Thursday, April 4, 2013

கரடிகளுக்கு நெருப்பைப்பற்றித் தெரியும் - டெரி பிசன்

     வண்டியை நான்தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். உடன் என் சகோதரனும்  (அவன் ஒரு மத போதகன்) அவனது மகனும். வண்டி I-65 நெடுஞ்சாலையில் பவுலிங் க்ரீனின் வடக்குப் பகுதிக்கு வந்தவுடன் சக்கரம் காற்றிழந்து விட்டது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு, நாங்கள் முதியோர் இல்லத்தில் வசிக்கும் எங்கள் தாயைப் பார்ப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தோம். வண்டி என்னுடையதுதான். நான் சற்றே பழமைவாதி (மற்றவர்கள் கருத்துப்படி) என்னுடைய வண்டியை நானே சரி செய்து கொள்வேன். என் சகோதரன் அடிக்கடி ‘ரேடியல் டயர்களைப் பயன்படுத்து’ என்று சொல்வான். ஆனால் நான்  பழைய டயர்களை வாங்கி உபயோகிக்கிறேன். எனவே நீங்கள் நினைப்பதுபோல் இது ‘எதிர்பார்த்த ஒன்றுதான்’. ஆனால் உங்களுக்கு வண்டியின் சக்கரத்தைக் கழற்றி டயரை மாட்டத் தெரியுமென்றால் பழையவை நல்லது, கிட்டத்தட்ட இலவசம்போலக் கிடைக்கக் கூடியது.

இடதுபக்க டயர்தான் பழுதடைந்துள்ளது என்பதால் இடது பக்கமாக வண்டியை ஒதுக்கி சாலையைப் பிரிக்கும் புல்வெளியில் வண்டியை நிறுத்தினேன். வண்டி தடுமாறி நின்ற விதத்திலேயே தெரிந்தது, டயர் முற்றிலுமாகப் பழுதடைந்து விட்டது. “வண்டியில் தேவையான உபகரணங்கள் இருக்கிறதா என்று கேட்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்” என்றான் வாலஸ். நான் ஜூனியர் வாலஸிடம் கைவிளக்கைக் கொடுத்து, “இதோ, இதைப் பிடித்துக் கொள்” என்றேன். அவனுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் வயதுதான், ஆனால் அதை உணரும் வயது (இன்னும்) வரவில்லை. ஒருவேளை எனக்குத் திருமணம் நடந்திருந்தால் ஜூனியரைப் போல் ஒரு பிள்ளை இருப்பதையே விரும்புவேன்.

பழைய கெடிலாக்கின் பின்புறம் நிறைய இடம் இருக்கும், எதை வேண்டுமானாலும் இட்டு நிரப்பலாம். என்னுடையது ’56 ம் வருடத்தையது. வாலஸ் தன்னுடைய ஞாயிற்றுக்கிழமை உடைகளில் இருந்ததால், உதவட்டுமா என்று கேட்கவில்லை. நான் பின்புறத்திலிருந்த பத்திரிக்கைகள், தூண்டில், மரப்பெட்டி, பழைய துணிகள், சாக்கு, புகையிலை ஸ்பிரே ஆகியவற்றைத் தள்ளி வைத்து ஜாக்கியைத் தேடிக் கொண்டிருந்தேன். ஸ்டெப்னியின் டயர் சற்றே மிருதுவாகத் தோன்றியது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே விளக்கு அணைந்து விட்டது, “அதைக் குலுக்கு, எரியும்” என்றேன்.

மீண்டும் பின்புறம் தேட ஆரம்பித்தேன். வண்டிக்கான ஜாக்கி எப்போதோ தொலைந்து விட்டது. கால் டன் எடை தூக்கக் கூடிய ஹைட்ராலிக் ஜாக்கிதான் இப்போது இருக்கிறது. அது அம்மாவின் பழைய சமையல் குறிப்புப் புத்தகங்களுக்கடியில் கிடந்தது. இந்தக் குப்பைகளை எப்போதோ தூக்கி எறிய வேண்டும் என்று நினைத்திருந்தேன், இன்னும் செய்யவில்லை. இப்போது வாலஸ் மட்டும் இல்லையென்றால் ஜூனியரை வண்டிக்கு அடியில் சென்று ஜாக்கியைப் பொருத்துமாறு சொல்லியிருப்பேன், இப்போது நானே முட்டி போட்டுக்கொண்டு அந்த வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. ஒரு சிறுவன் சக்கரம் மாற்றத் தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. நீங்கள் அதைச் செய்யப்போவதே இல்லை என்றாலும் வாழ்வில் சிலமுறையாவது டயர்களை மாற்றத்தான் வேண்டும். சக்கரத்தைத் தூக்கி நிறுத்துவதற்குள் மறுபடி விளக்கு அணைந்து விட்டது. இரவு எவ்வளவு கருமையோடு இருக்கிறது என்று வியந்தேன். அக்டோபரின் கடைசி எனவே குளிரும் ஆரம்பித்து விட்டது. “மீண்டும் அதைக் குலுக்கு” என்றேன். ஆனால் மறுபடி எரியும்போது வெளிச்சம் குறைந்து மினுமினுக்க ஆரம்பித்தது.

“ரேடியல் டயரில் இந்தத் தொல்லை இல்லை” என்றான் வாலஸ். அவன் குரல் பல மனிதர்களுக்கிடையே பிரசங்கம் செய்யும் தொனியில் இருந்தது, இப்போது இருப்பதோ நானும் ஜூனியரும். “ஒருவேளை வந்தாலும் FLATFIX என்று ஒரு  திரவம் இருக்கிறது அதை உள்ளே செலுத்தினால் போதும், வண்டியை ஓட்டலாம், ஒரு பாட்டில் 395$ தான்”

“பெரியப்பாவால் இதைச் சரிசெய்ய முடியும்” என்றான் ஜூனியர், அதை நன்றியோடு சொல்கிறாற்போல் எனக்குப்பட்டது. “என்னால் முடியும்” என்றேன் வண்டியின் அடியில் நுழைந்தவாறு.

“மறுபடி விளக்கைக் குலுக்கு” என்றேன். அது கிட்டத்தட்ட அணைந்து விட்டது. நட்டுகளைக் கழற்றி சக்கரத்தின் மூடியில் வைத்துவிட்டு, சக்கரத்தை வெளியில் இழுத்தேன். டயர் பக்கவாட்டில் நீளமாகக் வெடித்துக் கிழிந்திருந்தது. “இதை இனிமேல் சரி செய்து உபயோகிக்க முடியாது” எனக்கு அதைப்பற்றி ஒன்றும் வருத்தமில்லை. வீட்டின் பின்புறம் ஆளுயரத்திற்கு இதைப்போல அடுக்கி வைத்திருக்கிறேன்.

விளக்கு அணைந்து விட்டது. ஆனால் மறுபடி எரிகையில் முன்னைவிட பிரகாசமாக எரிந்தது. “மிக நல்லது” என்றபடி சக்கரத்தினை வண்டியில் பொருத்தினேன். மங்கிய சிவப்புநிற ஒளி பாய்ந்து கொண்டிருந்தது. நட்டுகளை எடுக்கத் திரும்பியபோதுதான் கவனித்தேன், ஜூனியரின் கையிலுள்ள விளக்கு அணைந்திருந்தது. வெளிச்சம் மரத்தடியில் நின்றிருந்த இரண்டு கரடிகளின் கையிலிருந்த தீப்பந்தத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. பெரியவை, குறைந்தது முந்நூறு பவுண்டு எடை இருக்கலாம், ஐந்தடி உயரத்துக்கு பந்தத்தைப் பிடித்தபடி நின்றிருந்தன. வாலஸும் ஜூனியரும் அவற்றைப் பார்த்தபடி அசையாமல் நின்று கொண்டிருந்தனர். கரடிகளை அச்சுறுத்துவது நல்லதல்ல. நட்டுகளை எடுத்து சக்கரத்தில் வேகமாகப் பொருத்தினேன். வழக்கமாக சக்கரத்தில் உயவுக்காக எண்ணெய் ஊற்றுவது வழக்கம், இப்போது அதையெல்லாம் செய்யவில்லை, வண்டியின் அடியில் இருந்த ஜாக்கியை இறக்கி வெளியே இழுத்தேன். மாட்டிய சக்கரம் வெகு தொலைவுக்குத் தாங்கும் என்பது ஆறுதலாக இருந்தது. எல்லாவற்றையும் தூக்கி வண்டியின் பின்புறம் வைத்தேன், சக்கரத்தின் மூடியைக் கூட மாட்டவில்லை, அதையும் உள்ளே எறிந்தேன். இவ்வளவும் நடக்கையில் கரடிகளிடம் சிறு அசைவுகூட இல்லை. ஆர்வமா அல்லது உதவி செய்யும் நோக்கமா என்பதைக் கணிக்க முடியவில்லை. அவைகளுக்குப் பின்னால் மேலும் சில கரடிகள் இருக்கலாம் என்று தோன்றியது, ஒரே நேரத்தில் மூன்று கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்து வண்டியை விரட்டினோம். வாலஸ்தான் முதலில் பேசினான்.

“அவை நெருப்பை உண்டாக்கக் கற்றுக் கொண்டுவிட்டன என்று நினைக்கிறேன்”
****
       கிட்டத்தட்ட நான்கு வருடத்துக்கு முன் (நாற்பத்தேழு மாதங்கள்) அம்மாவை முதலில் முதியோர் இல்லத்திற்கு கொண்டு செல்வது என்று முடிவெடுத்தபோது, அவள், தான் இறப்பதற்குத் தயாராக இருப்பதாக என்னிடமும் வாலஸிடமும் சொன்னாள்.

“என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” தாதிக்குக் கேட்டு விடாத வண்ணம் என்னையும் வாலஸையும் அருகில் அழைத்து மெல்லிய குரலில் அவள் இறப்பதற்குத் தயாராக இருப்பதாகச் சொன்னாள். ”எத்தனையோ லட்சம் மைல்களுக்கு வண்டி ஓட்டி விட்டேன், இப்போது அக்கரைக்குச் செல்லத் தயாராகவே இருக்கிறேன், இன்னமும் இங்கேயே அலைந்து கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை”. அவள் சிறு பள்ளிப்பேருந்தொன்றின் ஓட்டுநராக முப்பத்தொன்பது வருடங்கள் பணிபுரிந்தாள்.  வாலஸ் அங்கிருந்து சென்றபின் அவளுடைய கனவைப்பற்றி என்னிடம் மட்டும் பகிர்ந்து கொண்டாள். அவளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு அவளுடைய சிகிச்சையைப் பற்றி ஆலோசித்தனர். ஒருவர் சொன்னார், “நம்மால் என்ன செய்ய முடியுமோ நாம் அதைச் செய்தாயிற்று, இப்போது அவளைப் போக விடுவோம்” அனைவரும் ஆமோதித்து கைகளை உயர்த்தினர். ஆனால் இலையுதிர்காலத்தில் அவள் எதிர்பார்த்தபடி இறக்காதபோது சற்றே ஏமாற்றம் அடைந்தாள், ஆனால் அடுத்து வந்த இளவேனிற் காலத்தில் வயதானவர்களுக்கேயான இயல்புப்படி மறந்து போனாள். ஞாயிற்றுக் கிழமைகளில் வாலஸையும் ஜூனியரையும் அழைத்துச் செல்வதுபோக நான் தனியாக செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அவளைச் சென்று பார்ப்பதுண்டு. எப்போதும் அவள் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்திருப்பாள், அவள் அதை பார்க்காவிட்டாலும் கூட தாதி அதை எப்போதும் அணைப்பதில்லை. அதிலிருந்து வரும் மினுமினுக்கும் ஒளி வயதானவர்களை சமனப்படுத்தும் என்கிறார்கள்.

