Saturday, February 28, 2009

யார் பிள்ளை?

அந்த நாட்டு அரசனுக்கு எப்போதுமே ஒரு கவலை,என்னன்னா ஒரு முறை நகர்வலம் போனபோது இரண்டு பேர் பேசிட்டிருந்தத கேட்டான் .அதில் ஒருத்தன் "டே,இவன் என்ன ராஜாவோட புள்ளயா?பிச்சைக்காரன் பெத்த புள்ளதான"அப்படின்னு சொல்லிட்டான்.தான் உண்மையிலேயே ராஜா புள்ளதானா இல்லையா அப்படிங்கறதுதான் அவன் கவலை .
இது இப்படி இருக்க ,ஒருநாள் பக்கத்து ஊருக்கு தன் பரிவாரங்களோடு போய் தங்கி இருந்தபோது அவன் தங்கியிருந்த மண்டபத்தின் எதிரே உள்ள ஒரு படலில் வெள்ளரிக்காய் நிறைய காச்சிருந்தது.ராஜா ஒருத்தனைக் கூப்பிட்டு "அதுல ஒரு நாலு காயப் பறிச்சிட்டு வா ,சாப்பிடலாம் "னான்.அப்போ தெருவோரமா உக்காந்திருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் "ராஜா ! அந்த காய சாப்பிட வேணாம் கசக்கும்"னான்.அதுபடியே பறிச்சிட்டு வந்த காயும் கசப்பாத்தான் இருந்தது. ராஜா "நீ இந்த ஊரா"ன்னு கேட்டான்.அதுக்கு அவன் "இல்லை நான் இந்த ஊரு இல்லை வழிப்போக்கந்தான்"ன்னான். ராஜா ஆச்சரியப்பட்டு "பரவால்லயே !அப்புறம் எப்படி கண்டு புடிச்ச?நீயோ குருடன்.ஏற்கெனவே சாப்பிட்டு பாத்தியா?ன்னு கேட்டான். குருடன் சொன்னான்"இல்ல ,நான் சாப்பிடல.ஆனா இத்தனை ஜனம் வந்து போற கோவில் மண்டபம் இது ,இதுக்கு எதுத்தாப்புல ஒரு கொடில இத்தனை காய ஜனங்க சாப்புடாம விட்டு வெச்சுருப்பாங்களா ?அதான் சொன்னேன்"ன்னான்.ராஜாவும் சந்தோஷமாகி " நீ இனிமே எங்கயும் அலைய வேண்டாம்.இங்கயே தங்கிக்கலாம்.தினமும் உனக்கு கோவிலில் இருந்து ஒரு பட்டை சோறு கிடைக்கும்"அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.
கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குதிரை விக்கறவன் ராஜாகிட்ட வந்தான்.குதிரையெல்லாம் காமிச்சு பேரம் பேசி முடிஞ்சதும் சொன்னான்"ராஜா !ஒரு சின்ன பந்தயம்.என்கிட்டே நாலு பெண் குதிரையும் அதோட குட்டிகளும் இருக்கு.தப்பில்லாம தாயையும் குட்டியையும் சரியா சேர்த்துட்டீங்கன்னா இந்த குதிரைக்கல்லாம் காசு வேணாம்"ன்னான்.ராஜா"இதென்ன பெரிய விஷயம்"ன்னுட்டு போய்ப் பாத்தா நாலு குதிரையும் அதோட குட்டிகளும் அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கு எந்த வித்தியாசமும் இல்ல .ராஜா ஒரு நிமிஷம் யோசிச்சு குட்டிகளை அவுத்து விடச் சொன்னார். குட்டிகள் தாய்க் குதிரைகள் கிட்ட போனதும் அதுகளுக்கே தெரியல அதோட அம்மா யாருன்னு.ராஜா "எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடு ,கண்டு பிடிக்கறேன் "ன்னு சொல்லிட்டு,மந்திரிகிட்ட வந்து "அன்னிக்கு கோவில் மண்டபத்துல பாத்தனே ,அந்த குருடனைக் கூட்டிட்டு வாங்க "ன்னான். அவன் வந்ததும் பிரச்சினையைச் சொல்லி என்ன பண்ணலாம்னான்.குருடன் "குட்டிக வேணும்னா திணறலாம்,ஆனா தாய்க்குத் தெரியும் குட்டி எதுன்னு,அதனால தாய்க் குதிரைகளை அவுத்து விடச் சொல்லுங்க"ன்னான்.அதே மாதிரி செய்து கண்டு பிடிச்சதும் ராஜா சந்தோஷமாகி "உனக்கு இனிமே ரெண்டு பட்டை சோறு தரச் சொல்றேன் சாப்பிடு"ன்னான்.
அப்போ ஒரு வைர வியாபாரி ராஜாவைப் பாக்க வந்தான்.அவனும் அதே மாதிரி எல்லாம் பேசி முடிஞ்சதும் "ராஜா!என்கிட்டே ஒரு அற்புதமான பெரிய வைரம் இருக்கு.அதைப் போலவே ஒரு கண்ணாடிக் கல்லும் இருக்கு எது அசல்னு கண்டு புடிங்க பாக்கலாம்"ன்னான்.வழக்கம் போல குருடன்கிட்ட கேட்டாரு ராஜா ,அவன் "ரெண்டையும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயில்ல வையுங்க ,கண்ணாடி சீக்கிரம் சூடாகும் ,வைரம் அப்படி ஆவாது"அப்படிங்க , ராஜாவும் அப்படியே செஞ்சு கண்டு பிடிச்சிட்டாரு.வழக்கம் போல சந்தோஷமா இன்னொரு பட்டை சோறு கொடுக்கச் சொல்லிட்டு,அவனை தனியா கூப்பிட்டுப் போயி தன் கவலையைச் சொல்லி ,தான் யாருன்னு கண்டு புடிக்க முடியுமான்னு கேட்டாரு.
அவன் கொஞ்சமும் யோசிக்காம "ராஜா ! நீ பிச்சைக்காரன் புள்ளதான்,ஏன்னா நான் எவ்வளவோ புத்திசாலித் தனமா உன் பிரச்சனையைத் தீத்து வெச்சேன்.இதே ராஜா பெத்த புள்ளன்னா பொன்னையோ பொருளையோ கொடுப்பான்.ஆனா உன் புத்தி சோத்து மேலதான் இருந்தது,அத தாண்டி உன்னால யோசிக்க முடில பாத்தியா?"ன்னான்.

2 comments:

வால்பையன் said...

வாய் விட்டு சிரித்தேன் முடிவில்!
நல்ல கதை

வேர்டு வெரிபிகேசனை தூங்குங்க தலைவா!

ஸ்ரீதர் said...

Word verification modified.மிக்க நன்றி வால்.