Tuesday, March 17, 2009

ஜோதிடம்-ஜோதிடர் ,எது மெய்? எது பொய்?

முதலில் இந்த பதிவை எழுதத் தூண்டிய வால் பையனுக்கு நன்றிகள்.அவர் 2008 July மாதம் எழுதிய இந்த பதிவை நான் படித்ததும் அவர் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு பதிலாகவும் ,மற்றும் இது பற்றிய என்னுடைய கருத்துக்களையும் நான் சொல்லலாமா என்று கேட்டபோது உடனே "தாராளமாக" என்று அனுமதித்தார்.எனவே அவருக்கு என் நன்றி.


விஷயத்துக்குள் நுழையும் முன் என்னைப் பற்றியும் என் தந்தையைப் பற்றியும் சொல்கிறேன்.என் தந்தை ஒரு அரசாங்க வங்கியில் நல்ல பதவியில் இருந்தவர்.அவருடைய Hobby யில் ஒன்று ஜோதிடம்.அதை தொழிலாகச் செய்தவர் அல்ல.அவர் இப்போது எங்களிடையே இல்லை. என்னுடைய 21 வது வயதிற்கு மேல்தான் எனக்கு கடவுள் பற்றிய கேள்விகள் ,ஜோதிடம் மீதான கவனம் ஆகியவை ஏற்பட்டன.என் உறவினர்களில் பலர் இதை ஒரு உப தொழிலாக ஏற்று செய்து கொண்டிருக்கின்றனர்.இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த தலைப்பில் எழுத ,ஒருவரின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க,எனக்கு அதைப் பற்றிய ஞானம் சிறிதளவேனும் உண்டு என்பதை சொல்லத்தான்.


ஆரம்ப காலங்களில் இந்த கணித முறைக்கு இருந்த மதிப்பு இப்போது இல்லை.காரணம் இதை முறையாகவும் குறிப்பாக பொறுமையுடனும் கற்றுக்கொண்டு அதன் பின் கடை விரிப்பவர்கள் வெகுவாக குறைந்து விட்டனர்.ஆயிரம் வேரைக் கொன்றால்தான் (பேரை அல்ல) அரை வைத்தியன் என்பது போல இந்தத் துறையிலும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்.பலரால் முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் இப்போது தெருவுக்கு இரண்டு பேரையாவது பார்க்க முடிகிறது.ஜோதிட சிம்மம் ,சாம்ராட் என்று பல பட்டங்களுடன் நடமாடும் ஜுவல்லரி போல தம்மை விளம்பரப் 'படுத்திக்' கொள்கின்றனர். ஒரே ஒரு ஜாதகத்தை (அதிலும் ஒரே ஒரு கட்டத்தை ) வைத்துக் கொண்டு , தாத்தா ,பாட்டி,அண்ணன் ,தம்பி,சித்தப்பாவோட கொழுந்தியாளுக்கு கூட பலன் சொல்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன். இவர்களைப் போன்றவர்களால் ஒரு அறிவியலாகப் பார்க்க வேண்டிய விஷயத்தை நாம் தவற விட்டு விடக்கூடாது என்பதுவும் இந்த பதிவின் ஒரு நோக்கம்.எனக்குத் தெரிந்தவை ...