“என்ன கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேனே?”

அவளின் நீண்ட வெண்ணிறக் கூந்தலை சிப்பியினால் செய்த சீப்பினைக் கொண்டு சீவியபடி “உண்மைதான்” என்றேன். அது வாலஸ் அவளுக்காக ஃப்ளோரிடாவில் இருந்து வாங்கி வந்தது. அந்த திங்கட்கிழமை லூயிஸ்வில்லின் கொரியர்-ஜர்னலில் இதுபற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது, செவ்வாய்க்கிழமை NBC அல்லது CBS இரவுச் செய்திகளில். மக்கள் மாகாணத்தின் பல இடங்களில் கரடிகளைப் பார்க்க முடிந்தது, விர்ஜீனியாவிலும் கூட. அவை குளிர்கால உறக்கத்தைத் துறந்து விட்டன, குளிர்காலத்தை மாகாணங்களின் இடைப்பட்ட பகுதிகளில் கழிக்கப்போவதாகப் பட்டது. விர்ஜீனியாவின் மலைப்பகுதிகளில் எப்போதும் கரடிகள் உண்டு, ஆனால் இங்கே வடக்கு கெண்டக்கியில் கிடையாது. கிட்டத்தட்ட நூறு வருடங்களாகக் கிடையாது. கடைசி ஒன்று அம்மா சிறுமியாக இருக்கும்போது கொல்லப்பட்டதாம். கொரியர்-ஜர்னலில் அவை I-65 நெடுஞ்சாலை வழியாக மிச்சிகன் மற்றும் கனடாவின் காட்டுப்பகுதியில் இருந்து வருவதாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது, ஆனால் ஆலன் கௌன்டியிலிருந்த ஒரு வயதானவர் (நேஷன்வைட் தொலைக்காட்சியின் நேர்காணல்) சில கரடிகள் எப்போதும் மலைப்பகுதிகளில் வசித்து வந்ததாகவும் அவை முற்றிலுமாக அழிந்து விடவில்லை என்றும், அவை நெருப்பைக் கண்டுபிடித்த தங்களின் இனத்தோடு சேர்ந்து கொள்ள இறங்கி வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

”அவை இனிமேல் உறக்கம் கொள்ளப்போவதில்லை, நெருப்பை உண்டாக்கி குளிர்காலம் முழுக்க உபயோகப்படுத்தப்போகின்றன” என்றேன்.

”அவை அடுத்து எதைப்பற்றி சிந்திக்குமென்று நான் சொல்கிறேன்” அம்மா ஆரம்பித்தவுடன் தாதி அம்மாவின் புகையிலைப் பெட்டியினை எடுத்துச் சென்றாள். அது அம்மா உறங்கச் செல்ல வேண்டும் என்பதன் குறியீடு.

ஒவ்வொரு அக்டோபரிலும் வாலஸ் தன் மனைவியோடு முகாமுக்குச் செல்வான், அந்த சமயங்களில் ஜூனியர் என்னோடுதான் இருப்பான். இது சற்றே பிற்போக்கான விஷயம்தான் என் சகோதரன் ஒரு அமைப்பின் செயலாளர் (நன்னடத்தை வழியின் இல்லம்-சீரமைக்கப்பட்டது) ஆனால் அவன் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிலங்களை வாங்கி விற்கும் தொழிலில் இருந்து வந்தது. அவனும் அவன் மனைவி எலிசபெத்தும் கிழக்கு கரோலினாவில் உள்ள கிறித்துவின் வெற்றிச் சமயநோன்புச் சபையில் உறுப்பினர்கள், இச்சபை உறுப்பினர்கள் நாடெங்குமிருந்து ஓரிடத்தில் கூடி, தங்களுக்குள் பொருட்களை விற்பதற்கான பயிற்சினை எடுத்துக் கொள்கிறார்கள்.இந்த விஷயங்கள் அவர்கள் சொல்லித் தெரிந்ததில்லை, நான் தொலைக்காட்சியில் வரும் பங்குத் திட்டத்தின் விளம்பரங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

       அவர்கள் கிளம்பிச் சென்ற புதன்கிழமை பள்ளிப் பேருந்து ஜூனியரை என் வீட்டுக்கருகில் இறக்கி விட்டுச் சென்றது. அவன் என்னுடன் தங்கும்போது அதிகமான சுமைகளைக் கொண்டு வரத் தேவையில்லை. அவனுக்கென்று தனி அறை இங்கே இருக்கிறது. வீட்டுக்கு மூத்தவன் என்ற முறையில் ஸ்மித்ஸ் க்ரூவில் உள்ள இந்த வீட்டில் நான் இருக்கிறேன், இது சற்றே பழைய வீடு என்றாலும் ஜூனியருக்கும் எனக்கும் அது பிரச்சினையில்லை. அவனுக்கு பவுலிங் க்ரீனிலும் ஓர் அறை இருக்கிறது, இருந்தாலும் வாலஸும் எலிசபெத்தும் மூன்று மாதங்களுக்கொருமுறை வீடு மாறுவதால் (இது திட்டத்தின் ஒரு பகுதி) அவன் தன்னுடைய .22, கேலிச்சித்திரப் புத்தகங்கள் மற்றும் அவன் வயதுப் பையன்களுக்கு முக்கியமான விஷயங்களை இங்கேதான் வைத்திருப்பான். இந்த அறை அவன் அப்பாவும் நானும் பகிர்ந்து கொண்டது. ஜூனியருக்கு இப்போது பன்னிரண்டு வயது, நான் வேலை முடிந்து திரும்புகையில்  (நான் பயிர்களுக்கான காப்புறுதி விற்பனையாளன்) வீட்டின் பின்பக்கத் திண்ணையில் அமர்ந்தபடி காட்டுப்பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

       உடைகளை மாற்றிக் கொண்டபின் நான் அவனுக்கு டயர்களில் ஏற்படும் புடைப்பை எவ்வாறு சரி செய்வதெனக் கற்பித்தேன், ஒன்று சுத்தியல் மூலமாக அல்லது வண்டியை அதன் மீது ஏற்றுவது மூலமாக. சோளப்பயிரை விளைவிப்பது போல டயர்களை கையால் மாட்டுவது அழிந்து வரும் கலை. ஆனால் பையன் சீக்கிரமாகக் கற்றுக் கொண்டான், “நாளைக்கு எப்படி சக்கரத்தில் டயரை ஒரு சுத்தியல் மற்றும் இரும்புப் பட்டையைக் கொண்டு பொருத்துவது என்று சொல்லித் தருகிறேன்” என்றேன்.

“எனக்கு கரடிகளைப் பார்க்கத்தான் ஆசை” என்றான் ஜூனியர், வயல்களைத் தாண்டியுள்ள நெடுஞ்சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான், நார்த் பவுண்டிலிருந்து வரும் சாலைகள் எங்கள் வயலை ஒட்டிச் செல்லும். இரவில் வாகனங்கள் செல்லும் ஓசை ஒரு நீர்வீழ்ச்சியைப் போலக் கேட்கும்.

“பகலில் அவற்றின் நெருப்பொளியைப் பார்க்க முடிவதில்லை, இரவு வரை பொறுத்திரு” என்றேன்.

அன்று இரவு CBS அல்லது NBC (எது என்று மறந்துவிட்டது) நாடெங்கும் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கும் இதைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது. அவை கெண்டக்கி, மேற்கு விர்ஜீனியா, மிசௌரி, இலினோய்ஸ் (தெற்கு) மற்றும் விர்ஜீனியாவில் தென்பட்டதைச் சொன்னார்கள். விர்ஜீனியாவில் எப்போதும் கரடிகள் உண்டு, சிலர் அதை வேட்டையாடவும் உத்தேசித்ததுண்டு  ஒரு விஞ்ஞானி அவை பனி குறைந்த, எரிப்பதற்கு கட்டைகள் கிடைக்கும் மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கிச் செல்வதாகக் கூறினார். ஒரு கேமராவுடன் அவர் சென்றிருந்தார் ஆனால் அதில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லை, மங்கிய சில உருவங்கள் நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தன. மற்றொரு விஞ்ஞானி அவை மாகாணத்துக்கு இடைப்பட்ட இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அங்கு வளரும் பழங்கள்தான் எனவும் இது புதிதாக உருவான ஒரு இனச் செடி என்றும் அண்மைய மனித வரலாற்றில் தாவரங்களில் ஒரு புது இனம் தோன்றியிருப்பது இதுவே முதல் முறை என்றும் அவை நெடுஞ்சாலைப் பகுதிகளில் வளரும் செடிகளின் கலப்பினம் என்றும் தெரிவித்தார். அது மட்டுமன்றி ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்துப் பார்த்து கோணலான முகத்துடன் அதற்கு ‘நியூபெரி’ என்று நாமகரணம் செய்தார். பருவங்களை ஆராயும் சுற்றுச் சூழல் விஞ்ஞானி ஒருவர் வெதுவெதுப்பான குளிர்காலம்  (நாஷ்வில்லில் சென்ற குளிர் காலத்தில் பனியே இல்லை, லூயிஸ்வில்லில் திடீர்ப்புயல் ஒன்று உருவானது) அவற்றின் குளிர்கால உறக்கச் சுழற்சியை மாற்றிவிட்டதாகவும் அதனால் வருடவாரியாக அவற்றிற்கு பழையவை எல்லாம் நினைவில் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். “கரடிகள் பல நூற்றாண்டுக்கு முன்னமே நெருப்பைக் கண்டுபிடித்திருக்கக் கூடும், ஆனால் அதை மறந்திருந்தன” என்றார். மற்றொரு கோட்பாடு என்னவெனில் அவை பல வருடங்களுக்கு முன் மஞ்சள் பாறை நதிப்பகுதி பற்றி எரிந்தபோது நெருப்பைக் கண்டுபிடித்தன (அல்லது நினைவு கூர்ந்தன) என்பது.

       தொலைக்காட்சிகள் கரடிகளைக் காண்பித்ததை விடவும் அவற்றைப் பற்றிப் பேசும் ஆட்களையே அதிகம் காண்பித்தன, எனவே ஜூனியருக்கும் எனக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. இரவு உணவு முடிந்ததும் நான் ஜூனியரை வீட்டின் பின்னால் உள்ள வேலிப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன், தூரத்தில் காட்டுப்பகுதியின் மரங்களுக்கிடையில் நெருப்பின் ஒளி தெரிந்தது. ஜூனியர் வீட்டுக்குப் போய் தன்னுடைய .22 வை எடுத்து வந்து அவற்றில் ஒன்றை வேட்டையாட விரும்பினான், நான் அது தவறு என்று எடுத்துச் சொன்னேன்,

“மேலும் மாகாண இடைப்பகுதியில் வேட்டையாடுவது சட்டவிரோதமானது”
***
       சக்கரத்தில் டயரைப் பொருத்துவதற்கான ஒரே வழி அதை மேலாகப் பொருத்திவிட்டு அதை செங்குத்தாகக் கால்களுக்கிடையில் வைத்து மேலும் கீழுமாக அதை தரையில் அடிப்பதுதான். டயர் முழுவதுமாக சக்கரத்தில் பொருந்தும்போது திருப்திகரமான ஒரு ஒலி ‘டொப்’ என்று கேட்கும். வியாழக்கிழமை ஜூனியர் பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை அவனுக்கு சரியாக வரும்வரை சொல்லிக் கொடுத்தேன். பிறகு எங்கள் வேலியைத் தாண்டி கரடிகளைப் பார்ப்பதற்காகச் சென்றோம். ‘குட்மார்னிங் அமெரிக்கா’ என்ற நிகழ்ச்சியில் வடக்கு விர்ஜீனியாவில் உள்ள கரடிகள் தங்களின் நெருப்பைப் பகலிலும் அணையாமல் வைத்திருக்கின்றன என்றனர். இங்கே வடக்கு கெண்டக்கியில் அக்டோபர் கடைசியிலும் சற்று வெப்பமாக இருப்பதால் இரவில் மட்டும் அவை நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொள்கின்றன. பகலில் எங்கே செல்கின்றன என்ன செய்கின்றன என்பது எனக்குத் தெரியாது. அநேகமாக அவை நியூபெரி புதர்களுக்கிடையிலிருந்து நானும் ஜூனியரும் அரசாங்க வேலியைத் தாண்டுவதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். நான் ஒரு கோடாலியைச் சுமந்து கொண்டிருந்தேன், ஜூனியர் தன்.22 வைக் கொண்டு வந்திருந்தான், கரடிகளைச் சுட வேண்டுமென்பதற்காக அல்ல அந்தத் துப்பாக்கியைத் தோளில் சுமந்து கொண்டு நடப்பதை விரும்பினான். காட்டுப்பகுதி மேப்பிள், ஓக், சிகமோர் மரங்கள் அடர்ந்து புதர்களோடு பின்னிக் கிடந்தது. வீட்டிலிருந்து சில நூறடி தூரங்களே வந்திருந்தாலும் நான் இந்தப் பகுதிக்கு வந்ததே இல்லை என்பதை யோசித்தேன், எனக்குத் தெரிந்து யாரும் வந்ததில்லை. அந்த இடம் உருவாக்கப்பட்டதைப் போலிருந்தது. நடுவில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து சரிவில் நடந்தோம், அது ஒரு சிற்றோடையை ஒட்டிச் சென்றது. கருமணலில் முதலில் கரடிகளின் தடத்தைப் பார்த்தோம், முடை நாற்றம் பரவியிருந்தது ஆனால் மனதுக்கொவ்வாததாக இல்லை. காட்டு மரங்கள் சூழ்ந்த ஒரு வெற்றிடத்தில் தீ வளர்க்கப்பட்டதன் அடையாளம் இருந்தது, இப்போது வெறும் சாம்பல் மட்டுமே எஞ்சியிருந்தாலும் மரக்கட்டைகள் மூலம் ஓர் ஒழுங்கற்ற வட்டம் உருவாக்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது, அந்த நாற்றம் இப்போது சற்று அதிகமாக இருந்தது. நான் கால்களால் நெருப்பைக் கிளறியதும், மீண்டும் நெருப்பை உண்டாக்கப் போதுமான அளவு கனல் இருந்ததை கவனித்தேன், மீண்டும் அது எப்படியிருந்ததோ அப்படியே சேர்த்து வைத்து விட்டு நகர்ந்தோம். ஒரு குச்சியை எடுத்து அதன் முனையைச் சீவி பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டேன்.

       ஒருவேளை அப்போதும் கரடிகள் புதர்களின் பின்னாலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம். அதை உறுதி செய்ய ஏதும் வழியில்லை. ஒரு நியூபெரி பழத்தைச் சுவைத்தவுடன் துப்பிவிட்டேன், அளவுக்கதிகமான இனிப்பு மற்றும் புளிப்பு சேர்ந்திருந்தது, கரடிகளுக்குப் பிடித்தமான சுவை என்று நம்பலாம்.

       அன்று மாலை ஜூனியரிடம் என் அம்மாவைப் பார்க்க வருகிறானா என்று கேட்டதும் உடனே சம்மதித்தான், அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, குழந்தைகள் எப்போதும் நாம் நினைப்பதைவிட பொறுப்போடுதான் இருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது அம்மா இல்லத்தின் முகப்பில் அமர்ந்து நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு அது ஆச்சரியம் தரும் விஷயமல்ல, ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் அவள் பொறுமை இழந்து விடுகிறாள், சரியாகச் சொன்னால் நம்பிக்கை இழக்கிறாள். உள்ளே அழைத்துச் சென்று அவளின் நீண்ட வெண்ணிறக் கூந்தலை சீவிவிட்டேன், தாதி சேனலை மாற்றியபடி குறை சொல்லும் தொனியில், “ தொலைக்காட்சியில் கரடிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்றாள். தாதி நகர்ந்ததும் ஜூனியர் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றினான், CBS அல்லது NBC இதைப்பற்றிய சிறப்பு ஒளிபரப்பில் சில வேட்டைக்காரர்களின் பேட்டியை ஒளிபரப்பியது, விர்ஜீனியாவில் உள்ள அவர்களின் வீடுகள் எரியூட்டப்பட்டிருந்தன. அந்தப் பேட்டியில் ஒரு கணவனும் மனைவியும் தங்கள் 1,17,500 $ மதிப்புள்ள ஷெனாண்டோவா பள்ளத்தாக்கிலுள்ள வீடு எரிக்கப்பட்டது குறித்துக் கூறினார்கள். அவள் கரடிகளைக் குறை கூறினாள், அவரோ கரடியைக் குறை கூறாமல் தன்னிடம் முறையான வேட்டை உரிமம் இருப்பதாகவும், தான் மாநகராட்சியின் மீது நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுக்கப்போவதாகவும் கூறினார். மாநகராட்சி வேட்டை உரிம அதிகாரி கூறுகையில் வேட்டை உரிமம் வைத்திருப்பது வேட்டையாடப்பட்டவை திருப்பித் தாக்குவதைத் தடுக்காது என்றார். ஒரு அதிகாரிக்கு இது சற்று விசாலமான பார்வைதான், அவர் இழப்பீடு தருவதில் ஆர்வமில்லாமல் இருந்தது தெரிந்தது. நல்லவேளையாக நான் வேட்டைக்காரனில்லை.

       அம்மா ஜூனியரிடம், “கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் என்னை வந்து பார்க்க வேண்டுமென்பதில்லை, நான் எத்தனையோ லட்சம் மைல்களுக்கு வண்டி ஓட்டிவிட்டேன், இப்போது ஒரு கையைக் கதவில் வைத்துக் காத்திருக்கிறேன்” என்றாள்.  இது மாதிரியான பேச்சுகள் எனக்குப் பழகிவிட்டது, ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் அவள் இவ்வாறு பேசுவது வழக்கம்தான், ஆனால் இது ஜூனியரின் மனதைப் பாதிக்கலாம். திரும்பி வருகையில் அவன் முகத்தில் கவலை தெரிந்தது, நான் என்ன என்று கேட்டதும், “எப்படி அவர்கள் பல லட்சம் மைல்கள் வண்டி ஓட்டியிருக்க முடியும்?” என்றான். அம்மா அவனிடம் சொன்ன கணக்கு ஒரு நாளைக்கு நாற்பத்தெட்டு மைல்கள் வீதம் முப்பத்தொன்பது வருடங்கள், அவன் கணக்கிட்டுப் பார்த்து 3,36,960 மைல்கள் என்றான்.

       ”ஓட்டியிருக்கலாம், உண்மையில் காலையில் 48 மைல்கள் மாலையில் 48 மைல்கள், அதுபோக கால்பந்துப் போட்டிகளுக்கான பயணங்கள் தனி, அதுபோக பெரியவர்கள் எந்த விஷயத்தையும் சற்று மிகைப்படுத்தித்தான் சொல்வார்கள்” என்றேன். அம்மாதான் மாகாணத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர், தினமும் வண்டி ஓட்டிக்கொண்டு எங்களையும் வளர்த்தாள், அப்பா விவசாயம்தான்.

       திரும்பி வருகையில் வழக்கமாக ஸ்மித் க்ரூவ் வழியாக இறங்கி வீட்டிற்கு வருவேன், ஆனால் அன்று இரவு ஜூனியரும் நானும் கரடிகளின் நெருப்பைப் பார்ப்பதற்காக வடக்கில் ஹார்ஸ் கேவ் வரை சென்று திரும்பி வந்தோம். தொலைக்காட்சியில் சொன்னதைப் போல ஆறு அல்லது ஏழு மைல்களுக்கு ஒன்று, அல்லது மரங்கள் அடர்ந்த பகுதியில், அல்லது பாறைகளுக்கிடையில் என்றெல்லாம் கரடிகளின் நெருப்பு காணப்படவில்லை. ஒருவேளை அவை மரக்கட்டைகளோடு, நீர் இருக்கும் பகுதிகளைத் தேர்கின்றனவோ என்னவோ. ஜூனியர் வண்டியை நிறுத்த விரும்பினான், ஆனால் மாகாண இடைப்பகுதிகளில் வண்டியை நிறுத்துவது சட்டவிரோதமானது, காவல்துறையினர் வந்து நம்மைத் துரத்தி விடுவார்கள். வீடு வந்ததும் தபால்பெட்டியில் வாலஸிடம் இருந்து வந்த தபாலட்டை இருந்தது, அவனும் எலிசபெத்தும் நலமாக இருக்கிறார்கள், பொழுது நன்றாகக் கழிகிறது. அவ்வளவுதான், ஜூனியரைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை, அவனும் அதைக் கண்டுகொண்டாற்போல் தெரியவில்லை. அவன் வயதை ஒத்த மற்ற சிறுவர்களைப் போலவே அவனும் பெற்றோர்களுடன் வெளியில் செல்ல விரும்புவதில்லை.

