Tuesday, January 6, 2009

கலை உலக சேவைக்காக ...

நகைச்சுவை எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் திரு.தேவன் அவர்கள். மிக மிக எளிமையான அதே சமயம் தனித்தன்மை மிக்க அவருடைய எழுத்துக்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது . இந்த கதையை முதலில் என்னுடைய சாதாரண நடையில்தான் எழுதினேன் . நகைச்சுவை கதை என்பதால் (அல்லது அப்படி நான் நம்புவதால்) ஏன் அவருடைய நடையை முயற்சிக்க கூடாது என்று பின்னர் மாற்றிவிட்டேன். உயரே பறந்தாலும் ஊர்க்குருவிதான் , தெரிந்தே எழுதினேன் . இனி...
***************************************
வாங்கோ சார்.. என்ன பார்த்து ரொம்ப நாளாகி விட்டதே ! சும்மா ஒன்னும் திண்ணையில் உக்காந்திருக்கலை சார் . நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் சார். கலை உலகத்தை வாழ்விக்கும் பொருட்டாகவும், உண்மையான கலைத்தாகம் கொண்டு அலையும் ( நல்ல கதைகளுக்குத்தான் ) வாசகர்களை மகிழ்விக்கவும் , எழுத்தாளனாகி வாரம் இரண்டு ,மூன்று கதைகளையாவது எழுதித் தள்ளி விட வேண்டியது என்று. மற்றபடி பணம் , பிராபல்யம் மற்றும் இன்ன பிற லோகாயதமான விஷயங்களுக்காக என்று யாரும் கற்பனை பண்ண வேண்டாம்.
கதை எழுதுவதற்கு முன் கவிஞராகி விடலாம் என்றுதான் உத்தேசித்து இருந்தேன் . ஆனால் பாருங்கள், நான் கவிதை எழுதி விடுவேன் , அது ஒன்றும் எனக்கு கஷ்டமான காரியம் இல்லை .அதற்க்குத்தான் நிறைய பேர்வழிகள் இருக்கிறார்களே . எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் பக்கத்துக்கு இரண்டு வீதம் , எதுகை மோனையுடன் , நாலு வரிக்குள் முடித்து விடுகிறார்கள். நானும் அவர்களோடு சேரத்தயாரில்லை , இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் நான் ஒரு சாதாரண ஆளில்லை என்று.
ஆக எழுத்தாளனாகி விடுவது என்று எனது மனைவி, குழந்தைகள் , அம்மா , பாட்டி , சித்தப்பா , சித்தி ,எல்லோரும் சொல்ல தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டேன். உடனே எடு பேனாவையும் காகிதத்தையும் ! எழுதித் தள்ளி விடலாம் என்றா நினைக்கிறீர்கள் . அதுதான் இல்லை . பாவம் ! உங்களுக்கு உலக அனுபவம் கம்மி போலிருக்கிறது .
டாக்டர் ஆகவேண்டுமென்றால் படித்தால் மட்டும் போதுமா? அதற்கு என்று இன்னார்தான் டாக்டர் என்று அடையாளம் காட்டுவதற்கு சில விஷயங்கள் இருக்கிறது இல்லையா? கழுத்தில் எந்நேரமும் பரமசிவன் மாதிரி ஒரு ஸ்டெதஸ்கோப் , வெள்ளை கோட்ட்டு போன்றவைதான் அவர் டாக்டர் என்பதற்கே அடையாளம் இல்லையா? அதே மாதிரி எழுத்தாளர் என்றால் தாடி , பெரிய கண்ணாடி , நீண்ட முடி அல்லது பரட்டைத்தலை , பைஜாமா ஜிப்பா , ஜோல்னா பை, அந்தக்காலத்து மைக்கூடு பேனா மாதிரி பெரிய பேனா இத்யாதிகள் வேண்டியிருக்கும்.என்னது ?!! மூளையா?!! கதை எழுதவா?!! அதுதான் இங்கே ஏராளமா இருக்கே சார். ஏன் அவசரப்படுகிறீர்கள் நீங்கள்? புரிகிறது! ஒரு உண்மையான எழுத்தாளனின் ஜீவரசம் பாயும் எழுத்துகளை படிக்க ஆவலாக இருக்கிறீர்கள் !. இருங்கள்! இருங்கள்!
ஆக முதலில் தாடி வளர்த்து விடுவது என்று முடிவெடுத்து விட்டேன்.கூடவே ஜடா முடியும். இரண்டும் சேர்ந்தால் கண்மூடி கதை பற்றி சிந்திக்கும் பொழுது அப்படியே மோனத் தவத்திலிருக்கும் ரிஷிகள் போலிருக்கதோ!? அறிவாளிகளுக்கென்று ஒரு அடையாளம் வேண்டாமா?! ஒரு ரெண்டு மாதம் பொறுங்கள்.
*********************************
ஆச்சு சார் ! முடி வளர்த்தாச்சு ! கூடவே போட்டுக்கொள்ள பைஜாமா ஜிப்பாவும் ரெடி . இனி கதைகளை எழுதித்தள்ளி விட்ட வேண்டியதுதான் . எந்த மாதிரி கதைகள் என்றா கேட்டீர்கள் ??! எனக்கு ...... எல்லா விதமான கதைகளும் எழுத வரும் சார் . இருந்தாலும் வெகு ஜன ரசனைன்னு ஒன்னு இருக்கில்லையா ? அதனால துப்பறியும் கதைகள் எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டேன் . தலைப்பு கூட ரெடி , " மிஸ் லீலாவின் லீலா வினோதங்கள்" ங்கறதுதான் அது . கதையை படித்தீர்களென்றால் கண்ணீர் விட்டு விடுவீர்கள்! என்னது ? அவ்வளவு மோசமா ?!! ஆனந்த கண்ணீர் சார்!! நீங்க வேற!!
கதை எப்படி போகிறது என்றால் மிஸ் . லீலா என்பவள் தன் வேலைக்காரியுடன் ஒரு வீட்டில் தனியாக வசிக்கிறாள் . திடீரென்று ஒரு நாள் அவளுடைய விலை உயர்ந்த ஒரு பொருள் காணாமல் போகிறது . யார் அதை எடுத்தார்கள் ? என்று தெரியாமல் துப்பறியும் மேதை சுப்புவிடம் கம்பிளைன்ட் பண்ணுகிறாள் . அந்த கேசை அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டு , பல தடைகளை தாண்டி, மயிர் கூச்செறியும் விதத்தில் கண்டு பிடிக்கிறார். என்னது??!! வேலைக்காரிதான் எடுத்திருப்பாள் என்கிறீர்களா?!!.. ஹ்ம்ம் ...ம்ம்ம்... பரவாயில்லை சார் ! கண்டு பிடித்து விட்டீர்களே !! உங்களுக்கும் என்னோடு சேர்ந்தவுடன் மூளை நன்றாக வேலை செய்கிறது பாருங்கள். உடனே இதை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி விட வேண்டியதுதான் . என்ன சார் ?!! இதிலே லீலாவோட லீலை என்ன இருக்கிறது ? என்றா கேட்டீர்கள்?!! ம்ம்ம்... அதுவும் சரிதான் . தலைப்பை " சுப்புவுக்கு கிடைத்த துப்பு " என்று மாற்றி விடுகிறேன் .
**********************************************
என்ன சார்? ரொம்ப நாளா இந்த பக்கம் காணுமே உங்களை? வெளியூர் போயாச்சா ? அதான் ... என்னது ? கதையா? ஹ்ம்ம்... கலி காலம் சார் .. என்ன செய்வது ?!! நான் எழுதினது கதையே இல்லையாம் ! இதிலே துப்பறிய என்ன வேண்டிக்கிடக்கு , குப்பை , மகா மோசம் என்றெல்லாம் கடிதம் எழுதி திருப்பி அனுப்பி விட்டார்கள் இந்த பத்திரிக்கைகாரர்கள் . இருக்கட்டும் ... இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது ? ஒரு மகா எழுத்தாளனின் சிந்தனை ?!!
இதனாலெல்லாம் நான் சோர்ந்து போயிட மாட்டேன். ம்ம் தாடியா ?? சரி கலை உலகத்துக்குத்தான் என் சேவை கிடைக்கலியே ? சரி விஞ்ஞான உலகமாவது என்னால முன்னேறட்டும் என்று விஞ்ஞானியாக முடிவெடுத்து விட்டேன் . உடனே ஆகி விட முடியுமா? உங்களுக்கு ஒன்னுமே புரிகிறதில்லை சார் ! அதற்கென்று ஒரு வரை முறை இருக்கு சார்! பார்த்தா விஞ்ஞானின்னு எல்லோருக்கும் தெரிய வேண்டாமோ? சார்!சார்! என்னதிது? ஏன் ஓடுறீங்க ?!! சார்!!

No comments: