Friday, July 24, 2009

ராவா அடிச்சது

நண்பர் திரு .பீர் அவர்கள் சுவாரஸ்யமான பதிவர் விருதை எனக்கு(ம்) வழங்கியிருக்கிறார்,அவருக்கு நன்றிகள். ரூல்படி அதை ஆறு பேருக்குக் கொடுக்க வேண்டுமாம், எனக்கு பதிவுலகில் தெரிந்ததே கொஞ்சப் பேர்கள்தான் ,அதில் பாதி பேர் ஏற்கெனவே வாங்கி விட்டார்கள். யாருக்கு கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் ,கூடிய சீக்கிரம் கொடுத்துவிடுகிறேன்.
***************
கடந்த 'சனி'க்கிழமையன்று வால்பையன் மதுரைக்கு வருகை புரிந்தார்.வழக்கம் போல குடியும் குடித்தனமுமாக இருந்த போதில் மலையே சரிந்தது போல் ஆளு மட்டை.கூட இருந்த அவரது நண்பர்கள் போட்ட சண்டையின் காரணமாக சபையிலிருந்து வெளிநடப்பு செய்து விட நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த வாலை என் தலையில் கட்டிவிட்டு நடையைக் கட்டினார்கள். வண்டியில் உட்கார வைத்து மதுரையை உலா வந்து, சினிமாவுக்கு போகலாம் என்றவரை கோயம்புத்தூர் பஸ்ஸில் ஏற்றி உட்கார வைத்து அனுப்புவதற்குள் என் முதுகெலும்பு உடைந்து விட்டது போங்கள்.குரங்குக் குட்டி மாதிரி என் முதுகில்தான் தொற்றிக் கொண்டு வந்தான். மறுநாள் போன் போட்டு நான் எப்படி கோயம்புத்தூர் வந்தேன் என்று கேட்டது நல்ல காமெடி.சமீபத்தில் அவன் எழுதிய இடுகையில் சொன்ன எல்லா விஷயங்களையும் தவறாமல் நிறைவேற்றினான் (பாம்பின் கால் பாம்பறியும்). வாலுக்கு ஒரு அட்வைஸ் ."குடிக்காதேன்னு சொல்ல மாட்டேன்,சொன்னாலும் கேக்க மாட்ட,தயவு செய்து வெயிட்ட குறைக்க முடியுமா பாரு". முடியல.......
**********************
மறுநாள் கோவையில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வேந்திரனுடன் பேச வேண்டும் என விருப்பப்பட்டு, வாலிடம் நம்பர் கேட்டேன் ,நானே பேச வைக்கிறேன் என்றவன் பேச வைத்தான்.போனை எடுத்ததும் என்ன நினைத்தாரோ நான் ஹலோ என்றதும் "லைன் சரியில்ல நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று வைத்து விட்டார்,ஒருவேளை வாலு இருந்த நிலையில்தான் நானும் இருந்திருப்பேன் என்று நினைத்தாரோ என்னவோ.நான் அதிகம் விரும்பிப் படிக்கும் நபர்களில் அவரும் ஒருவர்.அவருடைய 'செல்லெனப்படுவது ' கதையை விகடனில் படித்தபோது அதிகம் ஈர்க்கப் பட்டேன். அப்போது எனக்கு 'முடியலத்துவம்' பற்றியெல்லாம் தெரியாது.இப்போது அவர் வலைப்பக்கத்தில் அதைப் படிக்க முடிந்தது,நல்ல எழுத்து ,பேசமுடியாமல் போய் விட்டதில் எனக்கு வருத்தம்.இதில் வாலுக்கு பங்குள்ளதா என்று தெரியவில்லை.
*************************
அன்பு ஒரு நல்ல காரியம் செய்வதாக நினைத்துக் கொண்டு ,பதிவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடக்கப் போவதாக மட்டும் அறிவித்துவிட்டு,மற்ற விபரங்களுக்கு கார்த்திகைப் பாண்டியனை தொடர்பு கொள்ளுங்கள் என்று இடுகையிட்டிருக்கிறார் .இதில் காமெடி என்னவென்றால் கானா பானாவுக்கு அதில் சம்பந்தமில்லை என்பதுதான்.ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்றால் தீவிரமான முன்னேற்பாடுகளும் ,கொஞ்சம் காசும் தேவை .பெரும்பாலான பதிவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்,மதுரைக்கு வர நேரம் இருக்க வேண்டும் .எத்தனை பேர் வருவார்கள் ,விளையாட ஆள் சேர்ந்தாலும்,வந்தால் தங்க வைக்க இடம் ,மற்ற வசதிகள் வேண்டும்.விளையாட வேண்டிய மைதானத்தை தேர்வு செய்து முன் அனுமதி பெற வேண்டும் ,விளையாடுவதற்கான பொருட்கள் என்று தேவைகள் பட்டியல் நீளும்.கலந்தாலோசித்து விட்டு செய்திருக்கலாம். மாற்று ஏற்பாடாக வேண்டுமானால் கிரிக்கெட்டை அதன் மூல விளையாட்டான கில்லியாக மாற்றிவிட்டால் கொஞ்சம் செலவு குறையும்.அப்படி மாற்றினால் கில்லிக்கான செலவை நானும் ,தாண்டுக்கான செலவை நம்ம தேனியாரும் ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
*******************************
இந்த முறை கவிஞர் நரனின் கவிதையில் எனக்குப் பிடித்த ஒன்று,அவரின் மற்ற படைப்புகள் இங்கே .
சென்னையைச் சேர்ந்தவர்.உயிர்மையில் தொடங்கி வெளிநாட்டு இதழ்களிலும் கூட இவரது எழுத்துகள் வெளிவந்திருக்கின்றன .நல்ல இலக்கியவாதி.எப்படி எழுத வேண்டும் என்பதை எனக்கு சொல்லித் தந்துகொண்டிருப்பவர்.இவரின் முதல் சிறுகதை ஒன்று (சில எழுத்துப் பிழைகளுடன் ) 'தடாகம்' என்கிற இணைய இதழில் வெளிவந்திருக்கிறது.கீழே உள்ள கவிதையைப் படித்த பின் கடைசி வரிகளுக்கான விளக்கத்தை தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன்.அந்த விளக்கம் உங்களுக்குத் தேவைப்பட்டால் நம்ம கானா பானாவைத் தொடர்பு கொள்ள வேண்டியது.(ஏன்னா அவர்தான வாத்தியாரு).

விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை
என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .

***************************

Monday, July 20, 2009

வரைபடங்களற்ற வாழ்க்கையும் -கூடுகளற்ற பறவைகளும்.

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு எழுத்தாளர் பற்றிய பேச்சு வந்தது."அவர் ஒரு தேசாந்திரி ,தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவர்" என்றார்கள்.எனக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.தேசாந்திரி என்ற சொல்லில் இருக்கும் அழகு நாடோடி என்பதில் குறைவுபடுகிறது,நாடோடி என்கிற வார்த்தை உபயோகப் படுத்தப் படும் விதம் காரணமாக இருக்கலாம்.எழுத்தாளனோ ,கலைஞனோ தேசாந்திரியாக இருப்பின் அவன் படைப்புகளுக்கு தனித்துவம் அமைந்து விடுகிறது.

தேசாந்திரியாக இருப்பது என்பது ஒரு தனித்த மனோபாவம். எப்பொழுதாவது கையில் காசில்லாமல் இருந்ததுண்டா? காசில்லாமல் என்றால் ஒரு ரூபாய் கூட இல்லாமல்,அடுத்த வேளை உணவு பற்றிய எந்த நிச்சயமும் இல்லாமல் .வாழ்க்கை முழுவதுமே அப்படி ஒரு பாதுகாப்பற்ற தன்மையில் வாழ முடியுமா?ஆனால் அந்த பாதுகாப்பற்ற தன்மையிலும் சாதாரணமாக வாழ்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்,அவர்களுள் தேசாந்திரிகளும் அடக்கம்.மிகுந்த தைரியமும் ,அத்தியாவசியங்களுக்குக் கூட முக்கியத்துவம் தராத மனோநிலையைக் கண்டிருக்கிறேன்.உறவுகளால் கட்டப்படாத ஒரு மனிதனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றுகிறது.