       சனிக்கிழமை மதியம் இல்லத்திலிருந்து என் அலுவலகத்திற்கு (பர்லி பெல்ட் ட்ராட்&ஹெய்ல்) தொலைபேசி அழைப்பு ஒன்று அம்மா போய்விட்டதைத் தெரிவித்தது. நான் சாலையில் இருந்தேன், சனிக்கிழமைகளிலும் நான் வேலை செய்வது வழக்கம், அன்றுதான் பகுதிநேர விவசாயிகள் பலரை வீட்டில் பார்க்க முடியும். நான் மறுபடி அழைத்து விஷயம் தெரிவிக்கப்பட்டதும் என் இதயம் ஒரு துடிப்பைத் தவற விட்டது ஒரே ஒரு துடிப்பை மட்டும்தான், நான் வெகு நாட்களாக எதிபார்த்திருந்த செய்திதான், தொலைபேசியில் தாதியிடம் “கடவுள் ஆசிர்வாதம்” என்றேன்.

       தாதி, “இல்லை உங்களுக்குப் புரியவில்லை, உங்கள் அம்மா சாகவில்லை, போய்விட்டார்கள், ஓடி விட்டார்கள், இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள்”. யாரும் பார்க்காதபோது நடைபாதை வழியாக இருக்கும் கதவைத் திறந்து வெளியேறியிருக்கிறாள், இல்லத்திலிருந்து ஒரு போர்வையை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னுடைய  சீப்பினைக் கதவில் ஆப்பு போல் செருகி விட்டுத் தப்பியிருக்கிறாள். அவளின் புகையிலைப் பெட்டி என்னவானது? என்றேன், அதையும் எடுத்துச் சென்றிருக்கிறாள். அப்படியென்றால் இது திட்டமிட்ட ஒன்றுதான்.. நான் ஃப்ராங்க்ளினில் இருந்தேன், இல்லத்திற்கு செல்ல கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆனது. தாதி, வரவர அம்மா மிகவும் குழப்பமாக நடந்து கொண்டதாகச் சொன்னாள். சொல்லத்தான் செய்வார்கள், இல்லத்தின் பின்புறமிருந்த அரை ஏக்கர் மைதானத்தில் தேடிப் பார்த்தோம், அங்கு மரங்கள் கூடக் கிடையாது அதையடுத்து சோயாபீன் வயல். அவர்களே ஷெரீஃபின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க உதவினார்கள். திங்கட்கிழமைதான் புகார் முறையாகப் பதிவு செய்யப்படும், அதுவரை அம்மாவுக்கான கட்டணத்தை நான் செலுத்தியாக வேண்டும் என்றனர்.

       வீட்டிற்குச் சென்று சேரும்போது இருள் கவியத் தொடங்கியிருந்தது, ஜூனியர் இரவு உணவைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான். தயாரிப்பது என்றால்  ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு வைத்திருக்கும் சில குளிர்பானங்களைத் திறந்து வைப்பது மட்டுமே. நான் அவன் பாட்டி போன விஷயத்தை அவனிடம் சொன்னபோது தலையை ஆட்டி , “அவள் போகப்போவதாக அவளே சொன்னாளே” என்றான். நான் ஃப்ளோரிடாவுக்கு தொலைபேசி, இந்தத் தகவலைச் சொன்னேன். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க முயற்சி செய்தேன் அதில் ஒன்றும்  உருப்படியில்லை, பின்கதவு வழியாகப் பார்த்தபோது தூரத்தில் மரங்களுக்கிடையில் நெருப்பின் வெளிச்சம் மினுமினுத்தது, அவள் எங்கே இருப்பாள் என்று உணர்ந்தேன்.

       குளிர் அதிகரித்துக் கொண்டிருந்தது, எனவே அதற்கான உடைகளை அணிந்து கொண்டு, ஜூனியரிடம் ‘வீட்டிலேயே இரு ஷெரீஃபின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரலாம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். சிறிது தூரம் நடந்தபின் திரும்பிப் பார்க்கையில் ஜூனியர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. குளிருக்கான ஆடைகள் எதையும் அணியாமல் வந்திருந்தான். அவன் என்னிடம் வரும்வரை காத்திருந்தேன். தன்னுடைய .22 வைத் தோளில் சுமந்தபடி வந்து சேர்ந்தான். நான் துப்பாக்கியை எங்கள் வேலியருகே வைத்து விடுமாறு கூறினேன். என் வயதுக்கு, பகலை விட இருட்டில் அரசாங்க வேலியைத் தாண்டுவது சிரமமாக இருந்தது. எனக்கு இப்போது அறுபத்தி ஒன்று. நெடுஞ்சாலை பரபரப்பாக இருந்தது கார்கள் தெற்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தன, கனரக வாகனங்கள் வடக்கு நோக்கி விரைந்தன. நீலப்புற்களில் படிந்திருந்த பனித்துளி என் ஆடையை நனைத்து ஈரமாக்கிவிட்டிருந்தது.

       முதலில் சில அடி தூரத்திற்கு மரங்களுக்கிடையில் கடும் இருட்டு, ஜூனியர் என் கையைப் பிடித்துக் கொண்டான். சற்று தூரத்தில் வெளிச்சம் பரவியிருந்தது. நான் முதலில் நிலவொளி என்று நினைத்தேன், வாகனங்களில் இருந்து வரும் வெளிச்சம்தான் மரங்களின் மேல் பட்டு நிலவொளி போல எதிரொளித்தது, நானும் ஜூனியரும் புதர்களுக்கிடையில் ஒரு பாதையைத் தேர்ந்து நடக்க ஆரம்பித்தோம். சீக்கிரத்தில் சரியான பாதைக்கு வந்து விட்டிருந்தோம், கூடவே நன்கு தெரிந்த கரடிகளின் வாசனை.

       இரவு வேளையில் கரடிகளை நோக்கிச்செல்கிறோம் என்பதால் கவனமாகவே இருந்தேன். அந்தப் பாதை மேலும் இருட்டான பகுதிக்கு எங்களை அழைத்துச் செல்லும் போலிருந்தது, புதர்களுக்கிடையில் நுழைந்து சென்றால் நாங்கள் அத்துமீறி நுழைபவர்கள் போல் தெரியலாம், துப்பாக்கியை எடுத்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும் நாங்கள் அந்தப்பாதையையே தொடர்ந்து சென்றோம். வெளிச்சம் மரங்களில் இருந்து ஒரு மழையைப்போல் இறங்கிக் கொண்டிருந்தது, சுலபமாக நடக்க முடிந்தது. கால்கள் பாதையைத் தேர்ந்து சென்று கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் மரங்களுக்கிடையில் நெருப்பின் வெளிச்சம் தெரிந்தது.

       நெருப்பு, சிகமோர் மற்றும் பீச் மரக்கட்டைகளால் உண்டாக்கப்படுகிறது, இந்தக்கட்டைகளை எரிப்பதால் குறைந்த அளவே நெருப்பும் வெளிச்சமும் கிடைக்கும், ஆனால் புகை மிக அதிகமாக வரும், இன்னமும் கரடிகள் இந்த சூட்சுமங்களை அறியவில்லை. ஓரளவுக்கு நெருப்பை உண்டாக்கவும் அதைப் பாதுகாக்கவும் கற்றுக் கொண்டுவிட்டன. அளவில் பெரியதாக இருந்த சினமோன் – பழுப்பு நிறக் கரடி, வடக்குப் பகுதியைச் சேர்ந்தவை போலத் தோற்றமுடைய ஒன்றுதான் குச்சியால் நெருப்பைக் கிளறிவிட்டுக் கொண்டிருந்தது, தன் அருகில் குவிக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளில் இருந்து அவ்வப்போது ஒவ்வொன்றாக எடுத்து நெருப்பில் போட்டபடி இருந்தது. மற்றவை சிறிய கருப்பு நிறக்கரடிகள் அல்லது தேன் கரடிகள், அவற்றில் ஒன்று தன் குட்டிகளுடன் இருந்தது. சில கரடிகள் நியூபெரி பழங்களைத் தின்று கொண்டிருந்தன. அவற்றுக்கிடையில் அம்மா இல்லத்திலிருந்து எடுத்து வந்த போர்வையைப் போர்த்தியவாறு அமர்ந்திருந்தாள்.

       ஒருவேளை கரடிகள் எங்களை முதலில் பார்த்திருந்தால் எங்களை அனுமதித்திருக்குமா என்பது சந்தேகம்தான். அம்மா தன் அருகில் உள்ள இடத்தைத் தட்டிக் காண்பித்து என்னை அமரச் சொன்னாள். ஒரு கரடி நகர்ந்தமர்ந்து அம்மாவின் மறுபக்கம் அமர ஜூனியருக்கு இடமளித்தது. கரடிகளிமிருந்து வீசிய முடை நாற்றம் பழகி விட்டால் சங்கடப்படுத்துவதாக இல்லை. அம்மாவின் அருகில் குனிந்து பேச முயன்றதும் பலமாய்த் தலையை ஆட்டி மறுத்தாள். பேசும் சக்தி இல்லாதவைகளின் முன்னிலையில் ரகசியக் குரலில் பேசுவது சரியல்ல என்று எனக்கு உணர்த்தினாள். ஜூனியரும் அமைதியாக அமர்ந்திருந்தான். அம்மாவின் போர்வையைப் பகிர்ந்து கொண்டு பலமணி நேரம் நெருப்பைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தோம்.

       அளவில் பெரியதான கரடிதான் நெருப்பை அணைய விடாமல் வளர்த்துக் கொண்டிருந்தது. நீளமான மரக்கிளைகளை ஒரு கையால் பிடித்து அதன் மீது ஏறி மனிதர்களைப் போலவே உடைத்துப் போட்டு நெருப்பை ஒரே அளவில் தொடர்ந்து எரிய வைப்பதில் திறமையானதாக இருந்தது. மற்றொன்று அதை அவ்வப்போது குச்சியால் கிளறி விட்டுக் கொண்டிருந்தது, மற்றவை அமைதியாக அமர்ந்திருந்தன. சிலவற்றுக்கு மட்டும்தான் நெருப்பை வளர்க்கும் உத்தி தெரிந்திருந்தது, சிறு கரடி ஒன்று அவ்வப்போது தன் கைகளில் சில கட்டைகளைச் சுமந்து வந்து அருகில் குவித்துக் கொண்டிருந்தது. கட்டைகள் நீரில் அடித்து வரப்பட்டவை போல வெள்ளி நிறத்தில் இருந்தன.

       ஜூனியர் மற்ற சிறுவர்கள் போல பொறுமை இல்லாதவன் அல்ல, இவ்வாறு நெருப்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது என்னைப்போலவே அவனுக்கும் பிடித்திருக்கும். பொதுவாக நான் புகையிலை உபயோகிப்பவனில்லை என்றாலும் இப்போது அம்மாவின் பெட்டியில் இருந்து கொஞ்சம் எடுத்துப் போட்டுக் கொண்டேன். அம்மாவை இல்லத்தில் சென்று சந்திப்பது போலத்தான் இருந்தது, ஒரே சுவாரசியம் இந்தக் கரடிகள் மட்டுமே. முதல் வட்டத்தில் எட்டு அல்லது பத்து கரடிகள் வரை அமர்ந்திருந்தன. எரிந்து கொண்டிருந்த நெருப்பில் உருவாகி அழியும் உருவங்கள் ஒரு நாடகத்தை நிகழ்த்திக் கொண்டு இருந்தன. என் சிந்தனை வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த கரடிகள் எதைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்று பார்த்தேன். சில கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தன. அவை கூட்டமாக அமர்ந்திருந்தாலும் அவற்றின் ஆன்மா தனிமையில் இருப்பதாகவும், அவை ஒவ்வொன்றும் தனியாகத் தனக்கென ஒரு நெருப்பின் முன் அமர்ந்திருப்பதாகவும் எனக்குத் தோன்றியது.

       ஒரு சக்கரத்தின் மூடியில் நியூபெரி பழங்கள் வைக்கப்பட்டு வட்டத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தது, எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாகப் பழங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அம்மா என்ன செய்தாளென்று தெரியாது ஆனால் நான் பழத்தைத் தின்பது போல நடித்துக் கொண்டிருந்தேன், ஜூனியர் முகத்தைக் கோணிக்கொண்டு பழத்தைத் துப்பினான். அவன் தூங்க ஆரம்பித்ததும் போர்வையை மூவர் மீதும் போர்த்தினேன், இரவு மிகவும் குளிர் நிரம்பியதாக இருந்தது, அவைகளைப் போல் எங்களுக்கு உடலெங்கும் தடித்த உரோமங்கள் இல்லை. நான் வீட்டிற்குச் செல்லத் தயாராக இருந்தேன், ஆனால் அம்மா தயாராக இல்லை. தலைக்குமேல் மேற்கூரை போல் அடர்ந்திருந்த மரங்களின் மீதுள்ள வெளிச்சத்தைச் சுட்டிக் காட்டி பிறகு தன்னைச் சுட்டிக் காட்டினாள். ஒருவேளை தேவதைகள் தன்னை நோக்கி வருவதாக நினைத்தாளோ என்னவோ? உண்மையில் அது நெடுஞ்சாலையில் விரையும் கனரக வாகனங்களின் வெளிச்சம்தான், ஆனால் அவள் முகத்தில் ஒரு நிம்மதியும் சந்தோஷமும் தெரிந்தது. அவள் கையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தேன், அவள் உடலின் சூடு தணிந்து கொண்டே வருவதை என்னால் உணர முடிந்தது.

       ஜூனியர் என்னைத் தட்டியெழுப்பியதும்தான் விழித்தேன். விடிந்து விட்டது, அவன் பாட்டி எங்களுக்கிடையில் அமர்ந்தவாறே இறந்திருந்தாள். சுள்ளிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன, கரடிகளைக் காணவில்லை, யாரோ பாதையைப் புறக்கணித்து புதர்களுக்கிடையில் நுழைந்து வருவது தெரிந்தது. அது வாலஸ்தான். அவனுடன் இரண்டு வனத்துறையினரும் பின்னால் வந்தனர். அவன் வெள்ளைச் சட்டை  அணிந்திருந்ததை வைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை என்று அறிந்தேன். அவனுள் அம்மா இறந்து போனதன் சோகத்தின் அடியில் புதைந்திருந்த எரிச்சலையும் என்னால் உணர முடிந்தது. வனத்துறையினர் காற்றினை மோப்பம் பிடித்தவாறு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தனர். கரடிகளின் வாசனை இன்னமும் அடர்த்தியாக இருந்தது. வாலஸும் நானும் அம்மாவின் உடலை அந்தப் போர்வையிலேயே சுற்றி நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்றோம். வனத்துறையினர் எங்களுடன் வராமல் பின்தங்கி கரடிகளின் நெருப்பைக் கலைத்துப் போட்டனர். தணலோடு இருந்த கட்டைகளைச் சுழற்றி வீசி புதர்களுக்குள் எறிந்தனர். உண்மையில் அந்தச் செய்கை அவர்களுக்கு ஒவ்வாததாக இருந்தது. அவர்களும் கரடிகளைப் போலத்தான் எனக்குத் தெரிந்தார்கள், தங்களின் சீருடைக்குள் தனிமையோடு.

       வாலஸின் ‘98ம் வருடத்தைய வண்டி ரேடியல் டயர்களோடு புற்களின் மீது நிறுத்தப்பட்டிருந்தது.  அதற்கு முன்னால் காவல்துறை வாகனமும் இரண்டு அதிகாரிகளும்,  ஒரு வனத்துறை அலுவலரும் நின்று கொண்டிருந்தனர். அதற்கு முன்னால் ஒரு அமரர் ஊர்தி, அதுவும் ‘98ம் வருடத்தையது. வனத்துறை அலுவலர் வாலஸிடம், “கரடிகள் இவ்வாறு வயதானவர்களைத் தொந்திரவு செய்தது இதுதான் முதல் முறை” என்றார்.

       ”உண்மையில் நடந்தது அதுவல்ல” என்றேன் நான், யாரும் என்னிடம் விளக்கம் ஏதும் கேட்கவில்லை.  அவர்களுக்கென்று தனி வழிமுறைகள். இரண்டு சூட் அணிந்த ஆட்கள் அமரர் ஊர்தியிலிருந்து இறங்கிப் பின்பக்கக் கதவைத் திறந்தனர், உண்மையில் அம்மா இறந்து போனது அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் ஜூனியரை அணைத்தபோது அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது, உண்மையில் அவ்வளவு குளிர் இல்லை, அதிகாலை மரணம், சுற்றியிருந்த காவல்துறை, வனத்துறையினர், புற்களின் ஈரம், இந்த சூழல் நடுக்கத்தைக் கொடுக்கக் கூடியது.

       சிறிது நேரம் நின்று அவர்களின் வாகனங்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ”கடவுளின் ஆசிர்வாதம்” என்றான் வாலஸ். எனக்கு காலை 6.22க்கு இத்தனை வாகனங்கள் நெரிசலாகச் சென்று கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. அன்று மதியம் நான்  அந்த இடத்திற்குச் சென்று வனத்துறையினர் கலைத்த நெருப்பில்  சில கட்டைகளை வெட்டி வைத்து விட்டு வந்தேன், இரவில் மரங்களுக்கு ஊடாக மீண்டும் நெருப்பு வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது.

       அம்மாவை அடக்கம் செய்து இரண்டு இரவுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கே சென்றேன். நெருப்பு எரிந்து கொண்டிருந்தது அநேகமாக அதே கரடிகள். நான் அவற்றின் இடையே அமர்ந்து கொண்டேன், ஆனால் அவை என்னுடைய இருப்பை அசௌகரியமாக உணர்கின்றன என்று தெரிந்ததும் வீட்டிற்குத் திரும்பினேன். அங்கே நியூபெரி பழங்கள் வந்ததும் இரண்டு கைநிறைய அள்ளி எடுத்து வந்திருந்தேன், அடுத்த ஞாயிறு ஜூனியருடன் சென்று அதை அம்மாவின் கல்லறையைச் சுற்றி வைத்து அலங்கரித்தோம். மறுபடி முயற்சித்துப் பார்த்தேன், உபயோகமில்லை, உங்களால் அதைத் தின்ன முடியாது.

நீங்கள் கரடியாக இருந்தால் தவிர.

********

டெரி பாலன்டைன் பிசன் (1942) கெண்டக்கியில் பிறந்த புனைகதை எழுத்தாளர். Bears Discover Fire என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு ஹ்யூகோ மற்றும் நெபுலா விருதுகள் பெற்றது. மற்ற சிறுகதைகளுக்காக ஃபீனிக்ஸ், லோகஸ் போன்ற விருதுகளும் பெற்றிருக்கிறார். அசிமோவ் இதழ் வழங்கும் விருதும் பெற்றிருக்கிறார்.

Saturday, March 9, 2013

பாலினப் பாதுகாப்பின்மை - கேட் பார்ன்ஸ்டெய்ன்


பாலினம் என்கிற பாதுகாப்புக்கு வெளியில் இருப்பவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
பாலினம் என்கிற விஷயத்தைப் புறக்கணிப்பவர்கள். எந்தவொரு வடிவிலும் உருவிலும் தன் பாலினத்தைப் புறக்கணிப்பவர்கள், ‘ஒரு ஆண் இதைச் செய்யக்கூடாது; ஒரு பெண் அதைச் செய்யக்கூடாது என்று இரு பாலினங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளதை மீறுர்கள்தான் அவர்கள். உண்மையில் பல்வேறு நாகரிகங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட பாலினங்கள் இருந்துள்ளன. ஆனால் முதன்மைப் பாலினங்களாகக் கலாசாரம் ஏற்றுக்கொண்டதில் சேராதவர்கள், தங்களைத் தாழ்வு நிலையிலிருந்து அகற்றிக் கொள்ளச் சமூகப் பாலினப் பாதுகாப்பிலிருந்து வெளியேறுகிறார்கள். நீங்கள் இயற்கையின் விதிகளோடு முரண்படுகிறீர்கள். அதுவே உங்களைப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளுகிறது.

உங்கள் புத்தகத்தில் சமூகத்தின் உறுதியான பாலின அடையாளங்களைத் தகர்த்தெறிந்தால் மட்டுமே உங்களின் முழுமையை உணர முடியும் என்று எழுதியிருந்தீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சார்ந்திருப்பது நம்மைப் பிணைத்து வைத்திருக்கும் என்கிறீர்கள்?
பிணைப்பு என்பது உங்களை நகர விடாமல் வைத்திருப்பது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் இயங்காத, அல்லது குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் இயங்காத ஒன்றை எவ்வாறு அடையாளப்படுத்துவது? நம் பிடிக்குள் வராத, நம் எல்லைக்குள் இல்லாத ஒன்று நம் முழுமையைப் பாதிக்கிறது. பெண்ணிய இயக்கங்கள், பெண் என்ற அடையாளத்தின் மூலம் உங்களின் முழு வீச்சு எவ்வாறு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது, என்பதை உணர்ந்துள்ளன. அது போலவே ஆண்களின் அமைப்பும். ஆனால் வெகு சிலரே ஆண்களும், பெண்களும் மட்டுமே உள்ள ஒரு சமூகம் எவ்வாறு தம்மைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

உங்கள் மொழியில் விடுதலை என்பது என்ன?
என்னைப் பொறுத்தவரையில் விடுதலை என்பது ஆபத்தில்லாத விழுமியங்களை வெளிப்படுத்துவதே என்பேன். இவ்விழுமியங்கள் அடையாளங்களோடு பிணைக்கப்பட்டுள்ளது. இவ் டையாளங்கள் சமூகத்தால் வழங்கப்பட்டவை. குறிப்பிட்ட வயது வரை நான் டேவி க்ராக்கெட் ஆக விரும்புகிறேன் என்றோ நான் இளவரசி டயானாவாக விரும்புகிறேன் என்றோ நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். வளர்ந்தபின் அதைச் சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சாகும் வரை நான் குழந்தைதான். எனவே  விடுதலை என்பது ஆபத்தில்லாத என் வாழ்க்கை விழுமியங்களை வெளியிடுவதுதான்.

