Monday, March 2, 2009

கொஞ்சம் யோசியுங்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் மிகவும் மதிப்பு வாய்ந்ததும் ,பிரியமானதுமாக எது இருக்க முடியும்? சந்தேகமில்லாமல் மனிதர்கள் முதல் எல்லா உயிரினங்களுக்கும் பிரியமானது அவற்றின் உயிர்தானே?எல்லா உயிர்களும் போராடுவது தன் உயிரைக் காத்துக்கொள்ளத்தான் . எனவேதான் உயிரைக் கொடுப்பது என்பது எல்லா விஷயங்களையும் விட உயர்வானதாக கருதப்படுகிறது.உயர்ந்த தியாகம் என்கிறோம்,சங்க காலம் முதல் இப்போது வரையில் .மன்னன் போரிலே வெற்றி பெற்றால் என் தலையை காணிக்கையாக்குவேன்என்று சொல்லி அப்படி உயிரைக் கொடுத்தவருக்கு நிவந்தங்கள் பல கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது பொது நலனுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களின் நிலை?ஈழத்தில் உள்ள உயிர்களைக் காப்பாற்ற நினைத்து இங்கே உயிர் விட்டவர்களைச் சொல்லுகிறேன்.என்ன நினைத்து உயிரை விட்டார்கள்?எது நடக்கும் என்று எதிர்பார்த்து உயிரை விட்டார்கள்?ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தனக்குப் பின் மாணவ சமுதாயமே திரண்டெழுந்து இந்த கொடுமையை எதிர்த்து நிற்கும் ,மக்கள் அனைவரும் ஒன்றாக அரசை நிர்பந்திக்க, அரசும் ஆவன செய்யும், பல உயிர்கள் மடிந்து போவது தன்னோடு முடிந்து போகும் என்று நினைத்து உயிரை விட்டார் ஒருவர்.நடந்தது வேறு.போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் பண்ணி விட்டு கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை கொடுத்து விட்டார்கள்.எதற்காக ஒரு உயிர் போனதோ அந்த pupose solve ஆகவில்லை இன்று வரை.
இந்த இடத்தில் எனக்கு சில கேள்விகள் ? எத்தனை மாணவர்களுக்கு மற்றும் தமிழர்களுக்கு அவருடைய செய்தி அதன் முழுத் தாக்கத்துடன் வீரியத்துடன் சென்று சேர்ந்திருக்கும்? விடுமுறை என்ற ஒரே அஸ்திரத்தால் முத்து குமாரின் பிரம்மாஸ்திரம் வீழ்த்தப் பட்டு விட்டதா இல்லையா? அதிகபட்சம் ஒரு 10% மாணவர்கள் இதைப் பற்றி யோசித்திருப்பார்களா? ஒரு 10 அல்லது 20 பேர் இதைப் பற்றி சிறிது நேரம் அளவளாவி விட்டு Beer அடிக்கவோ அல்லது சினிமாவுக்கோ போயிருப்பார்கள்.Leave கிடைத்தது என்கிற சந்தோஷம்தானே முக்கால்வாசிப் பேருக்கு இருந்திருக்கும்?இவர்கள்தானே மெஜாரிட்டி ."மாணவன் நினைத்தால் " என்ற ஜல்லி வேலைக்காவாது,இவர்கள் எதையும் நினைக்க மாட்டார்கள்.அதுதான் பிரச்சினையே.அதிக பட்சமாக மாணவர்கள் protest செய்யும் விஷயத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள். ஹாஸ்டல் சாப்பாடு,கல்லூரி நிர்வாகத்தின் குறைபாடுகள் மற்றும் வசதிக் குறைபாடுகள்.அதுவும் எங்கோ ஒன்றிரண்டு அத்தி பூத்தாற்போல. லீவ் விட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.
முத்துக்குமார் என்ன எதிர் பார்த்திருப்பார்?சீனா போல மாணவர்கள் பேரணி நடத்தி பீரங்கிகளை எதிர்த்து நிற்பார்கள் என்றா?எப்போதுமே சாத்தியம் இல்லை.
ஒரு உயிர் போனதுதான் மிச்சம்.அதையும் ஈழத்தில் இழந்த உயிர்களோடு கணக்கில் சேர்த்து விட்டுப் போக வேண்டியதுதான். இவரை அடுத்து இதே காரணத்துக்காக உயிரை விட்டதாக சொல்லப்படுபவர்களின் நிலைமை இன்னும் மோசம்."எங்க ஆளே இல்லை,பொண்டாட்டியோட தகராறாம்"என்று காமெடி பண்ணி விட்டார்கள்.என்ன நினைத்து இவர்களெல்லாம் உயிரை விடுகிறார்கள்?இவர்களும் இங்கேயே பிறந்து, வளர்ந்து இந்த மக்களோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தானே?பக்கத்து வீட்டில் துக்க சம்பவம் நடந்தால் எப்பதான் எடுப்பாணுவ ?போயி வர்றதா வேணாமா? என்று சலித்துக்கொள்ளும் சமூகம் இது.பக்கத்துநாட்டில் நடக்கும் கொலைகளுக்கா குரல் கொடுப்பார்கள்?ஏன் இது உயிரை விட்டவர்களுக்குப் புரியவில்லை?
யாருமே கண்டு கொள்ளவில்லை என்று நான் சொல்லவில்லை.அவர்களின் சதவீதம் Negligible என்கிறேன்.
தாங்கள் தேர்ந்தெடுத்த அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எத்தனையோ வருடங்களாக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்க தைரியமில்லாத ,"எது நடந்தாலும் பரவால்ல ,என் வீட்டுக் கண்ணாடி உடையாம இருந்தா சரி " என்ற மனப்போக்குடைய இவர்களா இதையெல்லாம் கேட்கப் போகிறார்கள்.எனக்கு நம்பிக்கையில்லை.மற்றவர்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பவன் யார்?முதலில் தனக்கு நேரும் அநீதியைப் பொறுத்துக் கொண்டு போகாதவன்தானே?
இது உயிரை விட்டவர்களுக்குப் புரியவில்லையா என்ன?அல்லது Atleast நமக்குப் பின்னாடியாவது திருந்தட்டும் என்று நினைத்திருப்பார்களோ?
எது எப்படியோ இவர்களின் சாவு As usual மக்களால் மறக்கப்பட்டு தலைப்புச் செய்திகளில் இருந்தவர்களை ஆஸ்கார் ரஹ்மானும் ,கலைமாமணி நயன்தாராவும் இடம் பெயர்த்து விட்டார்கள்.அரசு வழக்கம் போல அறிக்கை விட்டு சமாளித்துக் கொள்ளும்.நம்ம மக்களுக்கு ஆயிரம் கவலை.பொழப்ப பார்க்கணும்.
இறந்தவர்களின் ஆன்மா என்று இருக்குமானால் அதற்க்கு:
உடம்பின் வெளியே வைத்துக்கொண்ட தீயை மக்களின் மனத்துக்குள்ளே ஏற்றுவதற்கு ஏதாவது செய்திருக்கலாம்.அப்போது ஒருவேளை நீங்கள் நினைத்தது நடந்திருக்கும.உங்களை மறக்கடிக்க எம் சக தமிழனுக்கு பிரச்சினைகளுக்கு குறைவில்லை.மன்னித்து விடுங்கள் ,முடிந்தால்.

No comments: