Saturday, March 28, 2009

ஜாதி நூறொழிய வேறில்லை....

ஜாதிக்கென்று தனியாக ஒரு புத்தி இருக்கிறதா?
இருக்கிறதென்றால் அது எப்படி ஏற்படுகிறது?

சில மாதங்களுக்கு முன் என் நண்பர்களிடம் ,மற்றொரு நண்பர் என்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த போது ஒருவர்,"அது _______ புத்தி ,அவன்கிட்ட நீ ரொம்ப நெருங்கிப் பழகின,நான் அப்பவே சொல்லணும்னு நெனச்சேன்"என்றார்.மற்றொரு நண்பர் "நானெல்லாம் புதுசா ஒருத்தன் வந்தாலே அவன் என்ன ஜாதின்னு தெரிஞ்சுகிட்டுதான் பழகுவேன்,"என்று சொல்லி அதிர வைத்தார்."அது எப்படிங்க ஒருத்தர் கிட்ட பழகும்போது நீ என்ன ஜாதின்னு கேப்பீங்க ? என்றேன் வியப்புடன்.அதற்க்கு அவர் சிரித்தபடி "அது ஒன்னும் பிரமாதமான காரியமில்லை,சாதாரணமா பேசிக்கிட்டிருக்கும் போதே பேச்சு வாக்குல ஒன்னு ரெண்டு ஜாதி பத்தின 'பழமொழிகளை '(!!) எடுத்து விடுவேன் ,அவன் 'அது' இல்லைன்னா சிரிச்சுக்கிட்டே கேட்பான்,எதுக்கு அவன் மொகம் மாறுதோ 'அதுதான்' அவன்"என்றார் பெருமிதத்தோடு.கூட இருந்தவரும் ஆமோதித்தார். என்ன சொல்வதென்று தெரியாமல் விடை பெற்றுக்கொண்டு வந்தேன்.
இத்தனை வருடத்தில் நான் யாரையும் பார்த்து இவன் என்ன ஜாதியாக இருக்கக் கூடும் என்று யோசித்தது கூட கிடையாது.நல்ல மனம் படைத்தவர்களும் ,அது இல்லாதவர்களும் குறிப்பிட்ட ஜாதிகளில் மட்டுமா பிறக்கிறார்கள்? என்னதான் சொன்னாலும் ஜாதிக்கென்று ஒரு அடிப்படை புத்தி இருக்கிறதா என்ற கேள்வி இன்னமும் உள்ளது.அநேகமாக எல்லா ஜாதிகளைக் குறித்தான பழமொழிகளும் இருக்கின்றன .குற்றம் சாட்டுவதைப் போல ,அல்லது எள்ளி நகையாடுவதைப் போல .அதே போல் அவரவர் பிறந்த ஜாதியை பெருமையாக சொல்லிக் கொள்ளவும் தோதாக பழமொழிகளை (!!!) ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.நாட்டுக்காக போராடியவர்களுக்கும் ஜாதிச் சாயம் பூசி பெருமைப் படுகிறார்கள்.ஜாதி என்பது இல்லை என்பதெல்லாம் எல்லோருமாகச் சேர்ந்து அடிக்கும் ஜல்லி.அரசியல் ,கலை,இலக்கியம்,வேலைவாய்ப்பு என அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி விட்ட விஷயம் இது.வேரோடு களைய முடியாத விஷச் செடி,அரசியல்வாதிகளும் தம் பங்குக்கு யாரும் ஜாதியை மறந்து விடாதபடி மிகக் கவனமாக இதைப் பாதுகாக்கிறார்கள்.காதல் திருமணம் ஜாதியை ஒழித்து விடும் என்று சொல்வது இருப்பதிலேயே பெரிய காமெடி.அப்படி காதலித்து கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்களுக்காக ,பிள்ளைக்கு பெற்றோரின் எந்த ஜாதியை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்து கவனமாக ஜாதியைப் பாதுகாக்கிறார்கள்.எப்போது நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை தோன்றாமல் இருக்கிறதோ,எப்போது உங்கள் பிள்ளைகளுக்கு இந்த நஞ்சை ஊட்டாமல் இருக்கிறீர்களோஅப்போது வேண்டுமானால் சாதியற்ற சமுதாயம் என்பது சாத்தியம்.

Wednesday, March 25, 2009

வலையில் மாட்டியது-4

வலையை மேய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்தது.

Thursday, March 19, 2009

ஜோதிடர்-ஜோதிடம்-பாகம் 3

ஜோதிடம் என்பதன் அடிப்படை 'எல்லாம் ஒன்றில் இருந்து வந்தது என்பதால் எல்லாமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது ' என்பதுதான். (Big Bang Theory )
கோள்களின் சாரத்தை வைத்து நடக்கப் போவதை துல்லியமாக கணிக்கக் கூடிய கணித முறைகள் இருந்திருக்கின்றன.ஆமாம் இப்போது அவை இல்லை.நமக்கு கிடைத்திருப்பதை வைத்து ஓரளவே நம்மால் கணிக்க முடியும்.இதில் தங்கள் அனுபவத்தின் மூலம் சிலர் இந்த அமைப்பு இருந்தால் இப்படி நடக்கிறது என்று வெளியிட்டுள்ளனர்.பெரும்பாலும் சரியாகத்தான் உள்ளது. இது ஒரு அறிவியல் மட்டுமே.இதில் கடவுள் என்கிற விஷயம் பின்னால்தான் நுழைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.ஏனெனில் பழைய நூல்கள் என்று கருதப்படும் பலவற்றில்,இப்படி இருந்தால் இது நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளதே தவிர,இந்த கடவுளை வணங்கி இந்த பரிகாரம் செய் என்று சொல்லப் படவில்லை.நான் முதன் முதலில் இந்த துறையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக படித்த நூலில் உள்ள ஒரு வாசகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Fools obey planets, wiseman cange it என்பதே அது.' தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் ' என்பது வள்ளுவம்.

இதை வெறும் அறிவியலாக மட்டுமே பார்ப்பதும் அதனிடத்தில் வாழ்க்கையை ஒப்படைத்து அதன்படி நடப்பதும் தனி மனித விருப்பம்.நான் பார்த்த வரையில் எந்த ஒரு விஷயமும் மாறுதலுக்கு உரியதே.எத்தனையோ கடினமான சூழ்நிலைகளில் இருந்து எந்தவிதமான வழிபாடோ ,பரிகாரங்களோ செய்யாமல் மீண்டவர் பலர்,நான் பார்த்திருக்கிறேன்.இது வேதத்தின் ஒரு பகுதியாக சொல்லப் படுகிறது.ஆனால் இதனுடைய எல்லா பகுதிகளும் நம்மிடம் உள்ளதா என்றால் இல்லை.நடைமுறையில் எத்தனை பேரால் நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடியும்.இதில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் நடந்ததை சொல்வர், ஆனால் நடக்கப் போவதை உறுதி பட சொல்ல முடியாதவர்களே.நடந்தது நமக்கே தெரியும் அதை காசு கொடுத்துக் கேட்பானேன்?நான் இந்தக் கலையை ஒருநாளும் குறை சொல்ல மாட்டேன்.இது எதற்காக சொல்லப் பட்டதோ ,இன்று அதற்காக பயன்படவில்லை என்பதே என் கருத்து .யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.

இன்று இது நல்ல வருமானம் தரக் கூடிய ஒரு துறையாக உள்ளது என்பதாலேயே பல பேர் விஷயம் தெரியுமோ தெரியாதோ வந்து விடுகின்றனர்.அதை செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று ஆயிரக் கணக்கில் பணம் வசூலிக்கின்றனர், இவர்களிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பரிகாரமும் எந்த ஒரு நூலிலும் குறிப்பிடப் படவில்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்,எங்கோ ஒன்றிரண்டு சொல்லப் பட்டிருக்கலாம்,அவைகள் சொல்லப் பட்டதும் மன அமைதிக்காகத்தான். ஆனால் அதற்க்கு கைகால் வைத்து பல பரிகாரங்களை உற்பத்தி செய்து விட்டனர். உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருப்பாராகின் அவருக்கு நாம் ஏதும் தந்து நிறைய வேண்டி இருக்குமா என்ன? எனவே என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால்,முடிந்தவரை ஜாதகம் பார்ப்பதை தவிருங்கள் ,எல்லாமும் உங்களுக்குள்ளேயே உள்ளது, இல்லை பார்த்துதான் ஆக வேண்டும் என்றால்,எவர் இதை தொழிலாகச் செய்யாமல் இருக்கிறாரோ அவரிடம் பாருங்கள். அந்த கல்லைப் போட்டால் அது நடக்கும் இது நடக்கும் என்பதை எல்லாம் நம்ப வேண்டாம்.நம் தலையில்தான் கல் விழும் கடைசியில்.எதையும் ஆராயாமல் சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை.கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்த துறையைப் பற்றி நிறையப் படித்து ,பார்த்து இந்த பதிவை எழுதி உள்ளேன்.இந்த பதிவில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் ,பதில் சொல்வது என் கடமை.