சிலர் சொல்கிறார்கள் பாலினத்துடனான சுதந்திர உறவு மற்றும் உங்களின் பாலின இருமையின் மூலம் மனிதனின் பண்புகளையும் ,திறமைகளையும், பங்களிப்பையும் முழுவதும் உணர முடியும் என்று. இன்னும் சிலர் பாலின விடுதலை என்பது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதின் அனுபவம் மற்றும் தங்கள் பாலினத் தன்மையின் வெளிப்படுத்துதல் என்பதுதான் என்கிறார்கள். இந்த இரு வேறுபட்ட கருத்துகளில் உங்கள் நிலை என்ன?
நான் இவ்விரண்டிலும் எந்த வேறுபாடும் இருப்பதாக நினைக்கவில்லை. வை பாலின விடுதலைக்கான படிகள் என்று சொல்வேன். முதற்படி நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாக, முழுமையாக இருப்பது. அதாவது நீங்கள் ஆணோ அல்லது பெண்ணோ அதில் முழுமையாக இருங்கள். அதுதான் சுலபமான முதற்படி. அது உங்களுக்குப் போதவில்லையெனில் இரண்டாம் படி, முழுவதும் உணர்வு மயமானதும், இருமையாய் இருப்பதும். இந்நிலையில்தான் உங்களால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள நிலை  என்பது என்ன? என்று கேட்க முடியும். இந்நிலை உங்களை வெளியிட உதவுகிறதா? உங்களால் இவ்விருமை நிலையிலிருந்து உங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? என முயற்சித்துப் பாருங்கள். முடியவில்லையா! இப்போது உங்களுக்கு மூன்றாவதாக ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அது இவ்விருமை நிலையிலிருந்து வெளிவருவது, இரு எதிர் துருவங்களிலிருந்தும் வேறுபடுவது. ஆண்ட்ரோ மற்றும் கைனி (ஆண்மை, பெண்மை) எனும் இரு பாலினங்களின் இடையே உள்ள இடைவெளியினைச் சுற்றிப் பாருங்கள். உங்களால் அந்த இடத்திலிருந்து உங்களை வெளிப்படுத்த முடிகிறதா என்று பாருங்கள்.
எனவே நீங்கள் குறிப்பிட்ட அவ்விரண்டும் முரண்கள் என்று சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் அவை படிநிலைகள்தாம். தேவை நீங்கள் உங்களை வெளிப்படுத்துவது, இதில் பாலினம் ஒரு தடையல்ல. அதுவும் போதவில்லையா? இனம், வயது, வகுப்பு என முயன்று பாருங்கள். நான் முதலில் ஒரு ஆணாகவும், பின் இருமை நிலையிலும், பின்பு பெண்ணாகவும், மீண்டும் சற்று மேம்பட்ட ஆணாகவும் முயற்சித்துப் பார்த்து விட்டேன். தற்போது நான் ஆணுமில்லை, பெண்ணுமில்லை. அதைத் தாண்டிய மூன்றாம் நிலையில் இருக்கிறேன் இப்போது நான் ஆண், பெண் மற்றும் அனைத்துப் பாலினங்களின் கலவை.

ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பாலின வேறுபாடுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்கிற வரையறை இருப்பதாக நினைக்கிறீர்களா?
நான் இந்த கிரகத்திலிருக்கும் பாலின வரையறைகள் எனக்கு உதவாது என்னும் நிலைக்கு வந்து விட்டேன். அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு விட்டேன். எனக்கான ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு வாழத்தொடங்கி விட்டேன். ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து பார்த்தாயிற்று. இவ்வுலகின் எந்தவொரு கலாசாரமும் இதைத் தவிர வேறு ஒரு பாலினத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. பின் எதற்காக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். லாவோட்ஸு சொன்னது போல துவந்துவமாக இருக்கும் முறைகளில் இருந்து விடுதலை பெறுமுன் நீங்கள் முதலில் அதிலிருந்து வெளியில் இருக்க வேண்டும்”. இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தரக் கூடிய ஒரு கலாசாரத்தினை என்னால் வழிமொழிய முடியாது. பாலினம் என்பது உங்கள் அடையாளம் என்பதை மறுக்க இயலாது. அதே நேரத்தில் அது ஒருவராலும் ஆராயப்படாததாகவும் உள்ளது. அவ்வுணர்வு வெறும் தானியங்கி.

பாலினத்திற்கும், பாலின மாறுபாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரையில் இருமை என்ற தாழ்வு நிலையிலிருந்து பாலினத்தை பன்மைக்கு உயர்த்துவதே ஆகும். அதுதான் இன்றைக்கு அநேக கலாசாரங்களுக்குத் தேவைப்படுவது.

பாலின வேறுபாடுகளை ஆண் அல்லது பெண் என்கிற உடலில் இருந்து கொண்டு தாண்டிச் செல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. உங்கள் உடல் ஆணா அல்லது பெண்ணா? யாருடைய தீர்மானம் அது? என்னுடைய உடல் ஆணா? பெண்ணா? ஆணுடல் என்றால் என்ன? பெண்ணுடல் என்றால் என்ன? நீங்கள் அதற்கான விளக்கமாகத் தரும் வார்த்தைகள் மிகக் கனமானவை. சரியாக இதுதான் ஆணுடல் இதுதான் பெண்ணுடல் என்று நீங்கள் விளக்கும் வரை இதற்கான பதிலைச் சொல்வது சிரமம். எனக்கு அப்படியென்றால் என்னவென்றே தெரியாது. இந்தக் கேள்விக்கு அநேகமான பதில்களை வைத்திருக்கும் அநேகம் பேரைத் தெரியும், நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. சொல்லுங்கள் ஆணுடல் என்பது என்ன?

எனக்குத் தெரிந்தவரை XX மற்றும் XY குரோமோசோம்கள்தான் அவை.
நீங்கள் உங்கள் க்ரோமோசோமைப் பரிசோதித்ததுண்டா?

எனக்குத் தெரிந்தவரை இல்லை.
பின் எப்படி உங்களுக்குத் தெரியும் உங்களுடையது ஆணுடலா பெண்ணுடலா என்று? உண்மையில் க்ரோமோசோம்களில் பதிநான்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. XX, XY, XXY, YYX, XO, XXX, XOX. . . . என்று. ஆனால் உண்மையில் அத்தனை பாலினங்கள் இருக்கிறதா என்ன? ஆக பாலினம் என்பது க்ரோமோசோம் அடிப்படையில் இல்லை.

ஆனால் நம் உடலுக்கு இரண்டாம் நிலைப் பாலின அடையாளங்கள் உள்ளனவே, மார்பகங்கள், முகத்தில் வளரும் முடி போன்றவை. மேலும் நாம் நம்மை ஒரு குறிப்பிட்ட பாலினமாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறோம், நம் உடை மற்றும் தலையலங்காரம் மூலமாக. நான் கேட்க விரும்புவது ஆணென்றும் பெண்ணென்றும் அடையாளப்படுத்தப்படும் உடலில் வாழ்ந்து கொண்டு இதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதன் சாத்தியக்கூறுகள் பற்றி?
நிறையப்பேர் எனக்குப் பெண்ணுடல் இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அதை முதலில் மறுப்பது நான்தான். எனக்கு ஆண்குறி உண்டா எனில், ஆம் இருக்கிறது. ஆனால் உள்ளிருந்து வெளிப்பக்கமாகத் திருப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அது ஆணுறுப்புதான். எனக்குப் பெண்ணுறுப்பு இருக்கிறதா? இல்லை. ஆனால் பாலின உறுப்பு வகைப்பாட்டியலின்படிப் பார்த்தால் எனக்கிருப்பது உள்வாங்கிய அமைப்பு, வெளிநீண்ட அமைப்பல்ல. அதுபோன்று உங்களால் மார்பகங்களோடு ஒரு ஆணைப் பார்த்திருக்க முடியாது. நான் என்னை விடப் பெரிய மார்பகங்களோடு ஆணைப் பார்த்திருக்கிறேன். உங்கள் ஆடையிலிருந்து உங்களுக்கு மார்பகங்கள் இருக்கிறதா என்பது தெரியாது. தொப்பி வைத்திருந்தால் உங்கள் தலைமுடி எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாது. எனவே வெளித் தோற்றத்திலிருந்து நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ள முடியாது.எனவே அது தலை முடியோ மார்பகங்களோ அல்ல. அப்படியென்றால் ஹார்மோன்களா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் டெஸ்டோஸ்டீரான் மற்றும் எஸ்ட்ரோஜன், அவைதான் எல்லாம் என்றால் உங்களால் பாலினத்தை மருந்துக் கடைகளில் வாங்க முடியும். எனவே ஆண் மற்றும் பெண் என்பது சார்ந்த கேள்விகளுக்கு சரியான விளக்கம் இல்லாமல் என்னால் பதில் சொல்ல முடியாது.

பாலினத்தின் எத்தகைய கூறுகளை உயிரியல் சார்ந்தது மற்றும் தனித்துவமானது என்று பிரிப்பீர்கள்? உங்களுக்குத் தெரிந்த பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டவர்கள் அப்பார்வையை மாற்றியதுண்டா?
அது சுலபம். என்னைப் பொறுத்த வரை அளவிடக்கூடிய எல்லாமும் உயிரியல் சார்ந்தது. மற்றவை அனைத்தும் அகவயமானது, தனித்துவமானது. பாலின அடையாளங்கள், ஹார்மோன், க்ரோமோசோம் மற்ற கேட்கும், பார்க்கும், நுகரும், தொடும், அளவிடக்கூடிய அனைத்தும் உயிரியல் சார்ந்ததே. ஆனால் நான் இந்த ஆடையை அணிய விரும்புகிறேன் என்பது தனித்துவமானது.

