பன் ஒருவன் (பெயரைச் சொன்னால் மிரண்டு போவீர்கள்,சொல்ல வேண்டாம் என்று அவன் எனக்குப் போன் பண்ணிச் சொன்னான்) எனக்கு அனுப்பி வைத்த ரெசிபி இது.முதலில் இரண்டு நாள் முன்பு உரை குத்திய மோரைத் தண்ணீர் கலக்காமல் நன்கு கடைந்து கொள்ளுங்கள் பிறகு,
தேங்காய் வில்லை- 4 பத்தை
பச்சை மிளகாய்- 6 (பெரியது )

"நிறுத்துங்கள்!!! நீங்கள் என்கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் உளறிக் கொண்டு இருக்கிறீர்கள்,அந்த உலகமகா எழுத்தாளரைப் போலவே.
உங்கள் உணவுமுறை எங்களுக்குத் தேவையில்லை.எங்களுக்கு வேண்டியதெல்லாம்.......

"ஆமாம்! கேட்க மறந்து விட்டேன் .இந்தக் கிரகத்தில் உனக்கு உணவு எப்படி?என்னவெல்லாம் சாப்பிட்டாய்?எது உனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது?"

"மனிதர்களின் மூளைதான் எனக்குப் பிடித்தது"

இதற்கு மேல் கலியுக எழுத்தாளனின் பக்கங்கள் வெறுமையாக உள்ளது. விசாரித்ததில் ,ரொம்பவும் கடுப்பாகிப் போன கைமீரியப் பிரஜை கலியுக எழுத்தாளனைத் தாக்கி விட்டு ஓடி விட்டதாக ஒரு தகவலும், கலியுக எழுத்தாளன் ,கலியுக எழுத்தாளனே அல்ல ,கைமீரியப் பிரஜைதான் கலியுக எழுத்தாளனாகி விட்டது என்று ஒரு தகவலும் ,அதெல்லாம் இல்லை கலியுக எழுத்தாளன் எந்தப் பிரஜையையும் சந்திக்கவே இல்லை , காப்பகத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஒரு தகவலும் எனக்குக்கிடைத்துள்ளது.


##########


Wednesday, November 25, 2009

க்ஷேத்திராடனம் -2

அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுக்கத் துவங்கினேன்.
"ஏன் உன் தந்தை மூத்தவனைப் பற்றிப் பேசியதும் எழுந்து சென்று விட்டார்?நான் ஏதேனும் தவறாகப் பேசிவிட்டேனா?"
"அதெல்லாமில்லை அவன் நடந்து கொண்ட விதம் அப்படி,அவனால் அப்பாவுக்கு ஊரில் தலைகுனிவு ,அவன் பேச்சையே எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்"
"அப்படி என்னதான் நடந்தது,நான் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்றால் வேண்டாம்" என்று சொன்னாலும் உள்ளுக்குள் விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருந்தது.
சிறிது தயங்கிப் பின் தொடர்ந்தான்"நான் பிறந்தவுடன் எங்கள் அம்மா இறந்து போனார்.எங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தது அப்பாதான் ,அவர் கஷ்டங்களை ஒருபோதும் எங்களுக்குக் காண்பித்ததே இல்லை,அப்படித்தான் எங்களை வளர்த்தார்.மறுமணம் என்பதைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை.எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது,அண்ணனுக்கு கல்யாணம் செய்து வைக்க அப்பா விரும்பியபோது,எங்கள் ஊரின் முக்கியாவினால் (ஊர்த் தலைவர்) ஆரம்பித்தது தலைவலி,தன் உறவுக்காரப் பெண் ஒருவளை ,மிகவும் கஷ்டப்படுகிற குடும்பம்,அப்பாவுக்கு இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து வைப்பதாகச் சொல்லி அவர் மனதை மாற்றிவிட்டார்.
"அந்தப் பெண்ணை உன் அண்ணனுக்குக் கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே?ஏன் அவர்கள் அதை யோசிக்கவில்லை?" என்றேன்.
"அதில்தான் முக்கியாவின் சூது இருந்தது. எங்களுடைய நிலங்களில் பாதிக்கு மேல் அவரிடம்தான் குத்தகைக்கு இருந்தன ,இருவரும் நண்பர்கள் ,எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனவுடன் நாங்கள் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவர் மனதை மாற்றினார்.அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டவுடன் முக்கியா கவனித்துக் கொண்டிருந்த நிலங்களை அந்தப் பெண்ணின் பேரில் எழுதிவைத்து விடும்படியும் இதனால் கடைசிக் காலம் வரை பிள்ளைகள் கையை எதிர்பார்க்காமல் அவர் வாழலாம் என்றும் சொல்லியிருக்கிறார்" "இது என்ன முட்டாள்தனம்" என்றேன் நான். "முட்டாள்தனம்தான் ,ஆனால் அவருக்குள் திருமணத்திற்கான விருப்பம் இருந்திருக்க வேண்டும்,இல்லை என்றால் இந்த முட்டாள்தனத்திற்கு தலையாட்டியிருக்க மாட்டார் ,அதுவும் தன் மூத்த மகனைவிட இரண்டு வயது சிறியபெண்ணை மணப்பதற்கு"என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தான்.
"அப்புறம் என்ன நடந்தது?"
"அப்பாவின் திருமணம் நடந்தது,அண்ணன் கலந்து கொள்ளவில்லை .இருவருக்கும் பேச்சு வார்த்தை கூட குறைந்து போயிருந்தது.சில நாட்களுக்குப் பின் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிபட்ட அண்ணன் வீட்டில் ஓய்வெடுக்கும்படி ஆயிற்று.அதற்க்கப்புறம் ஒருநாள் இரண்டு பேரையும் காணவில்லை".
நான் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.
அவனே தொடர்ந்து"இந்த சம்பவத்தினால் அப்பாவால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ஊர்க்காரர்களின் கேலியை அவரால் தாங்கமுடியவில்லைதான்"
"யாரால்தான் இதைத் தாங்கிக் கொள்ள முடியும்?பாவம் உன் அப்பா! அதனால்தான் இப்படி கோவில் கோவிலாகத் திரிகிறார் என்று நினைக்கிறேன்".
"இல்லை இது நடந்து பல மாதங்களாகி விட்டது,அப்பா அதற்க்கப்புறம் இயல்பு நிலைக்கு வந்து விட்டார்,கோவில்களுக்குச் செல்வது உள்ளூர் ஜோசியர் ஒருவர் சொன்னதற்காக"
"எதற்க்காக இந்த பரிகாரம்?"
அவன் சற்று யோசித்துப் பின் மெதுவாக "அப்பாவின் ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருக்கிறதாம், அதை தீர்க்கத்தான்,முக்கியா அடுத்த பெண்ணைப் பார்த்து விட்டார்.ஊருக்குப் போனதும் அப்பாவுக்கு மறுபடி கல்யாணம்"என்றான்.

Monday, November 16, 2009

க்ஷேத்திராடனம் (சற்றே பெரிய சிறுகதை)

திருமங்கலத்திலிருந்து பஸ் பிடித்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும்போது ஆறு மணியாகியிருந்தது.இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் புறப்பட்டிருக்கலாம்தான், எட்டரை மணி ரயிலுக்கு ஆறு மணிக்கே வந்தாகிவிட்டது.சிதம்பரம் ,"இருந்துவிட்டுப் போகலாமே ,இன்னும் டயமிருக்கு"என்றுதான் சொன்னான். கல்யாணம் முடிந்து விட்டது,அவன் உறவினர்கள் எல்லோரும் மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டாகி விட்டது.இதில் நான் மட்டும் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்க முடியாதென்று தோன்றியதால்,"மதுரேல ஒரு சின்ன வேல இருக்கு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.உண்மையில் வேலை எதுவும் இல்லை.இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இருந்த பொழுதை எப்படிக் கழிப்பது என்று யோசித்தவாறே ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன்.

ஸ்டேஷனுக்குள் போவோரும் வருவோருமாக ஏகத்துக்குக் கூட்டமிருந்தது.இவ்வளவு மக்களும் எங்கே போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று மலைப்பாய் இருந்தது .மதுரை ஸ்டேஷன் எப்போதும் இப்பிடித்தான் இருக்கும்.ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள சிறு கிராமத்தில் இருக்கும் எனக்கு இவ்வளவு கூட்டம் ஏதேனும் திருவிழாவில் பார்த்தால்தான் உண்டு.டிக்கெட்டைக் காண்பித்து பிளாட்பாரத்தைக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.பிளாட்பாரமும் நிரம்பி வழிந்து கொண்டுதானிருந்தது.குறுக்கும் நெடுக்குமாய் நடப்போரும் ,சுமைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுபவர்களும்,டிராலிகளைத் தள்ளிக் கொண்டு செல்பவர்களும் , உணவு விற்பவர்களும் என்று திருவிழாப் போலத்தான் இருந்தது.தேடிப்பிடித்து காலியாய்க் கிடந்த ஒரு சேரில் உட்கார்ந்தேன்.

வலப்பக்கம் சற்றுத் தள்ளி ஒரு குடும்பம் பிளாட்பாரத்தையே உணவு உண்ணும் இடமாகவும் ,படுத்துறங்கும் இடமாகவும் மாற்றியிருந்தது.இரண்டு சிறுவர்கள்,அவர்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்,ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். என் தலைக்கு மேலே ஒரு மின்விசிறி ஓடிக்கொண்டு இருந்தாலும் வெப்பம் தாக்கியபடியிருந்தது. இந்நேரம் ஊராக இருந்திருந்தால் கடற்காற்று வெப்பத்தைக் காணாது போக்கியிருக்கும்.



இடப்பக்கம்
ஒரு கேரளக் குடும்பம் உட்கார்ந்திருந்தது.ஒரு இளவயதுப் பெண் மற்றும் ஆணும் பெண்ணுமாக அறுவர்.அந்தப் பெண் மடியில் இருந்த குழந்தை சிணுங்கியபடி அவளின் புடவையை இழுத்துக் கொண்டிருந்தது,அவள் ஒரு கையால் செல்போன் பேசியபடி இன்னொரு கையால் குழந்தையின் கையை விலக்கியபடி இருந்தாள்.அருகில் இருந்த முதிர்ந்த பெண்மணி ,மாமியாராக இருக்கலாம் ,அவளை சிடுசிடுவென ஏதோ சொன்னதும் ,போனை அவளிடம் கொடுத்துவிட்டு ரவிக்கையின் ஊக்கைக் கழற்றியபடி குழந்தையை அதட்டினாள்.குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டதும் மறுபடி செல்போனை வாங்கிப் பேசத் துவங்கினாள்.என் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்கிற பாவனையில் செல்போனை நோண்டுவதும், அவளைத் திருட்டுப் பார்வை பார்ப்பதுமாக இருந்தான்.

இரைச்சலும் கூச்சலுமாக இருந்தாலும் ஏனோ வேடிக்கை பார்ப்பதில் சலிப்பும்,பொழுதைக் கழிப்பது சுலபமல்ல என்றும் தோன்றியது.உட்கார்ந்து கொண்டிருப்பதை விட சற்றே நடக்கலாம் என்று எழுந்து மெதுவாக பிளாட்பாரத்தின் மறு முனைக்கு நடக்கத் துவங்கினேன். கடைசிக்கு வந்ததும் கூட்டம் குறைந்து காற்று வரத்துவங்கியது.வெட்டவெளியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டேன்.

