Saturday, February 28, 2009

யார் பிள்ளை?

அந்த நாட்டு அரசனுக்கு எப்போதுமே ஒரு கவலை,என்னன்னா ஒரு முறை நகர்வலம் போனபோது இரண்டு பேர் பேசிட்டிருந்தத கேட்டான் .அதில் ஒருத்தன் "டே,இவன் என்ன ராஜாவோட புள்ளயா?பிச்சைக்காரன் பெத்த புள்ளதான"அப்படின்னு சொல்லிட்டான்.தான் உண்மையிலேயே ராஜா புள்ளதானா இல்லையா அப்படிங்கறதுதான் அவன் கவலை .
இது இப்படி இருக்க ,ஒருநாள் பக்கத்து ஊருக்கு தன் பரிவாரங்களோடு போய் தங்கி இருந்தபோது அவன் தங்கியிருந்த மண்டபத்தின் எதிரே உள்ள ஒரு படலில் வெள்ளரிக்காய் நிறைய காச்சிருந்தது.ராஜா ஒருத்தனைக் கூப்பிட்டு "அதுல ஒரு நாலு காயப் பறிச்சிட்டு வா ,சாப்பிடலாம் "னான்.அப்போ தெருவோரமா உக்காந்திருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் "ராஜா ! அந்த காய சாப்பிட வேணாம் கசக்கும்"னான்.அதுபடியே பறிச்சிட்டு வந்த காயும் கசப்பாத்தான் இருந்தது. ராஜா "நீ இந்த ஊரா"ன்னு கேட்டான்.அதுக்கு அவன் "இல்லை நான் இந்த ஊரு இல்லை வழிப்போக்கந்தான்"ன்னான். ராஜா ஆச்சரியப்பட்டு "பரவால்லயே !அப்புறம் எப்படி கண்டு புடிச்ச?நீயோ குருடன்.ஏற்கெனவே சாப்பிட்டு பாத்தியா?ன்னு கேட்டான். குருடன் சொன்னான்"இல்ல ,நான் சாப்பிடல.ஆனா இத்தனை ஜனம் வந்து போற கோவில் மண்டபம் இது ,இதுக்கு எதுத்தாப்புல ஒரு கொடில இத்தனை காய ஜனங்க சாப்புடாம விட்டு வெச்சுருப்பாங்களா ?அதான் சொன்னேன்"ன்னான்.ராஜாவும் சந்தோஷமாகி " நீ இனிமே எங்கயும் அலைய வேண்டாம்.இங்கயே தங்கிக்கலாம்.தினமும் உனக்கு கோவிலில் இருந்து ஒரு பட்டை சோறு கிடைக்கும்"அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.
கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குதிரை விக்கறவன் ராஜாகிட்ட வந்தான்.குதிரையெல்லாம் காமிச்சு பேரம் பேசி முடிஞ்சதும் சொன்னான்"ராஜா !ஒரு சின்ன பந்தயம்.என்கிட்டே நாலு பெண் குதிரையும் அதோட குட்டிகளும் இருக்கு.தப்பில்லாம தாயையும் குட்டியையும் சரியா சேர்த்துட்டீங்கன்னா இந்த குதிரைக்கல்லாம் காசு வேணாம்"ன்னான்.ராஜா"இதென்ன பெரிய விஷயம்"ன்னுட்டு போய்ப் பாத்தா நாலு குதிரையும் அதோட குட்டிகளும் அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கு எந்த வித்தியாசமும் இல்ல .ராஜா ஒரு நிமிஷம் யோசிச்சு குட்டிகளை அவுத்து விடச் சொன்னார். குட்டிகள் தாய்க் குதிரைகள் கிட்ட போனதும் அதுகளுக்கே தெரியல அதோட அம்மா யாருன்னு.ராஜா "எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடு ,கண்டு பிடிக்கறேன் "ன்னு சொல்லிட்டு,மந்திரிகிட்ட வந்து "அன்னிக்கு கோவில் மண்டபத்துல பாத்தனே ,அந்த குருடனைக் கூட்டிட்டு வாங்க "ன்னான். அவன் வந்ததும் பிரச்சினையைச் சொல்லி என்ன பண்ணலாம்னான்.குருடன் "குட்டிக வேணும்னா திணறலாம்,ஆனா தாய்க்குத் தெரியும் குட்டி எதுன்னு,அதனால தாய்க் குதிரைகளை அவுத்து விடச் சொல்லுங்க"ன்னான்.அதே மாதிரி செய்து கண்டு பிடிச்சதும் ராஜா சந்தோஷமாகி "உனக்கு இனிமே ரெண்டு பட்டை சோறு தரச் சொல்றேன் சாப்பிடு"ன்னான்.
அப்போ ஒரு வைர வியாபாரி ராஜாவைப் பாக்க வந்தான்.அவனும் அதே மாதிரி எல்லாம் பேசி முடிஞ்சதும் "ராஜா!என்கிட்டே ஒரு அற்புதமான பெரிய வைரம் இருக்கு.அதைப் போலவே ஒரு கண்ணாடிக் கல்லும் இருக்கு எது அசல்னு கண்டு புடிங்க பாக்கலாம்"ன்னான்.வழக்கம் போல குருடன்கிட்ட கேட்டாரு ராஜா ,அவன் "ரெண்டையும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயில்ல வையுங்க ,கண்ணாடி சீக்கிரம் சூடாகும் ,வைரம் அப்படி ஆவாது"அப்படிங்க , ராஜாவும் அப்படியே செஞ்சு கண்டு பிடிச்சிட்டாரு.வழக்கம் போல சந்தோஷமா இன்னொரு பட்டை சோறு கொடுக்கச் சொல்லிட்டு,அவனை தனியா கூப்பிட்டுப் போயி தன் கவலையைச் சொல்லி ,தான் யாருன்னு கண்டு புடிக்க முடியுமான்னு கேட்டாரு.
அவன் கொஞ்சமும் யோசிக்காம "ராஜா ! நீ பிச்சைக்காரன் புள்ளதான்,ஏன்னா நான் எவ்வளவோ புத்திசாலித் தனமா உன் பிரச்சனையைத் தீத்து வெச்சேன்.இதே ராஜா பெத்த புள்ளன்னா பொன்னையோ பொருளையோ கொடுப்பான்.ஆனா உன் புத்தி சோத்து மேலதான் இருந்தது,அத தாண்டி உன்னால யோசிக்க முடில பாத்தியா?"ன்னான்.

Wednesday, February 25, 2009

தாமரை சூத்திரம்

அவள் ஒரு பேரழகி.அவளை மணக்க பல இளைஞர்கள் போட்டி போட்டனர்.ஆனால் அவளோ யாரிடத்திலும் விருப்பமில்லாது இருந்தாள்.அவளுடைய தாய் மிகவும் வற்புறுத்திய பின் ஒரு நிபந்தனை உடன் சம்ம்மதித்தாள்.என்ன நிபந்தனை என்றால் புத்தரின் தாமரை சூத்திரத்தை யார் நாளை காலைக்குள் மனப்பாடம் செய்து பிழையில்லாது சொல்கிறார்களோ அவரையே மணப்பேன் என்றாள். தாமரை சூத்திரமோ மிகவும் பெரியது .அதை ஓரிரவுக்குள் மனப்பாடம் செய்வது என்பது எளிதல்ல . இருப்பினும் அந்த அறிவிப்பை கேட்டு மறு நாள் காலை 300 பேர் வந்திருந்தனர்.ஒரு பெண் 300 பேரை மணப்பது சாத்தியமா? எனவே யார் இந்த சூத்திரத்துக்கு நாளை பொருள் கூறுகிறார்களோ அவரையே மணப்பேன் என்றாள். மறு நாள் வெறும் 3 பேராக எண்ணிக்கை குறைந்து விட்டது.மூவரை எப்படி மணப்பது யார் இதை அனுபவித்து உணர்ந்தார்களோ அவரையே மணப்பேன் என்று சொல்லி விட்டாள்.மறுநாள் ஒருவன் மட்டுமே வந்தான்.அவளது தாய் "வீட்டின் பின்புறம் அவள் உனக்காக காத்திருக்கிறாள்"என்றாள்.இவன் சென்றவுடன் அவள் அங்கு இல்லை ஆனால் அவளின் காலணிகள் அங்கு இருந்தன .அதற்கு மேல் வெட்டவெளியாக இருந்தது திரும்பி பார்த்தான் அந்த வீடும் அங்கு இல்லை.சிரித்தான்.அவனுக்குப் புரிந்து விட்டது.

இது சத்தியமா எனக்குப் புரியலீங்க.புரிஞ்சவங்க எனக்கு சொல்லுங்க.

Sunday, February 22, 2009

நான் கடவுளா?

இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள் ,இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்).

கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,ஆஸ்திகர்கள்,நாஸ்திகர்கள்,ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக,பலர் ஆஸ்திகர்கள்,என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவர்களுக்கு இந்த பதிவு.ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன்.

கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.நாளடைவில் அதற்குப் பல்வேறு முகங்கள் ஏற்பட்டு விரிவடைந்திருக்க வேண்டும்.சடங்குகளை ஏற்படுத்தி அதை தொடர்வதால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் ஏற்பட்டு விட்டது இப்போது.

கடவுள் இருக்கிறாரா இல்லையா?என்று யோசிக்கக் கூடத் தயாராக இல்லை பலர்.என் நண்பர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்"என்று கொதித்தார்.sensitive விஷயம்.

எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்?அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை என்கிறார்கள் .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.

சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை.இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட.சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.மனோ சக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது.ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.

இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்டது இப்போது.அதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வழிமுறைகள் மருவி வெறும் சடங்காக மாறி விட்டது.கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று.

Monday, February 16, 2009

முல்லா


முல்லா ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்.அது ஒரு கப்பலில் உள்ள வேலை.முன் அனுபவம் எதுவும் இல்லாத முல்லாவைப் பார்த்து அந்த முதலாளி எரிச்சலுடன் கேள்வி கேட்க ஆரம்பித்தார்."நீ கப்பலில் சென்று கொண்டிருக்கிறாய்,அப்போது பெரிய அலை ஒன்று வருகிறது,உதவிக்கோ அங்கு யாருமில்லை .என்ன செய்வாய்?"என்றார்.முல்லா சிறிதும் யோசிக்காமல்"கப்பலில் உள்ள கனமான நங்கூரத்தை எடுத்து வெளியில் போடுவேன்"என்றார்."இன்னுமொரு மிகப்பெரிய அலை வருகிறது!அப்போது?".முல்லா"மீண்டும் அதிக கனத்தை வெளியில் இறக்குவேன்"என்றார்."மீண்டும் அதை விடப் பெரிய அலை ஒன்று வந்தால்.."முல்லா"மீண்டும் அதிக கனமான பொருளை கப்பலில் இருந்து தொங்க விடுவேன்"என்றார்.எரிச்சலான முதலாளி "அந்த கனமான பொருள்களை எங்கிருந்து பெறுவாய்?"என்றார்.முல்லா அமைதியாக "நீங்கள் அந்த அலைகளை எங்கிருந்து பெறுவீர்கள்? என்றார்.

முல்லா

முல்லா ஒரு முறை வெளியூரில் இருந்து திரும்பிய பொது நீண்ட தாடியுடன் இருந்தார்.நண்பர்கள் அதைக் கிண்டல் செய்த போது முல்லாவும் தன் தாடியைப் பற்றி இழிவாக பேசி கோபப்பட்டார்.திகைத்துப் போன நண்பர்கள் "முல்லா!இந்த தாடி உனக்குப் பிடிக்கவில்லை என்றால் எடுத்து விட வேண்டியதுதானே?ஏன் வளர்க்கிறாய்?" என்று கேட்டனர்.முல்லா முகத்தில் ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் "ஏனென்றால் என் மனைவிக்கும் இது பிடிக்கவில்லை"என்றார்.

**********

முல்லா தன் நூறாவது பிறந்த நாளை கொண்டாடியபோது மக்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு எப்படி அவர் நூறு வயது வாழ்கிறார்,அவருடைய ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன ?என்று கேட்டனர்.முல்லா " நான் மதுவை தொட்டதே இல்லை,பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை,இதுதான் நூறு வயதின் ரகசியம் "என்றார். அப்போது வீட்டினுள் பாத்திரங்கள் உருளும் ஓசையும்,குழப்பமான சப்தங்களும் கேட்டன.முல்லா"யாரும் பயப்பட வேண்டாம்.அது என் அப்பாதான்.ரொம்ப மோசம்.கண்டபடி குடித்துவிட்டு வேலைக்காரியை துரத்திக் கொண்டிருப்பார்"என்றார்.

Thursday, February 12, 2009

மரணத்திலிருந்து தப்பி....


