Wednesday, March 18, 2009

ஜோதிடம்-ஜோதிடர்-பாகம் 2

ஒருவனுக்கு ஜாதகம் கணிக்கும் போது அவனது பிறந்த இடம் முக்கியமாக படுகிறது,அப்படியானால் அவன் அங்கேயே வாழ்வதானால் மட்டுமே அது சரியாக இருக்கமுடியும். ஆனாலும் பிறந்த இடத்தை விட அவன் உருவான இடம் தானே முக்கியம். முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. மீண்டும் வேறு ஊரில் வாழப்போகும் அவனுக்கு அந்த ஜாதகம் எப்படி சரியாக இருக்கும்?

லக்னம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தைக் குறிப்பது மட்டுமே.நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும்,எத்தனை ஊர் சுற்றினாலும்,நீங்கள் இன்ன தேதியில் காலை பத்து மணிக்கு புதுக்கோட்டையில் பிறந்தவர் என்பது மாறி விடுமா என்ன?பிறந்த இடமும் நேரமும் மாறிலி. ஊரை முக்கியமாக கேட்பது சூரிய உதய நேரத்தை சரியாக கணிக்கவும் ,குழந்தை பிறந்த நேரம் சரியாக கொடுக்கப் பட்டிருக்கிறதா என்பதை அதை வைத்துதான் சரி பார்க்க முடியும் என்பதால்.குழந்தை உருவான நேரத்தை வைத்து கணிக்கப் படும் முறையும் உண்டு.ஆனால் நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்பதால் கடைபிடிக்கப் படுவதில்லை.நிறைய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்த குழந்தை ஆனா பெண்ணா என்பதை வைத்து கொடுக்கப்படும் நேரத்தை சரி பார்த்து விடவும் கணித முறைகள் உண்டு.சரி செய்ய வேண்டி இருந்தாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் வித்தியாசத்தில்தான் இருக்கும்.

ஒருவனின் குணத்தை வைத்து அவன் எவ்வாறு வாழ்வில் இருப்பான் என்று சொல்ல முடியும், இப்படி மொத்த குணங்களையும் ஒருவனுக்கே சொல்லும் போது, காலண்டரில் வரும் ராசி பலன் போல எல்லாம் எல்லோருக்கும் தானே பொருந்துகிறது.

பொதுப்பலன் போடுவது என்பது வியாபார யுக்தி.சர்க்குலேஷன் கூடும்.அது அவர்களுக்குத்தான் நல்லது.படிப்பவர்களுக்கு அல்ல.காலண்டரும் அப்படியே.ஒரு கிரக பெயர்ச்சி ,ஒரே ராசி அல்லது நட்சத்திரத்தில் பிறந்த இருவருக்கு வேறான பலன்களையே தரும். "இன்னிக்கு காலண்டர்ல அவளோட ராசிக்கு சாந்தம்-ன்னு போட்டிருக்கு,லேட்டா போனா அடி விழாது " என்று நினைப்பீர்களானால் பெரிய ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.பொதுப் பலன் என்பது ஜல்லி.நம்ப வேண்டாம்.

ஒருவன் வெளிநாட்டு போக ஜாதகத்தில் யோகம் வேண்டுமென்றால், எல்லா விமானிகளுக்கும், விமான பணி பெண்களுக்கும் அந்த யோகம் இருக்கிறதா?

ஆமாம்.அப்படித்தான் இருக்கும். கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன இதற்க்கு.ஏதாவது ஒன்றில் பொருந்தி விடுவார்கள்.வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளவர்கள் எல்லோரும் போகிறார்களா என்றால் ,இல்லை.அது அவர்கள் விருப்பம்.மற்றவர்களை விட அவர்கள் முயற்சித்தால் சுலபமாக போகலாம்.அவ்வளவுதான்.ஆனால் அமைப்பில்லாதவர்கள் செல்ல முடிவதில்லை.இது என் அனுபவம்.

உங்களின் கூற்றுப்படி எல்லா மனிதர்களும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பண்ணிரண்டு லக்னத்திர்க்குள் தான் பிறக்க வேண்டும் அதற்கு ஒரு பலன்,வானில் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன உங்களுக்கு!? அதற்கு ஒரு பலன்,அந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் நான்கு பாகம் அதற்கு ஒரு பலன், அந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறதோ அது தான் ராசி அதற்கு ஒரு பலன், இந்த பலன்கள் யாவும் ஒரு போல் இருப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனின் மொத்த சராசரி குணங்களும் இந்த நான்கிர்க்குள் அடங்கி விடுகிறது, அப்படியானால் இது உளவியல் ரீதியான டுபாக்கூரா இல்லையா?

குணத்தை சொல்வது என்பது லக்னம் ,கிரக அமைப்பு,நட்சத்திரம் ,ராசி,அஷ்ட வர்க்க அமைப்பு,வர்க்கங்களில் கிரகங்களின் அமைப்பு,கிரகம் சார்ந்துள்ள நட்சத்திரம் என அவியல் மாதிரி சொல்ல வேண்டும்.சில Basic Charecter களுக்கு அமைப்புகள் எளிமையாக சொல்லப் பட்டுள்ளது.கோபக்காரன் ,காமம் அதிகம் உள்ளவன் ,பொறாமை குணம்.... இப்படி. மற்றபடி ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்து மட்டும் குணத்தை சொல்லவே முடியாது,அதே மாதிரி ரொம்பவும் in depth ஆக எல்லாம் போக முடியாது. "இந்த ஜாதகருக்கு மசால் தோசைன்னா விருப்பமா இருக்குமே?"என்றெல்லாம் அளந்தால் அவர் பெயர் நிச்சயமாக 'மெய் மெய்யப்பன் ' என்பதை அறியவும்.

நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை மீண்டும் எடுத்து படிப்பதற்கு பெயர் ஆராய்ச்சியா?

இல்லைதான்.ஒருவேளை ஏதாவது தவறாகச் சொல்லி விட்டாலும்,"அப்படியா!நான் சொன்னது தவறா?அப்படின்னா உங்க ஜாதகம் ஏதோ ஸ்பெஷல் போல .ஆராய்ச்சிக்கு எடுத்துக்கறேன் "என்று சொன்னால் அவர் பெருமையாக OK சொல்லி விடுவார்,ஜோதிடரும் எஸ்கேப் ஆகிவிடலாம். ஆனால் விடுபட்டுப் போன பல விஷயங்களை மீண்டும் excavate செய்து வெளியிட்டவர்களும் இருக்கிறார்கள் ,அவர்கள் வேண்டுமானால் அப்படி சொல்லிக் கொள்ளலாம்.என்னை மாதிரி ஆட்கள் சொல்லக் கூடாது.

No comments: