Sunday, June 21, 2009

வலையில் மாட்டியது-7


ஒரு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரிய குடும்பம் நின்றிருந்தது. கணவன், மனைவி பத்துப் பன்னிரண்டு குழந்தைகள். அருகில் ஒரு குருடனும் நின்றிருந்தான்.பேருந்து வந்தது. ஆனால் நடத்துனர் அத்தனை பேரையும் ஏற்றிக்கொள்ள மறுத்து விட்டான்.இரண்டு பேர் ஏற முடியாத நிலை ,சரியென்று குருடனும் அந்தக் கணவனும் பின்தங்கி மற்றவரை ஏற்றிவிட்டனர்.அந்தக் கணவன் குருடனிடம் தான் அவனுக்குத் துணையாக வருவதாகவும் இருவரும் பேசிக் கொண்டே நடந்து விடலாம் என்று சொன்னான்.

இருவரும்
நடக்க ஆரம்பித்தனர். குருடன் தன் கையில் இருந்த குச்சியால் தார்ச் சாலையில் தட்டியபடியே தடம் பார்த்து நடந்து கொண்டிருந்தான். அந்தக் குச்சி எழுப்பிய ஓசை அந்த இரவில் நாராசமாக இருந்தது கணவனுக்கு. அவன் குருடனைப் பார்த்து "நீ ஏன் அதன் நுனியில் ஒரு ரப்பரை மாட்டிக் கொள்ளக் கூடாது.சத்தம் வராமல் இருக்குமல்லவா?" என்றான்.குருடன் எரிச்சலுடன் "அதே வேலையை நீ செய்திருந்தால் நாம் இருவரும் நடக்க வேண்டியிருந்திருக்காது "என்றான்.

மூன்று வார்த்தைகள்


அந்த அரசனுக்கு மந்திரிகள் நிறைய பேர் ,படித்தவர்கள் ,எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் அவனுக்குத் தகுந்த ஆலோசனைகள் சொல்லக் கூடியவர்கள்.
ஒரு நாள் அரசன் அவர்களிடம் "நீங்கள் இல்லாத சமயத்தில் எனக்கு ஒரு துன்பம் வந்தால் என்ன செய்வது ? எனவே எனக்கு எந்த சமயத்திலும் உபயோகப் படக் கூடிய ஒரு அறிவுரை தேவை .அது எந்த ஒரு சூழ்நிலைக்கும் பொருந்தும்படி இருக்க வேண்டும்." என்றான்.


மந்திரிகள் ஆலோசித்தனர் ,எப்போதும் பொருந்துகிற அறிவுரை என்னவாக இருக்க முடியும் என்று . ஒரு மூத்த மந்திரி அந்த அறிவுரையை சொன்னார். எல்லோருக்கும் அது திருப்தியாகப் படவே அதையே அரசனுக்குக் கொடுப்பது என்று முடிவானது. அவர்கள் அரசனிடம் சென்று " உங்களுக்கான அறிவுரை தயாராக உள்ளது , அது மிகச் சிறியதுதான் . எனவே அதை ஒரு மோதிரத்தில் வைத்துள்ளோம் . இதை அணிந்து கொள்ளுங்கள் . நாங்கள் இல்லாத சமயத்தில் மட்டுமே நீங்கள் அதை திறந்து பார்க்க வேண்டும்" என்றனர்.அரசன் சம்மதித்து அந்த மோதிரத்தை அணிந்து கொண்டான்.

காலம் சென்றது ,அண்டை நாட்டு அரசன் ஒருவன் இவன் மீது படை எடுத்தான் ,எதிர்பாராத தாக்குதல் , படை நிலைகுலைந்தது ,வீரர்கள் சிதறி ஓடினர்.இந்த அரசன் ஒரு குதிரையில் ஏறி தப்பித்துப் போனான் . அனாலும் எதிரிகள் அவனைத் துரத்த ஆரம்பித்தனர்.குதிரையை ஒரு மலை மீது செலுத்தினான் . சிறிது தூரத்தில் எதிரியின் படை அவனைத் தொடர்ந்து கொண்டிருப்பதை அறிந்து விரைந்து செலுத்தினான். முன்னேறி அவன் சென்றடைந்த இடம் ஒரு மலை முகடு. அதன் கீழே மிகப் பெரிய பள்ளத்தாக்கு.அதற்க்கு மேல அவன் எங்கும் செல்ல முடியாது . திகைத்து நின்றான் அரசன். அப்போது அவன் அணிந்திருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியது .திறந்து பார்த்தான்.மூன்றே வார்த்தைகள் ......


இதுவும் கடந்து போகும்


என்று எழுதப்பட்டிருந்தது.அரசன் தெளிவடைந்தான் . மறைந்திருந்து எதிரிகளை கவனித்தான் . அவர்கள் வேறு பாதையில் சென்றனர். மீண்டும் கீழே இறங்கினான் .சிதறிய படைகளைத் திரட்டி மறுபடி போரிட்டு வென்றான்.

அரண்மனைக்குள் நுழைந்தபோது ஒரே கோலாகலம். எல்லோரும் மலர்களும் வாழ்த்துக்களும் மழையாகப் பொழிந்தன .அரசனுக்குத் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்று தோன்றியது .கர்வம் தலை தூக்கியது . அப்போது அவன் அணிந்திருந்த மோதிரம் சூரிய ஒளி பட்டு மின்னியது.அவன் கர்வம் அடங்கியது .

Saturday, June 13, 2009

சிறுகதைப் போட்டிகளில் ஜெயிக்க சில (குறுக்கு) வழிகள்.

அன்பார்ந்த சக வலைப் பதிவர்களே, அறிவிக்கப் பட்டிருக்கும் சில சிறுகதைப் போட்டிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அதில் பங்கு கொள்ளப் போகும் நல்ல பதிவரா ,அதாவது கதை எழுதுறதெல்லாம் எனக்கு சாதாரணமான மேட்டர் என்பவரா, அப்படி என்றால் இது உங்களுக்கான பதிவு அல்ல. போயி கதை எழுதுற வேலையைப் பாருங்கள். இல்லீங்க நானும் உங்களை மாதிரி ,உங்க நண்பர்கள் மாதிரி (உதாரணமா வாலுப்பையன், பொன்னியின் செல்வன் )மொக்கதானுங்க என்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
முதலில் நான் சொல்ல விரும்பறது என்னன்னா ஒரு போட்டில கலந்துக்கறதுதான் முக்கியம் ஜெயிக்கறது இல்ல .இதை ஏன் இப்ப சொல்லுற என்று கேட்காமல் மேலே படிக்கவும்.
  1. முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதுதான்.கலந்து கொள்கிறவர்கள் அத்தனை பேரையும் தனித் தனியாக சந்தியுங்கள் , இந்த போட்டில ஜெயமோகன் ,சாரு நிவேதிதா ,பால குமாரன் போன்ற எழுத்தாளர்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பீதியைக் கிளப்புங்கள் .அதற்கப்புறம் எந்தப் பயல் கதை அனுப்பப் போகிறான். பாதி போட்டி காலி.
  2. அடுத்தது லேசு பாசாக தெரிந்தவர்கள்,பதிவர் சந்திப்பில் கைகுலுக்கி நம்பர் கொடுத்தவர்கள் ,எப்போதாவது கடைப் பக்கம் வருகிறவர்கள்,போனால் போகிறதென்று ஸ்மைலி பின்னூட்டம் போடுகிறவர்கள் கொஞ்சம் பேர் கலந்து கொள்வார்கள் இல்லையா ,அவர்களுக்கு முதலில் சொன்ன யோசனையை செயல்படுத்துங்கள் ,அப்படியும் யாராவது தைரியசாலி மிச்சப்பட்டால்,தவறாமல் அவர்களின் கதைக்குப் பின்னூட்டம் போடுங்கள் .சில ஐடியாக்கள்....
  • இந்தக் கதையை ஏற்கெனவே படித்திருக்கிறேன்,ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை.
  • கதை ஆரம்பித்தவுடனேயே முடிவு தெரிந்து விட்டது.
  • போட்டிக்கா அனுப்பப் போறீங்க ? வெற்றி பெற வாழ்த்துக்கள் .
  • இன்னும் ஏதாவது பெட்டரா யோசிச்சிருக்கலாம் .உங்க கிட்டேயிருந்து நிறைய எதிர்பார்த்தேன்.
  • இதைத்தான் போன வருஷம் நீங்க விகடன்ல எழுதினப்பவே (?!!)படிச்சிட்டேனே.இருந்தாலும் சற்று மெருகேற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.நல்லாருக்கு.
  • இது ரஷிய எழுத்தாளர் விளாதிமிர் போயோன்கொவ்ச்கே கதையாச்சே !!

