Monday, August 4, 2008

அறிமுகம்

வணக்கம் ,
நான் ஒன்றும் எழுத்தாளனோ அல்லது பெரிய சிந்தனாவாதியோ அல்ல எனினும் , ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் சுவாரசியங்களுக்கு குறைவிருக்காது, ஒருவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் மற்றவருக்கு வாய்க்கும் என்று உறுதியாக சொல்ல முடியாதுதான் . வலை பக்கங்களில் வழக்கமாக நீங்கள் பார்க்கும் சினிமா அல்லது அரசியல் போன்றவைகளுக்கு என் வலை பக்கத்தில் இடமில்லை . என்னுடைய அனுபவங்கள்,சிந்தனைகள் மற்றும் நான் படித்தவை , ரசித்தவை இவைகளுக்கே முதலிடம் . உங்களுடைய கருத்துகளையும் இதில் தாராளமாக பதிவு செய்யலாம் . நல்ல புத்தகங்களை தேடி படிப்பவன் நான் . நல்ல எழுத்து யாரால் எழுதப்பட்டாலும் ரசிப்பேன் . சுஜாதா , பாலகுமாரன் , தி.ஜா , ஆதவன் , தேவன் , எஸ் .ராமகிருஷ்ணன் , ராஜேஷ்குமார் , இந்திரா சௌந்தரராஜன் மற்றும் பலர் என்னுடைய விருப்பமான எழுத்தாளர்கள் . நல்ல புத்தகங்களே என்னுடைய முதல் தேவை . நல்ல திரைப்படங்களையும் ரசிக்க தவறுவதே இல்லை . ஆனால் வெகு ஜன ரசனையில் இருந்து மாறுபட்டது என் ரசனை.
வெகுவாக எல்லாராலும் ரசிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய 'காதல்' , 'சின்னதம்பி', 'அழகி' போன்ற படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை . அதே சமயம் என்னால் விரும்பப்பட்ட படங்கள் அரங்குகளை விட்டுத்தான் ஓடின . நல்ல எழுத்துகளுக்கு மற்றும் படங்களுக்கு போதிய வரவேற்பு இருப்பதில்லை என்றே தோன்றுகிறது. அல்லது என்னைப் போன்று அறிவு ஜீவிகளாக தம்மை கற்பனை செய்து கொள்கிறவர்கள் ரசனைதான் சரியில்லையா? ஆராய்ச்சிக்கு உரிய விஷயம் .
எப்போதாவது கவிதை அல்லது கட்டுரை,கதை எழுதுகிறேன் பேர்வழி என்று என்னத்தையாவது கிறுக்குவது உண்டு . ஏதாவது புத்தகம் படித்த பாதிப்பில் அல்லது கவிதையின் பாதிப்பாக இருக்கும் , அதையும் இங்கே ஏற்றி விடுவது என்ற எண்ணத்தில்தான் இந்த வலை பக்கத்தை தொடங்கினேன் .அவற்றை படித்த பின் உங்களுக்கு ஏற்படப்போகும் மனோ பாதிப்பு மற்றும் இன்ன பிற தொல்லைகளுக்கும், நல்ல கவிதையை எழுதிய கவிஞன் (?) அல்லது கட்டுரையை எழுதிய எழுத்தாளன்(??) என்ற முறையில் எந்த பொறுப்பும் நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதை முதலிலேயே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பயம் வேண்டாம் , நான் ரசித்து படித்தவைகளையும் இங்கு குறிப்பிடுவேன் . அந்தப் படைப்புகளுக்கு சொந்தக்காரர்கள் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும் .