ஓஷோ அடிக்கடி தேசாந்திரியாக அலைவதைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவரே ஒரு தேசாந்திரி , அவர் பாதம் படாத நாடுகளே இல்லை எனுமளவிற்கு,"நாடோடியானவன் அந்தக் கணத்தில் வாழ்பவனாக இருக்க வேண்டும் ,எதைப் பற்றியும் கவலைப் படாமல் ,ஒரு ஜோர்பாவைப் போல இப்போது இந்தக் கணம் மட்டுமே முக்கியம் என்றிருக்க வேண்டும்"என்பார்.

என்னால் அந்த வாழ்க்கையின் உள்ளே நுழைந்து பார்க்கும் ஆவலைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.2000-2002 களில் ஆன்மிகம் ,யோகம் என்கிற விஷயங்களின் பேரில் ஊரூராக அலைந்திருக்கிறேன். பல்வேறுபட்ட வாழ்க்கை அனுபவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருக்கிறேன்.ஒரு எழுத்தாளன் இப்படி தேசாந்திரியாக இருந்து பல்வேறுபட்ட தளங்களில், பல வாழ்வுகளுக்குள் ஊடுருவிச் செல்ல முடிந்தால் படைப்புகள் தனித்துவம் பெரும் என்று அப்போது நினைத்துக் கொள்வதுண்டு.பல நூறு பேரின் வாழ்க்கையைக் கேட்டறிந்தவன் தன் ஒரே வாழ்நாளில் பல வாழ்க்கைகளை வாழ்ந்து விடுகிறான்.

ஆன்மீக விஷயங்களில் மனதைச் செலுத்திக் கொண்டிருந்த நாட்களில் எனக்கு குருவாக கிடைத்தவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.மாற்று முறை மருத்துவங்களில் தேர்ந்தவர்,தேசாந்திரி. ஓரிடத்தில் இருக்க மாட்டார்.அவரோடு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது,"எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் காசிக்கு வந்து சேர்ந்தோம் ,அதற்க்கு மேல் பயணம் செய்யவோ உணவுக்கோ காசில்லை.குருவிடம் சாப்பாடு கிடைத்துவிடும் பரவாயில்லை,ஆனால் ஊருக்குத் திரும்பிப் போவது எப்படி?" என்றதும் குருவின் பதில்,"அதொண்ணும் பிரச்சினையில்லை ,கையேந்துனா காசு கிடைக்கும்!!".தேசாந்திரிகளிடம் தன்முனைப்பைக் காண முடியாது.அதே போல இங்கே போகப் போகிறோம் அதற்க்கு இவ்வளவு காசு தேவைப் படும் என்று திட்டமிட்டு பயணம் மேற்கொள்பவனும் தேசாந்திரி அல்ல.ஓஷோ சொல்வதைப் போல நாடோடிகளுக்கு வரைபடங்கள் தேவைப்படுவதில்லை. ஞானம் அல்லது உண்மையைத் தேடி அலைபவராகட்டும், தேடுதல் எதுவுமின்றி வாழ்க்கையைப் பயணமாக மாற்றிக் கொண்டவர்கள் ஆகட்டும், இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை நாளை என்றொரு நாள் இல்லை என்கிறமனோபாவம். தேசாந்திரிகளாக இருந்த சிலர் ஞானம் பெற்ற கதைகள் உண்டு,ஞானம் பெற்ற பலர் தேசாந்திரிகளாகத்தான் அலைந்திருக்கிறார்கள்.


கூடுகளற்ற பறவைகளின் வாழ்வை ஒத்தது தேசாந்திரியின் வாழ்க்கை.ஏதேனும் ஒரு கிளையில் அமர்ந்தாலும் அதுவும் பயணத்தின் பாகமே தவிர முடிவில்லை ,தேசாந்திரியின் பயணம் அவனோடே முடிகிறது.சிறு வயதில் என்னை யாராவது என்னவாகப் போகிறாய்? என்று கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரிந்ததில்லை. இப்போது அந்தக் கேள்வியை நான் சந்தித்தால் சொல்லுவேன் "தேசாந்திரியாக ,நாடோடியாக இருப்பேன்"என்று.

Friday, July 10, 2009

மல்லாக்கப் படுத்து யோசிச்சது..

