Tuesday, September 29, 2009

அமினா..


உலகம் முழுதும் பெண்களின் வாழ்க்கை ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆதிகாலம் முதல் இன்று வரை பெண் எதையேனும், யாரையேனும் எதிர்த்துப் போராடிக் கொண்டேதான் இருக்கிறாள். சமூக அமைப்பு என்ற பெயரால் நசுக்கப்படுவதை எதிர்த்தோ, ஆதிக்கம் செலுத்தும் ஆண் வர்க்கத்தை எதிர்த்தோ.. அவளுடைய போராட்டம் தீராத ஒன்றாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விடுதலை என்னும் இலக்கு ஒன்று இருந்தாலும், அதை அடையும் சாலை மட்டும் இன்னமும் முடிவே பெறாது நீண்டு கொண்டே இருக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளாக.

மதம், சாதி, மொழி, நாடு என பல்வேறுபட்ட கூறுகள் மனிதனை பிரிவினைப்படுத்தி இருந்தாலும் உலகளாவிய மனோபாவமாக அமைந்து விட்டது, ஆணுக்குப் பெண் அடிமை என்ற கருத்து. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் உலகில் எந்த ஆணுமே வேறுபடுவதில்லை. நான் என் மனைவிக்கு எல்லாவித சுதந்திரங்களையும் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லுகிற ஆணிடமும் ஆணாதிக்கம் இல்லாமல் இல்லை. "நான் சுதந்திரம் தருகிறேன்" என்று சொல்வதே ஆணாதிக்கம் தான். ஆண் எப்படி சுதந்திரத்துடன் பிறக்கிறானோ, அதேபோலத்தான் பெண்ணும். யாரும் யாருக்கும் சுதந்திரத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.தனிநபருக்கு உட்பட்ட பகையோ, அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான போரோ முதலில் பாதிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் பெண்கள்தான்.

அமினா என்கிற இந்த நாவல், தன்னைப் போலவே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் கதை. சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசியல் பதவியும், செல்வாக்கும் மிக்க ஒருவருக்கு நான்காவது மனைவியாக (அவனுடைய வெற்றியைக் கொண்டாட), ஒரு பரிசைப் போல மணம் செய்விக்கப்படுகிறாள் அமினா. கணவனின் சந்தேக புத்தியால் தண்டிக்கப்பட்டு, தன்னுடைய ஆறு மாத குழந்தையையும் பறிகொடுத்து நிற்பவளின் கண்கள் அவளுடைய தோழியான பாத்திமா என்பவளால் திறக்கப்படுகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் இதே நிலைதான் என்பதை உணர்ந்து, ஒரு பெண்களுக்கான அமைப்பை ஆரம்பித்து அறவழியில் போராடுகிறாள். மதம், அரசியல் என இரு பக்கங்களில் இருந்தும் அவளுக்கு வரக்கூடிய எதிர்ப்பை சமாளிக்கிறாள்.

அமினாவின் கணவன் அல்ஹாஜி ஹரூனா, பாட்டர், குலு போன்ற மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஆட்களுக்கு எதிரான போராட்டமாகவும், ஷரியத் என்று சொல்லப்படும் பெண்களை நசுக்கும் சட்ட அமைப்புக்கு எதிரான போராட்டமாகவும் அது அமைகிறது. நாவலில் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டப்படுவது, நைஜீரியாவின் நாட்டுப்பற்றில்லாத அரசியல்வாதிகளும், மதத்தின் பேரால் நடத்தப்படும் பெண்களின் மீதான அடக்குமுறையும், நாட்டின் வளங்களைச் சுரண்டும் வியாபாரிகளும், இவர்களை அண்டிப் பிழைக்கும் விவசாயிகளும், கூலிகளாக இருக்கும் முதுகெலும்பற்ற ஆண்களும் தான்.

இந்த நாவல், நைஜீரியாவில் பிறந்து, ருஷ்யா மற்றும் ஐரோப்பாவில் பட்டம் பெற்று, லண்டனில் வசித்து வரும் முகமது உமர் என்பவரால் எழுதப்பட்ட முதல் நாவல். எளிமையான நடை. நாவலின் பலமும் பலவீனமும் அதுவே. இதுவரை உலகின் 29 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை, தமிழில் மொழிபெயர்த்து கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழில் மொழியாக்கம் செய்து இருப்பவர் தருமி. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இயற்பெயர் - சாம் ஜார்ஜ். தற்போது பதிவுலகில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமூக அக்கறை கொண்டவர். பதிவுலகை சேர்ந்த நம் நண்பர் இந்தப் புத்தகத்தை மொழியாக்கம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

அமினா

Kizakku,
New Horizon Media Pvt. Ltd;
No. 33/15 Eldams Road,
Alwarpet, Chennai -18

e-mail: support@nhm.in

பக்கங்கள்: 368

விலை: Rs. 200

Thursday, September 24, 2009

இதுவுமது....

ஆளுயரக் கத்தி அது ,
வழி வழியாய் வந்தது
முகம் காட்டும் பளபளப்பில்
இருபுறமும் கூர்மையாய்.
வைத்துக் கொள்ளுங்கள்
இது நம் பரம்பரை சொத்து
என்றான் என் பாட்டன்.
அப்பன் தொட மறுத்து விட்டான்,
நான் கண்ணெடுத்தும்
பார்க்கவில்லை.
ஓர் அரசனுக்குப் பதாகையும்
கிரீடமும் போல நமக்கிது
மறுக்கவேண்டாம்
அடையாளமின்றி அழிந்து போவீர்கள்
என்றான் என் பாட்டன்
நான் தகப்பன் முகம் பார்த்தேன்
அவன் மறுதலிக்கவே
நானும் உறுதியாய் நின்றேன்
பாட்டன் சிரித்தபடி விலகிப் போனான்
நேற்று வீதியில் நடந்து போகையில்
கடந்து சென்றவன் கையில்
அதைப் பார்த்தேன்.

Wednesday, September 23, 2009

முரண்

சந்திப்புகளின் போது
சிரித்த முகத்தோடு
அருகில் வந்து முகமன்
கூறினார் ,
முன்வந்து கைகுலுக்கியபோது
சிரித்தபடி அணைத்துக்
கொண்டார்,
அணைக்கையில் முதுகு தடவி
இறுக்கினார்
பாராட்டினால் மென்முருவலோடு
மறுதலித்தார்
இசங்கள் பேசினார்
இயங்கள் முழங்கினார்
பெண்ணியம் பெரிதென்றார்சாதியம் தவறென்றார்மனிதம் ஓங்க

ஒன்றுபடுவோம் என்றார்
எழுத்தில் கண்ணியம்
பேச்சில் நாகரிகம் கடைபிடி
எவரெழுத்தும்இகழாதே தொடர்ந்தெழுதிப் பயிற்சி செய்
என்றார்
சிலாகித்தும் ,சிரிப்பாகவும்
,
நகர்ந்து கொண்டிருந்தது
பரிச்சயம் ,
அது சரி ,இது தவறென
விவாதிக்கையில்
கருத்தைச் சொல்ல
முனைந்தபோது கூறினார்
"வாயை மூடுறா
பாப்பாரத் தா......ளி!".

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&Wednesday, September 16, 2009

பதிவர்கள் சந்திப்பு

மதுரையில் ...

பதிவர்கள் சந்திப்பு

நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை

காலம்: மாலை 4 மணி

இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்

தொடர்புக்கு
தருமி-9952116112
கா .பா -9842171138
ஸ்ரீ - 9360688993

Friday, September 4, 2009

சித்திரக்கல்: மதுரையில் ஓவியங்கள்-ஓவியங்களில் மதுரை புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சி.

சென்ற பதிவில் குறிப்பிட்டபடி மதுரையில் புத்தகக் கண்காட்சியோடு திரு.காந்திராஜன் அவர்களின் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சித்திரக்கல் எனும் அவருடைய அமைப்பும் கடவு பதிப்பகத்தாரும் INTACH அமைப்பினரும் சேர்ந்து கண்காட்சியை அமைத்திருக்கிறார்கள்.மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஓவியங்களும் ,மதுரை குறித்து பிற பகுதிகளில் வரையப் பட்டிருக்கும் ஓவியங்களும் கண்காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன .இக்கண்காட்சியின் நோக்கம் ,மதுரையில் ஓவிய மரபை வெளிக் கொணர்வதும் மேலும் மதுரையில் உள்ள தொல் பழங்காலச் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதேயாகும்.

மனிதன் தன் பார்வைக்கும் ,சிந்தைக்கும் காணக் கிடைத்த உலகியல் அனுபவங்களை ,பிறருடன் பகிர்ந்து கொள்ள முற்பட்டபோது முதலில் உருவானது ஓவியம்.எளிய கோட்டோவியங்கள் மூலம் தன் வாழ்வியல் சூழலை ,கற்காலம் தொட்டே மனிதன் தான் வசித்த மற்றும் கடந்து சென்ற குகைகளிலும் பாறை ஒதுக்குகளிலும் வரைந்துள்ளான். இதன் தொடர்ச்சியாக ,அரசு மற்றும் மத நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கட்டிடக் கலையில் ஓவியங்களும் ,சிற்பங்களும் ,தத்துவார்த்த நிலைப்பாடுகளில் அழகியல் தன்மையோடு உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் தொன்மையானவை ஐரோப்பா,ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரைந்ததாகக் கருதப்படுகிறது.இந்தியாவில் பெருமளவில் எல்லா பகுதிகளிலும் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன . மத்தியப் பிரதேசப்பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படுகின்றது.இவை இந்தியாவிலேயே பழைமையான ஓவியங்களாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் உள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் வரையப் பட்டுள்ளது.மதுரைக்கருகே அழகர்மலை,கருங்காலக்குடி,கீழவளவு ,உசிலம்பட்டி போன்ற இடங்களில் வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் காணப்படுகின்றன.


கண்காட்சி முடிய இன்னமும் நான்கு நாட்களே உள்ளன.மதுரைக்கு வாருங்கள்.