Tuesday, January 27, 2009

உனக்குத் தெரியுதா?


ரத்தம் குடிக்கும் வவ்வால் ஒன்று வாயில் புது ரத்தத்துடன் குகைக்குள் நுழைந்தது . ரத்த வாடை வந்ததும் மாற்ற வவ்வால்கள் அதை சூழ்ந்து கொண்டன . எங்கே கிடைத்தது என நச்சரிக்க ஆரம்பித்தன , இந்த வவ்வால் அமைதியாக "என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்கள் "என்றது . ஆனால் மற்றவை சும்மாயில்லாமல் எங்கே எங்கே என தொந்தரவு செய்ததும்"சரி என் பின்னே வாருங்கள்"என வெளியே அழைத்துச் சென்றது.மலையைத் தாண்டி வந்ததும் ஒரு பாறையின் மேல் வந்து அமர்ந்தது .எல்லோரையும் பார்த்து "அதோ அந்த சிறிய பாறை தெரிகிறதா?"என்று கேட்டது."தெரியுது " என்றன எல்லா நண்பர்களும்."அதன் அருகில் ஒரு ஆலமரம் தெரிகிறதா?"என்றது ,எல்லாரும் "தெரியுதே" என்றன,"எனக்கு அப்போது தெரியவில்லை!" என்றது அமைதியாக.


Saturday, January 24, 2009

யாருக்கு இழப்பு?


அவன் ஒரு கல்லூரி மாணவன்.படிப்பிலும் விளையாட்டிலும் வல்லவன்.நிறைய நண்பர்கள் ,நண்பிகள்.அதே கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் மீது அவனுக்கு காதல்.ஆனால் அதை அவளிடம் சொல்லத்தான் தைரியம் இல்லை அவனுக்கு.நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவனுக்குத் தைரியம் கொடுத்தனர். அவள் உன்னை மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை , நீ சொல் அவளிடம் என்றனர்.இவனும் தயங்கித் தயங்கி ஒரு நாள் அவளிடம் தன் விருப்பத்தை சொன்னான்.அவள் உடனேயே தெளிவாக மறுத்து விட்டாள்,மேலும், ஒரு நாளும் அவனிடத்தில் தனக்கு எந்த ஈர்ப்பும் ஏற்பட்டதில்லை என்றாள்.அவன் அதற்கு மேல் அவளிடத்தில் ஏதும் சொல்லாது சென்றான்.

மறுநாள் அவன் நண்பர்கள் அவனைப் பார்க்கச் சென்றனர்.மிகுந்த வருத்தத்தில் இருப்பவனைத் தேற்றி கல்லூரிக்கு வரச் சொல்ல வேண்டும் என்றிருந்தனர்.ஆனால் அவர்கள் அவனைப் பார்த்த போது வழக்கம் போல மிகுந்த உற்சாகத்துடன் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.நண்பர்கள் ஆச்சரியத்துடன் விசாரித்தனர். அவன் " அவள் என்னை மறுத்ததற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும் ? உண்மையில் அவள் மேல் மிகவும் அன்பு வைத்திருந்த , அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த ஒருவனை அவள்தான் இழந்திருக்கிறாள்.நானோ என் மேல் எப்போதுமே அன்பில்லாத ஒருவரை தெரிந்து கொண்டு விட்டேன்.இழப்பு எனக்கல்ல!" என்றான் தெளிவாக.