உளவியல் சார்ந்த, உணர்வு சார்ந்த அல்லது நடத்தை சார்ந்த எதையேனும் உயிரியல் சார்ந்து பார்க்கிறீர்களா? அல்லது அவை கலாசாரம் சார்ந்தது என்பீர்களா?
இந்த உரையாடலை ஒரு நிமிடம் பின்னோக்கிச் செலுத்தலாம்,இல்லையெனில் இதே இடத்தில் அது மாட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் பாலினம் என்று குறிக்கும்போது ஆண் மற்றும் பெண் என்றுதான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?

ஆமாம்.
அப்படியானால் எனக்கு அது சிரமமாக இருக்கும். இப்படி வைத்துக் கொள்ளலாம். பாலினம் என்று பேசும்போது இனி சிறுவன், சிறுமி, ஆண், பெண், ஆணிலிருந்து பெண்ணானவர், பெண்ணிலிருந்து ஆணானவர் என்று ஆறு பாலினங்களைக் குறிப்பிடுவதாகக் கொள்வோம்.
சரி, இப்போது என்னில் நானே முரண்பட்டுக் கொள்கிறேன். டெஸ்டோஸ்டீரான் உங்களுக்கு ஆண் தன்மையை, கோபத்தைக் கொடுக்கும். எஸ்ட்ரோஜன் மனிதரின் பாலின ஈர்ப்பை மாற்றியமைக்கக் கூடியது, எனக்கு அது நடந்துள்ளது. ஆனால் எஸ்ட்ரோஜனும் டெஸ்டோஸ்டீரானும் முறையே ஆண் பெண் என்று யார் சொன்னது? உங்கள் உடலில் உள்ள XY க்ரோமோசோம் உங்களின் குறிப்பிட்ட நடத்தையை-

புரிகிறது, சில நடத்தைகள் உடற்கூறு சார்ந்தது அதை நாம்தான் ஆணென்றும் பெண்ணென்றும் பிரித்துக் கொள்கிறோம் என்கிறீர்கள்.
மிகச்சரி. இல்லையெனில் அது அர்த்தமற்றதாகிவிடும்.  உங்களுக்கு டெஸ்டோஸ்டீரான் கொடுத்தால் உங்கள் முகத்தில் முடி வளரலாம், அதனால் நீங்கள் ஆணாகி விடுவீர்களா? உங்களுக்குத் தெரியுமா? தொடர்ந்து டெஸ்டோஸ்டீரான் கொடுக்கப்பட்டால் உங்களின் க்ளிடோரிஸ் மூன்றிலிருந்து நான்கு அங்குலம் வரை வளரும். அது பார்க்க எப்படியிருக்கும்? அதை நீங்கள் பெண்ணுடல் என்பீர்களா? இது போன்ற விஷயங்களைப் பற்றி நினைக்கையில் சிரிப்பதே ஞானத்தின் அடையாளம் என்பேன், அதன் பின் உங்கள் அடிப்படைப் பாலினக் கொள்கையென்பது இது அல்லது அது என்பதனால் கட்டமைக்கப்பட்டு இருக்காது. உங்களின் சில கேள்விகளைப் புரிந்துகொள்ள நான் சிரமப்படுகிறேன் ஏனெனில் அவை இது அல்லது அது என்ற கருத்தை உடையனவாயிருக்கிறது.

உங்கள் பாலினப் பாதுகாப்பின்மையில் பாலின விடுதலை என்பது  சுதந்திரமாக வேறுபட்ட பாலின அடையாளங்களுக்குள் மாறுவது என்று கூறினீர்கள்.
பலதரப்பட்டவற்றுக்குள்.

ஆனால் இதில் மற்றொரு நோக்குமிருக்கிறது, அதைப் பற்றி உங்களிடம் கேட்க வேண்டும். ஆன்மீகப் பயிற்சியளிக்கும் பெரும்பாலானோர் அடையாளங்கள் அத்தனையும் துறப்பது என்பதில் பாலின அடையாளத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் பாலினத்தைச் சார்ந்திருப்பதும் அல்லது விலகியிருப்பதும் கூட உங்கள் ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தடையாகலாமில்லையா? அதாவது குறிப்பிட்ட பாலினம், பாலின மாறுபாடு அல்லது பாலினமே இல்லை என்ற தத்துவத்தைச் சார்ந்திருப்பதால்?
ஆம். அப்படிச் சார்ந்திருந்தால் அது நிச்சயம் ஒரு தடையாக இருக்கும்.

இது ஒரு நுட்பமான கேள்வி. தன்னிடத்தில் உள்ள பாலின அடையாளங்களையும், தன்னைப் பற்றிய சுயபிம்பத்தையும் துறப்பதன் சாத்தியக்கூறு பற்றிக் கேட்கிறேன், அவற்றைத் துறந்து விடுவதும் பின் ஒவ்வொரு கணத்திலும் இயற்கையாகவும், திடீரென்றும் ஏற்படும் அதை உணர்வதும், அதே சமயத்தில் பாலினத்துக்கான தன்மை மற்றும் சுபாவங்களை மறுக்காமலும் ஒதுக்கிவிடாமலும் ஒழுங்குபடுத்தாமலும், அல்லது அது சார்ந்த முன்முடிவுகளோடு இருப்பதைத் தவிர்ப்பதும் சாத்தியமா?
நீங்கள் கேட்பது ஒரு உயர்ந்த நிலை. எனக்கு அது சாத்தியம். ஏனெனில் என் வாழ்க்கை முழுதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன், நாற்பது வருடங்களுக்கும் மேலாக இதைப் பற்றிக் கவனமாக ஆராய்ந்திருக்கிறேன். நான் அறிந்தவற்றை என் வாழ்க்கையின் மற்ற பகுதிகளுக்குப் பயன்படுத்துகிறேன்.

பாலினப் பாதுகாப்பின்மையில் நீங்கள் விவரித்தது போல பாலின மாற்றம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் வேறுபட்ட பாலினங்களில் மாறி மாறி இருப்பதைப் பார்க்கையில், ஒரு குறிப்பிட்ட பாலினத்துக்குள் சிக்கிவிடாது, தேர்ந்தெடுக்கக் கிடைக்கும் அத்தனை சாத்தியக் கூறுகளையும் வாழ்ந்து பார்ப்பது தெரிகிறது. நான் இதைப் பற்றிய சிந்தனை எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கேட்க விரும்புகிறேன்.
இல்லை, இதை அனைவருமே செய்கிறார்கள், நாங்கள் மட்டுமல்ல. இதில் நாங்கள் எந்த அளவுக்குச் சுயவுணர்வோடு ஈடுபடுகிறோம் என்பதுதான் வேறுபடுகிறது.

உண்மைதான். இந்தப்பாத்திரங்களை ஏற்பவர்களும் தம் பாலினத்திற்கான சுய உணர்வோடும் மிகையாகவும்தான் நடிக்கிறார்கள். அது இப்படிப்பட்டவர்களைப் பாதிக்கும். ஆனால் இருபாலின ஆண்களும், பெண்களும் ஒப்புக் கொள்ளும் அளவில் இதைச் செய்கிறார்கள்.
நான் ஜான் வேய்ன், மர்லின் மன்றோ, ப்ரூஸ் வில்லிஸ், ஜீனா டேவிஸ் ஆகியோரைக் குறிப்பிட இருந்தேன்.


சரிதான். இருப்பினும் ஆன்மீக விடுதலை என்பது சுயமில்லாது இருப்பது. ஒரு பாலினமாக இருப்பதற்கும் அந்தப்பாத்திரத்தை ஏற்றுக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு பற்றி என்ன சொல்கிறீர்கள்.
நான் அதில் எந்த வேறுபாடும் இருப்பதாய் நினைக்கவில்லை. அது ஒரு நிலையிலிருந்து உங்களை மறு நிலைக்குக் கூட்டிச் செல்வதுதான். ஒருவகையில் இந்த இருமுனைகளிலிருந்தும் விடுபட்டு இவ்விரண்டு பாலினங்களும் என்னவென்று புரிந்து கொள்வதும், அவற்றில் உங்களுக்கு ஏற்றது எது என்பதைத் தேர்வதும் முக்கியம். எந்தப்பாலினமும் சாராதிருப்பதால், அதாவது எந்தப் பாலினத்திலும் நிலைக்காதிருப்பதால் நம்மால் எந்தப் பாலினத்தின் செயல்களிலும் ஈடுபட முடிகிறது, எந்தப் பாலினத்தினாலும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை ஏற்படுத்த முடிகிறது, பாலினங்களின் அனுபவங்களை அனுபவிக்க முடிகிறது. இதுவும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்தான். ஆணால் சில வேலைகளை செய்ய முடியும், அது பெண்ணால் முடியாது.


ஆனால் இதுவும் சுய உணர்வோடுதானே இருக்கும்.
ஆம். இது ஒரு பாதை.

என்ன சொல்ல வருகிறீர்கள்?
பாலின மாறுபாடு என்பதில் நுழைவதற்கு முன் நீங்கள் முழு உணர்வோடு முதன்மைப் பாலினங்களின் பாத்திரங்களில் முழுமையாக ஈடுபட வேண்டும்.


பாலின மாறுதலில் இதுதான் வழி என்கிறீர்களா?
இது கடினமான வழிதான், ஆனால் கலாசாரத்தால் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே வழி இதுதான். இது உங்களை வெளிப்படுத்தும் வழி. ஆனால் நீங்கள் இந்த மாறுதலுக்கு முன் இந்தக் கலாசாரத்தால், சமூகத்தால் எப்படி நடத்தப்படுவீர்கள் என்பதைச் சிந்தியுங்கள். பெரும்பாலானோருக்கு பாலினம் என்பதிலிருந்து விலகியிருப்பதும் அதை மறந்து விடுவதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.


நான் இதிலிருந்து மாறுபடுகிறேன்.
நான் மேலும் மேலும் பாலினம் என்பதிலிருந்து விடுபடுதல் எனும் நிலைக்கு வந்துவிட்டேன் என்கிறேன். நீங்கள் ஆண் மற்றும் பெண் என்பதிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்று நினைக்கிறேன்.


ஆமாம்.
நீங்கள் குறைந்தபட்சமாகவேனும் உங்களை பாலினத்துக்கு முக்கியத்துவம் தராதவராக உணர்வீர்கள்-அல்லது அது ஒரு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்காது. ஆனால் இன்றிரவு படுக்கைக்குப் போகும்போது நீங்கள் பெண் என்று உணர்ந்தவாறு செல்வீர்கள். நான் அதை ஒருபோதும் செய்ததில்லை படுக்கைக்குச் செல்லும்போது நான் ஆணென்றோ பெண்ணென்றோ ஒரு போதும் நினைத்ததில்லை. எப்போதும்.


