Monday, May 18, 2009

பிரபலமான பதிவர் ஆக சில யோசனைகள்


குழு அமைத்தல்:

முதலில் நம்மைப் போலவே காத்து வாங்கும் கடை வைத்திருப்போரை சேர்த்து ஒரு குழு அமைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆளுக்கு பத்து ப்ளாக் ஆரம்பித்து ஒருவரை ஒருவர் பாலோ செய்து கொள்ளுங்கள்.பின்னூட்டம் இடவும் சௌகரியம் . அதிகமாக follow செய்யப்படும் ,நிறைய பின்னூட்டம் இடப்படும் ஒரு பதிவராக இருப்பீர்கள்.மறக்காமல் ஏதாவது ஒரு திரட்டியில் சேர்ந்து விடுங்கள்.அப்போதுதான் கைமேல் பலன்.


பின்னூட்டம் இடுதல்:

நம்மைப் போல் இல்லாமல் நல்ல பதிவர்களும் இருக்கிறார்கள் .கன்னா பின்னாவென்று எல்லோருடைய ப்ளாகிலும் நுழைந்து அவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுங்கள்.அவர்கள் எழுதிய இரண்டு வரிகளை காப்பி செய்து போட்டு 20 வரிகள் பாராட்டுங்கள்.முதல் பத்து பின்னூட்டங்களுக்குள் அமைவது சிறப்பு.ஒரு கட்டத்தில் அவர்களே "யார்ரா இவன்" என்று நம்ம கடைப் பக்கமும் வருவார்கள்.வந்து விட்டால் வேறு வழியில்லாமல் நம்முடைய பதிவுகளையும் படிப்பதற்கு சாத்தியம் உள்ளது.


எதிர்ப் பதிவு:

இது மிக முக்கியமான ஒன்று.யார் எதைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாதீர்கள்.உலகம் உருண்டையானது என்றால் கூட எதிர் பதிவு போடுங்கள்.இதனால் சம்பந்தப் பட்டவரும் அவருடைய பதிவுகளை படிப்பவர்களும் உங்களை கவனிக்க வேண்டியதாகிறது.


பதிவுகளின் தலைப்பு மற்றும் பதிவுகளின் தரம்:

தலைப்பு கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.'உலகப் பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்காவின் பங்கு' என்ற தலைப்பைக் காட்டிலும் ,'நமீதாவின் எழுச்சிக்கு காரணம்' என்ற தலைப்புக்கு மவுசு ஜாஸ்தி என்பதை உணருங்கள். பதிவுகளின் தரம்...ம்ம்.....அது ....வந்து அது தெரிஞ்சா நா ஏன் ஈ ஓட்டறேன்.

இதைப் பற்றி நமக்கு கவலையில்லை,விட்டு விடுங்கள்.அடுத்ததைப் பார்ப்போம்.


அழைப்பு:

யாருக்காவது பின்னூட்டம் போட்டால் சும்மா வராதீர்கள்.நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாருங்கள் என்று கூச்சப் படாமல் அழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.நாலு தடவை கூப்பிட்டால் தானாக வருவார்கள்.வந்ததற்கு அடையாளமாக வேறு வழியில்லாமல் நம்ம பதிவை பாராட்டி பின்னூட்டம் இடுவார்கள்.


புனைப்பெயர் வைத்துக்கொள்ளுதல்:

யாராவது ஒரு பிரபலத்தின் பெயரில் எழுத ஆரம்பியுங்கள்.உதாரணமாக கமல் ,ரஜினி, நமீதா ,வாலி ,வைரமுத்து என்றெல்லாம். பிரபலமானவுடன் அவர் பெயரில் எழுதுவதால் வாசகர்கள் குழப்பம் அடைவதால் பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்று அறிக்கை விட்டு விட்டு "மஞ்சமாக்கான்,காத்துவாயன்,திருவாழத்தான் "போன்ற வித்தியாசமான பெயர்களை வைத்துக் கொள்ளலாம்.


இசங்கள் பேசுதல்:
நீங்கள் புத்திசாலி என்று சும்மாவெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதற்காகத்தான் இது.முன் ,பின் நவீனத்துவம் ,க்யுபிசம்,கம்யுனிசம் ,அந்த இசம் ,இந்த இசம் என்று அடிக்கடி பதிவிலும் ,அடுத்தவருக்கு பின்னூட்டம் போடும்போதும் வார்த்தைகளை உபயோகியுங்கள்.பயம் வேண்டாம்,யாரும் அப்படின்னா என்ன? என்று கேட்க மாட்டார்கள்,கேட்டால் அவர்களின் அறியாமை வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினால், ஆமாம் போட்டு வைப்பார்கள்.அதையும் மீறி யாராவது ஒரு அப்பாவி கேட்டு விட்டால் ,கவலை வேண்டாம் ! அதை சாக்காக வைத்து ஒரு பதிவு போடுங்கள்.உங்கள் விளக்கத்தை புரிந்து கொள்ள கோனார் நோட்ஸ் தேவைப்படும் படி பார்த்துக் கொண்டால் போதும்.அடுத்து விளக்கம் கேட்க ஒரு பயலுக்கும் தைரியம் வராது.

பி.கு :தலைப்பை பாருங்கள் ,'பிரபலமான பதிவர்' ஆக என்றுதான் உள்ளது , 'நல்ல பதிவராக' என்று இல்லை.நல்ல பதிவராக ஆக இருக்கும் ஒரே வழி, நிறையப் படிப்பதுதான்.அப்படியே கொஞ்சம் மேல வலது பக்கம் பாத்தீங்கன்னா ஒரு லிஸ்ட் இருக்கும் ,நான் விரும்பி படிக்கிரவங்கன்னு.அவங்களையும் அவங்களைப் போல உள்ள நல்ல பதிவர்களின் ,நல்ல பதிவை படிப்பதினால் நீங்களும் நல்லா எழுத வாய்ப்பு உண்டு.நானும் அதே முயற்சியில் உள்ள ஆளுதான்.அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் , இந்த பதிவு பெயரை மாற்றிக்கொண்ட தாமிராவையும் , 'எதிர்ப் பதிவுத்திலகம்' வால்பையனையும் காயப்படுத்தாது என்கிற நம்பிக்கையில் போட்டது. பெரிய மனுஷங்க பெரிய மனுஷங்கதான் ,மன்னிச்சிடுவாங்க.