Friday, January 23, 2009

வலையில் மாட்டியது-3

கோபிந்த் ராம் என்கிற சிந்தி தன் முதலாளியிடம் உலகத்தில் தனக்குத் தெரியாத பெரிய மனிதர்களே கிடையாது என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தான்.எரிச்சலான முதலாளி டாம்க்ரூஸை தெரியுமா ?என்றார்."டாமி!நன்றாகத் தெரியுமே"என்றான் கோபிந்த். உடனே இருவரும் ஹாலிவுட் சென்றனர்.டாம் க்ரூஸின் வீட்டுக் கதவைத் தட்டியவுடன் அவரே கதவைத் திறந்தார். உடனே"ஹல்லோ !கோபிந்த் ! நல்ல வேளையில் வந்திருக்கிறாய்.நீயும் உன் நண்பரும் என்னுடன் உணவு அருந்தலாம் வாருங்கள்"என்றார்.முதலாளிக்கு ஆச்சரியம்.அங்கிருந்து வெளியே வந்தவுடன், முதலாளி இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அதிர்ஷ்டவசமாக தான் டாம் க்ருசை சொல்லி விட்டோம் என நினைத்தார் ,ஆனால் கோபிந்த் வேண்டுமென்றால் வேறு யாரையாவது சொல்லுங்கள் என்றான். இந்த முறை முதலாளி சற்று யோசித்து , ஜார்ஜ் புஷ் என்றார்.கோபிந்த் உடனே " ஜார்ஜி! நன்றாகத் தெரியும் !" என்றான்.எனவே இருவரும் வாஷிங்க்டன் சென்றனர் . வெள்ளை மாளிகை அருகில் சென்றதும் ஒரு காரில் சென்று கொண்டு இருந்த புஷ் காரை நிறுத்தி, "ஹலோ கோபிந்த்! சாரி ! ஒரு அவசர மீட்டிங் ,இருந்தாலும் வாருங்கள் ஒரு டீ சாப்பிடலாம்"என உள்ளே அழைத்துச் சென்றார். அங்கிருந்து வெளியே வந்ததும் கோபிந்த் வேறு யாரையாவது பார்க்க வேண்டுமா என்றான். இந்த முறை இவனிடம் மாட்டக் கூடாது என எண்ணிய முதலாளி, போப் என்றார். "தாராளமாக" என்றான் கோபிந்த்.வாடிகனுக்கு சென்றனர். ஏக கூட்டம்.கோபிந்த்"இந்த கூட்டத்தில் அவர் என்னை பார்ப்பது கஷ்டம்,நான் மேலே சென்று போப்புடன் பால்கனிக்கு வருகிறேன் நீங்கள் கீழிருந்து பாருங்கள் எனக்கு எல்லா செக்யூரிடிகளையும் நன்றாகத் தெரியும்"என்று சொல்லி விட்டு சென்றான். சிறிது நேரத்தில் போப்புடன் பால்கனியில் அவன் தோன்றி எல்லோரையும் பார்த்து கையசைத்து விட்டு கீழே இறங்கி வந்த போது முதலாளி மயங்கிக் கிடந்ததையும்,மருத்துவர்கள் முதலுதவி செய்வதையும் பார்த்தான்.என்ன நடந்தது என்று அவர் எழுந்ததும் விசாரித்தான்." ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது , நீ பால்கனியில் போப்புடன் வந்தபோது என் பக்கத்தில் இருந்தவன் அங்கே கோபிந்துடன் பக்கத்தில் நிற்பது யார் என்று கேட்டான்,அவ்வளவுதான் தெரியும் "என்றார்.

Thursday, January 22, 2009

வலையில் மாட்டியது-2


அந்த தம்பதிகளின் நாற்பதாவது திருமண நாள் இரவு. இருவரும் படுக்கைக்குச் சென்ற பின் பாட்டி மெதுவாக ஆரம்பித்தாள்,"அன்பே ! முன்பெல்லாம் நீ எப்பொழுதும் என் கையை பிடித்துக் கொண்டுதான் படுத்துக் கொள்வாய்"என்றாள். தாத்தா மெதுவாக கையை நீட்டி அவள் கையை பிடித்துக் கொண்டார்.பாட்டி"அன்பே! அப்புறம் மெதுவாக நீ என்னை முத்தமிடுவாய்", தாத்தா லேசான எரிச்சலுடன் மிகவும் பிரயாசைப்பட்டு எழுந்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு படுத்துக் கொண்டார். சிறிது நேரம் சென்றதும் பாட்டி மறுபடியும் ஆரம்பித்தாள் "அன்பே!அதற்கு அப்புறம் என்ன செய்வாய் ஞாபகம் இருக்கிறதா?மெதுவாக என் கழுத்தில் கடிப்பாய்"என்றாள்.தாத்தா கடுப்பாகி போர்வையை விசிறி அடித்து விட்டு படுக்கையில் இருந்து இறங்கினார். பாட்டி கலவரமாகி "எங்கே போகிறீர்கள் ?" என்றாள் . "என் பல் செட்டை எடுக்க"என்றார் தாத்தா.

Sunday, January 18, 2009

கவிதையல்ல ....


**************************************
உனக்காக ஒரு
கவிதைஎழுத வேண்டும்..
வார்த்தைப் பூச்சிகளைப்பிடிக்க
எச்சில் கூட்டிவலை பரப்பிக் காத்துக்கிடக்கிறது...
சிந்தனைச் சிலந்தி,சிக்கவில்லை ஏதும் பல நாளாய் ...
காதலை சொல்லிடும் வார்த்தைகளை
விட அதைக் கோர்க்கும்மௌனமே அழகு என்பாயானால் ..
மேற்சொன்னதும் கவிதைதான்.
**************
கூடு விட்டு
பறக்கும்பறவைகளின் ஒலியில் ,
தூரத்தில் கேட்கும் மெல்லிய
இசையின் லயிப்பில்,
இன்றும் கலைந்து விட்டது
இரவில் கருக்கொண்ட கவிதை...
காலை நேரங்களின் பரபரப்பில்
வேலையில் புதையும்
விரைவான மணித்
துளியில்அழிந்து விடுகின்றன கவிதைகள் ...
நட்பு முகங்கள் தேடிச் சலித்துப் போன மனதில்
கவிதைக்கென எந்த இடமும் மிச்சமில்லை..
உறவுகளை தக்க வைத்துக்கொள்ள
தெரியாத மனதுக்கு ,
கவிதைகளை சுமக்கத்திராணியில்லை..
தராசுகளுடன் திரியும் மனிதர்களுக்கு
கவிதைத் தாள்களின் எடை குறைவாகவே
தெரியும்காயம் பட்டு குருதி வடியும்
மனதைக் கட்ட கவிதை
கைக்குட்டைகள்போதுமானதாக இல்லைஇருப்பினும்
இரவுநேரப் புரளலில் தினமும் கருக்கொண்டே விடுகிறது
விடியலில் சிதையக் காத்திருக்கும்
ஒரு கவிதை..

வலையில் மாட்டியது-1
ஒரு மருந்துக் கடையில் அந்த வினோதமான மெஷின் வைக்கப்பட்டிருந்தது.மருந்து வாங்க வந்த ஒருவன் ஆர்வமாக அது என்ன மெஷின் என்று விசாரித்தான்.கடைக்காரன்"அது ஜப்பானில் இருந்து வந்துள்ளது,சிறுநீரை அதில் ஊற்றினால் பரிசோதித்து என்ன வியாதி என்று கண்டுபிடித்து சொல்லி விடும்"என்றான்.நான் அதை உபயோகிக்க விரும்புகிறேன்,என்ன கட்டணம் ?" என்றான்."ஒரு டாலர்தான்" என்றான் கடைக்காரன். உடனே தன்னுடைய சிறுநீரை சேகரித்து அதில் ஊற்றினான்.மெஷின் கிர்ர்ர்ர் என்ற சப்தத்துடன் இயங்க ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் ஒரு துண்டு பேப்பர் வெளியே வந்தது.அதில் "உன்னுடைய உடலில் ஆல்கஹால் அதிகம் உள்ளது , அதிகமாக குடிக்காதே " என்றிருந்தது.


மெஷினை சோதித்துப் பார்க்க விரும்பிய அவன் வீட்டிற்குச் சென்றவுடன் தன்னோடது மட்டுமல்லாமல் , தன் மனைவி, மகள் , தன் நாய் மற்றும் பக்கத்து வீட்டுக்கார நண்பன் ஆகியோரது சிறுநீர் மாதிரிகளை சேகரித்து ஒன்றாக கலக்கி அந்த கடைக்கு மீண்டும் சென்று மெஷினுக்குள் ஊற்றினான். கிர்ர்ர்ர்ர்ர் ...கட கட என்ற வினோத சப்தத்துடன் ஒரு சீட்டு வெளியே வந்தது.அதில் "உன் நாய்க்கு குடல் புழு உள்ளது மருந்து கொடுக்கவும், உன் மகள் கோக்கைன் உபயோகிக்கிறாள்,உன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்,ஆனால் அதற்கு காரணம் பக்கத்து வீட்டுக்காரன்"என்று இருந்தது.

Saturday, January 17, 2009

வலையில் மாட்டியது

அந்த மாலை நேரத்தில் நியூயார்க் நகர மதுபான விடுதி ஒன்றில் ஒரு குருடன் நுழைந்தான். கண் தெரியா விட்டாலும் சரியாக நடந்து ஒரு டேபிளில் உட்கார்ந்தான். பார்மேன் என்ன வேண்டும் என்று கேட்டதற்கு"இதோ பார் !எனக்கு கண் தெரியாது என்பது உண்மைதான்.எனக்கு வேண்டியதெல்லாம் முப்பது வருட பழைய ஒயின் மட்டுமே,வேறு எதையும் கொடுக்காதே.நான் கண்டு பிடித்து விடுவேன்"என்றான். பார்மேனுக்கு சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.முதலில் ஐந்து வருட ஒயினை கொடுத்தான். குருடன் அதைக் குடித்ததுமே"யாரை ஏமாற்றப் பார்க்கிறாய் ! இது ஐந்து வருட பழசுதான் " என்றான்.அசந்து போன பார்மேன் மீண்டும் பத்து வருடம் ஆன ஒயினை கொடுத்தான். மீண்டும் குருடன் சுவைத்தவுடன் பலமாக தலையை ஆட்டி "இல்லை , இது பத்து வருடத்து ஒயின்தான்"என்றான்.இப்படியே 15,20 என்று சோதனை நடந்து கொண்டிருந்த போது , இதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு கிழவன் குருடன் அருகில் வந்து," இதை குடித்துப் பாரேன்" என்று அவன் கையில் இருந்த க்ளாசை கொடுத்தான். அதைக் குடித்த குருடன்"ச்சீ ! இது என்ன சிறுநீர் போல இருக்கிறது" என்றான். கிழவன்"அதேதான்!இப்போது என் வயது என்ன என்று சொல் பார்க்கலாம்"என்றான் ஆர்வமாக.