இதற்கப்புறம் அவருக்கு போட்டியில் கலந்து கொள்ள தைரியம் வருமா என்ன?தானாக ஜகா வாங்கி விடுவார்.போட்டில இன்னொரு பாதிப் பேர் காலி .

3. இந்த பாயின்ட் ரொம்ப முக்கியம் ,நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் , முன்னே பின்னே பார்த்திராதவர்கள் ,நன்றாக எழுதுகிறவர்கள் இருந்துதான் தொலைப்பார்கள் .அவர்களின் கதையை எல்லாம் படியுங்கள்.எல்லோருடைய கதையிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரே கதையாக்கி நாலு மாசத்துக்கு முன்னாடி தேதி போட்டு உங்கள் பிளாக்கில் பப்ளிஷ் செய்து விடுங்கள். எல்லாருமே என்னுடய "நான் -லீனியர் " கதையில் கொஞ்ச கொஞ்சமாக எடுத்து காப்பியடித்து விட்டார்கள் என்ற குண்டைப் போட்டு அத்தனை பேரையும் காலி செய்து விடுங்கள் .

அப்புறம் என்ன பாஸ்.மிச்சம் இருக்கிறது நாம மட்டுந்தான் , இப்போ எதை வேணும்னாலும் எழுதலாம் ,பரிசு கண்டிப்பா நமக்குத்தான்.இருந்தாலும் போட்டில கலந்துக்கிறதுதான் முக்கியம் ,ஜெயிக்கிறது இல்லேன்னு ஏன் சொன்னேன்னா .... அதான் உங்களுக்கே தெரியுமே.

Wednesday, June 10, 2009

கையறுநிலை

இளையான்குடி,பஸ்ஸை விட்டுக் கீழிறங்கியதும் மேல் துண்டால் பெருகி வந்த வியர்வையை அழுத்தித் துடைத்துக் கொண்டார் ஆவுடைப் பிள்ளை.மத்தியான வெயில் உக்கிரத்துடன் கீழிறங்கிக் கொண்டிருந்தது.மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.சிராஜுதீன் வீட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.சிராஜிடம் குறுகிய கால நட்புதான் என்றாலும் நன்றாகப் பழகிவிட்டிருந்தார்.இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை அலுவலகத்துக்கு சென்னையில் இருந்து மாற்றலாகி வந்த சிராஜிடம் சாதாரணமாக ஆரம்பித்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியது.ஆவுடைக்கு ஆறு மாதங்கள் முன்னரே ஓய்வு பெற்று விட்டார் சிராஜ்.மூன்று பெண்களின் கல்யாணத்தை முடித்து விட்டு கடைசிப் பெண் வசுமதியின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்த போது ஆவுடைக்கு ஐந்து மாதங்களே இருந்தன ஓய்வு பெற.
இருக்கிற எல்லா வித லோன்களையும் போட்ட பின்பும் பணப் பற்றாக்குறை,இன்னும் சில மாத சர்வீஸ்தானே விட்டு விடலாமா என்று ஆவுடை யோசித்தபோது, சிராஜ்தான் தன்னிடம் பணம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னார்.
"பிள்ளை! என்னதான் தாயா புள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறதான?அதான் எம்பேர்ல கொஞ்சம் பணம் போட்டு வெச்சிருக்கேன்.நாளைக்கே ஒரு நோய் நொடின்னா, பேரப் பிள்ளைகளுக்கு எதுனாச்சும் வாங்கித் தரணுமின்னா, கைல காசு வேணும் பாரு,அதான்.இப்போம் அதை உனக்குத் தரேன் ,அதை வெச்சு கல்யாணத்தை நடத்து ,பணம் வந்த பின்னாடி கொடு" என்றார்.மறுத்துப் பேச முற்பட்ட ஆவுடையை அடக்கினார்,"ஒண்ணும் பேசாத!நாளைக்கே பணம் வந்து சேரும்.கல்யாணத்தை நல்லபடியா முடிப்போம் அப்புறம் பேசிக்கலாம்" என்றதோடு நில்லாமல் மறுநாளே வங்கியில் இருந்து எழுபத்தைந்தாயிரத்தை எடுத்துக் கொடுத்து விட்டார்.

