Monday, July 20, 2009

வரைபடங்களற்ற வாழ்க்கையும் -கூடுகளற்ற பறவைகளும்.

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு எழுத்தாளர் பற்றிய பேச்சு வந்தது."அவர் ஒரு தேசாந்திரி ,தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவர்" என்றார்கள்.எனக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.தேசாந்திரி என்ற சொல்லில் இருக்கும் அழகு நாடோடி என்பதில் குறைவுபடுகிறது,நாடோடி என்கிற வார்த்தை உபயோகப் படுத்தப் படும் விதம் காரணமாக இருக்கலாம்.எழுத்தாளனோ ,கலைஞனோ தேசாந்திரியாக இருப்பின் அவன் படைப்புகளுக்கு தனித்துவம் அமைந்து விடுகிறது.

தேசாந்திரியாக இருப்பது என்பது ஒரு தனித்த மனோபாவம். எப்பொழுதாவது கையில் காசில்லாமல் இருந்ததுண்டா? காசில்லாமல் என்றால் ஒரு ரூபாய் கூட இல்லாமல்,அடுத்த வேளை உணவு பற்றிய எந்த நிச்சயமும் இல்லாமல் .வாழ்க்கை முழுவதுமே அப்படி ஒரு பாதுகாப்பற்ற தன்மையில் வாழ முடியுமா?ஆனால் அந்த பாதுகாப்பற்ற தன்மையிலும் சாதாரணமாக வாழ்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்,அவர்களுள் தேசாந்திரிகளும் அடக்கம்.மிகுந்த தைரியமும் ,அத்தியாவசியங்களுக்குக் கூட முக்கியத்துவம் தராத மனோநிலையைக் கண்டிருக்கிறேன்.உறவுகளால் கட்டப்படாத ஒரு மனிதனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றுகிறது.

ஓஷோ அடிக்கடி தேசாந்திரியாக அலைவதைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவரே ஒரு தேசாந்திரி , அவர் பாதம் படாத நாடுகளே இல்லை எனுமளவிற்கு,"நாடோடியானவன் அந்தக் கணத்தில் வாழ்பவனாக இருக்க வேண்டும் ,எதைப் பற்றியும் கவலைப் படாமல் ,ஒரு ஜோர்பாவைப் போல இப்போது இந்தக் கணம் மட்டுமே முக்கியம் என்றிருக்க வேண்டும்"என்பார்.

என்னால் அந்த வாழ்க்கையின் உள்ளே நுழைந்து பார்க்கும் ஆவலைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.2000-2002 களில் ஆன்மிகம் ,யோகம் என்கிற விஷயங்களின் பேரில் ஊரூராக அலைந்திருக்கிறேன். பல்வேறுபட்ட வாழ்க்கை அனுபவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருக்கிறேன்.ஒரு எழுத்தாளன் இப்படி தேசாந்திரியாக இருந்து பல்வேறுபட்ட தளங்களில், பல வாழ்வுகளுக்குள் ஊடுருவிச் செல்ல முடிந்தால் படைப்புகள் தனித்துவம் பெரும் என்று அப்போது நினைத்துக் கொள்வதுண்டு.பல நூறு பேரின் வாழ்க்கையைக் கேட்டறிந்தவன் தன் ஒரே வாழ்நாளில் பல வாழ்க்கைகளை வாழ்ந்து விடுகிறான்.

ஆன்மீக விஷயங்களில் மனதைச் செலுத்திக் கொண்டிருந்த நாட்களில் எனக்கு குருவாக கிடைத்தவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.மாற்று முறை மருத்துவங்களில் தேர்ந்தவர்,தேசாந்திரி. ஓரிடத்தில் இருக்க மாட்டார்.அவரோடு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது,"எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் காசிக்கு வந்து சேர்ந்தோம் ,அதற்க்கு மேல் பயணம் செய்யவோ உணவுக்கோ காசில்லை.குருவிடம் சாப்பாடு கிடைத்துவிடும் பரவாயில்லை,ஆனால் ஊருக்குத் திரும்பிப் போவது எப்படி?" என்றதும் குருவின் பதில்,"அதொண்ணும் பிரச்சினையில்லை ,கையேந்துனா காசு கிடைக்கும்!!".தேசாந்திரிகளிடம் தன்முனைப்பைக் காண முடியாது.அதே போல இங்கே போகப் போகிறோம் அதற்க்கு இவ்வளவு காசு தேவைப் படும் என்று திட்டமிட்டு பயணம் மேற்கொள்பவனும் தேசாந்திரி அல்ல.ஓஷோ சொல்வதைப் போல நாடோடிகளுக்கு வரைபடங்கள் தேவைப்படுவதில்லை. ஞானம் அல்லது உண்மையைத் தேடி அலைபவராகட்டும், தேடுதல் எதுவுமின்றி வாழ்க்கையைப் பயணமாக மாற்றிக் கொண்டவர்கள் ஆகட்டும், இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை நாளை என்றொரு நாள் இல்லை என்கிறமனோபாவம். தேசாந்திரிகளாக இருந்த சிலர் ஞானம் பெற்ற கதைகள் உண்டு,ஞானம் பெற்ற பலர் தேசாந்திரிகளாகத்தான் அலைந்திருக்கிறார்கள்.