Friday, January 16, 2009

கருமி


அந்த மிகப்பெரிய சந்தையில் ஒரு கருமி தன் பணப்பையை தொலைத்து விட்டான்.நீண்ட தேடுதலுக்குப் பின்,அதைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்து பொற்காசுகள் தருவேன் என அறிவித்தான்.அந்தப்பை ஒரு பிச்சைக்காரன் கையில் கிடைத்தது.அவன் நேர்மையாக அதை கருமியின் கையில் கொண்டு வந்து சேர்த்தான். இப்போது கருமிக்கு பிச்சைக்காரனுக்கு பத்து பொற்காசுகள் தர மனமில்லை,எனவே பையில் உள்ள காசுகளை எண்ண ஆரம்பித்தான்.அவன் வைத்திருந்த தொண்ணூறு காசுகளும் சரியாக இருந்தது. கருமி "நான் இதில் நூறு காசுகள் வைத்திருந்தேன்.இப்போது பத்து குறைவாக இருக்கிறது.நீதான் அதை எடுத்திருக்க வேண்டும்.எனவே உனக்கு நான் எதுவும் கொடுக்கப்போவதில்லை" என்றான். பிச்சைக்காரனுக்கு கோபம் வந்து விட்டது."நான் என் வாழ்நாளில் எவர் பொருளையும் திருடியதில்லை. நீ காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கலாம்.ஆனால் நீ என்னை திருடன் என்று அவமானப்படுத்தி விட்டாய். உன்னை சும்மா விடப்போவதில்லை " என்று அந்த ஊரின் நீதி மன்றத்துக்கு இழுத்துச் சென்றான்.
வழக்கை கேட்ட நீதிபதி,கருமியிடம்" நீ உன் பையில் நூறு காசுகள் வைத்திருந்தது உண்மையா?"என்று கேட்டார்.கருனி கொஞ்சமும் அச்சப்படாமல் ஆமாம் என்றான். நீதிபதி"அப்படி என்றால் இது உன் பணப்பையாக இருக்க முடியாது ,ஏனென்றால் இதில் தொண்ணூறு காசுகளே உள்ளது , இது கண்டு எடுத்தவனுக்கே சொந்தம்.நீ உன் பையை தேடி எடுத்துக்கொள்" என்றார். அதிர்ச்சி அடைந்த கருமி தான் செய்த தவறை ஒத்துக்கொண்டான்.பிச்சைக்காரனுக்கு அவன் முன்னமே கூறியபடி பத்து பொற்காசுகளை அளித்தான்.

Thursday, January 15, 2009

வரிசைகள் ஆயிரம்காலையில் கண்ணை விழித்ததுமே உள்ளுக்குள்ளே அலாரம் அடித்தது.இன்றைக்கு எப்படியும் எலெக்ட்ரிசிட்டி பில்லைக் கட்டி விட வேண்டும்.தேதி வேறு ஆகி விட்டது , எட்டரை மணிக்கு கவுன்ட்டர் திறந்ததும் முதல் ஆளாக போய் நின்று கட்டி விட்டால் தொல்லை விட்டது , என்று புத்திசாலித்தனமாக நினைத்துப் போனால் ,என்னைப் போலவே (!)கிட்டத்தட்ட நூறு புத்திசாலிகள் அங்கே வரிசையில் நின்றிருந்தார்கள்.தெரிந்த ஒருவர் " வாங்கசார் !"என்று வரவேற்பு வேறு கொடுத்தார். என்னை விட முன்னாலேயே வந்து விட்டாராம்! கடுப்பை அடக்கிக் கொண்டு "என்ன சார் , முன்னாலயே வந்துட்டீங்க போல" என்றேன் புன்னகையுடன். கொடுங்க நானே கட்டிடுரேன் என்று கேட்பாரோ என்று சற்று அருகில் போனேன். மனுஷன் எமகாதகன்.கிட்டே போனதும் "லைன்ல நில்லுங்க சார்! பின்னாடி ஆள் சேர்ந்துடும்" என்றார்.
வேறு வழியில்லாமல் அசட்டு சிரிப்பு சிரித்தபடி பின்னால் வந்து நின்று ஜோதியில் ஐக்கியமானேன்.கவுன்ட்டர் திறந்தது. அது வரை சாதுவாக நின்றிருந்த லைன் திடீரென்று என்னை நெருக்கியவாறு சற்று முன்னே நகர்ந்தது . சற்று நேரத்திலேயே பல இடங்களில் இருந்தும் பல விதமான சத்தங்கள், "யோவ் ! முன்னாலே நகர்ந்தாத்தானே நான் நகர", " ஹலோ கொஞ்சம் தள்ளித்தான் நில்லுங்களேன்", "ஒரு பில்லு போட எவ்வளவு நேரம்".எனக்கு முன்னால் இருந்த ஒரு பெருசு என்னிடம் திரும்பி "இந்த சிஸ்டமே தப்பு சார், வீட்ல ரீடிங் எடுக்கும் போதே காசையும் வாங்கிட்டா நல்லது" என்றார். "கர்நாடகாவுல எல்லாம் அந்த சிஸ்டம் தான் சார் , மாசா மாசம் வந்து கலெக்ட் பண்ணி பில்லும் அப்பவே கொடுத்திடுவாங்க " என்று அவர் எரிச்சலுக்கு எண்ணையை ஊற்றினேன்.இதற்கிடையில் அதிமேதாவிகள் சிலர் வரிசையின் இடையே நுழைய முயற்சிக்க ,மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஆரம்பித்தது . "யோவ் ! காலைலேர்ந்து நிக்கிறவனெல்லாம் கேனையனா? எடையில வந்து நுழையிற" ," இங்கதான் சார் நின்னுட்டிருந்தேன் ,பாத் ரூம் போனேன்,சார் சொல்லுங்க !நான் இங்கதான நின்னேன்". "சாரி !நோ ஐடியா!" . ஒரு வழியாக கவுன்ட்டர் அருகே வந்து அறுபத்தி மூன்று ரூபாயைக் கட்டி அடைசலில் இருந்து வெளியில் வருவதற்குள் மணி பத்தரை. ஆறாவது பே கமிஷன் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் அரசாங்க அதிகாரிகள் மக்கள் கஷ்டத்தை பற்றி முடிந்தால் யோசித்துப் பார்க்க வேண்டும்.