Wednesday, March 18, 2009

ஜோதிடம்-ஜோதிடர்-பாகம் 2

ஒருவனுக்கு ஜாதகம் கணிக்கும் போது அவனது பிறந்த இடம் முக்கியமாக படுகிறது,அப்படியானால் அவன் அங்கேயே வாழ்வதானால் மட்டுமே அது சரியாக இருக்கமுடியும். ஆனாலும் பிறந்த இடத்தை விட அவன் உருவான இடம் தானே முக்கியம். முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. மீண்டும் வேறு ஊரில் வாழப்போகும் அவனுக்கு அந்த ஜாதகம் எப்படி சரியாக இருக்கும்?

லக்னம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தைக் குறிப்பது மட்டுமே.நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும்,எத்தனை ஊர் சுற்றினாலும்,நீங்கள் இன்ன தேதியில் காலை பத்து மணிக்கு புதுக்கோட்டையில் பிறந்தவர் என்பது மாறி விடுமா என்ன?பிறந்த இடமும் நேரமும் மாறிலி. ஊரை முக்கியமாக கேட்பது சூரிய உதய நேரத்தை சரியாக கணிக்கவும் ,குழந்தை பிறந்த நேரம் சரியாக கொடுக்கப் பட்டிருக்கிறதா என்பதை அதை வைத்துதான் சரி பார்க்க முடியும் என்பதால்.குழந்தை உருவான நேரத்தை வைத்து கணிக்கப் படும் முறையும் உண்டு.ஆனால் நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்பதால் கடைபிடிக்கப் படுவதில்லை.நிறைய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்த குழந்தை ஆனா பெண்ணா என்பதை வைத்து கொடுக்கப்படும் நேரத்தை சரி பார்த்து விடவும் கணித முறைகள் உண்டு.சரி செய்ய வேண்டி இருந்தாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் வித்தியாசத்தில்தான் இருக்கும்.

ஒருவனின் குணத்தை வைத்து அவன் எவ்வாறு வாழ்வில் இருப்பான் என்று சொல்ல முடியும், இப்படி மொத்த குணங்களையும் ஒருவனுக்கே சொல்லும் போது, காலண்டரில் வரும் ராசி பலன் போல எல்லாம் எல்லோருக்கும் தானே பொருந்துகிறது.

பொதுப்பலன் போடுவது என்பது வியாபார யுக்தி.சர்க்குலேஷன் கூடும்.அது அவர்களுக்குத்தான் நல்லது.படிப்பவர்களுக்கு அல்ல.காலண்டரும் அப்படியே.ஒரு கிரக பெயர்ச்சி ,ஒரே ராசி அல்லது நட்சத்திரத்தில் பிறந்த இருவருக்கு வேறான பலன்களையே தரும். "இன்னிக்கு காலண்டர்ல அவளோட ராசிக்கு சாந்தம்-ன்னு போட்டிருக்கு,லேட்டா போனா அடி விழாது " என்று நினைப்பீர்களானால் பெரிய ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.பொதுப் பலன் என்பது ஜல்லி.நம்ப வேண்டாம்.

ஒருவன் வெளிநாட்டு போக ஜாதகத்தில் யோகம் வேண்டுமென்றால், எல்லா விமானிகளுக்கும், விமான பணி பெண்களுக்கும் அந்த யோகம் இருக்கிறதா?

ஆமாம்.அப்படித்தான் இருக்கும். கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன இதற்க்கு.ஏதாவது ஒன்றில் பொருந்தி விடுவார்கள்.வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளவர்கள் எல்லோரும் போகிறார்களா என்றால் ,இல்லை.அது அவர்கள் விருப்பம்.மற்றவர்களை விட அவர்கள் முயற்சித்தால் சுலபமாக போகலாம்.அவ்வளவுதான்.ஆனால் அமைப்பில்லாதவர்கள் செல்ல முடிவதில்லை.இது என் அனுபவம்.

உங்களின் கூற்றுப்படி எல்லா மனிதர்களும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பண்ணிரண்டு லக்னத்திர்க்குள் தான் பிறக்க வேண்டும் அதற்கு ஒரு பலன்,வானில் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன உங்களுக்கு!? அதற்கு ஒரு பலன்,அந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் நான்கு பாகம் அதற்கு ஒரு பலன், அந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறதோ அது தான் ராசி அதற்கு ஒரு பலன், இந்த பலன்கள் யாவும் ஒரு போல் இருப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனின் மொத்த சராசரி குணங்களும் இந்த நான்கிர்க்குள் அடங்கி விடுகிறது, அப்படியானால் இது உளவியல் ரீதியான டுபாக்கூரா இல்லையா?

குணத்தை சொல்வது என்பது லக்னம் ,கிரக அமைப்பு,நட்சத்திரம் ,ராசி,அஷ்ட வர்க்க அமைப்பு,வர்க்கங்களில் கிரகங்களின் அமைப்பு,கிரகம் சார்ந்துள்ள நட்சத்திரம் என அவியல் மாதிரி சொல்ல வேண்டும்.சில Basic Charecter களுக்கு அமைப்புகள் எளிமையாக சொல்லப் பட்டுள்ளது.கோபக்காரன் ,காமம் அதிகம் உள்ளவன் ,பொறாமை குணம்.... இப்படி. மற்றபடி ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்து மட்டும் குணத்தை சொல்லவே முடியாது,அதே மாதிரி ரொம்பவும் in depth ஆக எல்லாம் போக முடியாது. "இந்த ஜாதகருக்கு மசால் தோசைன்னா விருப்பமா இருக்குமே?"என்றெல்லாம் அளந்தால் அவர் பெயர் நிச்சயமாக 'மெய் மெய்யப்பன் ' என்பதை அறியவும்.

நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை மீண்டும் எடுத்து படிப்பதற்கு பெயர் ஆராய்ச்சியா?

இல்லைதான்.ஒருவேளை ஏதாவது தவறாகச் சொல்லி விட்டாலும்,"அப்படியா!நான் சொன்னது தவறா?அப்படின்னா உங்க ஜாதகம் ஏதோ ஸ்பெஷல் போல .ஆராய்ச்சிக்கு எடுத்துக்கறேன் "என்று சொன்னால் அவர் பெருமையாக OK சொல்லி விடுவார்,ஜோதிடரும் எஸ்கேப் ஆகிவிடலாம். ஆனால் விடுபட்டுப் போன பல விஷயங்களை மீண்டும் excavate செய்து வெளியிட்டவர்களும் இருக்கிறார்கள் ,அவர்கள் வேண்டுமானால் அப்படி சொல்லிக் கொள்ளலாம்.என்னை மாதிரி ஆட்கள் சொல்லக் கூடாது.

Tuesday, March 17, 2009

ஜோதிடம்-ஜோதிடர் ,எது மெய்? எது பொய்?

முதலில் இந்த பதிவை எழுதத் தூண்டிய வால் பையனுக்கு நன்றிகள்.அவர் 2008 July மாதம் எழுதிய இந்த பதிவை நான் படித்ததும் அவர் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு பதிலாகவும் ,மற்றும் இது பற்றிய என்னுடைய கருத்துக்களையும் நான் சொல்லலாமா என்று கேட்டபோது உடனே "தாராளமாக" என்று அனுமதித்தார்.எனவே அவருக்கு என் நன்றி.


விஷயத்துக்குள் நுழையும் முன் என்னைப் பற்றியும் என் தந்தையைப் பற்றியும் சொல்கிறேன்.என் தந்தை ஒரு அரசாங்க வங்கியில் நல்ல பதவியில் இருந்தவர்.அவருடைய Hobby யில் ஒன்று ஜோதிடம்.அதை தொழிலாகச் செய்தவர் அல்ல.அவர் இப்போது எங்களிடையே இல்லை. என்னுடைய 21 வது வயதிற்கு மேல்தான் எனக்கு கடவுள் பற்றிய கேள்விகள் ,ஜோதிடம் மீதான கவனம் ஆகியவை ஏற்பட்டன.என் உறவினர்களில் பலர் இதை ஒரு உப தொழிலாக ஏற்று செய்து கொண்டிருக்கின்றனர்.இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த தலைப்பில் எழுத ,ஒருவரின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க,எனக்கு அதைப் பற்றிய ஞானம் சிறிதளவேனும் உண்டு என்பதை சொல்லத்தான்.


ஆரம்ப காலங்களில் இந்த கணித முறைக்கு இருந்த மதிப்பு இப்போது இல்லை.காரணம் இதை முறையாகவும் குறிப்பாக பொறுமையுடனும் கற்றுக்கொண்டு அதன் பின் கடை விரிப்பவர்கள் வெகுவாக குறைந்து விட்டனர்.ஆயிரம் வேரைக் கொன்றால்தான் (பேரை அல்ல) அரை வைத்தியன் என்பது போல இந்தத் துறையிலும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்.பலரால் முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் இப்போது தெருவுக்கு இரண்டு பேரையாவது பார்க்க முடிகிறது.ஜோதிட சிம்மம் ,சாம்ராட் என்று பல பட்டங்களுடன் நடமாடும் ஜுவல்லரி போல தம்மை விளம்பரப் 'படுத்திக்' கொள்கின்றனர். ஒரே ஒரு ஜாதகத்தை (அதிலும் ஒரே ஒரு கட்டத்தை ) வைத்துக் கொண்டு , தாத்தா ,பாட்டி,அண்ணன் ,தம்பி,சித்தப்பாவோட கொழுந்தியாளுக்கு கூட பலன் சொல்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன். இவர்களைப் போன்றவர்களால் ஒரு அறிவியலாகப் பார்க்க வேண்டிய விஷயத்தை நாம் தவற விட்டு விடக்கூடாது என்பதுவும் இந்த பதிவின் ஒரு நோக்கம்.எனக்குத் தெரிந்தவை ...