ஆளாளுக்கு படுத்து யோசிச்சு படுத்தி எடுக்கறதும்,கலக்கி ஊத்தறதும்னு கலக்கி எடுக்கிறாங்க. உருப்படியா பதிவு போட நாம என்ன டாக்டரா? . சரி தனித் தனி பதிவாப் போட்டு உங்க உசிரை வாங்குறது போதாதுன்னு கலக்கலா (அதாவது ரெண்டு மூணு விஷயம் சேர்த்து-சூப்பரான்னு அர்த்தம் இல்ல) ஒரு பதிவைப் போட்டுடுவோம்னு நினைச்சு ஆரம்பிச்சுட்டேன்.முடிஞ்ச வரை இதுக்குன்னு இருக்கிற இலக்கணம் (?!!!) மீறாம பாத்துக்கிறேன். இதுதான் மொத மேட்டரே.
**********
சமீபத்தில் (அதாவது ஒரு மாசம் முன்னாடி) பழங்காநத்தம் பகுதியில் வண்டியை பார்க் செய்தபோது (டூ வீலர்தான்) என்னைக் கடந்து ஒருத்தன் ஓடினான் ,கன்னக் கதுப்பு முழுவதும் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது, உடல் முழுக்க ரத்தம்.அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தால் ஒரு இளைஞன் இரண்டு கையிலும் அரிவாள், பட்டாக்கத்தியோடு நடு ரோட்டில் தன்னுடைய வண்டியை நிறுத்தி விட்டு முழு போதையில் கத்தியை தாறு மாறாக காற்றில் வீசிக் கொண்டிருந்தான். அவனுக்கு தோள்பட்டையில் வெட்டு உடல் முழுக்க ரத்தம். பொது ஜனங்கள் சாதுவாக அவனைச் சுற்றிக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சரி போலீசுக்கு ஒரு போன் (பிளாங்க் கால்தான் ) செய்யலாம் என்று அருகில் உள்ள கடையில் போனை எடுத்தேன்.கடைக்காரர் "போலீசுக்கா தம்பி ? அதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே பண்ணியாச்சு" என்றார். விஷயம் என்னவென்றால் அருகில் உள்ள காவல் நிலையம் அங்கிருந்து 50 அடி தூரம்தான்.சினிமால கரெக்டாதான் எடுக்கரானுவ. வாழ்க ஜனநாயகம்.
****************
மதுரையின் பிரபல பதிவர் அவர்.ஒன்றுக்கு இரண்டாக செல் போன் வைத்துக் கொண்டு தொடர்ந்து SMS அனுப்புவதும் , மணிக்கணக்கில் தனியாக ஒதுங்கிப் பேசுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். நண்பர்கள் கேட்டால் 'thick' பிரண்டு என்று சமாளிக்கிறாராம். 'என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ' ன்னு பாட வேண்டியதுதான்.

அப்புறம் இவரும் பிரபல பதிவர்தான்.வெளியூர்க்காரர், சமீபத்துல நடந்த ஒரு விழாவுல பிரபல கவிஞர் ஒருத்தரோட சேர்ந்து ஒரே கூத்தாம்.இலக்கியம் பேச வந்த இடத்துல பாட்டிலோட அலைஞ்சது மட்டுமில்லாம, கூட்டத்துலயும் ஓரண்ட இழுக்க அவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டு உட்கார வைக்கப் பட்டாராம்.லோகல் பதிவர் கொடுத்த தகவல்.

இது இரண்டும் யாரென்று கண்டு பிடிப்பவர்களுக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியையும் , நான் திருமணம் செய்து கொண்டு ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால் அவள் வளர்ந்து வரும்போது கண்டு பிடித்தவர் இளைஞராக திருமணம் ஆகாமலே இருந்தால் அவளையும் மணம் முடித்துக் கொடுப்பதாக உத்தேசித்திருக்கிறேன் (உஸ்ஸ்ஸ் ....அப்பாடா ).
****************
அடடே கவிதை சொல்லியாகணுமே. சரி கவிஞர் யாத்ராவின் கவிதை ஒன்று.

நேசம்

ஜன்னலில் நீளும் பசுவின் வாயில்
இட்லி ஊட்டுவாள் அம்மா
பாலுண்ண மறுக்கும் கன்றிற்கு
புட்டிப்பாலூட்டுவார் அப்பா
அம்மு படித்துறை மீன்களுக்கு
பொரி போடுவாள்
பொட்டிப்பாம்பிற்கு பாலூற்றுவார்கள் தெருவில்
மதியம் காகத்திற்கு சோறு
தினம் வரும் குரங்கு
கடைக்காரரிடம் பழம் வாங்கிச்செல்லும்
பக்கத்து வீட்டு அக்கா
பூனையை மடியிலேயே வைத்திருப்பாள்
இணையமையத்தில் அவர் தோளைவிட்டு
இறங்கவேயிறங்காது கிளி
பிஸ்கட்டின் ஒரு முனையை வாயில் வைத்து
மறுமுனையை நாயுடன் பகிர்ந்துகொள்வாள்
எதிர்வீட்டு யுவதி
இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை .Beautifullll ! அதுதான் யாத்ரா.சுட்டியை க்ளிக்கி அவரோட மற்ற இடுகைகளையும் படிச்சிடுங்க.

#############Monday, July 6, 2009

மஞ்ச மாக்கானின் இரவுக் கவிதைகள்(+18)

1992-1993 வாக்கில் எனக்கு அறிமுகம் ஆனவன் கிருஷ்ணமூர்த்தி,தப்பித் தவறி கல்லூரிக்குள் நுழைந்து விட்டவன்.படிப்பை விட மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமுடையவன். செல்லமாக நண்பர்களால் மாமா என்று அழைக்கப்பட்ட கி.மூவுக்கு கவிதைகளின் மேல் நாட்டமுண்டு (அவன் எழுதுகிற கவிதைகளில் மட்டும்). மற்றவர்கள் அதிலும் குறிப்பாக நான் கவிதை எழுதுவதை கொஞ்சம் இளக்காரமாகத்தான் பார்ப்பான். மாமா என்பது அவன் நினைப்பது போலல்லாமல் மஞ்ச மாக்கான் என்பதன் சுருக்கம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். தற்போது இதே மதுரையிலேயே பெண்களுக்கான ஒரு அழகுப் பொருட்கள் கடையை வைத்திருக்கும் மாமா ,இன்னமும் கவிதை எழுதுகிறான்.

மாமாவின் கவிதைகளில் உள்ள சிறப்பு என்னவென்றால் அதன் பாடு பொருள், அடப்பாவி என திகைக்க வைக்கும் அல்லது திட்ட வைக்கும்.பொதுவாக அவனுக்கு இரவு நேரத்தில் குவார்ட்டர் தாண்டிய பின்தான் கவிதை பிறக்கும் என்பதால் இந்தத் தலைப்பு. ஆறு தடவைக்கு மேல் காதல்வயப்பட்டுவிட்ட மாமாவுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.சில கவிதைகள் பதிவுக்கு ஏற்றதல்ல , அவற்றை பதிவிடப் போவதில்லை.மற்றவையும் அடல்ட்ஸ் ஒன்லி ரகம்தான். எனவே தவிர்க்க நினைப்பவர்கள் இத்தோடு ஜகா வாங்கி விடுவது உத்தமம். கவிதைகளுக்கு கிடைக்கப் போகிற பாராட்டுகளும் (!!!?) திட்டுகளும் மாமாவைச் சாரும்.

**********************

அதுவும் இதுவும்

பொதுக் கழிப்பிடங்களில்

பேருந்துப் பயண இடை நிறுத்தங்களின்

சாலையோர நீர்க் கழிப்புகளில்

திரையரங்கு இடைவேளைகளில்

என எங்கேயும் பக்கம் பார்த்து

ஒப்பீடு செய்து கொள்கிறேன் .

கருத்தது,வெளுத்தது,சிவந்தது,

இளைத்தது,நீண்டது,

பருத்தது,மூடியது,மூடாது என

எல்லாமும் என்னை விடப் பெரியதாய்....

இரவுகள் தோறும் கேட்க

நினைத்துத் தவிர்க்கிறேன்

இறுகப் பொருந்துகிறதாவென

எப்போது பார்ப்பினும்

தவிர்க்க முடியவில்லை,

இன்னும் சற்றே பெரியதாய்

அமைந்திருக்கலாமென்ற நினைப்பை...