Wednesday, June 10, 2009

கையறுநிலை

இளையான்குடி,பஸ்ஸை விட்டுக் கீழிறங்கியதும் மேல் துண்டால் பெருகி வந்த வியர்வையை அழுத்தித் துடைத்துக் கொண்டார் ஆவுடைப் பிள்ளை.மத்தியான வெயில் உக்கிரத்துடன் கீழிறங்கிக் கொண்டிருந்தது.மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.சிராஜுதீன் வீட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.சிராஜிடம் குறுகிய கால நட்புதான் என்றாலும் நன்றாகப் பழகிவிட்டிருந்தார்.இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை அலுவலகத்துக்கு சென்னையில் இருந்து மாற்றலாகி வந்த சிராஜிடம் சாதாரணமாக ஆரம்பித்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியது.ஆவுடைக்கு ஆறு மாதங்கள் முன்னரே ஓய்வு பெற்று விட்டார் சிராஜ்.மூன்று பெண்களின் கல்யாணத்தை முடித்து விட்டு கடைசிப் பெண் வசுமதியின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்த போது ஆவுடைக்கு ஐந்து மாதங்களே இருந்தன ஓய்வு பெற.
இருக்கிற எல்லா வித லோன்களையும் போட்ட பின்பும் பணப் பற்றாக்குறை,இன்னும் சில மாத சர்வீஸ்தானே விட்டு விடலாமா என்று ஆவுடை யோசித்தபோது, சிராஜ்தான் தன்னிடம் பணம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னார்.
"பிள்ளை! என்னதான் தாயா புள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறதான?அதான் எம்பேர்ல கொஞ்சம் பணம் போட்டு வெச்சிருக்கேன்.நாளைக்கே ஒரு நோய் நொடின்னா, பேரப் பிள்ளைகளுக்கு எதுனாச்சும் வாங்கித் தரணுமின்னா, கைல காசு வேணும் பாரு,அதான்.இப்போம் அதை உனக்குத் தரேன் ,அதை வெச்சு கல்யாணத்தை நடத்து ,பணம் வந்த பின்னாடி கொடு" என்றார்.மறுத்துப் பேச முற்பட்ட ஆவுடையை அடக்கினார்,"ஒண்ணும் பேசாத!நாளைக்கே பணம் வந்து சேரும்.கல்யாணத்தை நல்லபடியா முடிப்போம் அப்புறம் பேசிக்கலாம்" என்றதோடு நில்லாமல் மறுநாளே வங்கியில் இருந்து எழுபத்தைந்தாயிரத்தை எடுத்துக் கொடுத்து விட்டார்.

கல்யாணமும் நல்லபடியாகவே நடந்து முடிந்தது.ஆவுடை சர்வீஸ் முடிந்து இப்போது பணமும் வந்து விட்டது.ஏற்கெனவே இருந்த கடனையெல்லாம் அடைத்து விட்டு மிஞ்சியது ஒரு லட்சம்தான்.சிராஜின் கடனையும் அடைத்து விட இளையான்குடிக்கு வந்திறங்கி விட்டார்.பணப் பையை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.இன்னும் சிறிது தூரம்தான்,சிராஜ் வீடு வந்து விடும்.பணத்தை கொடுத்து விட்டால் கடன் தீர்ந்தது.நான்கு நாளைக்கு முன் சிராஜிடம் பேசியபோது மகன் அன்வர் டெல்லியில் இருந்து குடும்பத்துடன் வந்திருப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது.ஒரே மகன் அங்கே வேலை பார்க்க சிராஜ் மட்டும் ஒண்டிக்கட்டையாக இளையான்குடியில்.அவர் மனைவி காலமாகி வெகு காலமாகி விட்டது.மகனோடு டெல்லி போக மறுத்து விட்டார்.

அவருக்காவது மகன் ஒருவன் இருக்கிறான்,இருக்கிற நான்கு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாகி விட்டது.இனி கடன் அடைத்தது போக இருக்கிற கொஞ்சப் பணத்தில் தன் காலம் எப்படி ஓடப் போகிறது என்று கலங்கினார்.மகள்களின் வீட்டில் மாறி மாறி காலத்தை ஓட்ட வேண்டியதுதான் என்று நினைக்கும் போது தொண்டையை அடைத்தது.வீடு இருந்த சந்துக்குள் நுழைந்ததுமே சிராஜின் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் துணுக்குற்றது.நடையை எட்டிப் போட்டார்.
வீட்டின் உள்ளே நுழைந்ததுமே புரிந்து விட்டது,சிராஜ்தான்.அவருடைய மகன் இவரைப் பார்த்ததும் அருகில் ஓடி வந்தான் .
"ரெண்டு நாளாவே உடம்பு கொஞ்சம் சரியில்லாமல்தான் இருந்தாரு வாப்பா.முந்தா நாளு சாயங்காலம் தொழுகை முடிஞ்சு வந்ததும் தண்ணி கேட்டாரு ,எடுத்துட்டு வாரதுக்குள்ள போயிட்டாரு.உங்களுக்கு தகவல் சொல்லலாமின்னா உங்க நம்பரு எனக்குத் தெரியல,மன்னிச்சிடுங்க"என்றபடி உட்காரச் சொன்னான்.
என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்.பேச வாயெடுக்கும் முன் அன்வர் "அங்கிள் ,வாப்பாவோட நண்பர் நீங்க ,வாப்பா தனியா கொஞ்சம் பணம் போட்டு வெச்சிருந்தார். எழுபத்தஞ்சாயிரம், மூணு மாசத்துக்கு முன்னாடி எடுத்திருக்கார்.என்ன பண்ணாருன்னு உங்களுக்குத் தெரியுமா?"என்றான்.
ஆவுடைப் பிள்ளை ஒரு கணம் நிறுத்தி "எனக்குத் தெரியாதுப்பா" என்றார்.

6 comments:

டக்ளஸ்....... said...

நிதர்சனம்தான்.
ஒரு வேளை சிராஜ் இறந்துட்டர்ன்றாதால சொல்லலயா..?
இல்ல..எங்க அன்வர் காசுக்காக அலையுறானேன்றதுனால சொல்லலயா..?
ஆவுடை நல்லவரா..? கெட்டவரா..? (டொயின்ட,டொயின்ட.டொயின்ட..டொய்ய்ய்ய்ய்.....)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கதை.. ஆனால் முடிவை யூகிக்க முடிந்தது..

Chill-Peer said...

நல்ல கதை நடை.

நேர்மையாய் இவ்வளவு தூரம் பணத்தைக் கொண்டு வந்தவர், நண்பர் இறந்த செய்தி கேட்டதும் பொய் சொல்லுவாரா?
என்னால் ஏற்க முடியவில்லை.

...உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

கே.ரவிஷங்கர் said...

பாஸ் கதைப் படிச்சேன்.நல்லாருக்கு ஸ்ரீதர்.ஏமாற்றப் போகிறார் என்பதற்க்கு
ஏற்றார் போல் கதையின் prevaling moodஐ கொண்டுவந்து தடாலடி திருப்பம்
கொண்டுவந்திருக்கலாம்.

Anbu said...

நல்ல கதை.

ஸ்ரீதர் said...

நன்றி டக்லஸ் ,கார்த்தி ,அன்பு.சில் பீர் ,ரவிசங்கர்.