உண்மை; ஆனால் என் அனுபவம் வேறாக இருக்கிறது. பாலின அடையாளங்களைத் தாண்டி இருப்பது என்பதில் மற்றொரு அணுகுமுறையும் இருக்கிறது. பெரும்பாலான ஆன்மீகப் பயிற்சிகள் உங்களை லௌகீக உலகில் மூழ்கடிக்கக் கூடிய விஷயங்களிலிருந்து மாறச் சொல்கின்றன, காலம் தாண்டிய, எண்ணம் தாண்டிய, அண்டவெளியைத் தாண்டிய, மனதைத் தாண்டிய ஒன்றோடு ஒன்றுவது பற்றிப் பேசுகின்றன. ஆனாலும் நாம், நம் பாலினமாகவே இருக்கிறோம். ஆனால் அது ஆன்மீக முன்னேற்றத்தின் அடிப்படைக் குறியீடோ அல்லது மறதியோ அல்ல. நாம் நம் உடலோடே இருக்கிறோம், இவ்வுடலுக்கான வெளிப்பாடுகளை வெளியிடுகிறோம், இயற்கையாக, ஆனால் அதை முனைந்து செய்யாது, நடிப்பாகவோ, வேறெவ் பாதிப்போ இல்லாமல். அது மர்லின் மன்றோ போன்றிருந்தாலும் சரி அல்லது ஓர்பால் ஈர்ப்புடையவர் போலிருந்தாலும் சரி, அது வெறும் அபிநயமாகவே இருக்கும். சரிதானே?
அபிநயங்கள் எப்போதுமே விளையாட்டுத் தன்மையுடையவை. அவை நம்மைச் சிரிக்க வைக்கின்றன. ஜென் துறவிகளில் பலர் இப்படிச் சிரிக்க வைத்தவர்கள்தான். தாவோவின் குருக்களும் அப்படியே. சுவாங் ட்ஸூ ஒரு புரட்சிக்காரர். இன்றைக்கு இருக்கும் பலரை விட மிக உயர்ந்தவர்.
நீங்கள் இது அல்லது அது எனும் கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நல்லது, கெட்டது என்றால் என்னவென்று தெரியாது, சரி, தப்பு என்றால் என்னவென்று தெரியாது. எனவே மீண்டும் என்னுடன் நான் முரண்பட்டுக் கொள்கிறேன். நீங்கள் அத்தனை பாலினங்களின் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால்தான் பாலின விடுதலை அடைய முடியுமா? என்றால், இல்லை. நீங்கள் இந்தப் பாலினம் என்பது எப்படிப்பட்ட விழுமியங்களைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது என்று சோதிக்க வேண்டும். விழுமியங்களில் இருந்து உங்களின் பாலினப் பார்வையை அகற்ற வேண்டும். உண்மையில் அவ்விழுமியங்கள் எதற்காக உள்ளனவோ அதற்காக அவற்றை பாலினம் சாராது ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உங்களின் அடையாளம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது? ஆணென்கிற அடையாளத்தோடு உங்களைப் பார்க்கும் மற்றவர்களின் பார்வை எவ்வளவு முக்கியமானது? பெண்ணென்கிற அடையாளத்தோடு எவ்வளவு முக்கியமானது? உங்களிடத்திலும், என்னிடத்திலும், ஆணென்றும், பெண்ணென்றும் மற்றவர்களுக்கு உறுதிப்படுத்துகிற அல்லது அதிகரிக்கிற விஷயங்கள் என்னென்ன? அதுதான் பாலினத்தோடு உங்களைத் தொடர்புபடுத்துகிறது.


இதைச் சரியான முறையில் எப்படி அணுக வேண்டும்?
என்னைப் பொறுத்தவரையில் துணிந்து செய்வதுதான். என் புறத்தோற்றத்தை நீங்கள் கவனிப்பதைப் பற்றி நான் கவலைப்படாமலிருப்பது. என்னால் அதை எள்ளலுடன் கடக்க முடிவது. போதிசத்துவர் சொன்னது போல: உங்களைத் தாழ்வுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ள விதிகளை விட்டு வெளியேறுங்கள்.


விதிகளை விட்டு வெளியேறுபவர்கள் மற்றவர்களை விட பலத்துடன் இருக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் சமூக, கலாசார, மதக் கட்டளைகளிலிருந்து வெளியேறத் துணிகிறார்கள். வெளியேறியவுடன் கிடைக்கும் சுதந்திரம் மற்றும் ஆற்றல், நம்மை, இதிலிருந்து வெளியேறத் துணிவில்லாதவர்கள் பயத்துடனும், வியப்புடனும் பார்க்க வைக்கிறது. நீங்கள் இது போன்று பல தளைகளை உடைத்தெறிந்தவர். அதை மறைக்க முயலாது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர். தளைகளை உடைத்தெறிகையில் ஏற்படும் பலத்தை அனுபவித்திருக்கிறீர்களா?
ஆம், சில விஷயங்களை நான் தகர்த்திருக்கிறேன். தடைகளை உடைப்பதென்பது சமுதாயத்தில் ஒரு மனிதனைக் கீழானவனாகக் காட்டும். இதில் அபத்தமான உண்மை என்னவென்றால் அதுதான் அவனுக்குப் பலம். ஒரு முட்டாள் அரச பதவியில் இருப்பது போல். இதைத் தகர்த்தெறிந்த பின் உங்களுக்கு ஏற்படும் சுதந்திரமென்பது சமூகம் தரும் அவமானம் எனும் சவுக்கடியிலிருந்து விடுதலை. என்னை அவமானப்படுத்த முடியாது. என்ன செய்ய முடியும் உங்களால்? என்னை வேறு பெயர்களால் அழைப்பீர்களா? நான் கண்டு கொள்ளப் போவதில்லை. உள்நகைப்போடு என்னை  லெஸ்பியன் என்பீர்களா? ஆமாம் என்று சொல்வேன். நீ ஒரு ஆண் என்பீர்களா? சரிதான் என்பேன். அல்லது குறியை அறுத்துக் கொண்டவன் என்றால் இல்லை அதை வெளிப்பக்கமாகத் திருப்பிக் கொண்டேன் என்பேன். நான் அவமானப்படும் விஷயங்கள் மிகக் குறைவு, இதுதான் சுதந்திரம்.
பாலினம் தனக்கென்று சில சமூகப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. அதை நீங்கள் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்; மறுப்பது என்ற முடிவெடுத்தால் நீங்கள் அவமானம் அடைய நேரிடும் - அதை ஒரு விளையாட்டாக நீங்கள் எடுத்துக் கொள்ளும்வரை. இது ஞானத்தை நெருங்கிய நிலை ஆமாம்,எனக்கு இது பிடித்திருக்கிறது அதனால் செய்கிறேன்என்பது. ஒரே சமயத்தில் ஆண், பெண், சிறுவன், சிறுமி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன், ஆசிரியர், மாணவர் என்று எத்தனை பாத்திரங்கள்? மாறி மாறி மாறி மாறி மாறி…….. ஞானமடைந்தது போல் இருக்காது? கடைசியில் நான் உணர்ந்து கொண்டுவிட்டேன், இச்சமூகத்தில் என்னை நிறைக்கக் கூடிய ஒரு சமூக அடையாளம் இல்லவே இல்லை. எனக்குப் பிடித்த பாத்திரங்களில் ஒரு வானம்பாடி போல் திரிந்து கொண்டிருக்கிறேன்.


ஒருவேளை நாளை விடிந்ததும் பரிணாமம் மூலமாக அனைவருமே பால்மாறுபாடு அடைந்து இம்முதன்மைப் பாலினங்களிலிருந்து மாறிவிட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள்?
முதலில் வியக்கத்தக்க வகையில் மக்கள் எக்குத்தப்பாக இருப்பார்கள். தம் பாலினத்துக்குரிய செய்கைகள் எதுவுமிருக்காது. இவ்வுலகில் வாழவும், மற்றவரோடு பழகவும் அவர்கள் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண்களுக்கான எதையும் அவர்களால் உபயோகப்படுத்த முடியாது. ஆண் மற்றும் பெண் என்பதை மட்டுமே சார்ந்து இவ்வுலகில் எவ்வளவு விஷயங்களிருக்கிறது தெரியுமா? இரண்டையும் தவிர்த்து முயற்சி செய்து பாருங்கள். ஒரு மீசை வைத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் மக்களைத் திகைக்க வையுங்கள். அல்லது சுலபமாக இதைச் செய்யலாம், இம்மூன்று கேள்விகளை உண்மையாக உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். ஆணென்பது என்ன? பெண்ணென்பது என்ன? நாம் ஏன் இது அல்லது அதில் இருக்க வேண்டும்? உலகில் பெரும்பாலானோர் இம்மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டால் இந்தப் பூமியே மாறிவிடும்.


பாலின  அடையாளம் குறித்த இக்கேள்விகளை உங்களைப் போலவே மற்றவர்களும் ஆன்மீக வழியில் கேட்க வேண்டும் என்று சொல்வீர்களா?
ஞானத்தை அடையும் வழிகளில் ஒன்று, பாலினம் வழியாக அடைதல். பாலினம் என்பதை வைத்து வழங்கப்படும் சலுகைகளிலிருந்து விடுபடுவது. அதுதான் நான் செய்தது. ‘அழகான பெண்’ ‘ஊமைப் பெண் எனும் சலுகையையும் உதறி விட்டேன். இது இப்போது ஒரு விளையாட்டு போலாகிவிட்டது. நான் சொல்வது இதைத்தான், சிலருக்கு தியானத்தின் வழியை ஆராய்வதை விடவும் பாலின வழி எளிதாக இருக்கும். தியானம் என்பதே ஒருநிலைப்படுத்துதல்தான். பாலினத்தை மாற்றியமைக்க எவ்வளவு ஒருமுகப்படுத்துதல் தேவையென்று தெரியுமா? இதுவும் தியானப் பயிற்சிதான். கணக்கற்ற விஷயங்களில் மிக நுட்பமாக கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் செய்து விட முடியாதென்றாலும் இயன்றவரை உங்கள் கவனத்தைப் பல இடங்களில் குவியுங்கள், மற்றவற்றை விட்டுத்தள்ளுங்கள். அதுதான் தியானம். நீங்கள் ஜென்னும், பாலினப் பராமரிப்புக் கலையும் என்பதில் இருந்தால் அதுவும் ஒரு தியான முறைதான். நான் சொல்வதெல்லாம் பாலினத்தில் கவனத்தோடு இருப்பின் அது ஞானத்துக்கான வழி என்பதுதான். அது என்னை வெகு தொலைவுக்கு நடத்திக் கொண்டு வந்துள்ளது, விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், எனக்குப் புரியாதவற்றை ஏற்றுக் கொள்ளவும், என்னுடைய நகைச்சுவையுணர்வை அதிகப்படுத்தவும் வேறெதையும் விட உதவியிருக்கிறது.