கூடுகளற்ற பறவைகளின் வாழ்வை ஒத்தது தேசாந்திரியின் வாழ்க்கை.ஏதேனும் ஒரு கிளையில் அமர்ந்தாலும் அதுவும் பயணத்தின் பாகமே தவிர முடிவில்லை ,தேசாந்திரியின் பயணம் அவனோடே முடிகிறது.சிறு வயதில் என்னை யாராவது என்னவாகப் போகிறாய்? என்று கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரிந்ததில்லை. இப்போது அந்தக் கேள்வியை நான் சந்தித்தால் சொல்லுவேன் "தேசாந்திரியாக ,நாடோடியாக இருப்பேன்"என்று.

11 comments:

கதிர் said...

//நாடோடிகளுக்கு வரைபடங்கள் தேவைப்படுவதில்லை//

சிந்தனையைத் தூண்டும் வரி....

நல்ல பதிவு

டக்ளஸ்... said...

என்னமோ சொல்ல வர்றீங்க பாஸு..!
ஆனா, என்னான்னுதான்பா புரியல..
நீங்களும் எளக்கியவாதியாடிட்டீங்களோ..?

I want Salpettah....

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான மொழிநடை ஸ்ரீ.. வாழ்த்துகள்

ஆதவா said...

மிக அழகான நடை... நாடோடிகள் திரைப்படம் வந்த பிறகுதான் நானும் இந்த வார்த்தைக்கான முழு அர்த்தத்தை உணர ஆரம்பித்தேன்..

நாடோடியாகத் திரிய நமக்கு வாய்த்திருக்கவில்லை ஸ்ரீ!

பாராட்டுக்கள்!

செந்தழல் ரவி said...

கலக்கல்.

நாஞ்சில் நாதம் said...

கலாஸ்

கே.ரவிஷங்கர் said...

வீணாப் போன மொக்கைப் பதிவுகளை படிக்கும் நமக்கு இது வித்தியாசமான பதிவு.

இது மாதிரி அடிக்கடி வித்தியாசமாக் எழுதுங்கள்.

எஸ்.ராமகிருஷணன் ஜாடை கொஞ்சம் அடிக்கிறதே!

ஸ்ரீதர் said...

நன்றி கதிர்,
நன்றி டக்ளஸ்
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி ஆதவா
நன்றி செந்தழல் ரவி
நன்றி நாஞ்சில் நாதம்

நன்றி கே.ரவிஷங்கர்.கவனிக்க வேண்டிய விஷயம்தான்.மாத்திக்கிறேன் ,எழுதும்போது தோணல.

யாத்ரா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஸ்ரீ.

Eswari said...

//பல நூறு பேரின் வாழ்க்கையைக் கேட்டறிந்தவன் தன் ஒரே வாழ்நாளில் பல வாழ்க்கைகளை வாழ்ந்து விடுகிறான்.//
அருமையான வரிகள்

தருமி said...

//ஒரு ஜோர்பாவைப் போல...//
அப்டின்னா என்ன?

சொல்ல நினச்சதை இங்கே வந்ததும் மாத்தி எழுதணும்னு ஆயிரிச்சி. ஏன்னா எழுத்தின் வீச்சு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்.நிறைய பேர் எழுதிட்டாங்க. நல்ல ஈர்ப்பு.
இம்புட்டு எழுதுற ஆளு இன்னும் நிறைய அடிக்கடி எழுதுனா என்ன?

வளர்க