சற்றுநேரத்தில் அருகில் இருவர் வந்து தரையில் அமர்ந்து கொண்டனர்.வடக்குப் பக்கமிருந்து வந்தவர்கள் என்பது அவர்களின் உடையில் இருந்து தெரிந்தது.அழுக்குப் படிந்த உடையுடன் ஒரு இளைஞனும்,சற்றே வயது கூடிய இன்னொருவரும் .நான் அவர்களைக் கவனிப்பது தெரிந்ததும் அந்த முதியவர் அருகில் வந்து இங்கே எந்த ஊருக்குச் செல்ல ரயில் வரப்போகிறது என்று கேட்டார்.நான் ஊரைச் சொன்னதும் ,"வழியில் ஏதேனும் புண்ணியக்ஷேத்திரங்கள் உண்டா?" என்றார்.நான் சிரித்தபடி,"தமிழகத்தில் அதற்குக் குறைவேதுமில்லை,நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ?" என்றேன்.
"அநேக இடங்களைப் பார்த்தாகி விட்டது ,ராமேசுவரம் புண்ணியக்ஷேத்திரம் என்றார்கள்,இந்த ரயில் அங்கு செல்லக் கூடியதா?" என்றார்.ஆமாம் என்றதும் கூட இருந்தவனை டிக்கெட் எடுத்து வருமாறு சொல்லி விட்டு அருகில் அமர்ந்து கொண்டு ,பல நாள் பழகியவர் போல இயல்பாகப் பேசஆரம்பித்தார்.

பேச்சினூடே அவர் ஒரிசாவில் இருந்து வருவதாகவும் கூட இருப்பது இளைய மகனென்றும் தெரிவித்தார்.தான் ஒரு விவசாயி என்பதையும் குறிப்பிட்டார்.எனக்கும் பொழுது போக்க ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்."உங்கள் மூத்த மகனுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?அவர் உங்களுடன் வரவில்லையா?" என்று கேட்டதும் அவர் முகம் கருத்து விட்டது."அவனைப் பற்றி ஏதும் கேட்காதீர்கள், இளையவன் வெகு நேரமாய் வரிசையில் நிற்கிறான் ,பார்த்து வருகிறேன் "என்று நகர்ந்தார்.
சிறிது நேரத்தில் அவருடைய மகன் அங்கு வந்து சேர்ந்தான்.அவர் வரிசையில் நிற்கிறார் என்று புரிந்து கொண்டேன்.





தொடரும் ......






Monday, November 9, 2009

உப பாண்டவம்


பார்க்கச் சலிக்காதது கடலும் ,யானையும் என்பார்கள்.அதைப் போல கேட்கவும் படிக்கவும் சலிக்காதது புராணக் கதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். புராணம், இதிகாசம் என்று சொல்லப்படும் கதைகளை விருட்சம் எனக் கொள்வோமானால், அதன் உப கதைகள் தெரிந்தும் தெரியாமலும் விரவிக் கிடக்கின்றன வேர்களைப் போல.

இந்தப்
புத்தகத்தின் முன்னுரையில் எஸ்.ரா சொல்வதைப் போல எத்தனை கோடி ஜனங்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான மகாபாரதம் இருக்குமோ என்று தோன்றியது.மகாபாரதம் என்றதும் நினைவுக்கு வரும் குருக்ஷேத்திர யுத்தத்தை மட்டும் விவரிக்காமல் ,அது மூள்வதற்கு காரணமான பாண்டவ ,கௌரவர்களின் மனோநிலையை விவரித்திருப்பதே இதன் சிறப்பு என்று நான் கருதுகிறேன்.நாம் அறிந்த ,அறியாத கதைகள் ,கதைசொல்லியின் வாயிலாக விவரிக்கப் படும்போது ,நாமும் அந்தக் கணத்தில் அவர்களுடனே இருப்பது போன்ற உணர்வை எஸ்.ராவால் மட்டுமே தரமுடியும்.

கௌரவர்களின் முடிவு நாம் அறிந்ததே ,மற்ற பாத்திரங்களின் முடிவையும் ,குறிப்பாக திருதிராஷ்டிரன்,காந்தாரி-குந்தி மற்றும் பாண்டவர்கள் ஆகியோரது முடிவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் விதம் அருமை. வெறும் கதையென்று ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு காட்சிகளும் ,கதைமாந்தர்களின் மனோபாவமும் நம்முடன் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.கதையை முடித்த விதம் குறிப்பிடத்தக்கது.எஸ்.ராவிடம் இருந்து மற்றுமொரு சிறந்த எழுத்து.படிக்கவில்லையெனில் உடனே படித்து விடுங்கள்.