ஒரு அரசன் மரணம் தன்னை நெருங்குவதைப் போல கனவு கண்டான்.அதில் ஒரு கரிய உருவம் "நாளை மாலை நான் உன்னை கொண்டு செல்வேன் தயாராக இரு"என்று சொல்லி விட்டு மறைந்தது.அதிர்ச்சி அடைந்த அரசன் அந்த இரவில் தன் அவையைக் கூட்டினான். மந்திரிகள்,சோதிடர்கள்,பல்கலை வித்தகர்கள் அடங்கிய அந்த அவையில் தனக்கு நேர்ந்ததை விவரித்தான்.என்ன செய்வது என்று கேட்டான்.உடனே எல்லோரும் கூடி விவாதிக்கத் தொடங்கினர்.நேரம் சென்று கொண்டே இருந்தது ,ஆனால் யாரும் ஒரு முடிவுக்கு வரவில்லை . ஆளாளுக்கு தங்கள் கருத்தை வலியுறுத்தியும் மற்றவருடையதை ஆட்சேபித்தும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.விடியத் தொடங்கியது,அப்போது அரசனின் வயதான வேலைக்காரன் ஒருவன் மெதுவாக அவனருகில் வந்தான்.சிறு வயதிலிருந்து அரசனை வளர்த்தவன் அவன்."அரசே ! இவர்கள் எல்லாம் படித்தவர்கள்.தம்முடைய அறிவைக் காட்டுவதற்காகவே வாதம் செய்பவர்கள்.இவர்கள் எப்போதும் எந்த பிரச்சினையிலும் ஒரு முடிவுக்கு வந்ததே கிடையாது.அதோ பாருங்கள் விடியத் தொடங்கி விட்டது.எனக்கு ஒரு யோசனை,நீங்கள் உடனே இந்த இடத்தை விட்டுச் சென்று விடுங்கள்.இந்த நாட்டை விட்டு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம்.நீங்கள் கண்ட அந்த உருவம் கண்டிப்பாக இங்கேதான் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.எனவே தாமதிக்காதீர்கள்"என்றான்.அது அரசனுக்கும் சரியென்று பட்டது.அவையினரை விவாதத்தில் விட்டு விட்டு சொல்லாமல் வெளியேறினான்.தன் குதிரைகளில் சிறந்த ஒன்றின் மீதேறி பறந்தான்.எங்கும் நிற்கவில்லை,தொடர்ந்து சென்று மாலை நேரத்தில் தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஆற்றுப் பகுதியை அடைந்தான்.அதற்கு மேல் எதிரி நாடு.அங்கே செல்வது மரணத்திற்கு ஒப்பானது.எனவே அங்கிருந்த ஒரு மரத்தடியில் இறங்கினான்.சூரியன் மறைந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு கரிய உருவம் மரத்தின் மேலிருந்து தொப்பென்று அவனருகில் குதித்தது."நல்லது !எங்கே நீ தாமதித்து விடுவாயோ என்று நினைத்தேன்,உன் குதிரைக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.சரியான நேரத்தில் ,சரியான இடத்தில் உன்னை கொண்டு வந்து சேர்த்து விட்டது"என்றது.

-ஓஷோ

Wednesday, February 11, 2009

தபு சங்கர் கவிதைகள்


எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
************************************
அன்று
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
**********************************