ஜாதகத்தில் ராகு,கேது மாற்று திசையில் சுற்றுகிறது, அதே போல் சூரிய குடும்பத்தில் இரண்டு கோள்கள் மாற்று திசையில் சுற்றுகிறது என்கிறார்கள், பெரிய ஆராய்ச்சி என மார்தட்டி கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. நான் சொல்கிறேன் வெகு சமீபத்தில் தான் அவ்வாறு மாற்றப்பட்டது, இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
ஆதி காலத்தில் ஏழு கிரகங்களை வைத்துதான் பலன் சொல்லப் பட்டிருக்கிறது. வராகமிகிரர் என்பவர் எழுதிய நூலில் ராகு மற்றும் கேது என்ற கிரகங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் அதற்க்கு முன் இருந்த பராசரர் ,ஜெயமினி மற்றும் நாடி என்று குறிப்பிடப்படும் நூல்கள் ,சித்தர் எனக் கருதப்படும் புலிப்பாணி ஆகியோரது நூல்களிலேயே இவற்றை முக்கியமாக கருத்தில் கொண்டு பலன்கள் சொல்லபபட்டுள்ளது . இன்று எல்லாராலும் பரவலாக பயன் படுத்தப்படும் முறை பராசரி எனப்படும் பராசரரின் முறையே.கிட்டத்தட்ட 95% ஜோதிடர்கள் இவருடைய விதிகளை அடிப்படையாக வைத்துதான் பலன் சொல்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த ராகு, கேது மற்ற கோள்களைப் போல் அல்லாது எதிர் சுற்றில் சுழலும் நிழல் கிரகங்கள் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் சனியின் சுற்று வட்டப் பாதையோடு தொடர்புடையது என்றும் சொல்லப்பட்டுள்ளது,சமீபத்தில்தான் இந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.தனிப்பட்ட முறையில் இதற்காக 1946 ஆம் வருட பஞ்சாங்கம் வரை பின்னோக்கி போனேன்.எதிர் திசையில்தான் குறிக்கப்பட்டுள்ளது.அதற்க்கு முன் உள்ளது கிரந்த எழுத்தில் உள்ளதையும் பார்த்தேன்.சரியாகத்தான் உள்ளது.வருடத்தைச் சொன்னால் கண்டிப்பாக உண்மையை வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
பெண்ணிற்கு ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா?
பெண்ணிற்கு ஏற்படுவதை போல ஆணுக்கு வெளிப்படையான நிகழ்வு அல்ல அது.மேலும் இதை எழுதியவர்கள் எல்லோரும் ஆண்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஒருவேளை ஆண்கள் இடத்தில் பெண்கள் இருந்திருந்தால் இதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்களோ என்னவோ?உண்மையில் பெண்ணிற்கு எழுதப் படுவதையும் சரியானது என்று நம்ப முடியாது.
இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.
இரண்டு பெண்களை ஒருவர் திருமணம் செய்வது என்பதே தவறு.அதற்க்கு முதல் மனைவியாக இருக்கும் பெண்கள் ஒத்துக் கொள்வார்களா என்ன?புரட்சிகரமான பரிகாரம் என்று நான் அதைச் சொன்னாலும் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்.இதெல்லாம் தனி மனித விருப்பம் ,வற்புறுத்த முடியாது.இரு தார 'யோகம்' என்பது ஆணாதிக்க வார்த்தைதான்.மற்றபடி இதற்க்கு எளிமையான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது .
சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?
நாம் பூமியில் இருக்கிறோம் என்பதால் அதை சேர்க்கவில்லை.சந்திரன் துணை கிரகமே , அருகிலேயே இருப்பதாலும் பூமியில் அதன் தாக்கம் குறிப்பிடும் படி உள்ளதாலும் அது முக்கியத்துவம் பெறுகிறது .நாள்காட்டிகள் அனைத்துமே சந்திரனை அடிப்படையாக வைத்தே கணிக்கப் படுகிறது.சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பது அறிவியல் உண்மை.27 நட்சத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது ஏனென்றால் அவை பூமியின் சுற்று வட்டப் பாதையில் மிக அருகில் இருப்பதனால் .சனி ,ராகு ,கேது பாவ கிரகங்கள் என்பது பொதுவாக சொல்வதுதான்.ஆனால் அவைகளால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பல நூறு விதிகளில் சொல்லப் பட்டுள்ளது.ராஜ யோக அமைப்புகளிலும் இவை பங்கு பெரும். அவை யாருக்கும் எந்த பாவமும் செய்ததாக எந்த குறிப்பும் இல்லை.
தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை?
சந்தேகமே வேண்டாம் ,கண்டிப்பாக தாக்கம் இருக்கும்,இதைப் போன்ற 14 உப கிரகங்களையும் சேர்த்துதான் பார்க்கவேண்டும்,ஆனால் யாரும் செய்வதில்லை.பாதிப் பேருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது என்பது என் அபிப்பிராயம்.
ஜோதிடம் என்பது மன உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,எந்த ஜோதிடரும் அடுத்த வினாடியிலிருந்து உனக்கு நேரம் நல்லாருக்கு என்று சொல்வதில்லை, மூன்று மாதம், ஆறு மாதம் கெடு மட்டுமே கொடுக்க படுகிறது.அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.
உண்மைதான் ,அடுத்த நொடியில் இருந்து என்று யாராலும் சொல்ல முடியாது.காரணம் கிரகங்களின் சுழற்சியோ அல்லது தசைகள் ,புத்தி என கணக்கிடப்படும் காலங்கள் எல்லாமே மாதம் ,அல்லது வருட கணக்கில்தான் வரும்.இதை துல்லியமாக கணக்கிடுபவர்கள் குறைவு. காரணம் இதில் அவியல் மாதிரி பல விஷயங்கள் அடங்கும் ,ஜாதக அமைப்பு,கோள்களின் பெயர்ச்சி,அஷ்டவர்க்க கணிதம் . இனிமே உனக்கு நல்லதுதான் நடக்கும் என்றால் அதை நம்ப வேண்டாம்.எங்குமே இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் ஒருவருக்கு எந்த கெடுதலுமே நடக்காது என்று சொல்லப் படவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.பரிகாரங்கள் சொல்லப்படுவதும் கோவில்களுக்கு போகச் சொல்லுவதும் மன அமைதிக்காகத்தான் .எல்லா நாளும் நல்ல நாளே நீங்கள் மனது வைத்தால்.

தொடர்ந்து எழுத முடியவில்லை .எனவே வால் பையனின் மிச்சமுள்ள கேள்விகளுக்கு அடுத்த பதிவில் விடையளிக்கிறேன்.