ஜாதகத்தில் ராகு,கேது மாற்று திசையில் சுற்றுகிறது, அதே போல் சூரிய குடும்பத்தில் இரண்டு கோள்கள் மாற்று திசையில் சுற்றுகிறது என்கிறார்கள், பெரிய ஆராய்ச்சி என மார்தட்டி கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. நான் சொல்கிறேன் வெகு சமீபத்தில் தான் அவ்வாறு மாற்றப்பட்டது, இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
ஆதி காலத்தில் ஏழு கிரகங்களை வைத்துதான் பலன் சொல்லப் பட்டிருக்கிறது. வராகமிகிரர் என்பவர் எழுதிய நூலில் ராகு மற்றும் கேது என்ற கிரகங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் அதற்க்கு முன் இருந்த பராசரர் ,ஜெயமினி மற்றும் நாடி என்று குறிப்பிடப்படும் நூல்கள் ,சித்தர் எனக் கருதப்படும் புலிப்பாணி ஆகியோரது நூல்களிலேயே இவற்றை முக்கியமாக கருத்தில் கொண்டு பலன்கள் சொல்லபபட்டுள்ளது . இன்று எல்லாராலும் பரவலாக பயன் படுத்தப்படும் முறை பராசரி எனப்படும் பராசரரின் முறையே.கிட்டத்தட்ட 95% ஜோதிடர்கள் இவருடைய விதிகளை அடிப்படையாக வைத்துதான் பலன் சொல்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த ராகு, கேது மற்ற கோள்களைப் போல் அல்லாது எதிர் சுற்றில் சுழலும் நிழல் கிரகங்கள் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் சனியின் சுற்று வட்டப் பாதையோடு தொடர்புடையது என்றும் சொல்லப்பட்டுள்ளது,சமீபத்தில்தான் இந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.தனிப்பட்ட முறையில் இதற்காக 1946 ஆம் வருட பஞ்சாங்கம் வரை பின்னோக்கி போனேன்.எதிர் திசையில்தான் குறிக்கப்பட்டுள்ளது.அதற்க்கு முன் உள்ளது கிரந்த எழுத்தில் உள்ளதையும் பார்த்தேன்.சரியாகத்தான் உள்ளது.வருடத்தைச் சொன்னால் கண்டிப்பாக உண்மையை வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
பெண்ணிற்கு ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா?
பெண்ணிற்கு ஏற்படுவதை போல ஆணுக்கு வெளிப்படையான நிகழ்வு அல்ல அது.மேலும் இதை எழுதியவர்கள் எல்லோரும் ஆண்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஒருவேளை ஆண்கள் இடத்தில் பெண்கள் இருந்திருந்தால் இதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்களோ என்னவோ?உண்மையில் பெண்ணிற்கு எழுதப் படுவதையும் சரியானது என்று நம்ப முடியாது.
இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.
இரண்டு பெண்களை ஒருவர் திருமணம் செய்வது என்பதே தவறு.அதற்க்கு முதல் மனைவியாக இருக்கும் பெண்கள் ஒத்துக் கொள்வார்களா என்ன?புரட்சிகரமான பரிகாரம் என்று நான் அதைச் சொன்னாலும் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்.இதெல்லாம் தனி மனித விருப்பம் ,வற்புறுத்த முடியாது.இரு தார 'யோகம்' என்பது ஆணாதிக்க வார்த்தைதான்.மற்றபடி இதற்க்கு எளிமையான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது .
சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?
நாம் பூமியில் இருக்கிறோம் என்பதால் அதை சேர்க்கவில்லை.சந்திரன் துணை கிரகமே , அருகிலேயே இருப்பதாலும் பூமியில் அதன் தாக்கம் குறிப்பிடும் படி உள்ளதாலும் அது முக்கியத்துவம் பெறுகிறது .நாள்காட்டிகள் அனைத்துமே சந்திரனை அடிப்படையாக வைத்தே கணிக்கப் படுகிறது.சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பது அறிவியல் உண்மை.27 நட்சத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது ஏனென்றால் அவை பூமியின் சுற்று வட்டப் பாதையில் மிக அருகில் இருப்பதனால் .சனி ,ராகு ,கேது பாவ கிரகங்கள் என்பது பொதுவாக சொல்வதுதான்.ஆனால் அவைகளால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பல நூறு விதிகளில் சொல்லப் பட்டுள்ளது.ராஜ யோக அமைப்புகளிலும் இவை பங்கு பெரும். அவை யாருக்கும் எந்த பாவமும் செய்ததாக எந்த குறிப்பும் இல்லை.
தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை?
சந்தேகமே வேண்டாம் ,கண்டிப்பாக தாக்கம் இருக்கும்,இதைப் போன்ற 14 உப கிரகங்களையும் சேர்த்துதான் பார்க்கவேண்டும்,ஆனால் யாரும் செய்வதில்லை.பாதிப் பேருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது என்பது என் அபிப்பிராயம்.
ஜோதிடம் என்பது மன உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,எந்த ஜோதிடரும் அடுத்த வினாடியிலிருந்து உனக்கு நேரம் நல்லாருக்கு என்று சொல்வதில்லை, மூன்று மாதம், ஆறு மாதம் கெடு மட்டுமே கொடுக்க படுகிறது.அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.
உண்மைதான் ,அடுத்த நொடியில் இருந்து என்று யாராலும் சொல்ல முடியாது.காரணம் கிரகங்களின் சுழற்சியோ அல்லது தசைகள் ,புத்தி என கணக்கிடப்படும் காலங்கள் எல்லாமே மாதம் ,அல்லது வருட கணக்கில்தான் வரும்.இதை துல்லியமாக கணக்கிடுபவர்கள் குறைவு. காரணம் இதில் அவியல் மாதிரி பல விஷயங்கள் அடங்கும் ,ஜாதக அமைப்பு,கோள்களின் பெயர்ச்சி,அஷ்டவர்க்க கணிதம் . இனிமே உனக்கு நல்லதுதான் நடக்கும் என்றால் அதை நம்ப வேண்டாம்.எங்குமே இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் ஒருவருக்கு எந்த கெடுதலுமே நடக்காது என்று சொல்லப் படவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.பரிகாரங்கள் சொல்லப்படுவதும் கோவில்களுக்கு போகச் சொல்லுவதும் மன அமைதிக்காகத்தான் .எல்லா நாளும் நல்ல நாளே நீங்கள் மனது வைத்தால்.

தொடர்ந்து எழுத முடியவில்லை .எனவே வால் பையனின் மிச்சமுள்ள கேள்விகளுக்கு அடுத்த பதிவில் விடையளிக்கிறேன்.

20 comments:

வால்பையன் said...

விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் ஜாதகம் பரிகாரம் எதுற்கு?
பரிகாரம் மூலம் மாற்ற முடியும் என்றால் விதி என்பது டுபாக்கூர் மேட்டரா?

ஸ்ரீதர் said...

வால்.விதிப்படிதான் எல்லாமே நடக்கும் என்றால் ஜோதிடம் என்ற ஒன்றே ஏற்பட்டிருக்காது.விதி என்று ஜோதிடத்தில் குறிப்பிடப் படுவன இரண்டே இரண்டு,அவற்றுக்குப் பரிகாரங்களும் கை கொடுக்காது,அவை எந்த மருந்தினாலும் குணப்படுத்த முடியாத வியாதிகளும் மரணமும்.மற்ற அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவையே.

வால்பையன் said...

எனக்கு தெரிஞ்சி ஜாதகம் என்பது சைகாலிஜிகல்ல சொல்ற ஒரு மேட்டர் மட்டுமே!
மத்தபடி அதுனால ஒரு குச்சிய கூட கிள்ளி போட முடியாது!

ஸ்ரீதர் said...

வால்,ஒன்றுமே இல்லாத,அல்லது முழுக்க முழுக்கப் பொய்யான ஒரு விஷயம் இத்தனை தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு போற்றப்பட்டு வருவது எந்த விதத்தில் சாத்தியம்.பொய்யான ஒரு விஷயத்துக்கு ஆயுள் குறைவு.நான் இந்தப் பதிவின் இரண்டாவது பகுதியையும் முடித்து விடுகிறேன்.அதிலேயே உங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் .ஏனெனில் இது பின்னூட்டம்.

வால்பையன் said...

//வால்,ஒன்றுமே இல்லாத,அல்லது முழுக்க முழுக்கப் பொய்யான ஒரு விஷயம் இத்தனை தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு போற்றப்பட்டு வருவது எந்த விதத்தில் சாத்தியம்.//

நிறைய இருக்கு!
சமீபகாலம் வரை பூமி தட்டைன்னு நம்பிகிட்டு இருந்தோம்.

சூரியன் பூமிய சுத்துதுன்னு நம்பிகிட்டு இருந்தோம்.

இன்னும் கடவுள், மதங்களை கட்டிகிட்டு அழுவுறோம்.

அது மாதிரி தான் ஜாதகமும்.

ஸ்ரீதர் said...

வால், நீங்கள் திறமையாக வாதிடுபவர் என்பதை உணர்கிறேன் .நான் பதிவை எழுதி முடிக்கும்போது என்னுடைய கருத்துக்களையும் சேர்த்து முடிவுரையாக எழுத வேண்டும் என்று இருந்தேன்.அதில் நான் எழுத வேண்டியவைகளை சுட்டிக் காட்டும்படி இருக்கின்றன உங்களுடைய கேள்விகள்.மிகவும் நன்றி.வாலைப் பிடித்தாலும் பிடித்தேன் ,அதுவும் புலி வால்.வாதத்தில் புலி என்றேன் .தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.முடிவுரைக்கு அப்புறம் உங்களுடன் இது பற்றி மீண்டும் பேசுவேன்.

வால்பையன் said...

உரையாடலுக்கு முடிவு ஏது?
நாம் இருவருமே ஒரு நம்பிக்கையின் இரு மறுமுனைகளை பிடித்து கொண்டிருக்கிறோம்.
அவ்வளவே!

ஸ்ரீதர் said...

நான் அடுத்த முனையில் இல்லை வால்.உங்கள் அருகிலேயேதான் நானும் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.இரண்டு நாட்கள் ,அதற்குள் பதிவை முடித்து விடுகிறேன்.மிகவும் நன்றி.

balaji said...

என்ன பொறுத்தவரைக்கும் ஜோதிடம்
என்றுமே மெய். ‌சில ஜோதிடர் வேண்டுமானால் உங்களை மாதிரி
பொய்யாக இருக்கலாம்.

வால்பையன் said...

//என்ன பொறுத்தவரைக்கும் ஜோதிடம்
என்றுமே மெய். ‌//

அதை நிறுபிக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு நண்பா!

எதிர்பார்க்கலாமா?

வால்பையன் said...

நான் பாலாஜிய கேட்டேங்க!

ஸ்ரீதர் said...

//என்ன பொறுத்தவரைக்கும் ஜோதிடம்
என்றுமே மெய். ‌சில ஜோதிடர் வேண்டுமானால் உங்களை மாதிரி
பொய்யாக இருக்கலாம்.//

கருத்துக்கு நன்றி திரு.பாலாஜி அவர்களே.நான் பொய்யான ஜோதிடன் அல்ல.ஜோதிடன் ,அவ்வளவே.பார்ப்பதற்கு காசு வாங்குவதில்லை.அது என் தொழிலும் அல்ல. இருப்பினும் நீங்கள் சொல்வதால் நான் காயப்படப் போவதில்லை.ஏனெனில் நான் நல்ல ஜோதிடன் என்று பல நூறு பேரிடம் பாராட்டு வாங்கி விட்டேன்.இன்னமும் என்னைத் தேடி வரும் கூட்டம் இருக்கிறது.அவர்களுக்கும் ,உங்களுக்கும் என் நன்றி.

supersubra said...

//ஆதி காலத்தில் ஏழு கிரகங்களை வைத்துதான் பலன் சொல்லப் பட்டிருக்கிறது//

நானும் இந்த கருத்தை வழி மொழிகிறேன். சனி வியாழான் செவ்வாய் சந்திரன் சுக்கிரன் புதன் சூர்யன் இவை தான் நம் வாழ்க்கையில் கண்டுகொள்ளும் அளவுக்கு நல்ல அல்லது தீய பலன்களை அழிக்கும். மேல் விவரங்களுக்கு

http://yennottam.blogspot.com/2006/05/blog-post.html

கலையரசன் said...

நல்ல அலசல்!
அதனாலதான் காசு உள்ளவங்க ஜாதகத்தை நம்புறாங்களலோ-?

asfar said...

I dont understand where can i start? how can i explain this matter in this modern science world?
small example, If any body say, i must be died tomorrow, what is my feeling.... so how can i mangage my work..........

moulefrite said...

ஜோதிடமே மொத்தத்தில் பொய்தான் ஜோதிடம் மட்டும் உண்மையாக இருந்தால் இந்தியாவில் தேர்தலுக்காக செலவழிக்கும் கோடிகணக்கான பணத்தை நாம் மிச்சபடுத்தலாம் பகுத்தறிவு சிந்தனை இந்த இருபத்தோராவது நுற்றாண்டிலும் வரவில்லை என்பது வேதனையான விஷயம்

moulefrite said...

To Asfar,
what you said is the 100% obsalute truth
Let these idots die with their sucking astrology

ஸ்ரீதர் said...

கருத்துக்கு நன்றி நண்பர்களே.

சிவாஜி said...

நல்ல கருத்துக்கள்... எனக்கு ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாது. இருப்பினும் என்னுடைய நம்பிக்கைகளையும், சந்தேகங்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தவறு என தோன்றினால் மன்னியுங்கள்.

விதி என்று உண்மையில் இருக்கிறதா? இருக்கிறது என்றே இப்போதைக்கு நான் நம்புகிறேன்.

விதியை மாற்ற முடியுமா? மாற்ற முடியும் என்றே இப்போதைக்கு நம்புகிறேன்.

இந்த விதியை மாற்ற வேண்டும்/முடியும் என்ற இந்த எண்ணம் கூட விதியாக இருந்தால்? இருக்கலாம்... ஆனால் இதை நான் "முடிவான விதி"யாக இருக்கலாம் என எண்ணுகிறேன். இதற்கு மேல் பெரிய விதி எதுவும் இருக்காது என்று இப்போதைக்கு எண்ணுகிறேன். இதுதான் முடிவான பேருண்மையாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். நம் ஒவ்வொருவருக்குமான விதிகளை இந்த "முடிவான விதியே" தீர்மானிக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த விதிக்குட்பட்டு நம்முடைய சொந்த விதியை மாற்றலாம் என எண்ணுகிறேன். ஆனால் இந்த "முடிவான விதியை" மாற்றமுடியாது என்று எண்ணுகிறேன். இந்த பெரிய, முடிவான விதியை அறிய முற்பட்டு, அதன் விளைவாக வளர்ந்த அறிவியலே ஜோதிடம் என எண்ணுகிறேன். இயற்கை என்பது கணத்துக் கணம், நம் எண்ணம் செயல் இவற்றைப் பொருத்து, பல்வேறு காரணிகளைச் சார்ந்து, முடிவான விதிக்குட்பட்டு மாறுதலுக்குற்பட்டது என்பதால் நாம் எதை உறுதியாக நம்புகிறோமோ அதுவே நடக்கும் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையில் ஜோதிடம் குறுக்கிட்டு நம் நம்பிக்கையை வலுப்படுத்தவோ சிதைக்கவோ செய்ய முடியும். ஆக நம்மால் இந்த ஜோதிடத்தை பொய்யாக்கவும் முடியும் உண்மையாக்கவும் முடியும் என்றே நான் நினைக்கிறேன். இது நம் மன வலிமையையும் முயற்சியையும் பொறுத்தது என்றே நம்புகிறேன். எனக்கு எல்லா நம்பிக்கையையும் இந்த குறள் தான்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்.

கபீரன்பன் said...

வலைச் சரம் தந்த அறிமுகத்திற்கு நன்றி.

இந்த இடுகையில் விவாதிக்கப்படும் பல விஷயங்கள் என்னுடைய பழைய இடுகையை நினைவூட்டியது. பலருக்கும் உதவலாம். இணைப்பு இங்கே; சனிப் பெயர்ச்சியும் நம் போறாத காலமும்