Monday, February 9, 2009

சொர்க்கமும் நரகமும்

ஒரு மனிதனும் அவனுடைய நாயும் ஒரு நீண்ட சாலையின் வழி நடந்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அவனுக்கு தானும் தன் வளர்ப்பு நாயும் ஒரு விபத்தில் இறந்து விட்டோம் என்று ஞாபகத்துக்கு வந்தது.இறந்து விட்ட நாம் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் மேலும் நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் சென்றதும் ஒரு மிகப்பெரிய கோட்டை கதவு ஒன்றைப் பார்த்தான்.மிக மிக அழகிய தங்கத்தாலான கதவு ,முத்துக்களாலும் வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அங்கே இருந்த வாயிற் காப்பாளனிடம்,"இது என்ன இடம்?"என்று கேட்டான்."இதுதான் சொர்கம்"என்றான் அங்கே நின்றிருந்தவன்."நாங்கள் இருவரும் உள்ளே செல்ல அனுமதி உண்டா?"என்று கேட்டான் இவன்."மன்னிக்கவும்!பிராணிகளுக்கு இங்கே அனுமதி கிடையாது .வேண்டுமென்றால் நீங்கள் மட்டும் உள்ளே போகலாம்"என்றான் காப்பாளன்.இவனுக்கு தான் வளர்த்த நாயை பிரிய மனமில்லை.எனவே வேண்டாம் என மறுத்து விட்டு மேலும் நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு சிறிய வீடு அழகான இயற்கை சூழலில் அமைந்திருப்பதைக் கண்டான்.அங்கே ஓய்வாக அமர்ந்திருந்த ஒருவரைப் பார்த்து குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்றான்.அவர் அருகில் உள்ள ஒரு குழாயை காண்பித்து அவனுடைய நாய் நீர் அருந்த ஒரு தட்டையும் கொடுத்தார்.ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அந்த இடத்தைப் பற்றி விசாரித்தான்.அவர் "இதுதான் சொர்க்கம்" என்றார்.குழப்பம் அடைந்த அவன் சற்று முன் தான் கண்டதை விவரித்தான்.அவர் புன்னகையுடன் "நீ பார்த்தது சொர்க்கமல்ல , அதுதான் நரகம்.தன்னை நம்பி உடன் வருபவர்களை கைவிடுபவர்களுக்கு அந்த இடம் சரியானதுதான்" என்றார்.


வலையில் மாட்டியது-4

கணவன் ஒருவன் மனைவி குளித்து விட்டு வெளியே வந்ததும் தான் குளிப்பதற்காக பாத்ரூம் உள்ளே நுழைந்ததும் , வாசலின் அழைப்பு மணி ஒலித்தது.மனைவி உடலில் துண்டுடன் கதவைத் திறந்தாள்.பக்கத்து வீட்டு சாம் நின்றிருந்தான்.அவனுக்கு எப்போதுமே இவள் மேல் ஒரு கண். இவளைப் பார்த்ததும் "அந்த துண்டை கீழே விட்டால் எண்ணூறு டாலர் தருவேன் "என்றான். அவள் அதை செய்ததும் சில நொடிகள் பார்த்து விட்டு எண்ணூறு டாலரை அவள் கையில் கொடுத்து விட்டு சென்றான்.கணவன் வெளியே வந்ததும் "வந்தது யார்?" என்றான்."பக்கத்து வீட்டு சாம்"என்றவுடன் கணவன் "அவன் எனக்குத் தர வேண்டிய எண்ணூறு டாலரைப் பற்றி ஏதாவது சொன்னானா?" என்றான்.

Sunday, February 8, 2009

என்னுடையதல்ல...புத்தர் தன் பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள் ,புத்தரை, அவருடைய போதனைகளை வெறுப்பவர்கள்.எனவே ஆனந்தா என்ற அவருடைய பிரதான சீடர் அந்த வழியாக செல்ல வேண்டாம் என்றார்.ஆனால் புத்தர் அதை மறுத்து அந்த வழியாக சென்றார்.அவர் ஊருக்குள் நுழைந்ததுமே அந்த மதவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித சலனமும் இன்றி அந்த இடத்தை விட்டுச் சென்றார்.அந்த ஊரைக் கடந்ததும் இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க முடியவில்லை "குருவே ! அவர்கள் உங்களை எந்த அளவு கேவலமாக பேசி விட்டனர்,நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம் குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து ஏதாவது சொல்லி விட்டு வந்திருக்கலாமே"என்றார்.புத்தர் அமைதியாக தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி
"ஆனந்தா! இது யாருடையது?" என்றுகேட்டார்.
"இது உங்களுடையது"
"இல்லை இது உன்னுடையது ,இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்" என்றார்.சிறிது நேரம் சென்றதும் மீண்டும்"ஆனந்தா!இது யாருடையது ?" என்று கேட்டார்.
"இது என்னுடையது ஸ்வாமி!"
"எப்படி ? இது என்னுடையது என்று சொன்னாயே?"
"ஸ்வாமி!இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள்.நான் அதை ஏற்றுக் கொண்டதால் இது என்னுடையதாயிற்று"என்றார்.
"ஆம் , நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால் அது உன்னுடையதாயிற்று ,அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை,எனவே அவை என்னுடையதல்ல"என்றார்.