Thursday, January 8, 2009

எப்போதோ படித்தது


எப்படி பாதுகாக்க?
குடைக்கம்பியில்
உன் கை ரேகை ..
******
நீ என்னோடு இல்லாத
சமயங்களில் எல்லாம்
நானும் என்னோடு இருப்பதில்லை .
******
தண்டவாளத்தில் தலைசாய்த்து
பூத்திருக்கும் ஒற்றைப்பூ
என் காதல்,
நீ ரயிலில் வருகிறாயா?
அல்லது நடந்து வருகிறாயா?
******
உன் அழகுக்கு உவமை சொல்ல
எதுவுமே இல்லை இவ்வுலகில் ..
உனக்கு நிகர் நீ மட்டுமே,
நீ உன்னைப்போலவே அழகு.
******
இருக்கும் இடத்தை
அழகாக்கி விடுகின்றீர்கள்
பூக்களும், நீயும்...
******

இரண்டு செய்திகள்


ஒரு கால்பந்தாட்ட வீரன் விபத்து ஒன்றில் தாறுமாறாக அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கண் விழித்தபோது எதிரில் டாக்டர் நின்றிருந்தார். டாக்டர் " பயப்பட வேண்டாம் மிஸ்டர்! உங்கள் உயிர் காப்பாற்றப் பட்டு விட்டது" என்றார். "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்" என்றான் கால்பந்து வீரன். டாக்டர்" நான் உங்களுக்கு இரண்டு செய்திகளை சொல்ல விரும்புகிறேன், அதை உங்களிடம் சொல்லிவிடுவதே சரி, மேலும் அது என் கடமையும் கூட,ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி . எதை முதலில் கேட்க விருப்பம்"என்றார். "முதலில் கெட்ட செய்தியை சொல்லி விடுங்கள்" என்றான் இவன். " சரி . அது என்னவென்றால் விபத்தில் உங்கள் கால் நசுங்கிவிட்டது , உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டி அதை எடுத்து விட்டோம்" என்றார் டாக்டர். அவ்வளவுதான் அவன் புரண்டு அழுது துடித்தான்.ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டு "நல்ல செய்தி என்ன டாக்டர்?" என்றான். "அது என்னவென்றால் பக்கத்து பெட்காரர் உங்கள் ஷூவை நல்ல விலைக்கு எடுத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார்" என்றார் டாக்டர்.

சகோதரன்


அந்த நாட்டின் அரசனைப் பார்க்க ஒரு நாள் ஒரு பிச்சைக்காரன் வந்திருந்தான். "அரசே ! நான் இந்த நாட்டை சேர்ந்தவன்,மேலும் நான் உறவில் உங்களுக்கு சகோதரனும் கூட.இரு சகோதரர்களில் ஒருவர் ராஜபோகங்களில் திளைப்பதும் , ஒருவர் பிச்சை எடுப்பதும் முறையா? எனக்கு உதவுங்கள்" என்றான். அரசன் " நீ எனக்கு சகோதரனா? எப்படி?" என்றான். பிச்சைக்காரன் "அரசே ! இந்த உலகம் ஆதாம் , ஏவாளிடம் இருந்து தோன்றியதுதானே? அப்படி என்றால் நான் உங்கள் சகோதரன் அல்லாது வேறு யார்?" என்றான் நைச்சியமாக.
அரசன் சிரித்துக்கொண்டே"உண்மைதான்.ஒப்புக்கொள்கிறேன்" என்றவாறு ஒரு நாணயத்தை அவனுக்கு கொடுத்தான்.திகைத்துப்போன பிச்சைக்காரன் "ஒரு நாணயம்தானா?" என்றான். அரசன் உடனே"ஆமாம் , நான் மட்டுமா உனக்கு சகோதரன். பூமியில் உள்ள எல்லோரும் தான் .எல்லோரும் உனக்கு ஒரு காசு கொடுத்தால் நீ என்னை விட பணக்காரனாகி விடலாம்".என்றான்.

Tuesday, January 6, 2009

புத்திசாலி மதகுரு


ஒரு அரசன் தன்னுடைய மாளிகையைக் கட்ட அஸ்திவாரம் தோண்டினான். அங்கிருந்து எடுத்த மணல் பெரிய மலை போல குவிந்து கிடந்தது.இந்த மணலை எல்லாம் எங்கே கொண்டு போய்க்கொட்டுவது என்று ஆளாளுக்கு யோசிக்கத் தொடங்கினார்கள். அரசன் தன் மத குருவிடம் கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தான் . உடனே அவரை அங்கே அழைத்து வந்தான்.மத குரு வந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்தார். எங்கு பார்த்தாலும் மணற்குன்றுகள் , "மன்னா! இந்த மணலை எல்லாம் எப்படி அப்புறப்படுத்துவது ? இதுதானே பிரச்சினை?" என்றார். அரசன் பணிவாக "ஆம் குருவே " என்றான். மதகுரு " நீ ஒன்று செய் ! ஓராயிரம் அடிமைகளைக் கொண்டு இதை விட மிகப் பெரிய குழி ஒன்றை வெட்டி அதற்குள் இந்த மணலைக் கொட்டி மூடி விடு" என்றார். அரசன் குழப்பமாக," குருவே ! அந்த குழியின் மணலை என்ன செய்வது ?" என்றான். மதகுரு நகைத்து " முட்டாளே! அதுதான் இதை விட பெரிய குழியாயிற்றே. அந்த மணலையும் சேர்த்துப் போட்டு மூட வேண்டியதுதானே" என்றார்.

கலை உலக சேவைக்காக ...

நகைச்சுவை எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் திரு.தேவன் அவர்கள். மிக மிக எளிமையான அதே சமயம் தனித்தன்மை மிக்க அவருடைய எழுத்துக்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது . இந்த கதையை முதலில் என்னுடைய சாதாரண நடையில்தான் எழுதினேன் . நகைச்சுவை கதை என்பதால் (அல்லது அப்படி நான் நம்புவதால்) ஏன் அவருடைய நடையை முயற்சிக்க கூடாது என்று பின்னர் மாற்றிவிட்டேன். உயரே பறந்தாலும் ஊர்க்குருவிதான் , தெரிந்தே எழுதினேன் . இனி...
***************************************
வாங்கோ சார்.. என்ன பார்த்து ரொம்ப நாளாகி விட்டதே ! சும்மா ஒன்னும் திண்ணையில் உக்காந்திருக்கலை சார் . நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் சார். கலை உலகத்தை வாழ்விக்கும் பொருட்டாகவும், உண்மையான கலைத்தாகம் கொண்டு அலையும் ( நல்ல கதைகளுக்குத்தான் ) வாசகர்களை மகிழ்விக்கவும் , எழுத்தாளனாகி வாரம் இரண்டு ,மூன்று கதைகளையாவது எழுதித் தள்ளி விட வேண்டியது என்று. மற்றபடி பணம் , பிராபல்யம் மற்றும் இன்ன பிற லோகாயதமான விஷயங்களுக்காக என்று யாரும் கற்பனை பண்ண வேண்டாம்.
கதை எழுதுவதற்கு முன் கவிஞராகி விடலாம் என்றுதான் உத்தேசித்து இருந்தேன் . ஆனால் பாருங்கள், நான் கவிதை எழுதி விடுவேன் , அது ஒன்றும் எனக்கு கஷ்டமான காரியம் இல்லை .அதற்க்குத்தான் நிறைய பேர்வழிகள் இருக்கிறார்களே . எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் பக்கத்துக்கு இரண்டு வீதம் , எதுகை மோனையுடன் , நாலு வரிக்குள் முடித்து விடுகிறார்கள். நானும் அவர்களோடு சேரத்தயாரில்லை , இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் நான் ஒரு சாதாரண ஆளில்லை என்று.
ஆக எழுத்தாளனாகி விடுவது என்று எனது மனைவி, குழந்தைகள் , அம்மா , பாட்டி , சித்தப்பா , சித்தி ,எல்லோரும் சொல்ல தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டேன். உடனே எடு பேனாவையும் காகிதத்தையும் ! எழுதித் தள்ளி விடலாம் என்றா நினைக்கிறீர்கள் . அதுதான் இல்லை . பாவம் ! உங்களுக்கு உலக அனுபவம் கம்மி போலிருக்கிறது .
டாக்டர் ஆகவேண்டுமென்றால் படித்தால் மட்டும் போதுமா? அதற்கு என்று இன்னார்தான் டாக்டர் என்று அடையாளம் காட்டுவதற்கு சில விஷயங்கள் இருக்கிறது இல்லையா? கழுத்தில் எந்நேரமும் பரமசிவன் மாதிரி ஒரு ஸ்டெதஸ்கோப் , வெள்ளை கோட்ட்டு போன்றவைதான் அவர் டாக்டர் என்பதற்கே அடையாளம் இல்லையா? அதே மாதிரி எழுத்தாளர் என்றால் தாடி , பெரிய கண்ணாடி , நீண்ட முடி அல்லது பரட்டைத்தலை , பைஜாமா ஜிப்பா , ஜோல்னா பை, அந்தக்காலத்து மைக்கூடு பேனா மாதிரி பெரிய பேனா இத்யாதிகள் வேண்டியிருக்கும்.என்னது ?!! மூளையா?!! கதை எழுதவா?!! அதுதான் இங்கே ஏராளமா இருக்கே சார். ஏன் அவசரப்படுகிறீர்கள் நீங்கள்? புரிகிறது! ஒரு உண்மையான எழுத்தாளனின் ஜீவரசம் பாயும் எழுத்துகளை படிக்க ஆவலாக இருக்கிறீர்கள் !. இருங்கள்! இருங்கள்!
ஆக முதலில் தாடி வளர்த்து விடுவது என்று முடிவெடுத்து விட்டேன்.கூடவே ஜடா முடியும். இரண்டும் சேர்ந்தால் கண்மூடி கதை பற்றி சிந்திக்கும் பொழுது அப்படியே மோனத் தவத்திலிருக்கும் ரிஷிகள் போலிருக்கதோ!? அறிவாளிகளுக்கென்று ஒரு அடையாளம் வேண்டாமா?! ஒரு ரெண்டு மாதம் பொறுங்கள்.
*********************************
ஆச்சு சார் ! முடி வளர்த்தாச்சு ! கூடவே போட்டுக்கொள்ள பைஜாமா ஜிப்பாவும் ரெடி . இனி கதைகளை எழுதித்தள்ளி விட்ட வேண்டியதுதான் . எந்த மாதிரி கதைகள் என்றா கேட்டீர்கள் ??! எனக்கு ...... எல்லா விதமான கதைகளும் எழுத வரும் சார் . இருந்தாலும் வெகு ஜன ரசனைன்னு ஒன்னு இருக்கில்லையா ? அதனால துப்பறியும் கதைகள் எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டேன் . தலைப்பு கூட ரெடி , " மிஸ் லீலாவின் லீலா வினோதங்கள்" ங்கறதுதான் அது . கதையை படித்தீர்களென்றால் கண்ணீர் விட்டு விடுவீர்கள்! என்னது ? அவ்வளவு மோசமா ?!! ஆனந்த கண்ணீர் சார்!! நீங்க வேற!!
கதை எப்படி போகிறது என்றால் மிஸ் . லீலா என்பவள் தன் வேலைக்காரியுடன் ஒரு வீட்டில் தனியாக வசிக்கிறாள் . திடீரென்று ஒரு நாள் அவளுடைய விலை உயர்ந்த ஒரு பொருள் காணாமல் போகிறது . யார் அதை எடுத்தார்கள் ? என்று தெரியாமல் துப்பறியும் மேதை சுப்புவிடம் கம்பிளைன்ட் பண்ணுகிறாள் . அந்த கேசை அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டு , பல தடைகளை தாண்டி, மயிர் கூச்செறியும் விதத்தில் கண்டு பிடிக்கிறார். என்னது??!! வேலைக்காரிதான் எடுத்திருப்பாள் என்கிறீர்களா?!!.. ஹ்ம்ம் ...ம்ம்ம்... பரவாயில்லை சார் ! கண்டு பிடித்து விட்டீர்களே !! உங்களுக்கும் என்னோடு சேர்ந்தவுடன் மூளை நன்றாக வேலை செய்கிறது பாருங்கள். உடனே இதை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி விட வேண்டியதுதான் . என்ன சார் ?!! இதிலே லீலாவோட லீலை என்ன இருக்கிறது ? என்றா கேட்டீர்கள்?!! ம்ம்ம்... அதுவும் சரிதான் . தலைப்பை " சுப்புவுக்கு கிடைத்த துப்பு " என்று மாற்றி விடுகிறேன் .
**********************************************
என்ன சார்? ரொம்ப நாளா இந்த பக்கம் காணுமே உங்களை? வெளியூர் போயாச்சா ? அதான் ... என்னது ? கதையா? ஹ்ம்ம்... கலி காலம் சார் .. என்ன செய்வது ?!! நான் எழுதினது கதையே இல்லையாம் ! இதிலே துப்பறிய என்ன வேண்டிக்கிடக்கு , குப்பை , மகா மோசம் என்றெல்லாம் கடிதம் எழுதி திருப்பி அனுப்பி விட்டார்கள் இந்த பத்திரிக்கைகாரர்கள் . இருக்கட்டும் ... இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது ? ஒரு மகா எழுத்தாளனின் சிந்தனை ?!!
இதனாலெல்லாம் நான் சோர்ந்து போயிட மாட்டேன். ம்ம் தாடியா ?? சரி கலை உலகத்துக்குத்தான் என் சேவை கிடைக்கலியே ? சரி விஞ்ஞான உலகமாவது என்னால முன்னேறட்டும் என்று விஞ்ஞானியாக முடிவெடுத்து விட்டேன் . உடனே ஆகி விட முடியுமா? உங்களுக்கு ஒன்னுமே புரிகிறதில்லை சார் ! அதற்கென்று ஒரு வரை முறை இருக்கு சார்! பார்த்தா விஞ்ஞானின்னு எல்லோருக்கும் தெரிய வேண்டாமோ? சார்!சார்! என்னதிது? ஏன் ஓடுறீங்க ?!! சார்!!

Sunday, January 4, 2009

ரா.கி

ரா.கி ரங்கராஜனின் "நாலு மூலை" என்ற புத்தகத்தில் இருந்து,


புதிதாக மாற்றலாகி வந்த காவல் அதிகாரி தன் சக அதிகாரியுடன் ஜீப்பில் சென்று கொண்டு இருந்த போது ஒரு இடத்தில் கூட்டமாக மக்கள் நிற்பதை பார்த்து ஜீப்பை நிறுத்தி விட்டு கூட்டத்தை பார்த்து "கலைந்து போங்கள் " என்று உத்தரவிட்டார். யாரும் கண்டு கொள்ளவில்லை. உடனே லத்தியை எடுத்து சுழற்றி அனைவரையும் விரட்டினார். எல்லோரும் பயந்து ஓடினர். உடனே பெருமிதமாக தன் சக அதிகாரியைப் பார்த்து "எப்படி?" என்றார். சக அதிகாரி "பிரமாதம், ஆனால் அது ஒரு பஸ் ஸ்டாப் ! அவர்கள் எல்லோரும் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்கள்" என்றார்.

********************************************
இரண்டு கைதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு போடுவது என்று முடிவாகியது.டாக்டர் பரிசோதனை ,பிரார்த்தனை,பெயர் சரி பார்த்தல் போன்றவை முடிந்த பின் ஜெயில் அதிகாரி இருவரையும் பார்த்து "எதாவது ஆசை இருக்கிறதா ?" என்றார்.
ஒருவன் "நான் ஒரு பத்து நிமிடம் பாட வேண்டும் " என்றான் .
அடுத்தவன் "அதற்கு முன்னால் என்னை தூக்கில் போட்டு விடுங்கள்"

ரயில் பயணம்

ரயிலில் இருந்து இறங்கி வீடு வந்து சேர்ந்த ஜான் மிக மிக களைப்பாக படுக்கையில் விழுந்தான். அவன் மனைவி " பிரயாணம் சௌகரியமாக இல்லையா ? என்றாள் ."சுத்த மோசம் ரயில் செல்லும் திசைக்கு எதிரே உட்கார வேண்டியதாகி விட்டது " என்றான் ஜான் . "எதிரில் உள்ளவர்களிடம் கேட்டு மாறி உட்கார வேண்டியதுதானே" என்றாள் மனைவி. " கொடுமை !! எதிர் சீட்டில் ஆள் இல்லையே !!" என்றான் ஜான்.
************************************************

இது எப்படி இருக்கு?

ஹைமி கோல்ட்பெர்க் தன் மனைவிஉடன் சண்டை போட்டு விட்டு ஒரு பாருக்குள் நுழைந்தான் . ஆர்டர் கொடுத்து விட்டு திரும்பியதும் தன் அருகில் அமர்ந்திருந்த ஒரு ஆசியக்காரனை கண்டதும் வெறுப்பாகி , அவன் வாங்கி வைத்திருந்த நூடுல்சை அவன் தலையிலேயே கவிழ்த்து "இது நீங்கள் பேர்ல் ஹார்பரை தாக்கியதற்காக!"என்றான். ஆசியாக்காரன் மெதுவாக "நான் ஜப்பானியன் இல்லை , சீனா" என்றான். ஹைமி அலட்சியமாக "ஜப்பான் , சீனா எல்லாம் எனக்கு ஒன்றுதான்" என்றான். சிறிது நேரம் கழித்து அந்த சீனாக்காரன் ஹைமியின் தலையில் சாசைக் கொட்டி , " இது டைட்டானிக்கை மூழ்கடித்ததற்க்காக" என்றான். ஹைமி வெறுப்பாகி " அது ஒரு ஐஸ் பெர்க் அல்லவா?" என்றான். இப்போது சீனாக்காரன் அலட்சியமாக "ஐஸ் பெர்க் , கோல்டு பெர்க் எல்லாம் எனக்கு ஒன்றுதான் " என்றான்.

ஒரு வரம்

தன்னுடைய புது மனைவிக்கு கோல்ப் விளையாட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான் பாடி . அவள் அடித்த பந்து மைதானத்தின் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சன்னலை உடைத்துச் சென்று உள்ளே விழுந்தது . சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு இருவரும் உள்ளே சென்று வீட்டின் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து வீட்டின் உள்ளே சென்றனர். ஹாலில் அந்த பந்து ஒரு பழங்காலத்து ஜாடியை உடைத்திருப்பதை கண்டனர். அப்போது வினோதமாக உடை அணிந்த ஒருவன் ரூமில் இருந்து வெளிப்பட்டான். அவன் அவர்களிடம் " நான் ஒரு பூதம் ! இந்த ஜாடிக்குள் நெடுங்காலமாக அடைபட்டுக் கிடந்தேன் . உங்களால் எனக்கு இன்று விடுதலை கிடைத்தது . மிக்க நன்றி ! இருவருமாக சேர்ந்து ஒரு வரம் கேளுங்கள் தருகிறேன் " என்றான் . உடனே பாடி " உலகிலேயே பெரிய பணக்காரனாக வேண்டும் " என்றான். உடனே பூதம் " எதிர் பார்த்ததுதான் , ஆனால் பதிலுக்கு நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும் . ரொம்ப நாளாக ஜாடிக்குள் இருந்ததால் பெண் வாடையே இல்லை , உன் மனைவி என்னுடன் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும் " என்றான். மிக பலத்த யோசனைக்குப் பிறகு , இருவரும் ஒப்புக்கொண்டனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அந்த பூதம் அவளை நன்றாக உபயோகித்துக் கொண்டு பின் , "நீ மிகவும் சின்ன பெண்ணாக இருக்கிறாயே ! உன் கணவனின் வயது என்ன ?" என்றான் . "நாற்பத்தி ஆறு " என்றாள் மனைவி. "ஆச்சரியமான விஷயம் !! நாற்பத்தி ஆறு வயதிலும் அவன் ஜாடியில் இருந்து பூதம் கதையெல்லாம் நம்புகிறானே?" என்றான்.