கல்யாணமும் நல்லபடியாகவே நடந்து முடிந்தது.ஆவுடை சர்வீஸ் முடிந்து இப்போது பணமும் வந்து விட்டது.ஏற்கெனவே இருந்த கடனையெல்லாம் அடைத்து விட்டு மிஞ்சியது ஒரு லட்சம்தான்.சிராஜின் கடனையும் அடைத்து விட இளையான்குடிக்கு வந்திறங்கி விட்டார்.பணப் பையை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.இன்னும் சிறிது தூரம்தான்,சிராஜ் வீடு வந்து விடும்.பணத்தை கொடுத்து விட்டால் கடன் தீர்ந்தது.நான்கு நாளைக்கு முன் சிராஜிடம் பேசியபோது மகன் அன்வர் டெல்லியில் இருந்து குடும்பத்துடன் வந்திருப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது.ஒரே மகன் அங்கே வேலை பார்க்க சிராஜ் மட்டும் ஒண்டிக்கட்டையாக இளையான்குடியில்.அவர் மனைவி காலமாகி வெகு காலமாகி விட்டது.மகனோடு டெல்லி போக மறுத்து விட்டார்.

அவருக்காவது மகன் ஒருவன் இருக்கிறான்,இருக்கிற நான்கு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாகி விட்டது.இனி கடன் அடைத்தது போக இருக்கிற கொஞ்சப் பணத்தில் தன் காலம் எப்படி ஓடப் போகிறது என்று கலங்கினார்.மகள்களின் வீட்டில் மாறி மாறி காலத்தை ஓட்ட வேண்டியதுதான் என்று நினைக்கும் போது தொண்டையை அடைத்தது.வீடு இருந்த சந்துக்குள் நுழைந்ததுமே சிராஜின் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் துணுக்குற்றது.நடையை எட்டிப் போட்டார்.
வீட்டின் உள்ளே நுழைந்ததுமே புரிந்து விட்டது,சிராஜ்தான்.அவருடைய மகன் இவரைப் பார்த்ததும் அருகில் ஓடி வந்தான் .
"ரெண்டு நாளாவே உடம்பு கொஞ்சம் சரியில்லாமல்தான் இருந்தாரு வாப்பா.முந்தா நாளு சாயங்காலம் தொழுகை முடிஞ்சு வந்ததும் தண்ணி கேட்டாரு ,எடுத்துட்டு வாரதுக்குள்ள போயிட்டாரு.உங்களுக்கு தகவல் சொல்லலாமின்னா உங்க நம்பரு எனக்குத் தெரியல,மன்னிச்சிடுங்க"என்றபடி உட்காரச் சொன்னான்.
என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்.பேச வாயெடுக்கும் முன் அன்வர் "அங்கிள் ,வாப்பாவோட நண்பர் நீங்க ,வாப்பா தனியா கொஞ்சம் பணம் போட்டு வெச்சிருந்தார். எழுபத்தஞ்சாயிரம், மூணு மாசத்துக்கு முன்னாடி எடுத்திருக்கார்.என்ன பண்ணாருன்னு உங்களுக்குத் தெரியுமா?"என்றான்.
ஆவுடைப் பிள்ளை ஒரு கணம் நிறுத்தி "எனக்குத் தெரியாதுப்பா" என்றார்.

Saturday, June 6, 2009

நான்...நான் மற்றும் அவள்

"கொஞ்சம் கஷ்டம் ,வேற ஏதாவது யோசிக்கலாம்"என்றான் தேவ்.
"இல்ல தேவ்,ரிஸ்க் இல்லாத திட்டம் இது ,கொஞ்சம் மெனக்கெடனும்,அவ்வளவுதான் ,என்னால செஞ்சிட முடியும்னு தோணுது " என்றான் அவன்.
&&&&&
ஆகாஷ் தன்னுடைய அலுவலகத்தில் நுழைந்தபோது இன்றைய தேதி 24 மே 2036 நேரம் சரியாக 9 என்றது அவனுடைய கடிகாரம் . ஆகாஷைப் பற்றி ,ரோபோடிக் எஞ்சினியர் ,வயது - போன வருடம் முப்பதை தாண்டி விட்டான்.துடிப்பான இளைஞன் ,அப்படி ஒன்றும் நல்லவனில்லை.இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே முதலாளியின் பெண்ணை (நிலா) காதலித்து ,அவளை அதிகம் யோசிக்க விடாமல் உடனே கல்யாணம் செய்து கொண்டு எம் .டி ஆனவன்.தற்சமயம் ,எப்போதடா இந்த கம்பெனி தன் பெயருக்கு மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்.தொலை பேசி அழைத்தது.எடுத்ததும் "7 மணிக்கு பார்ட்டி ஞாபகம் இருக்கில்லே ,ஆபீசைக் கட்டிட்டு அழாதே !" என்று எச்சரித்த நிலாவைப் பற்றி .. சமீபத்தில்தான் டீன் என்ற அடைமொழி துறந்தவள், அப்பா சேர்த்து வைத்ததை செலவழிப்பதில் விருப்பம் அதிகம்,55 கிலோவுக்கு வெண்ணையை உருட்டி செய்தது போன்ற உருவம்.

"மறப்பேனா,இதோட நூத்தி சொச்சம் தடவை ஞாபகப் படுத்திட்டே.ஈவ்னிங் எந்த அப்பாயின்மெண்ட்டும் இல்லே போதுமா"என்றான் சிரித்தபடி. செகரட்டரியை அழைத்தான்,
"ஹனி ,ஈவ்னிங் ஏதாவது அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கியா?"
"நோ ஆகாஷ்,ஆனா யாரோ கிருபாங்கிறவர் அப்பாயின்மென்ட் வேணுன்னு கேக்கறார், ஏதோ பெர்சனல் மேட்டராம்"என்றாள் வர்ஷா.
"தூக்கிப் போடு ,நான் பார்ட்டிக்கு போலன்னா நிலா எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிடுவா"
"ஆகாஷ் ! இதோட மூணாவது தடவை....."
"என்ன சொல்ற ?! மறுபடியுமா? ஜாக்கிரதையா இருன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கிற"
"ஆகாஷ் ! நான் சொன்னது கிருபாவைப் பத்தி , இதோட மூணாவது தடவையா அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கலை" என்றாள் அவன் பதட்டத்தை ரசித்தபடி.
"தேங்க் காட், ஏன் பயமுறுத்துற? யு நோ, நிலாவுக்கோ இல்லை என் மாமனாருக்கோ நம்ம விஷயம் தெரிஞ்சதுன்னா நான் அம்பேல் ,மறுபடி எங்கயாவது போயி குப்பை கொட்ட வேண்டியதுதான்.எம் .டி இல்ல,முதலில் கம்பனி கைக்கு வரட்டும்,அப்புறம் பார்"என்று போனை வைத்து விட்டு ,இவளை முதலில் கழட்டி விடணும் என்று யோசித்தான்.
&&&&&&
நுனிநாக்கு ஆங்கிலமும் ,இறுக்கிக் கட்டிய டையுமாக வழுக்கைத் தலையர்கள், குழுக்களாகச் சேர்ந்து அரைகுறை போதையில் பங்குச் சந்தை அலசலில் ஈடுபட்டிருந்தார்கள். எங்கே திரும்பினாலும் ப்ராபிட் ,லாஸ் என்ற வார்த்தைகளை கேட்க முடிந்தது.ஆகாஷ் மிதமான போதையில் நிலாவை ஒருகையால் அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
"ஹனி ,ஜஸ்ட் எ மினிட் "என்று நிலா நகர்ந்தாள்.


"ஹலோ ஆகாஷ்" ,திரும்பினான். லேசாக நரைத்த தலையுடன் நல்ல உடையணிந்த அவன் சிரித்தபடி கைகுலுக்கினான்.


"கிருபா, அப்படிங்கற பேர்ல உங்களை பாக்க விரும்பினது நான்தான்"என்றான்.


"அப்படியா,நீங்க....உங்களை எங்கயோ பார்த்த மாதிரி ...."


"இருக்கும் "என்று புன்னகைத்தபடி அவன் சொல்லத்தொடங்கினான்.ஆகாஷுக்கு லேசாக வியர்க்கத் தொடங்கியது.

&&&&&&&&

" புல் ஷிட்,என்னை என்ன முட்டாள்னு நெனச்சியா?நீதான் நானாம்,டைம் டிராவலாம்,உடனே இங்கிருந்து போயிடு இல்ல போலீசைக் கூப்பிட வேண்டி வரும்" என்று இரைந்தான் ஆகாஷ்.