Friday, March 6, 2009

தமில் வால்க

ஒரு வாரப் பத்திரிகையில் செய்தி,ஆங்கிலத்தில் ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் 1000 வார்த்தைகள் உருவாகிறதாம்.இதனால் oxford dictionary சிம்ரன் இடுப்பு மாதிரி இருந்தது ஜோதிகா போல ஆகி இப்போது நமீதா போல ஆயிட்டுதாம்.ஹ்ம்.. என்னவோ தமிள்ல வார்த்தையே வர்றதில்லங்கற மாதிரில்ல இருக்கு.சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டு சொல்றேன்..
முன் குறிப்பு..
இன்னமும் தமில் அகராதியில் இவை சேர்க்கப்படாததில் எனக்கு மிகுந்த வருத்தமே.கூடிய விரைவில் சேர்க்கப் பட வேண்டுமென்று நான் முன் மொளிகிரேன்.
தபா தபா,போ சொல்லோ ,வர்சொல்லோ,போங்கு, ப்பாடு ,மெர்ஸலு,
பீலா ,பகுலு,பேஜாரு,பீட்டரு,சோக்காளி,ரப்ச்சறு,ராவடி,உதாரு,அராத்து,
அப்பாலிக்கா,அப்டிக்கா,டோமரு,ஊரலு,கலக்கலு,பீச்சா,கொரலு,இசு,சவ்வுதாலு,
மேல் டாப்பு,நடு செண்டருதோடா , குந்து, கெய்வி,கயித,கொயிந்த ....
ஒரே ஒரு ஏரியா மட்டுந்தான் கவர் பண்ணீருக்கேன்,மொத்த தமிழ்நாடும் சேந்தா... நம்மளப் பத்தி யாருக்கும் தெரிய மாட்டேங்குது பாஸ்.எல்லாருக்கும் எடுத்துச் சொல்லுங்க.