"அவசரப்பட வேண்டாம் ஆகாஷ்,யார் உன் நிலைமைல இருந்தாலும் இப்பிடித்தான் சொல்லுவாங்க ,எனக்குப் புரியுது ,இவ்வளவு நேரம் நான் சொன்ன விஷயங்கள் நமக்கு மட்டுமே தெரிஞ்சது,வேற யாருக்காவது தெரியுமா?யோசி."என்றவனை வெறித்துப் பார்த்தான் ஆகாஷ்.

"சரி இந்த நெத்தில இருக்கிற காயம் எப்படி வந்தது சொல்லட்டுமா? ஹனிமூன்ல ஒரு பள்ளத்துல இறங்கும்போது கீழே விழுந்தோம்.சரியா? அப்புறம் அன்னிக்கு நைட் டின்னர் முடிச்சு ஹோட்டலுக்கு வரும்போது நடந்த ஆக்சிடென்ட்,அது நமக்கும் நிலாவுக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது ,நிலா யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னாளே? தயவு செய்து என்னை நம்பு ஆகாஷ்"என்றான்.

"குழப்பமா இருக்கு "என்றபடி தலையைப் பிடித்துக் கொண்டான் ஆகாஷ்.

"குழப்பம் ஒண்ணுமில்ல ஆகாஷ் ,நம்பு இன்னும் பத்து வருசத்தில டயம் டிராவல் சாத்தியம், அதை விடு ,இப்போ நமக்கு இருக்கிற ஒரே பிரச்சினை நிலா, அவ நம்மை டைவர்ஸ் பண்ணப் போறா, மறுபடி நாம தெருவுக்கு வர வேண்டியதுதான்,அவளோட சொத்தும் போயிடும்,"என்றான் அவன்.

"எப்போ?" என்றான் ஆகாஷ் பலகீனமாய்.

"இன்னும் ரெண்டே வருஷம்தான்! அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டேன்,ரொம்ப யோசிச்சு இந்த முடிவுக்கு வந்தேன் நம்ம வாழ்க்கையை மாத்தி அமைக்கிறதுன்னு,ஒரு நண்பர்,விஞ்ஞானி இனிமே உனக்கு அறிமுகம் ஆகப் போகிறவர் அவர் செய்த உதவியால்தான் நான் இப்போ இங்கே"என்றான் அவன்.

சிறிது இடைவெளி விட்டு "ஆகாஷ், எதிர் காலத்துல நான் அவளை எதுவும் செய்ய முடியாது,அதனால இப்போ இங்கே அவளைக் கொல்றதுதான் சரி எந்த சந்தேகமும் யாருக்கும் வராது.இதோ பார், இந்த மாத்திரை அவ உடம்புக்குள்ள போனா போதும்.அரை மணில நேச்சுரல் டெத், போஸ்ட் மார்ட்டம் பண்ணாலும் தெரியாது ஏன்னா இப்போ இந்த மருந்து கண்டு பிடிக்கப் படலே.யோசிச்சு முடிவெடு" என்றபடி நகர்ந்து போனான்.

ஆகாஷ் சிறிது நேரம் யோசித்துவிட்டு அந்த மாத்திரையைக் கையில் எடுத்தான்.

&&&&&&&&

"என்ன தேவ்,இப்போ என்ன சொல்ற?நம்ப மாட்டான்,கஷ்டம்னியே!கொஞ்சம் மேக் அப் ,பத்து நிமிஷப் பேச்சு,பய கவுந்துட்டான்.நிலா காலி,ஆகாஷ் ஜெயில்ல,அவன் மாமனார் ஹாஸ்பிடல்ல,பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்,இனிமே கம்பெனி நம்ம கையிலே,மொத்த ஷேரையும் வாங்கிடலாம்,எப்படி"என்றான் அவன்.

"இந்த விஷயத்துல கண்டிப்பா வர்ஷாவுக்குத்தான் தேங்க் பண்ணனும்,ஆகாஷோட அந்தரங்க விஷயங்களை நமக்குச் சொன்னதுக்காக"என்றான் தேவ்.

வர்ஷா சிரித்தபடி கோப்பையை கையிலெடுத்து "சியர்ஸ் ஜென்டில்மென்"என்றாள்.

**********