Monday, March 2, 2009

கொஞ்சம் யோசியுங்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் மிகவும் மதிப்பு வாய்ந்ததும் ,பிரியமானதுமாக எது இருக்க முடியும்? சந்தேகமில்லாமல் மனிதர்கள் முதல் எல்லா உயிரினங்களுக்கும் பிரியமானது அவற்றின் உயிர்தானே?எல்லா உயிர்களும் போராடுவது தன் உயிரைக் காத்துக்கொள்ளத்தான் . எனவேதான் உயிரைக் கொடுப்பது என்பது எல்லா விஷயங்களையும் விட உயர்வானதாக கருதப்படுகிறது.உயர்ந்த தியாகம் என்கிறோம்,சங்க காலம் முதல் இப்போது வரையில் .மன்னன் போரிலே வெற்றி பெற்றால் என் தலையை காணிக்கையாக்குவேன்என்று சொல்லி அப்படி உயிரைக் கொடுத்தவருக்கு நிவந்தங்கள் பல கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது பொது நலனுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களின் நிலை?ஈழத்தில் உள்ள உயிர்களைக் காப்பாற்ற நினைத்து இங்கே உயிர் விட்டவர்களைச் சொல்லுகிறேன்.என்ன நினைத்து உயிரை விட்டார்கள்?எது நடக்கும் என்று எதிர்பார்த்து உயிரை விட்டார்கள்?ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தனக்குப் பின் மாணவ சமுதாயமே திரண்டெழுந்து இந்த கொடுமையை எதிர்த்து நிற்கும் ,மக்கள் அனைவரும் ஒன்றாக அரசை நிர்பந்திக்க, அரசும் ஆவன செய்யும், பல உயிர்கள் மடிந்து போவது தன்னோடு முடிந்து போகும் என்று நினைத்து உயிரை விட்டார் ஒருவர்.நடந்தது வேறு.போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் பண்ணி விட்டு கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை கொடுத்து விட்டார்கள்.எதற்காக ஒரு உயிர் போனதோ அந்த pupose solve ஆகவில்லை இன்று வரை.
இந்த இடத்தில் எனக்கு சில கேள்விகள் ? எத்தனை மாணவர்களுக்கு மற்றும் தமிழர்களுக்கு அவருடைய செய்தி அதன் முழுத் தாக்கத்துடன் வீரியத்துடன் சென்று சேர்ந்திருக்கும்? விடுமுறை என்ற ஒரே அஸ்திரத்தால் முத்து குமாரின் பிரம்மாஸ்திரம் வீழ்த்தப் பட்டு விட்டதா இல்லையா? அதிகபட்சம் ஒரு 10% மாணவர்கள் இதைப் பற்றி யோசித்திருப்பார்களா? ஒரு 10 அல்லது 20 பேர் இதைப் பற்றி சிறிது நேரம் அளவளாவி விட்டு Beer அடிக்கவோ அல்லது சினிமாவுக்கோ போயிருப்பார்கள்.Leave கிடைத்தது என்கிற சந்தோஷம்தானே முக்கால்வாசிப் பேருக்கு இருந்திருக்கும்?இவர்கள்தானே மெஜாரிட்டி ."மாணவன் நினைத்தால் " என்ற ஜல்லி வேலைக்காவாது,இவர்கள் எதையும் நினைக்க மாட்டார்கள்.அதுதான் பிரச்சினையே.அதிக பட்சமாக மாணவர்கள் protest செய்யும் விஷயத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள். ஹாஸ்டல் சாப்பாடு,கல்லூரி நிர்வாகத்தின் குறைபாடுகள் மற்றும் வசதிக் குறைபாடுகள்.அதுவும் எங்கோ ஒன்றிரண்டு அத்தி பூத்தாற்போல. லீவ் விட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.
முத்துக்குமார் என்ன எதிர் பார்த்திருப்பார்?சீனா போல மாணவர்கள் பேரணி நடத்தி பீரங்கிகளை எதிர்த்து நிற்பார்கள் என்றா?எப்போதுமே சாத்தியம் இல்லை.
ஒரு உயிர் போனதுதான் மிச்சம்.அதையும் ஈழத்தில் இழந்த உயிர்களோடு கணக்கில் சேர்த்து விட்டுப் போக வேண்டியதுதான். இவரை அடுத்து இதே காரணத்துக்காக உயிரை விட்டதாக சொல்லப்படுபவர்களின் நிலைமை இன்னும் மோசம்."எங்க ஆளே இல்லை,பொண்டாட்டியோட தகராறாம்"என்று காமெடி பண்ணி விட்டார்கள்.என்ன நினைத்து இவர்களெல்லாம் உயிரை விடுகிறார்கள்?இவர்களும் இங்கேயே பிறந்து, வளர்ந்து இந்த மக்களோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தானே?பக்கத்து வீட்டில் துக்க சம்பவம் நடந்தால் எப்பதான் எடுப்பாணுவ ?போயி வர்றதா வேணாமா? என்று சலித்துக்கொள்ளும் சமூகம் இது.பக்கத்துநாட்டில் நடக்கும் கொலைகளுக்கா குரல் கொடுப்பார்கள்?ஏன் இது உயிரை விட்டவர்களுக்குப் புரியவில்லை?
யாருமே கண்டு கொள்ளவில்லை என்று நான் சொல்லவில்லை.அவர்களின் சதவீதம் Negligible என்கிறேன்.
தாங்கள் தேர்ந்தெடுத்த அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எத்தனையோ வருடங்களாக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்க தைரியமில்லாத ,"எது நடந்தாலும் பரவால்ல ,என் வீட்டுக் கண்ணாடி உடையாம இருந்தா சரி " என்ற மனப்போக்குடைய இவர்களா இதையெல்லாம் கேட்கப் போகிறார்கள்.எனக்கு நம்பிக்கையில்லை.மற்றவர்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பவன் யார்?முதலில் தனக்கு நேரும் அநீதியைப் பொறுத்துக் கொண்டு போகாதவன்தானே?
இது உயிரை விட்டவர்களுக்குப் புரியவில்லையா என்ன?அல்லது Atleast நமக்குப் பின்னாடியாவது திருந்தட்டும் என்று நினைத்திருப்பார்களோ?
எது எப்படியோ இவர்களின் சாவு As usual மக்களால் மறக்கப்பட்டு தலைப்புச் செய்திகளில் இருந்தவர்களை ஆஸ்கார் ரஹ்மானும் ,கலைமாமணி நயன்தாராவும் இடம் பெயர்த்து விட்டார்கள்.அரசு வழக்கம் போல அறிக்கை விட்டு சமாளித்துக் கொள்ளும்.நம்ம மக்களுக்கு ஆயிரம் கவலை.பொழப்ப பார்க்கணும்.
இறந்தவர்களின் ஆன்மா என்று இருக்குமானால் அதற்க்கு:
உடம்பின் வெளியே வைத்துக்கொண்ட தீயை மக்களின் மனத்துக்குள்ளே ஏற்றுவதற்கு ஏதாவது செய்திருக்கலாம்.அப்போது ஒருவேளை நீங்கள் நினைத்தது நடந்திருக்கும.உங்களை மறக்கடிக்க எம் சக தமிழனுக்கு பிரச்சினைகளுக்கு குறைவில்லை.மன்னித்து விடுங்கள் ,முடிந்தால்.